நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இனி யார் சிலம்பிசைப்பார்?




குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றிய கண்ணோட்டம் 

-முனைவர் மு. பழனியப்பன் அவர்களின் கட்டுரை


ஓடும் காவிரியின் ஒய்யாரத்தை அருகிருந்துப் பார்க்க முடியுமா? காவிரியின் புதுப்புனல் ஓட்டம், அது சுழித்துச் சுழித்துப் பொங்கிச் செல்லும் புதுமை, நாற்றுகளுக்கு இடையில் புகுந்தோடும் வளமை, தமிழ்ப்பாட்டுக்களின் தாளத்தோடு இசைந்தோடும் அதன் கவி வெள்ளம், கொக்குகளின் அணிவகுப்பு, மீன்களின் துள்ளல் என்று காவிரி காட்டும் உயிர்ப்பெருக்கம் என்று பல்வகை நீர்க்கோலம் காட்டும் காவிரியின் பேரழகை தமிழின் இசைப் பின்புலத்தோடு, இசை வரலாறோடு, தமிழிசை வாணரின் வாழ்வோடு கலந்து தருகிறது குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய ஆவணப்படம். தமிழிசையாறு குடந்தை ப. சுந்தரேசனார். தமிழ்ப்பண்களை வெளிப்படுத்தும் பேறு அவர் பெற்ற வாழ்க்கைப் பேறு.

மண்சார்ந்த பண் கலைஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு மண்உருவம் சமைத்துத் தொடங்கும் இவ்வாவணப்படம், அவருக்குத் திருத்தவத்துறையில் இராசகோபுரத்தில் இடம் சமைக்கப்பெற்றிருப்பதைக் காட்டி அவர் பொன்னுருவம் பெற்றதோடு நிறைகிறது இவ்வாணப்படம். சீர்காழியில் தொடங்கும் அவரின் வாழ்க்கை கும்பகோணத்தில், ஆடுதுறையில், திருவாரூரில், திருமழபாடியில், திருப்புள்ளம்பாடியில், சிதம்பரத்தில், மதுரையில் தொடர்ந்து இசை முழக்கமாக வெளிப்பட்டுள்ளதை நீரோட்டமாக அளிக்கிறது இப்படம்.

பண்ணாராய்ச்சி வித்தகரான குடந்தை ப. சுந்தரேசனார் மனிதநேயம் கொண்டவர், பணத்தைப் பொருளாக எண்ணாதவர், பண் ஆராய்ச்சி வித்தகர், பாடியும் விரிவுரையாற்றியும் பாடும்போதே விளக்கவுரை செய்தும், விளக்கவுரையின்போதே பாடியும் சாதனைகள் பல புரிந்தவர், தமிழிசை வளரப் போராடியவர் என்று அவரின் பண்புகளைப் பாராட்டும் அறிஞர்தம் உரைகள் அவற்றினை முன்னுரையாகக் கொண்டு பண்ணாராய்ச்சி வித்தகவரின் ஒலிவடிவத்தை இயற்கை எழிலோடு கலந்து தருகிறது இக்குறுவட்டு.

நாடுகாண்குழு என்ற ஒன்றைத் தொடங்கி அதன் வழி தமிழசைப்பயணம் மேற்கொண்டு, தேவாரப் பனுவல்களைக் கல்வெட்டுக்களாக்கி அவர் செய்த அரும்பணி இன்னொரு பக்தி இயக்கம். மற்றுமொரு தமிழியக்கம்.

குடும்பம் தழைத்தோங்கப் பரம்பரை இல்லையென்றாலும் தன் தமிழிசைக்கானப் பரம்பரையை அவர் துவக்கிச் சென்றுள்ளார். அவர் வழியில் தமிழிசை வளர்ந்து வருகிறது என்பதற்கு இவ்வாவணப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் இசைவாணர்கள் சான்று.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரனாரின் பெருந்திருப்பிராட்டியாரின் பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இருந்துப் பாடப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழ்ப்பாடல் மையாமன இடத்தில், தேவையான இடத்தில் இவ்வாவணப்படத்தில் இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளது. அதற்கான நடனவடிவம் தந்தவரின் நடனப்பாங்கு ஒரு முழுமையான இலக்கியத்தை ரசித்த முழுமையைத் தந்துநிற்கிறது. அதுபோல சிலப்பதிகார வாழ்த்துப்பகுதிகளைக் காவிரியாற்றின் ஓட்டத்தில் மர ஓடத்தை நிற்கவைத்து அதன் மீது நடனமாடச் செய்திருப்பதும் மழையைப் போற்றும்போது நடனபெண்ணார் அமர்ந்து காவிரித்தண்ணீரை வணங்கி நிகழ்த்தும் முறையும் கண்களில் அகலாமல் காட்சியாக நிலைக்கின்றன.

பண்ணாராய்ச்சி வித்தகரின் உலகத்தமிழ் மாநாட்டு உரை இவ்வாவணப்படத்தின் புதிரொன்றுக்கு நல்ல பதில் தருகின்றது. பெரும்பாணாற்றுப்படையின் இசைவரிகளுக்கு பண்ணாராய்ச்சி வித்தகர் குரல் முழக்கம் செய்கின்றார். ஆயன் ஒருவன் குழல் செய்து இசை ஒலிக்கும் காட்சி காட்சியாக வருகின்றது. இது ஏன் வருகின்றது என்ற புதிருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் மாநாட்டுப் பேருரையின் சிறுபகுதி பதில் தந்துவிடுகின்றது. குழலிசையை முதன் முதலாக உலகுக்கு அறிமுகம் செய்தவன் தமிழன் என்பதால் அக்காட்சி முன்னிலும் அதற்காக காரணம் பின்னிலும் அமையும்படி இவ்வாவணப்படம் ஆதி அந்தமாக விளங்குவது சிறப்பாக உள்ளது.

தமிழிசை உலகில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பணியை, அவரின் குரலை, அவரின் உருவத்தை நிலைநிறுத்துவதாக இவ்வாவணப்படம் அமைகின்றது. இதனை எழுத்தும் இயக்குமுமாக்கிய முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தமிழிற்கு காலத்தினால் செய்த உதவி இதுவாகின்றது. தமிழறிந்தோர் தமிழறிந்தோரை விளக்கம் செய்யாவிட்டால் தமிழன் இருந்தென்ன, செத்தென்ன பயன். தயாரித்தளித்த திருமதி பொன்மொழி இளங்கோவன் வெளியிட்ட வயல்வெளித் திரைக்களம், இசை மற்றும் படத்தொகுப்பு செய்த இராஜ்குமார், இராசமாணிக்கம், ஆகியோருக்கு நன்றிகள். இவ்வாவணப்படத்தைப் பெறுவதற்கு வயல்வெளி திரைக்களம் 9442029053 என்ற எண்ணைச் சுழற்றுங்கள். தமிழிசையின் ஆரத்தைச் சுழற்றிய பெருமை உங்களைச் சேரும். 

இனி யார் சிலம்பிசைப்பார்?

நன்றி:
பேராசிரியர் மு. பழனியப்பன்.
வல்லமை இணைய இதழ்
குறிப்பு: வல்லமை வடிவில் காண இங்கே சொடுக்கவும்.


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது ஐயா