நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 மார்ச், 2015

திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் அறிமுகம்!


ஆவணப்படத்தைப் பெற்றுக்கொண்ட விழாக்குழுவினர்

திருவண்ணாமலையில் திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களை நிறுவுநராகவும் திரு சிங்கார. துரை அவர்களைத் தலைவராகவும் திரு. மா. சின்னராசு அவர்களைப் பொருளாளராகவும் திரு. சீனி கார்த்திகேயன் அவர்களைச் செயலாளராகவும் கொண்டு தமிழிசை மன்றம் சிறப்பாகச் செயல்படுகின்றது. திருவண்ணாமலைத் தமிழிசை மன்றத்தின் சார்பில்  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் தமிழ்ப்பெருமக்கள் முன்னிலையில் 29. 03. 2015 ஞாயிறு மாலை 6 மணி முதல், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாகத் திரையிடப்பட்டது. திருவண்ணாமலை, கடலூர், வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் திரளாக இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர்.

                            
எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் உரை

சென்னையிலிருந்து எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் அவர்கள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தார். ஆவணப்படத்தை வெளியிட்டு ஆவணப்படத்தின் சிறப்புகளையும் ஆவணப்படத்தை இயக்கிய இயக்குநரின் உழைப்பையும் இவர் மனம் திறந்து பாராட்டினார். இந்த ஆவணப்படம் காலம் கடந்தும் பேசப்படும் என்ற வகையில் உள்ளது எனவும் எந்தச் செய்தியும் மிகைபடாமலும், குறைவில்லாமலும் நடுவுநிலையில் நின்று  உருவாக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். தமிழிசைக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேல் உழைத்த அறிஞரின் வாழ்வை அரிதின் முயன்று வெளியுலகுக்கு இயக்குநர் தந்துள்ளார் என்று பாராட்டிப் பேசினார்.


காவிரியாற்றின் அழகைக் காலம் கடந்தும் தமிழர்கள் அறிவதற்கு இந்த ஆவணப்படம் பெரிதும் துணை செய்யும். சங்க இலக்கியப் பின்புலம் உணர்ந்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழிசையை மீட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழகத்திலும் தமிழர்கள் பரவி வாழும் அயல்நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தை எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் வெளியிட்டார்.


பேராசிரியர் வே. நெடுஞ்செழியன், பேராசிரியர் வெ. இராமு, முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழிசை மன்றத்தார் சிறப்பாகச் செய்திருந்தனர்.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்
திரு. சிவக்குமார் வரவேற்புரை

பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் உரை


மு.இளங்கோவன் உரை

கருத்துகள் இல்லை: