நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 4 ஜனவரி, 2011

செய்யுளாக்கத்தில் தொடை


பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் உரையாற்றுதல்

 தொல்காப்பியம் செய்யுளுக்குரிய உறுப்புகளாக முப்பத்து நான்கு உறுப்புகளைக் (26+8=34) குறிப்பிடுகின்றது. அவை மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பனவாகும். இவற்றுள் ஒன்பதாம் இடத்தில் குறிப்பிடப்படும் தொடைச் சிறப்பை இங்கு எண்ணிப் பார்ப்போம்.

  தொடை என்பது தொடுக்கப்படுவது ஆகும். தொடுக்கப்படும் மாலையைத் தொடையல் என்பது போல் செய்யுளில் அடிகளும், சீர்களும் ஒன்றுடன் ஒன்று பொருத்தமுறத் தொடுப்பது தொடையாகும். காண்போர் கண்ணையும் மனத்தையும் ஈர்த்து வியப்படையப் பூத்தொடுப்போர் பலவகையில் தம் திறன்காட்டிப் பூவைத் தொடுப்பர். அதுபோல் செய்யுளியற்றும் ஆசிரியர்கள் தங்கள் புலமைநலம் வெளிப்படத் தொடையமைப்புகளைத் திறம்படப் பயன்படுத்திச் செய்யுளியற்றிப் படைப்பின்பால் அறிவார்ந்த மக்களை ஈர்ப்புறச் செய்வது உண்டு. எனவே இடத்திற்கு ஏற்பத் தொடையமைப்புகள் இருந்து கற்போர்க்கு இனிமை பயப்பதால் தொடையமைப்பைப் பழந்தமிழ் மக்கள் போற்றியுள்ளனர்.

  செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்த தொடைகள் பின்னாளில் வளர்ந்து பல்கி எண்ணிக்கையில் மிகுந்து சலிப்பூட்டும் அளவிற்கு நின்றது. இன்று புதுப்பாக்கள் புறப்படும் காலச்சூழலில் தொடைகளைத் துலங்கச்செய்தல் புலவர்கள் கடமையாக உள்ளது.

  தொல்காப்பியர் தொடை பற்றிக் குறிப்பிடும் இடத்து முதற்கண் நான்கு தொடைகள் நெறிப்பட நிற்பன என்று சிறப்பித்துக் கூறுகின்றார். மற்ற தொடைகளை அடுத்த நிலையில் வைத்து நூற்பா செய்துள்ளது இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் தொல்காப்பியர் தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது என்று குறிப்பிடுவதும் (செய்யுளியல் 97) இதற்கு உரையாசிரியர்கள் கணக்கிடும் முறைகளும் பழந்தமிழகத்தில் செய்யுள் வல்லாரின் உரையாராய்ச்சியின் தன்மை நம்மை வியப்படையச் செய்கின்றது. செய்யுள் உறுப்புகளில் தொடை விரிவாக ஆராய்ந்து கணக்கிட்டு உரைக்கத் தகுந்த மிகப்பெரிய பிரிவாக உள்ளது. இன்றைய புதிய கணக்கீட்டு முறைகளின் துணைகொண்டு தொடையமைப்பு விரிவாக ஆராய்வதற்கு இடந்தருகின்றது.

  தொடையை முதற்தொடை எனவும் தொடை விகற்பம் எனவும் இரண்டாகப் பகுத்துப் பார்க்கலாம். ஓரடிக்கும் மற்றோர் அடிக்கும் இடையில் உள்ள பொருத்தத்தைக் காட்டுவது முதற்தொடை என்று அழைக்கப்படும். இவ்வாறு அல்லாமல் ஓரடியில் உள்ள சீர்களுக்கு இடையே உள்ள பொருத்தப்பாட்டினைத் தொடை விகற்பம் என்பர்.

