நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 ஜூன், 2014

குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலால்குடி சென்ற வரலாறு…


இலால்குடியில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

28. 05. 2014 அறிவன்(புதன்) வைகறை 4 மணிக்கு விழித்தேன். முன்பே திட்டமிட்டபடி 4. 45 மணிக்கு முன்றிலில் மகிழ்வுந்து வந்து நின்றது. கைப்பை, கணினி, புகைப்படக் கருவி உள்ளிட்ட முதன்மைப் பொருள்களுடன் புறப்பட்டேன். நண்பர் சிவக்குமார் தன் உதவியாளருடன் அவர் இல்லத்தில் படப்பிடிப்புக் கருவிகளுடன் காத்திருந்தார். அவர்களை ஏற்றிக்கொண்டு அடுத்து ஐயா அமரநாதனை அழைக்க அவர் அலுவலகம் சென்றோம். ஒரிரு மணிக் காத்திருப்புக்குப் பிறகு ஐயாவும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

புதுவையிலிருந்து வழி நெடுக இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளித்தவண்ணம் கடலூரைக் கடந்தோம். குள்ளஞ்சாவடிக்கு அருகில் இருந்த வயல்காட்சிகள் சிலவற்றைப் படமாக்கினோம். அடுத்து வடலூர்- சேத்தியாத்த்தோப்பு வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் சென்றோம். அங்கு எங்கள் நண்பர் சீத்தாபதி காத்திருந்தார். அங்கும் சில காட்சிகளைப் படமாக்கினோம். அடுத்து இடைக்கட்டில் உள்ள நம் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. காலை உணவுக்காகச் செயங்கொண்டத்தில் நண்பர் இரா. இரவி காத்திருந்தார். அவருடன் இணைந்து காலைச் சிற்றுண்டியை அனைவரும் முடித்தோம்.

எங்கள் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் உடையார்பாளையம் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சார்ந்த திரு. பெ. சிவக்குமார் அவர்களும் அவர்களின் உடன்பிறந்தாரும் காத்திருந்து எங்களை எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கும் சில மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் அரண்மனையிலிருந்து தேநீர் வந்தது. அதனை அருந்தி அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுப் புறப்படும் முன் அழகிய புறாக்கள் பறத்தல் காட்சி கண்ணில் தென்பட்டது. அதனையும் காட்சிப்படுத்திக்கொண்டு அரியலூரை நோக்கிப் புறப்பட்டோம்.
 உடையார்பாளையம் அரண்மனையின் முகப்பில்

அரியலூரில் புலவர் சுவை. மருதவாணனார் எங்களுக்காகக் காத்திருந்தார். இவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகிய பெருமகனார். அவரை நேர்காணல் செய்துகொண்டு, அவர் வழங்கிய சில அரிய நூல்களைப் பெற்றுக்கொண்டு அவரையும் உடனழைத்துக்கொண்டு கீழைப்பழுவூர் திருக்கோயிலை அடைந்தோம். அங்கு நம் ப. சு. அவர்கள் தொடர்ப்பொழிவு செய்த இடத்தைப் படமாக்கிக்கொண்டு அடுத்து எங்கள் மகிழ்வுந்தில் திருமானூர் வழியாகத் திருமழபாடி சென்றோம்.

திருமழபாடியில் உள்ள திருக்கோயில் இறைவன் “மழபாடி மாணிக்கமே” என்று அருளாளர்களால் பாடப்பெற்ற  பெருமைக்குரியது. குடந்தை ப.சுந்தரேசனாரின் முயற்சியால் அக்கோயில் இறைவன்மீது பாடப்பெற்ற திருமுறைப்பாடல்கள் கல்வெட்டாக வெட்டிப் பாதுகாக்கப்படுகின்றன. புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் இக்கல்வெட்டு அமைக்க நிதி நல்கி ஆதரவுகாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டும் வேண்டிய அளவு படமாக்கிக்கொண்டும் இருந்தபொழுது மழை பெய்யத் தொடங்கியது.மழைச்சூழலில் புலவர் திருநாவுக்கரசரின் நினைவுரைகள் படமாயின.

கொள்ளிடக் கரையில் இயற்கை எழில்சூழ அமைந்த அக்கோயிலின் அழகை நாள்முழுவதும் கண்டு மகிழலாம். இயற்கை விரும்பிகளுக்கு அந்த ஊர் நல்ல ஊர். கொள்ளிடத்தின் மணல்காட்சிகளையும் படமாக்கிக்கொண்டோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் நீர் நிறைந்து புனல்பெருக்காக இருக்க வேண்டிய ஆறு மணல்பெருக்காக இருந்தது.

