நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 11 ஜூலை, 2014

அரவணைப்பு கு. இளங்கோவன் நூலுக்கான அணிந்துரை




("ஒரு சாமானியனின் வாழ்க்கைப் பயணம்" என்ற தலைப்பில் அரவணைப்பு தொண்டு நிறுவனத்தை நடத்தும் அண்ணன் முனைவர் கு.இளங்கோவன் அவர்களின் தன்வரலாற்றை விளக்கும் நூலுக்கான அணிந்துரை.)

வாழ்க்கையில் உயர்நிலையை அடைந்தவர்களின் வரலாற்றைப் படிப்பதில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம். இலக்கியத்துறையிலும், தொழில்துறையிலும், அறிவியல்துறையிலும், கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் முன்னேறிய சாதனைப் பெருமக்கள் யாவரும் கடந்து வந்த பாதை காட்டாறுகளும், கரடு முரடுகளுமாகவே இருக்கும். பல்வேறு அவமானங்கள், தோல்விகள், புறக்கணிப்புகள், ஏமாற்றுகள், இரண்டகங்களைச் சந்தித்தே இவர்கள் சாதனையை நிகழ்த்தியிருப்பார்கள். உடனிருந்தவர்களே இவர்களின் வாழ்க்கைக்கு உலை வைத்திருப்பார்கள். பக்கத்திலிருந்தவர்களே பள்ளம் பறித்திருப்பார்கள்.  உரிய காலத்தில் இச்சமூகம் இவர்களை அங்கீகாரம் செய்யாமல் உதாசீனப்படுத்தியிருப்பதையும் வரலாற்றில் பார்க்கமுடிகின்றது. அந்தவகையில் துன்பச் சுழலில் சிக்கித், துயரக்கடலில் நீந்தி வளமார் வாழ்க்கையை இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் அண்ணன் முனைவர் கு. இளங்கோவன் அவர்களின் வாழ்க்கை இன்று வரலாற்று நூலாக உலகிற்குக் கிடைக்கின்றமை நினைத்து மகிழ்கின்றேன்.

நம் நூலாசிரியர் கொங்குநாட்டில் வேளாண்மைத்தொழிலை வாழ்க்கையாகக் கொண்ட நாமநாய்க்கன்பட்டி குழந்தைசாமி ஐயாசுப்புலெட்சுமி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் பிறந்த ஊரில் தொடக்கக்கல்வி பயின்று, அதன் பிறகு அருட்செல்வரின் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வி பயின்று பொறியியல் பட்டம் பெற்று, காப்பீட்டுத்துறை முகவராக, கல்லூரிப் பேராசிரியராக, பல்வேறு நிறுவனங்களை நடத்திய தொழிலதிபராக, பின்னர் அனைத்தையும் இழந்து, பின்னடைவைச் சந்தித்த சாதாரண மனிதராக இருந்தவர் முனைவர் கு. இளங்கோவன். பல்வேறு இடையூறுகளுக்கு இடையே குவைத்து நாட்டுக்குச் சென்று அங்கு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபடியே பிள்ளைகளுக்குத் தனிப்பயிற்சி நடத்தியும், தாம் கற்ற சோதிடக்கலையால் பொருளீட்டியும் இன்று பல்லாயிரம் மாணவர்களின் கல்விக்கண் திறக்கும் கர்ணனாக வாழ்ந்துவரும் அண்ணன் கு. இளங்கோவனின் வாழ்க்கை வரலாற்று நூல் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் கைவிளக்கு.  தவறி விழும்போது தாங்கிப் பிடிக்கும் தங்கத்தூண். வாழ்க்கையில் வழுக்கிவிழும்பொழுது ஊன்றிக்கொள்ளக் கிடைத்த ஊன்றுகோல்.

ஒரு சாமானியனின் சாதனை என்ற பெயரில் அவர் வாழ்க்கையை எளிய நடையில் எழுதியுள்ளார். பல்வேறு நூல்களையும் மேற்கோள்களையும் காட்டி நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். ஒளிவு மறைவு இல்லாமல் தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். இரண்டகத்தை (துரோகத்தை) தோலுரித்துக் காட்டியுள்ளார். தம் விமானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியவரின் முயற்சியை உடைத்தெறிந்து தம் போக்கில் பயணத்தைத் தொடர்ந்துள்ளார். தோல்விகளைத் தனக்குத் தானே தோரணமாக்கிக் கொண்ட எடிசன் வரலாற்றை நினைவுகூர்ந்து நம்மையும் முன்னேறத் தூண்டுகின்றார். உழைப்பும் முயற்சியும் தாம் முன்னேறியதற்கான சூத்திரம் என்கின்றார். விடியற்காலையில் எழுந்து நள்ளிரவு வரை தொடர்ந்து உழைத்ததன் வழியாகவே சாதாரண வாழ்க்கையைச் சாதனை வாழ்க்கையாக மாற்றமுடிந்தது என்கின்றார்.

பன்னிரண்டு ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது 13 நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியுள்ளார். “ஒரு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தேன். கடுமையான முயற்சியால் 1981 ம் ஆண்டு ஜூலை 10 முதல் 17 தேதிக்குள் நான் 25 இலட்சம் ரூபாய்க்கான பாலிஸியைச் சேர்த்தேன்” (பக்கம் 27) என்று தம் தழும்பு வாழ்க்கையைத் தடவிக் காட்டுகின்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு முனைவர் பட்டம் பெற்றதுடன் நின்றுவிடாமல் மேலும் மேலும் முனைவர் பட்டங்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வாங்கிக்குவிப்பதை வேட்கையாகக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

அரவணைப்பு என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கருணை உள்ளத்துடன் சேவை செய்யும் இவரின் தாயுள்ளம் ஒவ்வொரு மனிதருக்கும் அமைய வேண்டும்.

உலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து உழைத்து, பெரும்பொருளீட்டி, ஈட்டிய பொருளை மற்றவர்களுக்கு வாரி வழங்கும் அண்ணன் கு. இளங்கோவனின் வாழ்க்கையை நினைக்கும்பொழுது திருவள்ளுவப் பேராசானின்,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு (385)

என்னும் குறள் நினைவுக்கு வருகின்றது. இந்தக் குறட்பா அரசருக்கு மட்டும் அன்று; இளங்கோவுக்கும் பொருந்தும்.

முனைவர் கு. இளங்கோவன் அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் பல்லாண்டு புகழ்வாழ்க்கை வாழ்ந்து இத்தமிழினத்திற்குத் துணை நிற்பார்களாக!

பாசமிகு தம்பி
மு.இளங்கோவன்

25.05.2014

கருத்துகள் இல்லை: