நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 செப்டம்பர், 2013

தொல்காப்பிய மன்றம், இலண்டன்


தமிழ்மொழியின் சிறப்பை நிலைநாட்டுவதற்கு நமக்குக் கிடைத்துள்ள அரிய ஆவணம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்த நூலின் சிறப்பினைத் தமிழ் கற்றோர் அறிவர். மொழியியல் கற்றோர் உணர்வர். மற்றையோர் அறியார்.

தமிழில் உள்ள மற்ற நூல்களைப் பரப்பவும், போற்றவும் நினைவுகூரவும் தனிமாந்தர்களும், அமைப்புகளும், கழகங்களும், மன்றங்களும், திருமடங்களும் உள்ளனர். ஆனால் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லவோ, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கவோ அறிஞர்கள் யாரும் செயல்படுவதாகத் தெரியவில்லை, அவ்வாறு ஓரிருவர் இருப்பினும் அவர்கள் கல்விப்புலத்தில் இருப்பவர்களாகவே இருப்பர்.

சிலப்பதிகாரத்திற்கு ஒரு ம.பொ.சி. அவர்களைப் போலும், திருக்குறளுக்கு அறிஞர் திருக்குறள் முனிசாமியார் போலும் பொதுமக்களிடம் தொல்காப்பியத்தைக் கொண்டு சென்று சேர்க்க ஓர் அறிஞரைக் காண விரும்பினோம். தொல்காப்பியம் என்ற இந்த நூல் தமிழர்கள் அனைவராலும் போற்றத்தகுந்த பெருமைக்குரியது என்பதை நினைவூட்டத், தக்கவர்களைத் திரட்டி ஒருங்கிணைக்கும் முயற்சியில் இலண்டனில் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இலண்டன் தொல்காப்பிய மன்றம் தொல்காப்பியம் தொடர்புடைய ஓலைச்சுவடிகளைத் திரட்டவும், இதுவரை தொல்காப்பியம் குறித்து வெளிவந்துள்ள பதிப்புகளைத் திரட்டவும், தொல்காப்பிய ஆய்வுகளை மின்னியல் பதிப்பாக்கவும், தொல்காப்பிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அறிஞர்களின் வரலாறுகளைத் திரட்டவும், ஓர் ஆய்வடங்கல் அணியப்படுத்தவும், உலகம் முழுவதும் தொல்காப்பியப் பரப்புரை செய்யவும், தொல்காப்பிய மாநாடுகள் நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பிய மன்றத்தின் முதல் பரப்புரை மாநாடு இலண்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பரவலுக்குத் தங்களின் மேலான வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய ஆய்வுகளில் முன்னின்ற ஆய்வறிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய மன்றம் முதலில் இலண்டனில் பதிவுபெற்ற அமைப்பாக விளங்கும். அதன் பிறகு உலகம் முழுவதும் கிளைகள் அமைக்கப்பெறும். தமிழ்ப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.

இலண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட உள்ள தொல்காப்பிய மன்றத்தினைத் திரு.சிவச்சந்திரன் அவர்கள் நிறுவுநராக இருந்து நெறிப்படுத்துவார். திரு.செகன் அவர்கள் செயலாளராக இருந்து செயல்படுவார்.

தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பினைக் குறித்த விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்துகொள்வோம்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

2 கருத்துகள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா முனைவர் மு.இ.அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் இந்த வேண்டுகோளை முதலில் எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன். விரைவில் எனது வலைப்பக்கத்திலும் எடுத்து எழுதுவேன். தங்களின் தமிழ்ப்பணிக்கு என்றும் துணையிருப்பேன் எனும் உறுதியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். வணக்கம்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை.
வலைப்பக்கம் -http://valarumkavithai.blogspot.in/

தாய் சொன்னது…


நண்பர் அவர்களுக்கு, வணக்கம்.
மிக நல்ல முயற்சி;எப்பொழுதோ செய்திருக்க வேண்டிய பல முதன்மைப் பணிகளில் இதுவும் ஒன்று. தொலை பேசியில் பேசியது போல் விரிவாகச் செயல்படுவோம்.பரவலாக எடுத்துச் செல்வோம்.
அன்புடன் பூந்துறயான்