பகலுணவுக்கு நாங்கள் தயாரானோம். புலவர் திருநாவுக்கரசு ஐயா எங்களுக்கு அங்குள்ள சூழல்களை விளக்கியதுடன் உணவு உண்ண ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றூர்ப் புறச்சூழலில் இனிமையாக அந்தக் கடைக்காரர் விருந்தோம்பினார். மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தால் அந்தக் கடையில் உண்ண வர வேண்டும் என்ற விருப்பத்துடன் பேராசிரியர் முனைவர் அ. ஆறுமுகம் ஐயா இல்லம் சென்றோம் ஐயா ஆறுமுகம் அவர்கள் திருமழபாடித் தமிழ்ச்சங்கம் கண்டவர். ப. சு. அவர்களை அழைத்துச் சிறப்புச் செய்தவர். நம் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் ப. சு. அவர்களின் திருத்தொண்டர் எனில் பொருந்தும் இருவரிடமும் நேர்காணலை முடித்துக்கொண்டு இலால்குடி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைந்தது. ஏனெனில் இலால்குடியில் ப. சு. நூற்றாண்டு விழாவில் நான் தொடக்கவுரையாற்ற வேண்டும் என்று இலால்குடி அன்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். காலையில் பேச வேண்டிய நான் மாலை வரை படப்பிடிப்பில் இருந்த்தால் இரவுக்குள் சென்று பேசிவிடுவோம் என்று வேகமாக விரைந்தோம்.



புள்ளம்பாடியை நெருங்கியபொழுது ஒரு செம்மறியாட்டுக்கூட்டம் தொகையாகச் சாலையைக் கடக்க முனைந்தது. எங்கள் மகிழ்வுந்தை ஓரமாக நிறுத்தி அந்த ஆட்டுக்கூட்டத்தை மறித்து மறித்துப் படமாக்கினோம். அந்த ஆடுகளைப் பராமரிக்கும் இராமநாதபுரத்துத் தம்பி நன்கு ஒத்துழைப்பு நல்கினார். கடியலூர் உருத்திருங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையில் வரும் “கூழார் இடையன்”  என்னும் பொருள்பொதிந்த வரிக்கு இந்தக் காட்சிப்படுத்தல் தேவையாக இருந்தது.

மாலைப்பொழுது மங்குவதற்குள் பூவாளூர் சென்று அங்கிருந்த ப.சு.வின் தொண்டர் பூவாளூர் சண்முக வேலாயுதம் அவர்களை நேர்காணல் செய்தோம். அரிய படங்கள் சில அவர் இல்லத்தில் இருந்தன. பூவாளூர் செழுமையான ஊர். ஊர் மட்டுமன்று அந்த ஊர் அன்பர்களின் மனமும் செழுமையாகும். அவர்களின் அன்பில் நீந்தியபடியே இலால்குடி வந்து சேர்ந்தோம்.

திரு. சண்முகவேலாயுதம் இல்லத்தில் படப்பிடிப்பு


இலால்குடியில் வாழ்ந்த திரு சிவா அவர்கள் ப.சு. அவர்களின் மகனாக இருந்து பணிவிடை செய்த பெருமைக்குரியவர். ஐயாவுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தவர். ஐயாவின் சிறப்பை இராசகோபுரத்தில் ஏற்றி அழகுபார்த்தவர், குடந்தை ப.சு. அவர்கள் இசையறிஞர் என்று மட்டும் நாம் அறிவோம். அவர் மிகச் சிறந்த இறைத்தொண்டர். சிவனிய, மாலிய நூல்களில் பேரறிவு பெற்றவர். பெரியபுராணத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர். இலால்குடி கோயிலில் பெருந்திருப்பிராட்டி பிள்ளைத் தமிழ் நூலினைக் கல்வெட்டாகப் பதிக்கச் செய்தவர். இலால்குடி அன்பர்கள் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழு என்ற பெயரில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணி செய்துவருகின்றனர். தமிழிசைக்கு இவர்களைப் போன்ற பெருமக்கள்தான் தொண்டுசெய்து வருகின்றனரே அல்லால் அரசோ, மேடை முழக்கிகளோ சிறு துரும்பு அளவும் செய்வதில்லை என்பதை இங்குக் குறித்தாதல் வேண்டும். 

ப.சு.நாடுகாண் குழு செய்துள்ள பணிகளை முற்றாக ஒருவர் ஆய்வு செய்யலாம். இலால்குடி கோயிலில் ப. சு. அவர்களின் நூற்றாண்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன, தேவையான செய்திகளைப் படமாக்கிக்கொண்டோம். திரு. சிவா அவர்களின் தம்பியும் அவரின் மகளாரும் மற்றும் குடும்பத்தாரும் பேருவகையுடன் எங்களுக்கு வேண்டிய பல உதவிகளைச் செய்தமையை நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லி, அனைவரிடமும் வாழ்த்துப்பெற்று நாங்கள் புதுவை வந்துசேரும்பொழுது நள்ளிரவு இரண்டுமணியாகும்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் பணி பாராட்டிற்கு உரியது ஐயா