நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 ஜூலை, 2013

புதுவைப் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்



 புலவர் சி.இராமலிங்கம் அவர்கள்

புதுச்சேரியில் வாழும் தமிழ் அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் ஆவார். எளிமையும் அன்பும் கொண்ட இவர் புதுச்சேரி மாநிலத்தின் கல்வித்துறையில் முதல்நிலைத் தமிழாசிரியராக 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இப்பொழுது புதுவையை அண்மியுள்ள தவளக்குப்பம் ஊரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவர்தம் பிறந்த ஆண்டு 17-09-1942 ஆகும். பெற்றோர் அலர்மேலம்மாள், சின்னசாமி ஆவர். சி.பெருந்தேவன் என்ற புனைபெயரில் எழுதி வருகின்றார். பல்வேறு கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமைக்குரியவர். 

புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் அ) பிரவே(தமிழ்)(-புதுச்சேரி அரசு), ) வித்வான்   - (சென்னைப் பல்கலைக்கழகம்),               )       பி.லிட்- (சென்னைப் பல்கலைக் கழகம்), ஈ) எம்.                 - (மதுரைக்  காமராசர் பல்கலைக்கழகம்) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். புதுவைப் பாவலர் பண்ணையில் மரபிலக்கணம் பயின்று பைந்தமிழ்ப் பாவலர் பட்டம் பெற்றவர்.

புலவர் சி.இராமலிங்கம் அவரகள் எழுதியுள்ள திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம் என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 113 அதிகாரங்களில் 1130 குறட்பாக்களை உரையுடன் இந்த நூலில் புலவர் சி.இராமலிங்கம் தந்துள்ளார். உரைவிளக்கம் முதலிலும் அடுத்துக் குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுள் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, அறிவியல், குடும்பம், காதல் முதலிய அனைத்துப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய மக்கள் மேம்பாடுற அரசியல், தொழில்நுட்பத்துறைகளில் முன்னேற வேண்டும் என்பதையும் தூய மக்கள் தொண்டர்கள் நாட்டை ஆளவேண்டும் என்பதையும் இந்த நூலில் ஆசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

“காலத்தை ஓட்டுவதும் கையூட்டை நோக்குவதும்
சாலப் பெரும்பழிப்பாம் சாற்று” (பக்கம்.6)

எனவும்,

“கெண்டையைப் போட்டு வரால்பிடிக்கும் கேடர்களால்
உண்டாமோ நாட்டில் உயர்வு?” (பக்கம்,20)

 எனவும்

“விண்வெளி ஆய்வில் வெற்றித் தடம்பதித்தல்
மண்ணில் அறிஞர்க்கு மாண்பு” ( பக்கம் 218)

எனவும் இடம்பெறும் குறட்பாக்கள் இன்றைய சமூகச்சூழலை மனதில்கொண்டு வரையப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரியதாகும்.

மரபுக்கவிதைகள் சமூக நடப்பியலைச் சித்திரிக்கவில்லை என்பாரின் கூற்றைப் பொய்யாக்கும் வண்ணம் சிறந்த குறட்பாக்களைத் தந்துள்ள புலவர் சி.இராமலிங்கனார் நம் பாராட்டிற்குரியவர்.


புலவர் சி.இராமலிங்கம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இலக்கிய நூல்கள்:
                               
1.   கருவடிக்குப்பம் ஸ்ரீமத் சித்தானந்த சுவாமிகள் பதிகம்,1966
2. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா,1981
3.  அறிவுலகக் காவலர்கள்,1985
4. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் அந்தாதி.
5. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் இரட்டைமணிமாலை,1993
6. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி,2002
7. கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு , 2003
8. ஆசிரியர் அறம்,2003
9.  கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் ஆனந்தமாலை,2005
10  கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் போற்றித் திருவகவல்,   2006
11. அறத்தின் ஆட்சி,2007
12.கருவடிக்குப்பம் அருட்குரு சித்தானந்த அடிகள் திருப்பள்ளி எழுச்சி - தெளிவுரை,2008
13. திருவள்ளுவருக்குப்பின் அரசியல் அறம்,2012

புலவர் சி.இராமலிங்கம் அவர்களின் முகவரி:

69, சின்னசாமி தெரு, தவளக்குப்பம், புதுச்சேரி – 605007
தொடர்புக்கு: + 8940899885


பாவலர் சாமி.பழனியப்பன் அவர்கள் மறைவு


சாமி.பழனியப்பன்

பாரதிதாசன் பரம்பரைக் கவிஞரும், திரைப்பா ஆசிரியர் திரு. பழநிபாரதி அவர்களின் தந்தையாருமான ஐயா சாமி.பழனியப்பன் அவர்கள் நேற்று (20.07.2013) சனிக்கிழமை இரவு தம் 82 ஆம் அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். 16, 17 – 08 - 1993 இல் இருமுறை ஐயா சாமி பழனியப்பன் அவர்களை உவமைக்கவிஞர் சுரதா அவர்களுடன் சென்னையில் அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளேன். பழகுதற்கு இனிய பண்பாளர். ஊற்றமான கொள்கைப்பிடிப்பாளர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கலைஞர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழகத்துப் பெரியோர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

பொன்னி இதழில் அமைதிகொள்வாய் என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல் (1947, நவம்பர்) இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.

சாமி.பழனியப்பன் அவர்களின் தந்தையார் உ.வே.சாமிநாதன் அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எனவே சாமி. பழனியப்பனுக்கு இளமையிலிருந்து சுயமரியாதை உணர்வு சிறப்பாக அமைய வாய்ப்பு ஏற்பட்டது.

சாமி. பழனியப்பன் அவர்கள் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர்தம் இளம் வகுப்புத் தோழர்களாக முடியரசன், தமிழண்ணல், மெ. சுந்தரம் முதலானவர்கள் விளங்கினார்கள். பள்ளி, கல்லூரிகளில் பயின்றபொழுதே இலக்கிய மன்றங்களில் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர். இளமையில் கரந்தைக் கவியரசு இரா. வேங்கடாசலம் பிள்ளையின்  தலைமையில் “நான் விரும்பும் கவிஞர்” என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைப் பற்றிச் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இவர் குமரன், பொன்னி, வீரகேசரி, திராவிடநாடு, வாரச்செய்தி(காரைக்குடி), தென்றல் முதலான இதழ்களில் எழுதியவர்.

“சிரிக்கும் வையம்” என்ற தலைப்பில் இவர் இயற்றிய இந்தி எதிர்ப்புப்பாடல் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது. பாரதிதாசனுடன் இரண்டாண்டுகள் தங்கி அவர் உதவியாளராகவும், திருக்குறள் புரட்சி உரை அச்சுப்பணி பொறுப்பாளராகவும் செயல்பட்டவர். இவர் பாவேந்தர்மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகப் பாரதியாரையும் பாரதிதாசனையும் ஒப்பிட்டு 1953 இல் “பாரதியும் பாரதிதாசனும்” என்ற தலைப்பில் சிறிய நூலை வெளியிட்டவர். சாமி.பழனியப்பன் கவிதைகள் என்ற இவர்தம் நூல் இவர் மிகச்சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும் சான்றாக உள்ளது.

பொன்னியில் வெளிவந்த சாமி. பழனியப்பன் கவிதை

அமைதிகொள்வாய்!

அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!

வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்
பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட்டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை
மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!

மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி,
கணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்!
கடலே! அத்துணிவாலா நீயு மிந்நாள்,

திங்களினைக் கண்டதுமே மேலெழும்பித்
தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்,
பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவளோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும்
மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறாமென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்!


பொன்னி 1: 10, நவம்பர்,1947, பக்கம் 84,85

வியாழன், 18 ஜூலை, 2013

சிங்கப்பூர் ஆசிரியர் மா.இராஜிக்கண்ணு அவர்கள்

திரு.மா.இராஜிக்கண்ணு அவர்கள்

சிங்கப்பூரில் எனக்கு வாய்த்த நண்பர்களுள் திருவாளர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 2001 இல் நான் சிங்கப்பூருக்கு உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்ற பொழுது எனக்கு அறிமுகம் ஆனவர். அதன் பிறகு அவர் தமிழகம் வரும்பொழுதும், நான் சிங்கப்பூர் செல்லும்பொழுதும் அடிக்கடி எங்களுக்கு இடையே சந்திப்புகள் நிகழும்.

என் திருமணத்தின்பொழுது ஐயா அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடல் கண்ணாடிச் சட்டம் இடப்பட்டு எங்கள் வீட்டு வரவேற்பறையில் இன்றும் எங்களுக்கு அவர்களின் நட்பை நினைவூட்டிக்கொண்டிருக்கும். ஐயா அவர்கள் சிங்கப்பூரில் ஆசிரியப்பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல நூல்களைத் தமிழன்னைக்குப் படையல் செய்தவர். மா.இராஜிக்கண்ணு ஐயா அவர்களின் “தேசியக் கல்விக்கழகச் சிறப்புப் பயிற்சித் திட்டத் தமிழ்த்துறையின் கல்விப்பயணம் ஒரு கண்ணோட்டம்”  என்ற நூல்  வரும் காரிக் கிழமை(20.07.2013) சிங்கப்பூரில் வெளியிடப்பட உள்ளது. ஐயா அவர்களின் தமிழ்வாழ்க்கையைப் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.

மா.இராஜிக்கண்ணு அவர்கள் தஞ்சை மாவட்டம் ஆம்பல்பட்டு என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் மாரிமுத்து, மீனாட்சி ஆவர். 1957 இல் தம் எட்டாம் அகவையில் சிங்கப்பூருக்கு வந்தவர். உயர்நிலைக் கல்வியை முடித்ததும் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். தமது 45 ஆண்டுக்காலத்தின் கல்விப்பணியில் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக் கல்லூரிகளில் தமிழாசிரியராகவும், சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவில் பாடநூலாக்கக் குழுவில் சிறப்பு எழுத்தாளராகவும் கடமையாற்றியவர்.

சிம் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும், தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவுசெய்யும் நிலையில் உள்ளார்.


பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்கு இந்தியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்குச் சென்று வந்தவர். தேசியக் கல்விக்கழகத்திற்காக உருவாக்கப்பட்ட கதை அரும்பு, சிறுகதைக் கனி, கதைச்சோலை, கதை அரங்கம் உள்ளிட்ட நூல்களின் தொகுப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். திரு.மா. இராஜிக்கண்ணு அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்.



ஞாயிறு, 14 ஜூலை, 2013

சிங்கப்பூரில் தமிழ் இலக்கியச் சிறப்புரை...


தலைப்பு: நாட்டுப்புற இலக்கியமே  ஏட்டிலக்கியத்திற்கு முன்னோடி...

சிறப்புரை: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தகைஞர்கள்:

பேராசிரியர் சுப. திண்ணப்பன், அவர்கள்
திரு. எம்.ஏ.முஸ்தபா அவர்கள்
திரு. அ.கி. வரதராசன் அவர்கள்

இடம்: சிங்கப்பூர்- காலாங் சமூக மன்றம்,  இரண்டாவது தளம்

நாளும் நேரமும்: 14.07.2013, ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3 மணி

வெண்பாவில் அழைப்பு

இளங்கோ   வழங்குகிறார்  ஈடில்லாப் பேச்சு

வளங்கொழிக்க ஈந்திடுவார்  வாரி. - துளங்கிடும் 

செம்மைத்  தமிழின் சிறப்பெல்லாம்   மாந்திட

உம்மை  அழைத்தேன்  உவந்து.


நாட்டுப்   புறவியலின்   நற்பண்பை   ஆய்ந்ததால்  

தேட்டையுடன்   கூறிடுவார்   தேன்சொட்ட! -   கூட்டமாய்

குன்றாத   ஆர்வமுடன்   கூடிடுவோம்   வட்டமதில் 

நன்றாய்த்   தமிழருந்த   நாம்.

அன்புடன் அழைக்கின்றோம்! தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.


ஏற்பாடு: இலக்கிய வட்டம், சிங்கப்பூர்

தொடர்புக்கு: 93754500 

சனி, 13 ஜூலை, 2013

வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்...


முனைவர் க.தமிழமல்லன்

புதுச்சேரி என்றதும் தமிழ் அன்பர்களுக்குப் பாரதியாரும், பாரதிதாசனும் நினைவுக்கு வருவார்கள். அதுபோல் தனித்தமிழ் அன்பர்களுக்குப் புதுச்சேரி என்றதும் நினைவுக்கு வரும்பெயர் முனைவர் க. தமிழமல்லன் ஆகும். முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் முதல்நிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியவாறு பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்டுரை, பாவியம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, இதழியல் சார்ந்து செயல்பட்டுவருபவர். வெல்லும் தூய தமிழ் என்ற இதழினைக் கடந்த இருபது ஆண்டுகளாகத் தொய்வின்றி நடத்தி வருபவர். புதுச்சேரியில் சிலப்பதிகார விழா நடத்தித் தமிழ் இலக்கியப்பணிபுரிபவர். எழுத்திலும், பேச்சிலும் எப்பொழுதும் தூயதமிழைப் பயன்படுத்துபவர்.

முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி என்ற பகுதியில் பிறந்தவர். பெற்றோர் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க. தனலட்சுமி ஆவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 33 நூல்களை எழுதியுள்ளார். மலேசியா, இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர்.

 முனைவர் க.தமிழமல்லன்    பெற்ற விருதுகள்
                              
1.செந்தமிழ்ச் செம்மல்விருது       
2.இலக்கியச் செம்மல் 
3.செந்தமிழ்க் காவலர்  
4.பா(கவிதை)ப் போட்டியில் பரிசு 
5.சென்னைப் புதுயுகம்  என்னும் அமைப்பின் பாராட்டு                 
6.தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச்
சென்னையில் 3 நாள்கள் சாகும்வரைபட்டினிப்போர்” 
மேற்கொண்டதற்காக, சென்னை, தமிழ்ச்சான்றோர்பேரவை           
 7.புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு                            
 8.சிறுவர்இலக்கியச் சீர்மணி                                         
9.குழந்தை எழுத்தாளர் சங்கம் பாராட்டு                           
10.தமிழ்மணி விருது  
11.புதுவைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு                                                     
12.பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப்
பாராட்டு,  
13.சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருது,
  14.தமிழ்இலக்கிய மாமணி விருது                                     
15.பாவேந்தர் மரபுப் பாவலர் விருது                      
16.மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது
17.பாவாணர் கொள்கை பரப்புநர் விருது                                   
18.திருவனந்தபுரம்,-தமிழ்ச்சங்கம் பாராட்டு                                
19.சேலம் தமிழ்மன்றம் பாராட்டு                    
 20.உலகத்திருக்குறள் மையம் பாராட்டு

 முனைவர் க.தமிழமல்லன்    இலக்கிய அமைப்புகளின் வாயிலாக
 முழுநேரமும் உழைத்து  ஆற்றிய பணிகள் 

1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை 
என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது. 
2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது. 
3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது. 
4. புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு 
ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது. 
5. புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
6. இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது.  மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது. 
7. உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984 
8. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது. 
9. புலவர் கீரன்  தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதை எதிர்த்துப் போராடியது. 
10. ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச்  சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது. 
11. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால் எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.                                                                                                                                                                      
12 .புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது. 

13. தமிழ்வழிக்கல்விக்காகத் தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்து நடத்தியது. அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது. 

14. தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் சாகும்வரை பட்டினிப்போரில்”  கலந்து கொண்டது.3 நாள்கள் பட்டினியாய் இருந்தது. 

15. பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்ச் சொற்பொழிவு நடத்தியது.

16. புதுச்சேரிப் பாவேந்தர்  சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.

17. தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித் துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது.

18. தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது. 

19. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது. 

20. பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல். 

21.கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை இருபத்தொரு நாள்கள் செய்தது. அதன் விளைவாகக்கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன.                                                                                                        
 தொடர்பு முகவரி:
முனைவர் க.தமிழமல்லன்      அவர்கள்       
ஆசிரியர் - வெல்லும் துாயதமிழ்,        
66, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி -605 009



புதன், 10 ஜூலை, 2013

இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல்வெளியீடு



சங்க இலக்கியத் தாவரங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள பண்ணுருட்டி நகரமன்றத்தின் மேனாள் தலைவர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல்வெளியீடு இன்று நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.


ஞாயிறு, 7 ஜூலை, 2013

நடவுப் பாடல்களின் ஒளிவெள்ளம்…


நடவுப்பாடல்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்த என் பொதிகைத் தொலைக்காட்சி உரை இப்பொழுது உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு இணையத்தில் உள்ளது. கேட்டு மகிழலாம். தங்கள் நண்பர்களுக்கும் தமிழிசை ஆர்வலர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம்.  


தமிழ்ப்பண்பாட்டைக் கட்டிக்காக்க நினைக்கும் அனைத்துத் தமிழர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இதனை அறிமுகப்படுத்திப் பாடச்செய்யலாம். மறைந்துகொண்டிருக்கும் இந்த இசைவடிவை மீண்டும் புத்துயிர்பெறச் செய்வோம். தங்களின் ஊக்கவுரைகள்  மேலும் இந்தத்துறையில் ஈடுபட்டு உழைக்க எனக்கு உதவும்.
யுடியூபில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குக

புதன், 3 ஜூலை, 2013

புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவனின் நூல்கள் வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி அவர்கள் நூலை வெளியிட, முனைவர் வி.முத்து பெற்றுக்கொள்கின்றார். அருகில் மின்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன், அருகில் மன்னர்மன்னன், மு.இளங்கோவன், சோழன் க.குமார்,  கு.மோகன், கோ.முருகன்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ப.வைத்தியநாதன் அவர்கள் பேரவைத் தலைவரிடம் நூல்படிகளைப் பெறும் காட்சி.


பேரவைத் தலைவர் அவர்களிடம் நூல் படிகளைப் பெறும் சோழன் க.குமார் அவர்கள்
புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை ஆண்டிராய்டு பயன்பாட்டில் வழங்கும் புதுவை மாநிலத்தின் கல்வி அமைச்சர்  மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள், அருகில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் சு.வரலட்சுமி அவர்கள்.

நடவுப்பாடல்கள் ஒளிவட்டை மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள் வெளியிட முதல்படியைச் சீர்மிகு நர்மதா சாந்தசீலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், கட்டுரைக் களஞ்சியம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 03.07.2013 மாலை 7.00 மணி முதல் இரவு 8 .30 மணிவரை நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நூலின் முதற்படிகளைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ப. வைத்தியநாதன், சென்னையைச் சேர்ந்த சோழன் க.குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், பேராசிரியர் சு.வரலட்சுமி, முனைவர் அரங்க.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலினை மதிப்பீடு செய்து பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் உரையாற்றினார்.

புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய தமிழ் இணைய தளத்தைத் தொடங்கிவைத்தார். இதில் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, இசைப்பாடல்கள், புகைப்படங்கள் உள்ளன. இந்த இணையதளத்தில் பல்வேறு தமிழ் இணையதளங்களுக்குச் செல்ல இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஆண்டிராய்டு அப்ளிகேஷனாக, இலவசமாக கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் டவுன்லோடு செய்துகொள்ளலாம். குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் செல்போன்களில் இந்தப் பாடலைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

மேலும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் முதல்பதிப்பு நூல்கள் மின்பதிப்புகளாக இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. மு.இளங்கோவன் பாடிய நடவுப்பாடல்கள் ஒளிவட்டும் வெளியிடப்பட்டது. இதன் முதல் படியைப் புதுச்சேரி பொ.தி.ப. அறக்கட்டளையின் தலைவர் நர்மதா சாந்தசீலன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கு. மோகன் வரவேற்றார். இலக்கிய வட்டத்தின் செயலாளர் கோ. முருகன் நன்றிகூறினார். பேராசிரியர் ஆ.மணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.