நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 22 டிசம்பர், 2010

கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்




நேற்று புதுச்சேரி இதழாளர் நண்பர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் பேசித், திருக்குறள் ஒலிவடிவில் குறுவட்டாகத் தங்களிடம் இருக்குமா என்று கேட்டார்.

கோவையில் செம்மொழி மாநாட்டில் ஒரு குறுவட்டு வாங்கிய நினைவு இருந்தது. என்னிடம் இருக்கிறது என்றேன். அதனைக் கொடுத்து உதவும்படி வேண்டினார். நானும் இசைந்தேன்.
ஒருவருக்கொருவர் முன்பே அறிந்துள்ளோம். ஆனால் பார்த்ததில்லை. அண்மைக்காலமாக நான் தமிழ் இணைய அறிமுக நிகழ்வுகள் நடத்துவதை அறிந்திருந்த அந்த இதழாளருக்கு என் முயற்சி அவர்களின் உள்ளத்தை அசைத்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் கதிர்காமம் பள்ளியின் ஆசிரியர் திருவாளர் பூபதி அவர்கள் இணைப்பில் வந்து, தங்கள் பள்ளியில் தமிழ் இணையத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிக்கொண்டார். எனக்கும் இப்பொழுது கல்லூரி விடுமுறை என்பதால் வருவதாக ஒத்துக்கொண்டேன். இன்று (22.12.2010) காலை 9 மணிமுதல் 11 மணிவரை தமிழ் இணையம் அறிமுக நிகழ்வுக்கு ஏற்பாடாகியிருந்தது.

அந்தப் பள்ளிக்கு நான் இன்றுதான் முதன்முதல் சென்றேன். அந்தப் பள்ளியின் எதிரில் இருந்த உயர்நிலைப்பள்ளிதான் நிகழ்ச்சி நடக்கும் இடம் என்று தவறாக அறிந்து அங்கேயே தானியிலிருந்து இறங்கிக் கொண்டேன்.அப்பொழுது பள்ளியில் இறைவணக்கம் பாடினர். நானும் சாலையில் நின்றபடி இறைவணக்க நிகழ்வுகளை உற்றுநோக்கினேன். தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்கியது. "நைந்தாய் எனில் நைந்து போகும்என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே" என்று பாவேந்தர் வரிகளால் தமிழ்த்தாயை மாணவர்கள் வாழ்த்திப் பாடினார்கள்.

பிறகுதான் எதிரில் இருந்த மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சி நடக்கிறது என்று தெரிந்தது.

புதுவை மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மு.இராசன் அவர்கள் புதுவை மாநிலத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் முதன்முதல் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இணையத்தின் தேவையையும் மாணவர்களுக்கு இணையம் பயன்படும் விதத்தையும் எடுத்துரைத்துச் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுப் பேசினேன். ரிலையன்சு மொபைல் மோடம் சிறப்பாக இயங்கியது.பவர்பாயிண்டு விளக்கமும் சிறப்பாக இருந்தது.

மாணவியர்களுக்குத் தமிழ்த்தட்டச்சு, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் அனுப்புவது, மின்னஞ்சலுடன் படங்களை அனுப்புவது உள்ளிட்ட பலவகைப் பயன்பாடுகளை விளக்கினேன். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,குவைத்,துபாய் உள்ளிட்ட நாடுகளில் இணைய இணைப்பில் இருந்தவர்களிடம் இணையவழி உரையாடலையும் செய்துகாட்டினேன்.

வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அதில் படங்களை இணைப்பது,விக்கிப்பீடியாவில் உள்ள தமிழ்ச்செய்திகளைப் பயன்படுத்துவது பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின்
சிறப்புகளையும் மின்னிதழ்கள் செய்திகளை உடனுக்குடன் தந்து உலக மக்களை ஒரு கிராமத்துக்குள் அடக்கிவிட்டதையும் எடுத்துரைத்தேன்.இணையத்தைப் பொருத்தவரை
தூரம் என்பது 0 கி.மீ என்ற கவிப்பேரரசு அவர்களின் மேற்கோளை எடுத்துரைத்தேன்.

பள்ளியின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலர்கள் பூபதி, முத்துக்கிருட்டினன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். மாணவியர்கள் இந்த இணைய அறிமுக வகுப்பால் மிகப்பெரிய தொழில்நுட்பத்தை எளிமையாக அறிந்துகொண்டோம் என்று கருத்துரைத்தனர்.தமிழ் வழியில் இணையத்தை அறிமுகம் செய்ததால் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


புதுவை மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.மு.இராசன் அறிமுக உரை



முனைவர் மு.இளங்கோவன் உரையாற்றுதல்


தமிழ்வழியில் இணையம் அறியும் மகிழ்ச்சியில்...


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்


ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்கள்


திட்ட அலுவலர் பூபதி அவர்கள் நன்றியுரை


இணையத்தின் பயன் பெற்றதை எடுத்துரைக்கும் மாணவி


இணைய அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியினர்

5 கருத்துகள்:

PRINCENRSAMA சொன்னது…

வாழ்வினிற் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே!

Unknown சொன்னது…

நல்ல முயற்சி அய்யா, தங்களுக்கும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் எம் வந்தனங்கள்.
http://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_21.html

ஜோதிஜி சொன்னது…

வாழ்த்துகள்.

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

தமிழ் இணையம் தரணியெங்கும் பரப்பும் தங்கள் பணியை வணங்கிப் பாராட்டுகிறேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

கோபி,
தங்கள் பணிகளையும் நினைவுகூர்ந்தேன்

மு.இளங்கோவன்