  பொதுவாகத் தொடையழகு இன்னோசைக்கும், செய்யுளைச் சிறப்பிக்கவும் இடம்பெறுகின்றது. புலமைநலம் வாய்த்த கவிஞர்களின் செய்யுள்களில் தொடைநயம் நிரம்பக் கிடந்து கற்போருக்கு இன்பம் நல்கும். சங்கச் செய்யுள்களிலும், பக்திப் பனுவல்களிலும், காப்பியங்களிலும் தொடையமைப்புகள் இலக்கியத்துறையின் படிக்கட்டுகளாக உள்ளன. செய்யுள்களைச் சிறக்கச் செய்த தொடை நயம் இன்றும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் நாவிலும் சிறக்கக் காண்கின்றோம். செய்யுள் சிறப்பிற்குத் தொடை முக்கியப் பங்காற்றுவதால் "தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்ற பழமொழி மக்கள் வழக்கில் உண்டு.

  தொடை என்னும் உறுப்பைப் பற்றித் தொல்காப்பியர் பதினாறு நூற்பாக்களில் பேசியுள்ளதை அறிஞர் சோ.ந. கந்தசாமியார் எடுத்துக்காட்டுவார். (தொல்-பொருள்- இளம்.393-408). தொடையின் வகைகளைத் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். ஆனால் தொடை என்றால் என்ன என்று தொல்காப்பியர் விளக்கவில்லை. தொல்காப்பியத்திற்குப் பிறகு எழுந்த காக்கைபாடினியம் போன்ற நூல்கள் தொடை பற்றி விளக்கியுள்ளன.

  காக்கைபாடினியத்தில்,
 "எழுத்து, சொல், பொருள் என்பனவற்றை ஒருவித ஒழுங்கில் நிறுத்தி அடியோடு அடியிடைத் தொடுக்கப்படும் செய்யுள் உறுப்பே தொடை எனப்படும்" (யா.க,வி.ப.136).

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல் மயேச்சுரர் யாப்பில் " எவ்வகைப்பட்ட பாவிலும் அடியிரண்டு தொடுத்து வழங்குதல் தொடை எனப்படும்" (யா.க.வி.ப.136). என்று கூறப்பட்டுள்ளது.

  நாற்சீர்கொண்ட அடிகளன்றி, இரண்டு முதலான சீர்களைக் கொண்டு வரும் அடிகளில் தொடை வாராதென்பர் தொல்காப்பியர். தொல்காப்பியர் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை நிரல்நிறை, இரட்டையாப்பு எனப் பத்துத் தொடைகளை முதற்கண் குறிப்பிட்டு முதலில் உள்ள எட்டிற்கும் சிறப்பிலக்கணம் கூறி, நிரல்நிறையும் இரட்டை யாப்பும் சொல்லதிகார எச்சவியலில் மொழிந்துள்ளார்.

  இங்கு இரட்டை என்பது ஒரு சீர் அடி முழுவதும் வருவதாகும். எ.கா. "ஒக்குமே யக்குமே யக்குமே யக்கும்".

  உரையாசிரியர் மூவரும் "மொழிந்த வற்றியலான் முற்றும்" என்பதற்கு நிரல்நிறையும் இரட்டை யாப்பும் மேல்மொழிந்த மோனை முதலானவற்றின் இலக்கணத்தால் அவற்றுள் அடங்கி முடியவும் பெறும் என்று கூறி நிரல் நிறையையும் இரட்டைத் தொடையையும் நீக்கிவிட்டுத் தொடையை எட்டாகக் கொண்டு அந்த எட்டுடன் தொல்காப்பியர் கூறாத பல தொடைகளையும் கூட்டித் தொடைத்தொகை கொண்டுள்ளதாகப் பேராசிரியர் அடிகளாசிரியர் குறிப்பிடுவர்.

 தொடைவகையை விளக்குமிடத்து உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

  பிற்காலத்துப் புலவர்களும் உரையாசிரியர்களும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்னும் ஐந்தும், அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டுடன் கூடி(5x8=40) நாற்பதாகவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்னும் மூன்றினைப் பெற்று தொடைவிரி நாற்பத்து மூன்றாக வரும் என்று கூறுவதும் உண்டு.

  மோனை, எதுகை, முரண், இயைபு என்ற நான்கு தொடைகளும் தொன்மையான மரபுகளை உடையன. இவை பழைமையான தொடைகளாகக் கருதப்படுகின்றது. இவற்றுள்ளும் மோனையும் எதுகையும் அடிப்படைத் தொடைகளாகும். மேற்கண்ட நான்கு தொடைகளுடன் அளபெடைத் தொடையை ஐந்தாவது தொடையாகக் குறிப்பிடுவர்.

தொல்காப்பியர் காட்டும் தொடைப் பாகுபாடு

அடிகளுக்கு இடையே அமையும் தொடையை அடித்தொடை எனலாம். இவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்று குறிப்பிடப்படும்.

"மோனை யெதுகை முரணே யியைபென
நானெறி மரபின தொடைவகை யென்ப" (தொல்.பொருள்.செய்.84)

என்னும் நூற்பாவில் முதன்மைத் தொடையாக நான்கு தொடைகள் குறிப்பிடப்படுகின்றன(4).

"அளபெடை தலைப்பெய வைந்து மாகும்" (தொல்.பொருள்.செய்.85)

என்னும் நூற்பாவில் அளபெடைத்தொடையையும்(5) முதன்மைத் தொடையாக அடுத்துக் காட்டியுள்ளார்.

  பேராசிரியர் முதல் நூற்பாவுரையில் "நானெறி மரபு என்பது நெறிப்பட்ட தொடையிலக்கணம் மோனை எதுகை முரண் இயைபு எனக் கூறப்படுவதாம். எனவே அளபெடைத் தலைப்பெய வைந்துமாகும்" என்றவழி இதுபோலச் சிறந்ததன்று அளபெடைத் தொடை என்பதாம். என்னை? அதுவும் வழுவமைத்துக்கொண்ட எழுத்தாகலான் என்று உரை வரைவர். எனவே மோனை, எதுகை, முரண், இயைபு என்ற நான்கு தொடைகளுக்கு முதலாசிரியர் முதன்மையளித்துள்ளார் என்று கருத இடம் உண்டு. ஒருபுடை ஒப்புமைகருதி அளபெடைத்தொடையை அடுத்த நூற்பாவில் வைத்தனர் போலும்.

மேலும்,

"பொழிப்பு மொரூஉஞ் செந்தொடை மரபும்
அமைந்தவை தெரியி னவையுமா ருளவே" (தொல்.பொருள்.செய்.86)


என்னும் நூற்பாவில் பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை(6,7,8) என்பனவும் தொடையாகக் குறிப்பிடுவார். இவ்வாறு ஒத்த தன்மையுடைய தொடைகளை (எட்டையும்) முதல்நூலாசிரியர் ஒரே நூற்பாவில் அடக்காமல் தனித்தனி நூற்பாவாக அமைத்துள்ளமைக்குக் காரணம் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உள்ளதைக் காட்டுவதற்கு ஆகும்.

 நிரல்நிறையும், இரட்டைத் தொடையும் முன்புகூறிய தொடைகளுடன் ஒக்கும் என்று கருதிய தொல்காப்பியர் அடுத்த நூற்பாவில் குறிப்பிடுகின்றார்

"நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பும்
மொழிந்தவற் றியலான் முற்று மென்ப" (தொல்.பொருள்.செய்.86)

 நிரல் நிறைப் பொருள் வகையால் தொடுக்குந் தொடையும், வந்த சீரே நாற்கால் தொடுக்குங் தொடையும் முன்னைத் தொடைப்பாற்பட்டு அடங்கும் என்கின்றார் பேராசிரியர். அவ்வாறு கூறிய பேராசிரியர்,

"அடலமர் வேனோக்கி நின்முகங் கண்டே
உடலும் மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங்
கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந்
தடமதிய மாமென்று தாம்"

என்னும் பாடலை எடுத்துக்காட்டி உடலுங் கடலுமென நிரல்நிறைத் தொடைமேற் கூறுமாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும் என்று எழுதுகின்றார்.

"பரவை மாக்கடல் தொகுதிரை வரவும்
பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்"

என்னும் தொடரைக் காட்டி என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று; அஃது இயைபின்பாற்படுமென்ப" என்கின்றார்.

இங்கு ஈரடிகளிலும் ஈற்றில் வரவும் வரவும் என்று வருவதால் இது இயைபாயிற்று.

இரட்டைத்தொடை என்பது ஒரு சொல்லே நான்கு சீராகி வரும் என்பது அஃது. அதனை இரண்டு வாகையாக்கிக் காட்டுகின்றார் பேராசிரியர்.

அவை 1. குறையீற்று இரட்டை 2. நிறையீற்று இரட்டை

குறையீற்று இரட்டை எ.கா. ஒக்குமே ஒக்குமே யக்கும் யக்கும் என வருவது. இதில் ஒக்குமே ஒக்குமே எனவரும் அடியில் ஈற்றுச்சீரில் ஏகாரம் இன்மையின் இது குறையீற்று இரட்டையாகும்.

நிறையீற்று இரட்டை: எ.கா.

"பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள் பாடுகோ"

என்னும் அடியில் நான்குசீரும் குன்றாது வருவது கவனத்திற் கொள்ளத்தக்கது.

1.அடித்தொடை

அடிகளுக்கு இடையே தொடுக்கப்படும் தொடைகளைப் பற்றி முதலில் நோக்குவோம். அடிகளுக்கு இடையே தொடுப்பனவற்றுள் மோனைத்தொடை முதன்மையானதாகும்.

1.மோனைத் தொடை

"அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை" (தொல்.பொருள்.செய்.88)

அடிதோறும் முதலெழுத்து ஒன்றாக வரும்படித் தொடுப்பது மோனைத் தொடாயாகும்.

எ.கா.

"கண்டல் கானற் குருகின மொலிப்பக்
கரையாடு அலவன் அளைவயிற்" (அகம்-260)

எனவும்

"கோதை மார்பிற் கோதை யானுங்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்" (புறம்-48)

எனவும் வரும் தொடர்கள் மோனைத்தொடைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இதில் அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கப்பட்டுள்ளது.

மோனை எனினும் முதற்றொடை எனினும் ஒன்றாகக் கருதப்பெறும். மோனைத் தொடை 566 என்று பேராசிரியர் எண்ணிக்காட்டுவார். (தொல். பொருள்.). அவர் மேலும் பலவாறு பெருக்கிக் காட்டுவதும் உண்டு. தொல். பொருள். செய்யுள், பக்கம் 371)

2.எதுகைத்தொடை

முதலெழுத்து அளவொத்து இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை எனப்படும்.

"அஃதொழித் தொன்றி னெதுகை யாகும்" (தொல்.பொருள்.செய்.405)


இந்த எதுகையும் அமைப்பு முறையால் இரண்டாகப் பகுத்துக் காட்டலாம். இவ்வெழுத்துகளில் முதல் இரண்டு எழுத்துகள் ஒத்து வருவது ஒருவகையாகவும், சீர்முழுவதும் ஒத்து வருவது என்று ஒருவகை எதுகை காணப்படுவதும் உண்டு. சீர்முழுவதும் ஒன்றி வருவது தலையாகு எதுகை என்பர். இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவது அடியாகு எதுகை என்பர்.

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்" (தொல்.அகத்.5)

என்பதில் மாயோன், சேயோன் என நின்று சீர் முழுவதும் ஒத்து வருவதால் தலையாகு எதுகையாக அமைகின்றது.

"அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி
பகல்கான்று எழுதரு பால்கதிர்ப் பரப்பி"

இரண்டாம் எழுத்து(க) மட்டும் ஒன்றி அடி எதுகையாக நிற்கின்றது.

அடி எதுகையை இடையாகு எதுகை என்பர். ஒழிந்தன கடையாகு எதுகை என்பர்.

மோனைத் தொடை எதுகைத் தொடை இரண்டிற்கும் எடுத்த எழுத்தேயன்றி வருக்க எழுத்து(கிளை எழுத்து) வருதலும் உண்டு. ப, பா, பி, பீ என வருதலும், ற றா என வருதலும் கிளை எழுத்து வருதலுக்குச் சான்று. இவற்றை வருக்க எதுகை என்பது பிற்கால வழக்கு.

இதனை,

"ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய" (தொல்.பொருள்.செய்.406) என்னும் நூற்பா வழியும் அதற்குப் பேராசிரியர் வரைந்த உரை வழியும் அறியலாம்.

3.முரண்தொடை

அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.

"மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே"(தொல்.பொருள்.செய்.407)
இது தொல்காப்பியம்.

சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும் என்று பேராசிரியர் காட்டுகின்றார்.

1.சொல்லும் சொல்லும் முரணுதல்
2.பொருளும் பொருளும் முரணுதல்
3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
4.சொல்லும் பொருளும் பொருளடு முரணுதல்
5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணுதல்

என்பன அவையாகும்.

"செவ்வி வாய்த்த செம்பாட்டு ஈரத்து
வெள்ளை வெண்மறி மேய்புலத்தொழிய"

என்னும் தொடரில் செவ்வி,வெள்ளை என்பனவற்றுள் பொருளன்றி சொல்லும் சொல்லும் முரணி நிற்பதை நோக்குக.

"நீரோரன்ன சாயல்
தீயோரன்ன என் உரனவித்தின்றே" (குறுந்தொகை 95)

என்பனவற்றுள் நீர், தீ என்று பொருளும் பொருளும் முரணி நிற்பதை அறியலாம்.

"தண்ணிய லற்ற தயங்கறற் கானத்து
வெந்நீர்ப் பொருள் நசைஇ முன்னிச் சென்றோ"

என்பது சொல்லும் பொருளும் சொல்லொடு முரணியது.

"தீநீர் நஞ்சந் திருமிடற் றொடுக்கிய
உவரி யன்ன உடைப் பெருஞ் செல்வர்"

என்பது சொல்லும் பொருளும் பொருளடு முரணியது.

"செவ்வேற் சேஎய் திருமண மறுத்த
கருவிற் கானவன் வரிலவ நிலரே"

இதில் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணி நிற்கின்றது.

நோய், மருந்து எனப் பகைப்பொருள் முரணுதலும் கருமை செம்மை என நிறப்பொருள் முரணுதலும் பகல், இரவு எனப் பொழுது முரணுதலும் உண்டு.

எனினும் இளம்பூரணர் சொல்முரன், பொருள் முரண் என்ற இருவகையை மட்டும் பேசுகின்றார்.

4. இயைபுத் தொடை

ஈரடியின் இறுதி எழுத்து, அசை, சீர் ஏதேனும் ஒன்று இயைந்து வருவது இயைபு எனப்படும். எழுத்தடி இயைபு, சொல்லடி இயைபு என்று இதில் இருவகை உண்டு.

"இறுவா யன்ற லியைபின் யாப்பே" (தொல்.பொருள்.செய்.408) என்னும் நூற்பாவால் இதனை அறியலாம்.இந்த நூற்பாவுக்கு உரை வரையும் பேராசிரியர் இரண்டு பாடலடிகளை எடுத்துக்காட்டி இருவகை இயைபை விளக்கியுள்ளார்.

" அவரோ வாரார் கார்வந்தன்றே
கொடிதரு முல்லையுங் கடிதுஅரும் பின்றே" என்பது எழுத்தியைபு

" பரவை மாக்கடற் றொகுதிரை வரவும்
பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்"

என்பது சொல்லடியியைபு.

5. அளபெடைத் தொடை

அளபெடை என்பது அடிதோறும் முதற்கண் எழுத்துகள் அளபெடுப்பது அளபெடையாகும். அளபெடை இருவகைத்து. 1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை. உயிரளபெடைக்கு அறிகுறியாக நெடிலையடுத்து இனமான குற்றெழுத்து இடம்பெறும்.

" பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையடு மறவர் மயங்கி" (கலித்.5)

இது உயிரளபெடைக்கு எடுத்துக்காட்டு.

" கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச்
சுஃஃ றென்னும் தண்டோட்டுப் பெண்ணை" ( ) என்பது

ஒற்றளபெடையாகும்.

இவை கட்டளையடியடு தொகுக்குங்கால் உயிரளபெடை முந்நூற்று முப்பத்து மூன்றாகும் என்று பேராசிரியர் கணக்கிட்டு உரைப்பர் (பக்கம் 387).


தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியரால் அடிவகை அளபெடையும் சீர்வகை அளபெடையும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

2. சீர்வகைத்தொடை

1.பொழிப்பெதுகைத் தொடை

பொழிப்பு எதுகை என்பது முதற்சீரும் மூன்றாம் சீரும் ஒன்றிவரத் தொடுப்பது ஆகும்.

"ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற்
பொழிப்பென மொழிப புலவ ராறே" (தொல்.பொருள்.செய்.410)
-
------------- ---- ------------- ----

2. ஒரூவெதுகைத்தொடை

"இருசீ ரிடையிடி னொரூஉ வென மொழிப" (தொல்.பொருள்.செய்.411)
இரு சீர் இடையிட்டு எதுகையாயின் பொழிப்பு என்பர். அதாவது முதற்சீரும் நான்காம் சீரும் இரண்டெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அதனை ஒரூஉ என்பர்.

எ.கா. "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை" (ஐங்குறு.)

வந்த எழுத்தே வருவது ஒருவது ஒருவகையாகவும், கிளையெழுத்து வருவது ஒருவகையாகவும் கொண்டு ஒரூஉ எதுகை இருவகைப்படும்.

கிளையரூஉ வெதுகை

" சூரலங் கொடுவளி யெடுப்ப வாருற்று"

என்பதனுள் வந்த எழுதே வராமல் அதனை கிளை எழுத்து வந்துள்ளமையால் இது கிளையரூஉ வெதுகை எனப்படும்

ஒரூஉத் தொடை இரண்டாலும் பெற்ற தொடை எண்ணிக்கை ஆயிரத்தெட்டு என்று பேராசிரியர் கணக்கிடுவார்.

3.செந்தொடை

தொடைகள் என்று குறிப்பிட்ட வகையில் அடங்காமல் வரின் அதனை இயற்கைச் சொல்லால் செய்யுள் செய்யும் புலவர் அது செந்தொடை என்பர்.

இதனைத் தொல்காப்பியம்,

"சொல்லிய தொடையடு வேறுபட் டியலிற்
சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப" (தொல்.பொருள்.செய்.412)
என்று குறிப்பிடுகின்றது.

எ.கா.

"பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலினம் அகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே"

இப்பாடலுள் எத்தகு தொடையமைப்பும் பொதியாமல் இருப்பதால் இதனைப் புலவர் செந்தொடை என்பர்.

தொடை எண்ணிக்கை

தொடைகளின் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் 13,699 என்று குறிப்பிட்டுவிட்டு, அடுத்த நூற்பாவில் தொடையையும் தொடை விகற்பத்தையும் பெருக்கின் கணக்கில என்று குறிப்பிடுகின்றார்.

"மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீராயிரத் தாறைஞ்ஞூற்றொடு
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று
ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே" (தொல்.பொருள்.செய்.413)

எனவும்,

"தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும்"

எனவும் வரும் நூற்பாக்கள் இதனை எடுத்துரைக்ககும்.

முதலில் உள்ள நூற்பாவைப் புரிந்துகொள்ள இந்த விளக்கம் உதவும்.

ஐயீராயிரம் =5x2000= 10,000
ஆறைஞ்ஞூறு = 6x500 = 3000
பத்துக்குறை எழுநூறு = 700-10 690
ஒன்பஃதென்ப = 90
தொண்டு தலையிட்ட = 9

  தொல்காப்பியர் குறிப்பிடும் தொடைகளின் வகைகளும் எண்ணிக்கையையும், அவர் காலத்தில் தமிழ் யாப்பின் வளர்ச்சி நிலையை நமக்குக் காட்டி நிற்கின்றன. தொடை குறித்து உரையாசிரியர்கள் தரும் விளக்கம் அவர்களுக்கு யாப்பில் இருந்த ஆழமான புலமை நலத்தைக் காட்டுகின்றது. இந்த விளக்கங்களை எளிமைப்படுத்தி அட்டவணைகளாகத் தமிழுலகிற்கு வழங்கினால் பண்டைத் தமிழரின் செய்யுள் மாண்பும் கணக்கறிவும் உலகுக்குத் தெளிவாகத் தெரியும்.


மு.இளங்கோவன் உரை


பேராசிரியர் மதுரை சந்திரன், முனைவர் துரை.லோகநாதன், மு.இளங்கோவன்


உற்றுழி உதவிய நூல்கள்:

1.சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், 1989

2.அடிகளாசிரியர்(ப.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், செய்யுளியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1985

3.கு.சுந்தரமூர்த்தி,(ப.ஆ),தொல்காப்பியம்,பொருளதிகாரம்- பிற்பகுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,1985



(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய தொல்காப்பியச் செய்யுளியலும் செய்யுளாக்க மரபும் என்னும் பொருண்மையிலான கருத்தரங்கில் 04.01.2011 இல் படிக்கப்பெற்ற கட்டுரை.)

கருத்துகள் இல்லை: