நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ


 முனைவர் சிவ.இளங்கோ

புதுவையில் திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தொடக்க காலத்தில் பலர் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் பாவேந்தர் பாரதிதாசன், புதுவைச் சிவம், தேங்காய்த்திட்டு இராமகிருஷ்ணன், வாணிதாசன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுள் புதுவைச் சிவம் அவர்கள் பாவேந்தரின் படைப்புகளை வெளியிடுவதிலும் பதிப்பகத்தைக் கவனிப்பதிலும் பெரும் பங்காற்றியவர் ஆவார். புதுவைச் சிவம் பாவேந்தரைத் தம் ஆசிரியராகவே மதித்துப் போற்றியவர். பாவேந்தர் அரசு பணியில் இருந்ததால் வெளிப்படையாக இயங்கமுடியாத நிலை ஏற்பட்டபொழுது புதுவைச் சிவம் அவர்களின் பெயரில் இயக்கப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.

புதுவைச் சிவம் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும், திராவிட இயக்கத் தொண்டராகவும் செயல்பட்டவர். திராவிட இயக்கக் கொள்கை ஈடுபாட்டின் காரணமாக இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். புதுவைச் சிவத்தின் படைப்புகளையும் பாவேந்தரின் வெளியுலகம் அறியப்படாத படைப்புகளையும் வழங்கி ஆய்வுலகத்தின் பாராட்டைப் பெற்றவர் முனைவர் சிவ. இளங்கோ ஆவார். இவர் புதுவைச் சிவத்தின் மகனாவார்.

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் ஆய்வு செய்ய வந்த காலம்(1992-1993) முதல் முனைவர் சிவ. இளங்கோ அவர்களை அறிவேன். பாரதிதாசன் பரம்பரை என்ற என் ஆய்வுக்கு இவர் வழங்கிய நூல்களும் குறிப்புகளும் பலவகையில் பயன்பட்டன. முனைவர் சிவ.இளங்கோ அவர்களின் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் சிவ.இளங்கோ

புதுவைச் சிவம்- செகதாம்பாள் ஆகியோரின் இளைய மகனாகப் பிறந்தவர் சிவ. இளங்கோ  ஆவார்(15.02.1957). அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், இளம் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கவிஞர் புதுவைச் சிவமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் இவரின் முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. புதுச்சேரியின் அரசியல் வரலாற்றையும் திராவிட இயக்க வரலாற்றையும் நூல்கள் வழியாக வழங்கி வருபவர்.

 சிவ.இளங்கோ நூல்கள்:

கவிஞர் புதுவைச் சிவம் நினைவுப்பூக்கள்(1989)

பாவேந்தரும் புதுவைச் சிவமும்(1990)

புதிய பேராசிரியர்கள்(1990)

பாரதிதாசன் என்கிற கனக-சுப்புரத்தினம்(1991)

பிரஞ்சிந்தியாவும் திராவிட இயக்கமும்(2000)

எட்டுமணிநேர வேலை-ஆசியாவின் முதல் வெற்றி(2004)

பெரியார் பெருந்தொண்டர் புதுவைச் சிவம்(2007)

புதுவைச் சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும்(2008)

கவிஞர் புதுவைச் சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள்(2012)

தொகுப்பாசிரியர்:

புதுவைச் சிவம் கவிதைகள்(1997)

புதுவைச்சிவம் நாடகங்கள்(2000)

புதுவைச் சிவம் படைப்புகள்(2007)

புதுவைச் சிவம் கட்டுரைகள்(2009)

முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் வழியாகத் தமிழகம் புதுவையில் நன்கு அறிமுகம் ஆனவர்.

பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவில் இணைந்து தமிழ்த் தொண்டாற்றியவர்.


அண்ணா பேரவையின் புதுவை மாநில அமைப்பாளர். கவிஞர் புதுவைச் சிவம் அறக்கட்டளையின் நிறுவுநர்.தொலைக்காட்சி, வானொலிகளில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். புதுவை அரசின் தொல்காப்பியர் விருது உட்படப் பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றவர்.





முகவரி
முனைவர் சிவ. இளங்கோ அவர்கள்,
எண்.6, புதுவைச்சிவம் வீதி,
வெங்கட்டா நகர்
புதுச்சேரி- 605 011
செல்பேசி: 0091 9994078907


கருத்துகள் இல்லை: