நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 டிசம்பர், 2011

“தானே” வந்து தானே ஓய்ந்தது…




புதுச்சேரியில் தானே புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. 30.12.2011 அதிகாலை 2.30 மணியிலிருந்து காலை 10 மணி வரை புயல்காற்றின் முற்றுகையில் புதுச்சேரி இருந்தது. மழையும் இடைவிடாது பெய்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

விடியற்காலம் 5 மணி அளவில் ஒரு பதிவு எழுதினேன். அதன் பிறகு மின்சாரம் இல்லாததால் இன்றுதான் கணினியை இயக்க முடிந்தது. இதுவரை 10 பேர் உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக இருந்த பழைமையான மரங்கள் யாவும் சாய்ந்தன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை. சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

நேற்று இரவு வரை வீட்டில் இருந்த மக்கள் இன்று வெளியே நடமாடத் தொடங்கியுள்ளனர். கடைகள் எதுவும் திறக்கவில்லை. எனவே உணவுக்குப் பலரும் திண்டாடினர். புத்தாண்டுக்கு வெளியூரிலிருந்து வந்துள்ள சுற்றுலாக்காரர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது.

கடற்கரையில் கடுமையான காற்று வீசியதால் கருங்கற்களைத் தூக்கிவந்து கடற்கரைச் சாலையில் போட்டது. தென்னை மரங்களின் தலையை முறித்துப் போட்டது. காற்று சில வீடுகளின் கூரைகளைப் பெயர்த்துச்சென்றது. தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மாடிகளில் வைத்துள்ளது. தென்னை மரத்தில் முற்றிய நெற்றுகள் கீழே விழுந்து தண்ணீரில் மிந்ததன. தெருக்கள்தோறும் தேங்காய்களைப் பார்க்கமுடிந்தது. தண்ணீரில் கழிவுநீர் சில இடங்களில் கலந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை இன்று வீட்டிலிருந்து மக்கள் இறைத்து வருகின்றனர். சாலைகள் இன்னும் முழுமையாகப் போக்குவரவுக்குத் தயாரகவில்லை. பால் விலை நேற்று இரு மடங்கானது.

பள்ளிகள்,கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகவில்லை. புதுச்சேரியில் இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க ஆள் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையைத் "தானே" புயல் பாதித்துவிட்டது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

புதுவையில் கடும் புயல் - இருளில் மூழ்கிய புதுவை

புதுச்சேரியைப் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாலும், இது கடற்கரையில் அமைந்த ஊர் என்பதாலும் 29.12.2011 இரவு பத்துமணி முதல் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்ததப்பட்டது. காற்றும் பலமாக வீசியது. 30.12.2011 இரவு ஒரு மணிமுதல் முதல் கடும் புயற்காற்று இந்த ஊரைத் தாக்கியது. வீட்டின் சன்னல் கதவுகள் நிலைக் கதவுகளைக் காற்று வேகமாக அடித்து உடைத்தது. நள்ளிரவு இரண்டுமணி முதல் புயலின் வேகம அதிகரித்தது. விடியற்காலம் நாலரை மணிக்குப் புயலின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதை உணரமுடிகின்றது. ஐந்து மணிக்கு மேலும் காற்று அதிகமாக வீசுகின்றது. வானிலை மையம் முன்னதாகப் புயலின் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டதாலும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் புயல்பற்றிய செய்தி மக்களுக்குத் தெரிந்ததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.கடற்கரை ஒட்டிய பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்பாலான மரங்கள் சாய்ந்திருக்க வாய்ப்பு உண்டு.அதுபோல் குடிசைவீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம். காலையில்தான் இழப்புகள் குறித்த விவரம் தெரியவரும். இரவுப்பொழுது என்பதால் அச்சம் கலந்த உறக்கத்தில் மக்கள் உள்ளனர் தொடர்ந்து புயல்காற்று வீசுகின்றது. மழையும் விடாமல் பெய்து கொண்டுள்ளது.தொலைத்தொடர்பு சில இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்


அழைப்பிதழ்

சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் (S.R.M.) தமிழ்ப்பேராயமும், மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து பத்துநாள் தமிழ்க் கணினிமொழியியல் குறித்த பயிலரங்கினை நடத்துகின்றன. பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அழைப்பிதழில் பயிலரங்க நெறிமுறைகள் உள்ளன.

இடம்: திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்(S.R.M.)
நாள்: 20.01.2012 முதல் 30.01.2012 வரை





தொடர்புக்கு:
திரு.இல.சுந்தரம், தமிழ்ப்பேராயம் + 91 98423 74750

சனி, 24 டிசம்பர், 2011

பொன்னி இதழாசிரியர்கள் முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் வாழ்க்கைக் குறிப்பு


பொன்னி இதழாசிரியர் முருகு.சுப்பிரமணியன்

 திராவிட இயக்கம் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய இயக்கமாகும். இந்த இயக்கத்தின் கொள்கைகளைப் பறைசாற்றும் வகையில் பல ஏடுகள் உணர்வாளர்களால் நடத்தப்பெற்றுள்ளன. சற்றொப்ப முந்நூறுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பொன்னி ஏடு 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தது. பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 1953 அளவில் இந்த இதழ் நிறுத்தப்பட்டது.

 பொன்னி இதழில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை வெளியிட்டும் அதற்குத் தகுந்த படங்களை முகப்பில் வெளியிட்டும் இதழாசிரியர்கள் பாவேந்தர் புகழ்பரப்பியுள்ளனர். பாரதிதாசன் பரம்பரை என்ற ஓர் இலக்கிய அணி இந்த இதழின் வழி உருவானது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், தில்லை வில்லாலன் எனப் பலர் இந்த ஏட்டில் எழுதியுள்ளனர்.

 பொன்னி இதழை நடத்திய முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் ஆகியோரின் படங்களையும், வாழ்க்கைக் குறிப்பையும் இங்கு இணைக்கின்றேன். தொடர்ந்து பொன்னி குறித்து எழுதுவேன். மேலும் விவரம் வேண்டுவோர் நான் பதிப்பித்த பொன்னி ஆசிரியவுரைகள், பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி சிறுகதைகள் (வெளிவர உள்ளது) ஆகியவற்றைப் பார்க்கலாம்.


முருகு சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாப்பட்டு என்னும் ஊரில் வாழ்ந்த முருகப்பன், சிவகாமி ஆச்சிக்கு மகனாகப் (5.10.1924-இல்) பிறந்தவர். திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 - ஆம் ஆண்டு ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்தார். அவர்தம் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்பவர் முருகுவின் கட்டுரை புனையும் ஆற்றலைப் பாராட்டி ஊக்குவித்தார். 1942 - இல் முருகுவின் படிப்பு முதலாண்டு பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியும் முன்னரே இளந்தமிழன் என்னும் திங்கள் இருமுறை ஏட்டைத் தொடங்கினார். கையெழுத்துப்படியாக இந்த ஏடு ஏறத்தாழ மூன்றாண்டுகள் வெளி வந்தது. இளந்தமிழன் ஆசிரியர் முருகு என வெளிவந்தது. அதுமுதல் முருகு. சுப்பிரமணியன் ஆனார்.

இளம் அகவை முதல் பாவேந்தர் பாடல்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 1944 - 45 ஆம் ஆண்டுகளில் காரைக்குடியில் வெளிவந்த குமரன் என்னும் வார ஏட்டில் முருகு துணையாசிரியராகவும் நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். குமரன் இதழாசிரியர் சொ. முருகப்பா அவர்களிடம் இதழியல் நுட்பங்களை அறிந்து கொண்டார். 1947 - இல் பொங்கல் நாளையொட்டி, பொன்னி என்னும் இதழைத் தொடங்கினார். இது தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.

1953 - ஆம் ஆண்டு முருகு மலேசியா சென்றார். தமிழ்நேசன் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1954 - இல் சிங்கப்பூர் சென்று தமிழ்முரசு என்னும் நாளிதழில் துணையாசிரியரானார். மலேசியாவில் வெளிவந்த தமிழ்நேசன் இதழின் தலைமையாசிரியர் பொறுப்பை 1962 - முதல் ஏற்றார். எழுத்துத் துறையில் பலர் உருவாகத் துணையாக இருந்தவர். இவர் 1984 ஏப்ரல் 10 - இல் இயற்கை எய்தினார். இவர்தம் மக்கள் மலேசியாவில் புகழ் வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். (விரிவான செய்திகளுக்குச் சிந்தனையாளன் இதழில் சூன் 2003 - இல் வெளிவந்த எம் கட்டுரையைக் காண்க.)



அரு. பெரியண்ணன்

அரு பெரியண்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

அரு பெரியண்ணன் அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். இவர் பிறந்த ஆண்டு 12.8.1925 ஆகும். இளம் அகவை முதல் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர். தம் பகுதிக்கு வந்த திராவிட இயக்கத் தலைவர்களை வரவேற்று விருந்தோம்பியவர். புதுக்கோட்டையில் செந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் பெயரில் அச்சகம் நடத்தியவர். இதன்வழித் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டு அப்பகுதியில் புகழ்பெற்றவர். முருகு சுப்பிரமணியன் துணையுடன் பொன்னி இதழை வெளியிட்டவர். முருகு வெளிநாடு சென்ற பிறகு பொன்னி இதழை முன்னின்று நடத்தியவர் இவரே ஆவார். எதனையும் திட்டமிட்டுச் செய்து முடிக்கும் ஆற்றலுடையவர். வேகமாக வினையாற்றும் இயல்புடையவர். இவர்தம் மக்கள் நற்பண்பு உடையவர்களாகவும் உயர்கல்வி வாய்த்தவர்களாகவும் விளங்குகின்றனர்.

புதன், 21 டிசம்பர், 2011

மருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்

திருக்குறள் நூல் பன்னெடுங் காலத்திற்கு முன்பு பெரும்பேராசான் திருவள்ளுவரால் தமிழகத்தின் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சுவையுணர்ந்த சான்றோர்கள் பலர் அவர்தம் காலச்சூழல், பட்டறிவு, கல்வியறிவு, கொள்கை ஆகியவற்றிற்கு ஏற்பத் தத்தம் விளக்கங்களைக் - கருத்துகளை உரையாக வரைந்துள்ளனர். இவ்வுரைகளில் மூல நூலாசிரியர் வழிநின்றும், மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மூல நூலாசிரியர் சுருக்கிச் சொன்னதை விரித்தும், அவர் ஒரு கருத்து எல்லையில் நின்று உரைத்ததைத் தம் கால நூலறிவுகொண்டு பன்மடங்கு வகைப்படுத்தியும் உரைக்கும் போக்கினையும் உரையாசிரியர்கள் கைக்கொண்டுள்ளனர். இவ்வுரை வரையும் போக்குகள் பல அறிவுக்கருத்துகளை முன்வைக்கின்றன. இதனை மருந்து எனும் அதிகாரக் குறட்பாக்களின் துணைகொண்டு அவற்றிற்கு எழுந்த பல்வேறு உரைகளை ஒப்பிட்டு விளக்கும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்து அதிகாரத்தின் சிறப்பு

திருக்குறளின் அனைத்து அதிகாரச் செய்திகளும் முதன்மை வாய்ந்தவையாகும். திருவள்ளுவரே தம் ஒவ்வொரு அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தியும், தம் ஒவ்வொரு கருத்துகளையும் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் உயர்வுப்படுத்தியும் உரைப்பதை அவரின் குறட்பாக்கள் வழியாகவே உணரமுடியும்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் 300)

என்று வாய்மையின் மேன்மையைப் போற்றிப் பாடுவார். அவரே,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)

எனக் குழந்தைப்பேற்றின் சிறப்பினைக் கொண்டாடுவார்.

இவ்வாறு திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அனைத்துச் செய்திகளும் உயர்வானதாகவே இருக்கின்றன. திருவள்ளுவரின் மற்ற அதிகாரங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு “மருந்து” அதிகாரத்திற்கு மட்டும் உண்டு.

கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெருமையைப் போற்றுவார். புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கள் பேற்றின் மாண்பினை எடுத்துரைப்பார். ஆனால் மருந்து எனும் அதிகாரத் தலைப்பிட்டு எழுதிய திருவள்ளுவர் மருந்து வேண்டாம் என்று புதுமையான முறையில் கருத்தினை முன்வைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவமுறை நோய் வராமல் காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை மருத்துவமுறையாகும். உணவுச்சார்பு, பழவினை, மரபுவழி(Generation), சுற்றுச்சார்பு காரணமாக நோய் வந்தால் அதனைப் போக்கிக்கொள்ளும் முறையினையும் திருவள்ளுவர் தம் மெய்யறிவு புலப்பட வரைந்துள்ளார்.

மருந்து என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பாக்கள் உணவே மருந்து என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்குகின்றன. மேலும் இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைகள் மருத்துவம் - உடல் ஓம்பல் குறித்த மேலதிகத் தகவல்களைத் தருகின்றன.

திருக்குறளின் மருந்து அதிகார முதல் குறட்பா ஊதை(வளி), பித்தம், கோழை(ஐ) என்னும் மூவகை உடற்கூறும் மிகினும் குறையினும் நோய் உண்டாகும் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதனை அடுத்து நோய் வராமல் தடுக்கும் முற்காப்பினை அடுத்த ஆறு குறட்பாக்கள் குறிப்பிடுகின்றன. நிறைவாக உள்ள மூன்று குறட்பாக்களில் உணவுத் தவறாலும், பிற காரணங்களாலும் நோய் வந்துற்றபொழுது மருத்துவர் செய்யும் மருத்துவமுறைகள்- நோயாளிகளின் கடமைகளைக் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் தமிழ் மக்களின் வாழ்வியல்-அரசியல்-வணிகம்-மெய்ப்பொருளியல் முதாலன எண்ணங்களைப் பதிவுசெய்தவர். அதுபோலவே தமிழக மருத்துவமுறைகளை உளங்கொண்டு தம் குறட்பாக்களை எழுதியுள்ளார். அதனை உணராதவர்போல் பரிமேலழகர் வடமொழிச் சார்பான விளக்கங்களைப் பல இடங்களில் முன்வைத்துள்ளார். குறிப்பாக மருந்து அதிகாரத்தில் பரிமேலழகர் ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவநூல் முறையைப் பின்பற்றி உரை வரைந்திருப்பதைப் பாவாணர் போன்ற உரையாசிரியர்கள் தக்கவாறு தம் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்த உடல்களை நோய் தாக்குவதற்குப் பல காரணங்களை இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. மரபு வழியாகவும், நோய்த்தொற்று அடிப்படையிலும், உணவு, உடை, நஞ்சு, போர், அச்சம், சுற்றுச்சூழல்(காற்று, ஒலி, நீர்) முதலியவற்றின் காரணமாகவும் நோய் மாந்தர்களை, விலங்குகளை, பறவைகளைத் தாக்குகின்றன. திருக்குறள் ஆசிரியரோ சுருக்கிச்சொல்வதுபோல் உடலில் உள்ள ஊதை(வளி), பித்தம், கோழை என்னும் மூன்றும் தம் சுரத்தல் தொழிலில் மிகுதியாக இருப்பினும் குறைவாக இருப்பினும் உடலில் நோய் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றார்.

ஊதை, பித்தம், கோழை(ஐ) என்னும் மூன்றும் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதன. மூச்சு, பேச்சு, உட்பொருள் இடம் மாற்றம், வெளியேற்றத்திற்குத் தனியாகவும் பிற தாதுக்களுடன் இணைந்தும் ஊதை(வளி) செயல்புரிகின்றது. அதுபோல் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்குப் பெரிதும் உதவுவது பித்தநீர் ஆகும். தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்குக் கோழை உதவுகின்றது. இவை மருத்துவ அறிஞர்களின் கருத்தாக இருப்பதைப் பாவாணர் கற்று உணர்ந்து தம் உரையில் எழுதியுள்ளார். இம்மூன்றும் குறைவதற்கும் மிகுவதற்கும் பல காரணங்கள் உண்டு. உணவு, உடை, செயல்கள், ஒவ்வாமை, பழக்கவழக்கங்கள், மரபுவழி எனக் காரணங்களைச் சுட்டலாம். இம்மூன்றின் இயக்கமும் சரியாக இருக்கும்பொழுதே உடல்நோய் இல்லாமல் இருக்கும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார்.

பாவாணர் போன்ற தமிழ்நெறி சார்ந்தவர்கள் திருவள்ளுவரின் கருத்துக்கு இயையவே உரை கண்டுள்ளனர். ஆனால் பரிமேலழகரோ மிகினும் குறையினும் என்பதற்கு உணவும் செயலும் அவரவர் உடல் வலிவுக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் எனவும் இதில் மிகுதியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய் உண்டாகும் எனவும் விளக்கம் தருகின்றார்.
பரிமேலழகர் உரையின்படி நோய்க்குக் காரணம் உணவும், செயலும் மிகுவதும் அல்லது குறைவதும் என்பது பெறப்படுகின்றது. மணக்குடவரும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் நோய்தரும் என விளக்கம் தருகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகள் சரி எனப்படினும் ஆனால் இவை மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணியதாகப்படுகின்றது. ஏனெனில் வள்ளுவப் பெருந்தகை தம் குறட்பாவில் வளி முதலான மூன்றும் என்று குறித்தாரேயன்றி, உணவையோ, செயலையோ நேரடியாகத் தம் குறட்பாவில் இடம்பெறச் செய்தாரில்லை. எனவே பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகளை ஏற்கத் தயக்கம் ஏற்படுகின்றது.

உணவுநெறி

உடல் தோற்றம், செயல்பாடுகள், அறிவுமலர்ச்சி, நோயின்மை இவற்றிற்குத் தக்க உணவுகளே அடிப்படையாக அமைகின்றன. இத்தகு உணவினைப் பயன்படுத்தும் முறைகளில் மாறுபாடுகள் உண்டானால் மேற்கண்ட யாவும் குலையும். பெரும்பாலும் நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, பொருந்தா உணவு, மிகை உணவு என்பனவாகும். எனவே உடல் பாதுகாப்பு, வாழ்க்கைக் காப்பிற்கு உதவும் உணவுகளை உண்ணுவதாலும், உண்ணாமையாலும் ஏற்படும் நோய்களை - உடல்மாறுபாடுகளைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இதற்கென இவர் ஆறு குறட்பாக்களைத் தருகின்றார்.

முன்பு உண்டது செரித்துப் பசித்த பிறகு உண்ண வேண்டும்(944). அளவுடன் உண்ணவேண்டும்(946). குறைவாக உண்ணவேண்டும்(947) உடல்கூறு, பருவம், விருப்பம், காலம், இடம் இவற்றிற்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும்(945). நாவின் சுவைக்கு இடம் தராமல் வயிற்றில் வெற்றிடம் இருக்கும்படி உண்ணவேண்டும் என்று உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தும்படி குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கருத்துகளைத் திருக்குறளின் வழியாக அறியும் அதே நேரத்தில் உரையாசிரியர் பரிதியார், செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டுகூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒருகூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியைவிட்டு அசனம் பண்ணக்கடவன்” என விளக்குவது உணவு உண்ணும்பொழுது கவனத்தில்கொள்ளவேண்டியதை நினைவூட்டுகின்றது.

எனவே நம் முன்னோர்கள் உணவு உண்ணுவதில் மிகச்சிறந்த நெறிகளைப் பின்பற்றியதால் நெடிதுய்க்கும்(943) முறையினைத் தெரிந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

“மாறுகொள்ளாத உண்டி”யை உண்ணும்படி வள்ளுவரும் வள்ளுவர் குறளுக்கு உரைவரைந்த உரையாசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாறுகொள்ளுதல் என்பது உண்ணும் அளவு, காலம், சுவை, வீரியம் இவற்றில் இருத்தல்கூடாது. உண்ணும் அளவில் மிகுதலும், பகலில் உண்பதை இரவிலும், இரவில் உண்பதைப் பகலிலும், மழைக்காலத்தில் உண்பதை வேனிற்காலத்திலும் வேனிற்காலத்தில் உண்பதை மழைக்காலத்திலும் மாற்றி உண்பதும், சுவை கருதி நெய்யும் தேனும் சம அளவுகலந்து உண்டால் நஞ்சாக மாறிக்கொள்ளும் என மணக்குடவர் உரையில் விளக்கம் தருவர்.

இன்றைய நிலையில் Food Poison எனும் நோய்க்கு இதுவே காரணம். இறைச்சி அல்லது காலம் கடந்த மாவு, பூச்சியுற்ற பொருளில் செய்யும் உணவு யாவும் நஞ்சு உணவாக மாறித் துன்பம் செய்யும்(இக்காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பெறும் பண்ணியங்களை உண்பதால் புற்றுநோய் உண்டாதலும் எண்ணிப்பார்க்கவும்). எனவே உடலுக்கு மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பசித்திருக்கச் சொன்னார்கள் போலும்(!).

உணவை உண்ணுவதில் தோன்றும் மகிழ்ச்சியைவிட உண்ட உணவு செரிப்பதில்தான் மகிழ்ச்சி. உண்ட உணவு இல்லாமல் போவதுதான் பெரு மகிழ்ச்சியை நமக்குத் தரும்.

இதனை உணர்ந்து பார்த்த வள்ளுவர் காமத்துப்பாலில்

“உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலி னூடல் இனிது(1326) என்பார்.

எனவே வயிற்றில் உணவு அற்றுப்போகும் தன்மையில்தான் உண்மை இன்பம் உண்டு என்பதைப் பொறி புலன்களால் உணர்ந்து அறிக!.

உலக உயிர்களில் மாந்தப் பிறப்பு உயர்வானதாகும். இம்மாந்தப் பிறப்பு வாய்க்கப்பெற்றவர்கள் தத்தம் உடம்பினைப் பேணிக்காத்து நெடிதுநாள் வாழவே விரும்புவர். துறவிகளோ இப்பிறவி வேண்டாம் என்றும் பிறப்பு நீக்கிச் செம்பொருள் நுகர்வு வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் திருவள்ளுவப் பேராசான் போன்ற சித்தர் மரபினர் உடம்பினைப் பேணிக் காப்பதைத் தேவையென மாந்த குலத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”(724) “உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”(725) என்பர் திருமூலர். இவ்வுடம்பினைப் போற்றும் வகை தெரியாமல் மிகுதியாக உண்டோ அல்லது வேறு வகையில் உண்டோ உடல்நலம் கெட்டால், உய்யும்பொருட்டு மருத்துவம் பார்த்தல் குறித்த பல செய்திகளைத் திருவள்ளுவரும் அவரின் குறட்பா வழி உரையாசிரியர்களும் தருகின்றனர்.

நோயாளியின் சொல்லாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் முதலான கழிபொருள்களின் இயல்பாலும் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து- அந்த நோய் தோன்றியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பிறகு அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை மருத்துவன் கைக்கொள்ள வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர் வழிநின்று பாவாணர்(948).
நோய்நாடி எனத்தொடங்கும் குறட்பாவில் திருவள்ளுவர் “நாடி” எனும் சொல்லை நோய்நாடி, நோய்முதல்நாடி, வாய்நாடி என மூன்று முறை பயன்படுத்தியுள்ளது குறிப்பாக நாடிப்பார்த்தல் எனும் தமிழ் மருத்துவமுறையை உள்ளம்கொண்டே எனப் பாவாணர் கருதுகின்றார். ஏனெனில் நாடிப்பார்த்து நோய்தீர்க்கும் முறை தமிழர்கள் பன்னெடுங்காலம்தொட்டுச் செய்துவரும் மருத்துவமுறையாகும்.

மேலும் “உற்றவன் தீர்ப்பான்..” (950) எனத்தொடங்கும் குறட்பாவில் அரிய மருத்துவத்துறைச் செய்திகளைத் திருவள்ளுவர் வைத்துள்ளார். அவற்றைக் கண்டு காட்டும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரும், பாவாணரும் பல புதிய நுட்பங்களைத் தருகின்றனர். மருத்துவம் வெற்றியாக நிறைவேற நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அம்மருத்துவனுக்குக் கருவியான மருந்து அல்லது மருத்துவமுறை, அம்மருத்துவனுக்குத் துணையாக இருந்து மருந்துகொடுப்பவன் எனும் நான்கு கூறுகளையும் விரித்துக்காட்டும் பரிமேலழகரும், பாவாணரும் மிகச்சிறந்த உலகியல் அறிவுகொண்டு இக்குறட்பாக்களுக்கு விளக்கம் வரைந்துள்ளனர். மருந்து அதிகாரக் குறட்பாக்களும், உரைகளும் தமிழர்களின் மருத்துவமுறையினை எடுத்துக்காட்டுவதில் முன்னிற்கின்றன.

வியாழன், 15 டிசம்பர், 2011

திண்டுக்கல் இணையப் பயிலரங்க நினைவுகள்…

ஐபேடில் தமிழ் கற்கும் வசதியை விளக்குதல்(தினகரன்)

தினகரன் மதுரைப் பதிப்பு(15.12.2011) 

  மதுரை பாத்திமா கல்லூரியில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கப் பணியினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 13.12.2011 இரவு 7.30 மணிக்குத் திண்டுக்கல் வந்தேன். புகழ்பெற்ற பார்சன் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாட்டினை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். நண்பர் பாரதிதாசன், அமைதி அறக்கட்டளை நிறுவுநர் திரு.பால் பாஸ்கர் ஆகியோர் இரவு அறைக்கு வந்து இணையப் பயிலரங்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இரவு உணவு அனைவரும் உண்டோம். திரு.பால் பாஸ்கர் அவர்களை முன்பே அறிவேன். அண்ணன் இரா.கோமகன், வழக்கறிஞர் கே.பாலு, கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு, அண்ணன் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வழியாகப் பால் பஸ்கர் அவர்களின் சமூகப்பணிகளை அறிவேன். இருவரும் இன்றுதான் நேர்கண்டு உரையாடும் சூழல் அமைந்தது. 

  14.12.2011 காலை பத்து மணியளவில் அமைதி அறக்கட்டளையின் அரங்கிற்குச் சென்றோம். மாணவர்களும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.பால் பாஸ்கர் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார். அருளகம் சார்ந்த பாரதிதாசன் அறிமுக உரையாற்றினார். தமிழ் இணையம் வளர்ந்த வரலாற்றையும் தமிழ் இணையம் பற்றி அறிய வேண்டியதன் தேவையையும் நான் காட்சி விளக்கத்துடன் அரங்கிற்குத் தெரிவித்தேன். ஐ பேடு உள்ளிட்ட கருவிகள் கல்வி, படிப்புக்கு உதவும் பாங்கினை விளக்கினேன். மாணவர்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு என் உரை தேவையானதாகத் தெரிந்தது. அனைவரும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினர். மாணவர்கள், பொதுமக்கள் உள்ளம் நிறைவடையும் வகையில் மிக எளிய தமிழில் தமிழ் இணையப் பயன்பாட்டைச் சொன்னதும் அனைவரும் புரிந்துகொண்டனர். 

 தமிழ்த் தட்டச்சினை அறிந்து அரங்கிலிருந்தபடி ஒரு மாணவர் என் மின்னஞ்சலுக்குத் தமிழில் தட்டச்சிட்டுப் பயிலரங்கம் சிறப்பாகச் செல்கின்றது என்று ஒரு பாராட்டு மடல் விடுத்தார். அரங்கில் அந்த மடல் பற்றி ஆர்வமுடன் உரையாடினோம். வேலூர் மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் ஸ்கைப்பில் உரையாடினோம். அனைவருக்கும் மகிழ்ச்சி. 

 தமிழ்த் தட்டச்சு தொடங்கி, சமூக வலைத்தளங்கள், நூலகம் சார்ந்த தளங்கள், கல்வி சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள் என ஓரளவு பார்வையாளர்களுக்குப் பயன்படும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன். தொலைக்காட்சி, பண்பலை வானொலி, நாளிதழ் சார்ந்த ஊடகத்துறையின் பல செய்தியாளர்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை ஆர்வமுடன் வெளியிட்டனர். மதுரைப் பதிப்பில் அனைத்து முன்னணி ஏடுகள் வழியாகப் பல மாவட்டங்களைக் கடந்து திண்டுக்கல் பயிலரங்கச் செய்திகள் சென்றன.

தினமணி நாளிதழில் செய்தி 

 * ஊடகத்துறையின் அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி.

புதன், 14 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது...

அமைதி கல்லூரியின் நிறுவுநர் பால் பாஸ்கர் உரை திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது... படங்கள் சில...

பயிற்சி பெற்ற மாணவர்கள்

பார்வையாளர்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழும் இணையமும் மாநில அளவிலான பயிலரங்கம்


அழைப்பிதழ்

திண்டுக்கல் அமைதி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 14.12.2011 காலை பத்து மணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளேன். ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.



தொடர்புக்கு:திரு.பாரதிதாசன் + 9843211772

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…


பாத்திமா கல்லூரி முதல்வர் உரை

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 13.12.2011 காலை 9 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி முதல்வர்,செயலாளர்,தமிழ்த்துறைத்தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனைவர் மு.இளங்கோவன் மாணவியர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்தார்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது…
பயிலரங்கத்தின் காட்சிகள் சில…


கல்லூரிச் செயலர் உரை


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா


குமரி அனந்தன் அவர்கள் பாரதியார் படத்திற்குச் சிறப்புச்செய்தல்
படம் உதவி: பாபு(புதுச்சேரி)

புதுச்சேரியில் பாரதியார் பிறந்தநாள் விழா இன்று (11.12.2011) காலை பத்து மணியளவில் புதுவை,ஈசுவரன்கோயில் வீதியில் அமைந்துள்ள அவர்தம் நினைவு இல்லத்தில் புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி அவர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் க.இலட்சுமி நாராயணன், திரு.குமரிஅனந்தன் அவர்கள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தமிழறிஞர்கள், பாரதி அன்பர்கள் கலந்துகொண்டு பாரதியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.


சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர் குரு.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள்


அமைச்சர் குரு.பன்னீர்செல்வம், ச.ம.உ. க.இலட்சுமி நாராயணன் ஆகியோர்


ஒப்பனை செய்யப்பெற்றுள்ள பாரதியார் படம்

சனி, 10 டிசம்பர், 2011

மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பாத்திமா கல்லூரி(தன்னாட்சி),மதுரை


அழைப்பிதழ்

மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வுமையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் தமிழ்த்துறையினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நாள்: 13.12.2011 செவ்வாய்க்கிழமை,நேரம்: காலை 9 மணி - மாலை 4 மணி வரை
இடம்: பொன்விழா அரங்கம், பாத்திமா கல்லூரி,மதுரை

வெள்ளி, 9 டிசம்பர், 2011

மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு

பன்னாட்டுப் பகுத்தறிவு ஆய்வகத்தின் சார்பில் மலேசியாவில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு (International Rationalism Conference) மலாயா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது. 2012 சனவரி 27,28,29 ஆகிய நாள்களில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. “பகுத்தறிவின் தோற்றம், மனுக்குலத்தின் ஏற்றம்” என்னும் கருப்பொருளில் அமையும் இந்த மாநாட்டை மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் தொடங்கி வைப்பார்கள். மலேசியாவின் அமைச்சர் பெருமக்கள், தமிழறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பகுத்தறிவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த ஆய்வரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, மாநாட்டு மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

பினாங்கு நகரில் 30.01.2012 இல் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் சிலை திறப்பும் நடைபெற உள்ளது. பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தங்களைப் பேராளர்களாகப் பதிவுசெய்துகொள்ளவேண்டும். தமிழகத்திலிருந்து பங்கேற்பவர்களுக்குப் பேராளர் கட்டணம் எதுவும் கிடையாது.

மாநாட்டை ஒட்டிக் கோலாலம்பூர், பினாங்கு, இலங்காவி, முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்துத் தமிழகம் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பெரு.அ. தமிழ்மணி, ரெ.சு.முத்தையா, தெ.வாசு, த.சி.முருகன், ஆகியோர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் செய்துவருகின்றனர்.

மாநாடு நடைபெறும் 27, 28, 29 ஆகிய மூன்று நாளும் தங்குமிட வசதிகள், உணவு, 30 ஆம் நாளையப் பினாங்கு பயணம் ஆகியவற்றை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, சுற்றுலா செல்லாமல் சென்னைக்குத் திரும்ப விரும்புவோர் விமானக் கட்டணம், நுழைவுச்சீட்டு (விசா)க் கட்டணமாக உருவா 15,000 (பதினைந்து ஆயிரம்) செலுத்த வேண்டும்.

கூடுதலாகத் தங்கிச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் உருவா 25,000 (இருபத்தைந்தாயிரம்) கட்ட வேண்டும்.

கட்டணத் தொகையைச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் காசோலை, வரைவோலையாக அனுப்பலாம். அல்லது திரு.இரா.மதிவாணன் வங்கிக் கணக்கு எண் 130801000012748 - இந்தியன் ஓவர்சீசு வங்கி, சூளைமேடு, சென்னைக் கிளையில் பெறத்தக்க வகையில் செலுத்தலாம்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்:

“உழைப்புச்செம்மல்” இரா.மதிவாணன் ,
தமிழக ஒருங்கிணைப்பாளர்.
4,சௌராட்டிரா நகர் 7 ஆம் தெரு,
சூளைமேடு, சென்னை- 600 094
மின்னஞ்சல்: eramathi@gmail.com
பேசி: + 94441 11951

புதன், 7 டிசம்பர், 2011

திண்டுக்கல்லில் தழிழும் இணையமும் ஒரு நாள் பயிலரங்கு

நாள்: 14.12.2011 இடம் : அமைதி கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் 

நிகழ்ச்சி நிரல் 

 தொடக்க நிகழ்சி 10.00 – 10.45 
 வரவேற்புரை : திரு.தேவதயான் முதல்வர் - அமைதி அறக்கட்டளை 

தலைமை : திரு.ஜே.பால்பாஸ்கர் தலைவர் அமைதி அறக்கட்டளை 

சிறப்பு விருந்தினர் : முனைவர் மு.இளங்கோவன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி 

அறிமுகஉரை : திரு.சு.பாரதிதாசன் செயலாளர், அருளகம் 

முன்னிலை : திருமதி.மெர்சி பாஸ்கர் முதல்வர் அமைதி தொழிற்பள்ளி

கருத்தாளர் முனைவர் மு.இளங்கோவன் 

முதல் அமர்வு 10.46-12.00 இரண்டாம் அமர்வு 12.01 – 01.00 மூன்றாம் அமர்வு 02.00 – 03.00 நான்காம் அமர்வு 03.01 – 03.45  

கருத்துரை 3.46 – 04.00 பங்கேற்பாளர்கள் 

தொடர்புக்கு: சு. பாரதிதாசன், 9843211772

வெள்ளி, 2 டிசம்பர், 2011

சீன வானொலியில் முனைவர் மு.இளங்கோவன் நேர்காணல் முதல்பகுதி ஒலிபரப்பு…

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் நேர்காணல் இன்று(02.12.2011) இரவு சீன வானொலியில் உங்குள் குரல் பகுதியில் ஒலிபரப்பானது. கவி.செங்கெட்டுவன் அவர்கள் நேர்காணல் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு ஊற்றங்கரையில் இந்த உரை செல்பேசியில் பதிவு செய்யப்பெற்றது. இன்று ஒலிபரப்பு செய்த சீன வானொலி நிலையத்தாருக்கும், நேர்காணல் செய்த கவி.செங்குட்டுவன் ஐயா அவர்களுக்கும் நன்றி.(இந்த உரை அடுத்த வாரம் முழுமையாக என் பக்கத்தில் இடம்பெறும்).

மு.இளங்கோவனின் இளமைக்கால வாழ்க்கை,இலக்கியம், இணையம், நாட்டுப்புறவியல் சார்ந்த பல செய்திகள் இந்த நேர்காணலில் இடம் பெற்றுள்ளன.

நீங்கள் கேட்டு மகிழவேண்டுமா?

தங்கள் கணினியில் ரியல் பிளையர் என்ற மென்பொருள் இருந்தால் இனிமையாகக் கேட்க முடியும். http://tamil.cri.cn/ என்ற பக்கம் செல்லவும்.இறுதி நிகழ்ச்சி என்னும் பகுதியைச் சொடுக்கவும். முன்னதாகச் சில நிகழ்வுகள் இடம்பெறும். அரை மணிநேரத்திற்கு அடுத்து மு.இளங்கோவனின் உரையைக் கேட்க முடியும். இரண்டாம் பகுதி அடுத்த வாரம் ஒலிபரப்பாக உள்ளது.

செவ்வாய், 29 நவம்பர், 2011

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழா

வாணியம்பாடியில் தமிழ்ப்பணியாற்றிவரும் இலக்கிய அமைப்புகளுள் பாரதி தமிழ்ச்சங்கம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பின் நான்காம் ஆண்டு ஆண்டு விழா மலர்வெளியீடு, பரிசளிப்பு, பாட்டரங்கம், நாடகம், நூல்வெளியீடு என்று பல நிகழ்வுகளைக் கொண்டு நடைபெற உள்ளது.

நாள்: 11.12.2011 ஞாயிறு
நேரம்: காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை

இடம்: கே.பி.எஸ். மகால், கோட்டை, வாணியம்பாடி

நிகழ்ச்சித் தலைமை: சி.ஸ்ரீதரன்(தொழிலதிபர்)

முன்னிலை: ஜெ.விஜய் இளஞ்செழியன், ஏ.ரியாஸ் அகமது, மு.இராமநாதன்

வரவேற்புரை: இரா.முல்லை

பாட்டரங்கத் தலைமை: முனைவர் கோவை சாரதா

பங்கேற்பு: சுரேந்திரன், அன்பரசு, மலர்விழி

பாரதி வருகிறார் நாடகம் இயக்கம் முனைவர் கி.பார்த்திபராஜா

"விடுதலைக்கு வித்திட்ட வாணியம்பாடிச் செம்மல்கள்"
நூல்வெளியீடு: பேராசிரியர் அப்துல்காதர்

முதற்படி பெறுதல் பாரதி கிருஷ்ணகுமார்

நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன்

நூல்படி பெறுவோர்:
மேனாள் அமைச்சர் ஆர்.வடிவேல்
ஜி.சக்கரவர்த்தி,டி.கே.இராஜா உள்ளிட்டோர்.

அனைவரும் வருக!
அழைத்து மகிழ்வோர்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம்

திங்கள், 28 நவம்பர், 2011

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் - அரிய படம்


கங்கை கொண்ட சோழபுரம்(1930)இல் கிருட்டினசாமி அரங்கசாமி ஐயங்கார் அவர்களால் எடுக்கப்பட்ட அரிய படம்

நன்றி: இந்து நாளிதழ்(28.11.2011)

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு அண்மைக்காலமாகச் செல்வபவர்கள் அங்குள்ள புல்வெளிகளையும் பூந்தோட்டங்களையும் கண்டு மகிழ்வார்கள். கோட்டைச்சுவர்கள் திருத்தமாக இருப்பது கண்டு வியப்பார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கோயிலில் நெருஞ்சிமுள்ளும், புல்புதர்களுமாக இருந்ததை ஊர்க்காரர்கள் அறிவார்கள். அங்கு நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, மார்கழித்திருவாதிரை விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் கூடுவார்கள். தஞ்சாவூர் கரகாட்டம் உள்ளிட்டவை சிறப்பாக நடக்கும்.கோயிலைச்சுற்றி நடக்கும் கரகாட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடக்கும்.

இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் நீங்கள் கேட்டவை என்ற திரைபடம் எடுக்க இங்கு வந்தபொழுது கங்கைகொண்ட சோழபுரம் கோயில் திரை வழியாக வெளியூர் மக்களுக்குத் தெரியத்தொடங்கியது. அதன் பிறகு மறுமலர்ச்சி, சங்கமம், பதவிப்பிரமாணம் உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்ட பிறகு கோயிலுக்கு சுற்றுலாக்காரர்களின் வருகை அதிகரித்தது. வெளிநாட்டினரும் பெருமளவு வருகின்றனர்.

கோயிலின் முன்புறமும், பக்கப்பகுதிகளும் இன்று தொல்பொருள் ஆய்வுத்துறையின் வழிகாட்டலுடன் செப்பம் செய்யப்பட்டுள்ளன.முன்பு ஆட்சியராகப் பணிபுரிந்த திரு. கோசலராமன் இ.ஆ.ப. அவர்களும் வருவாய் வளர்ச்சி அலுவலர் திரு.செந்தில்குமார் அவர்களும் இந்தக் கோயிலை அழகுபடுத்தும் முயற்சிக்குத் தோற்றுவாய் செய்தனர். முதற்கட்டமாகக் கோயிலை அடைத்திருந்த வீடுகள்,குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன.புதிய வீடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உயரமாகக் கட்ட தடைவிதிக்கப்பட்டன.படிப்படியே பூங்காக்கள் அமைக்கும் முயற்சி விரிவடைந்தது.

கோயிலைச்சுற்றி கோபுரத்தை மறைக்கும் மதில்கள் இருந்ததாக நான் செவி வழியாக அறிந்தது உண்டு. அத்தகு படம் ஒன்று கல்கத்தா காட்சியகத்தில் இருப்பதாகவும் அறிகின்றேன். இதற்கிடையில் இன்று இந்து நாளிதழில் 1930 இல் எடுக்கப்பெற்ற ஓர் அரிய படம் கண்டேன். அனைவரின் பார்வைக்கும் இதனை வைக்கின்றேன்.

சனி, 26 நவம்பர், 2011

பிரான்சு நாட்டில் விருதுபெற்றவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா


பொறிஞர் பாலு, முனைவர் மு.முத்து, மருத்துவர் சித்தானந்தம்(அமெரிக்கா)

பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு புதுச்சேரித் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் விருதுபெற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இன்று புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.முத்து அவர்களின் தலைமையில் புதுச்சேரியிலிருந்து பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன்கழக விழாவுக்குத் தமிழார்வலர்கள் பலர் சென்று உரையாற்றி மீண்டனர். அவர்களுள் முனைவர் மு.முத்து, பொறிஞர் பாலசுப்பிரமணியன், கஸ்தூரி வைத்தி உள்ளிட்டவர்களுக்கு இன்று தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பெற்றது.

இன்று(26.11.2011) மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகள் நினைவுநாள் விழாவில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் கரு.அழ.குணசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் பணிகளை நினைவுகூர்ந்து உரைநிகழ்த்தினர்.

பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்துள்ள மருத்துவர் சித்தானந்தம் அவர்களுக்குப் பாராட்டும் வரவேற்பும் தெரிவிக்கும் முகமாகப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பெற்றது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் அமெரிக்காவில் தங்கி மருத்துவப் பணியும் தமிழ்ப் பணியும் செய்பவர் என்று அரங்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார். அதனை அடுத்துப் பிரான்சு சென்று விருது பெற்றுத் திரும்பியவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பெற்றது. புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முனைவர் மு.முத்து உரை


பாராட்டு பெறும் அறிஞர்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!




முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


-------------------------------------------------------------------------------------------------------------------------
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

‘இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்’

இயக்குநர் வெ.சேகர்

‘இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்’

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

‘வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்’

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

‘ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட’

ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம், ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

’இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை ‘பாலை’ படத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்’

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

“எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்”

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

“சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்”

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: தோழர் அருணபாரதி அவர்களின் வலைப்பதிவிலிருந்து மறுபதிப்பு

வெள்ளி, 18 நவம்பர், 2011

அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல்வெளியீட்டு விழா



நினைவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் எழுதிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள் என்னும் நூல்வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமிக் கோயிலில் எதிர்வரும் 11.12.2011 மாலை 5 மணிக்கு அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவுநிதியத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

அறிஞர் ஈழத்துப்பூராடனார் அவர்கள் மறைவுக்கு முன்பாக எழுதிமுடிக்கப்பெற்ற இந்த நூல் ஈழத்துத் தமிழர்கள் கப்பல்கட்டும் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் என்பதையும் மிகச்சிறந்த கடல்வாணிகம் செய்தவர்கள் என்பதையும் எடுத்துரைக்கும் நூல். அன்னபூரணி கப்பல் பற்றியும் அதனை உருவாக்கியத் தொழில்நுட்பக்கலைஞர்கள், அதனை விரும்பி விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் பற்றியும், அந்த அன்னபூரணி கப்பல் ஈழத்திலிருந்து அமெரிக்கா சென்ற வரலாறு பற்றியும் மிகச்சிறப்பாக அறிஞர் ஈழத்துப்பூராடனார் எழுதியுள்ளார்.

ஐயாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவரும் இந்தப் படைப்பைத் தமிழர்கள் ஆர்வமுடன் வரவேற்பார்கள் என்று நம்புகின்றோம்.

நூல் வெளியீடு சிறக்க அறிஞர் ஈழத்துப்பூராடனார் தமிழகத்தில் தொடங்கிய பொன்மொழிப் பதிப்பகத்தின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

வியாழன், 10 நவம்பர், 2011

கடலூர் நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் விழா


திருக்குறள் நூல் பெற்ற மாணவர்களும் வழங்கிய தமிழார்வலர்களும்

குவைத்தில் இயங்கும் பொங்குதமிழ் அறக்கட்டளையினர் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் 250 ஐ வழங்கும் விழாவை இன்று(10.11.2011) மாலை பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மிகச்சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்குக் கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையினரும் ஆதரவாக இருந்தனர்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் திரு.இராம.சனார்த்தனன் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பொங்குதமிழ் அறக்கட்டளையின் சார்பில் பொறியாளர் திரு.சேது மாதவன் அவர்கள் வரவேற்றார். பொங்கு தமிழ் மன்றம் குவைத்தில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளை எடுத்துரைத்து, தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் திட்டத்தைப்பற்றி மிகச்சுருக்கமாக உரையாற்றினார்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் இராம.சனார்த்தனன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர்களுக்குத் திருக்குறள் நூல்களை வழங்கித் தொடர்ந்து திருக்குறளைப் படித்து அதன் வழியில் நிற்கவேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் திருக்குறள் நூல் பற்றியும் நிகழ்ச்சியின் சிறப்பு பற்றியும் விளக்கவுரையாற்றினார். திருக்குறள் சிறப்புகளை எடுத்துரைத்து மாணவர்கள் திருக்குறளைத் தொடர்ந்து படித்து அதன் வழியில் நிற்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளத்தில் பதியும்படியாக அரியதொரு சிறப்புரையாற்றினார். இவரின் பேச்சில் திருக்குறள் உரைகள், மொழிபெயர்ப்புகள், வெளிநாட்டினரின் பணிகளை நினைவுகூர்ந்தார்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.உதயகுமார் சாம் அவர்கள் இத்தகு சிறந்த நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கிய பொங்கு தமிழ் மன்றத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். உலகத்திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நகராட்சிப்பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், கடலூர்த் திரைப்பட இயக்கத்தின் பொறுப்பாளர் சாமிக் கச்சிராயர், கடலூர்ப்பகுதி சார்ந்த பெருமக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


இராம.சனார்த்தனன் அவர்கள் தலைமையுரை


வரவேற்புரையாற்றும் திரு.சேதுமாதவன் அவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


முனைவர் மு.இளங்கோவன் விளக்கவுரை


மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி


உதயகுமார்சாம் அவர்கள் நன்றியுரை

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா



குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: திரு.இராம.சனார்த்தனன் அவர்கள்

வரவேற்புரை: திரு.சேது மாதவன் அவர்கள்

விளக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள்

நன்றியுரை: திரு.உதயகுமார் சாம் அவர்கள், தலைமையாசிரியர்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன்


ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த பெரும் பாவலர் ஆவார். கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்ற பாக்களையும் இசைப்பாக்களையும் எழுதியவர். “தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் 01.06.1942 இல் சென்னையில்-ஆலந்தூரில் பிறந்தவர். பெற்றோர் கோ.மீனாம்பாள், மா.கோபால் ஆவர். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் சென்னைத் தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்பொழுது புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். பள்ளி இலக்கிய மன்றச் செயலாளராகச் செயல்பட்டவர். மாணவப்பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையில் நூலகத்துறையின் பணியில் சேர்ந்தார். பணிசெய்துகொண்டே புலவர், பி.லிட்,முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக இருந்து பேராசிரியர் இரா.குமரவேலனார் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.

ஆலந்தூரில் கவிதைவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்துகொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர். அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர்.

மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

வணக்கத்திற்குரிய வரதராசனார் என்ற குழந்தை இலக்கிய நூல் தமிழக அரசின் முதல்பரிசைப் பெற்றது.

மலேசியா, தாய்லாந்து, மொரிசீயசு, உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு இலக்கியப் பயணமாகச் சென்று வந்துள்ளார்.

தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஞானபீட நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் பாட நூல்களே மட்டுமன்றிக் கருநாடக மாநிலத்தின் தமிழ்ப்பாட நூல்களிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயசு நாட்டுத் தமிழ்ப்பாட நூல்களிலும் இவர் பாடல்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஆலந்தூர் மோகனரங்கன் வானொலியில் இசைப்பாடல்களையும் இசை நாடகங்களையும் எழுதிப் புகழ்பெற்றவர்.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் துணைவியார் பெயர் திருவாட்டி வசந்தா மோகனரங்கன். இவர்களுக்கு முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மொ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன் என்னும் மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

“காலமெனும் மலையிடையே கவிதை ஒரு தேனருவி”, எனவும்

“ஆசைக்குப் பாடுவோரும்
அழகுக்குப் பாடுவோரும்
ஓசைக்குப் பாடுவோரும்
உணர்வுக்குப் பாடுவோரும்
பூசைக்குப் பாடுவோரும்
புலமைக்குப் பாடுவோரும்
காசுக்குப் பாடாரானால்
காலத்தை வென்று வாழ்வார்!”

எனவும் பாடியுள்ள வரிகள் இலக்கியச்செழுமை கொண்டன.

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் நூல்களுள் சில:

1. ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
2. பள்ளிப் பறவைகள்
3. குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
4. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை
5. இமயம் எங்கள் காலடியில்
6. கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
7. பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
8. பொய்யே நீ போய்விடு
9. தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு
10. நினைத்தால் இனிப்பவளே
11. இதயமே இல்லாதவர்கள்
12. இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
13. ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
14. கவிதை எனக்கோர் ஏவுகணை
15. குறுந்தொகையின் குழந்தைகள்(ஐக்கூ)
16. பிறர் வாழப்பிறந்தவர்கள்
17. ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
18. தாத்தாவுக்குத் தாத்தா
19. முத்தமிழ்க்கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
20. கவிராயர் குடும்பம்
21. நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்


கோ.மோகனரங்கன் அவர்களின் அரிய ஆய்வேடு


மெல்லிசைப்பாடல்கள்

தொடர்புக்கு:

மோ. பாட்டழகன்
வசந்தா பதிப்பகம்
26, சோசப் குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை- 600081
பேசி
+ 044- 22530954

வியாழன், 3 நவம்பர், 2011

புதுச்சேரியில் தமிழ்மாமணி மன்னர்மன்னன் பிறந்தநாள் விழா!


கோ.பாரதி, மு.முத்து, அ.அறிவொளி, மன்னர்மன்னன்,
தொழிலதிபர் சிவக்கொழுந்து, துபாய் குழந்தை

  புதுச்சேரியில் உள்ள புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் இன்று (03.11.2011) மாலை 6.30 மணிக்குப் பாவேந்தரின் மகன் தமிழ்மாமணி மன்னர்மன்னன் அவர்களின் பிறந்தநாள் விழாவும் நூல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடந்தன.

  புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் மு.முத்து அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் அ.அறிவொளி அவர்கள் கலந்துகொண்டு தமிழ்மாமணி மன்னர்மன்னன் எழுதிய பொன்னேடுகள், கோ.பாரதி எழுதிய சுடர்மணிகள் என்னும் இரண்டு நூல்களை வெளியிட, சப்தகிரி நிறுவனங்களின் நிறுவனர் திரு.சிவக்கொழுந்து அவர்களும், திரு. துபாய் குழந்தை அவர்களும் நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டனர். கவிஞர் கோவிந்தராசு, சொல்லாய்வுச் செல்வர் சு.வேல்முருகன், சுந்தர.இலட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்குப் பெரியார் விருது




சிங்கப்பூரில் பலவாண்டுகளாகத் தங்கித் தமிழ்ப்பணியும் கல்விப்பணியும் புரிந்துவரும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் ஐயா அவர்களுக்குச் சிங்கப்பூரில் நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் பெரியார் விருது வழங்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைபெறும் விழாவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் சோம. இளங்கோவன், மா.அன்பழகன், வீ.கலைச்செல்வன்,க.பூபாலன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு விருந்தினராகத் திரு. விக்ரம் நாயர் அவர்கள் கலந்துகொள்கின்றார்.இந்த விழாவில் பெரியார் விருது பேராசிரியர் சுப.திண்ணப்பனுக்கு வழங்கப்படுகின்றது.

திங்கள், 31 அக்டோபர், 2011

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர் மறைவு


எம்.எசு.ஆறுமுக நாயகர்

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் எம்.எசு.ஆறுமுக நாயகர்(வயது91) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் புதுச்சேரியில் உள்ள அவர் இல்லத்தில் இன்று(31.10.2011) காலை 9 மணிக்கு இயற்கை எய்தினார். எம்.எசு. ஆறுமுகநாயகர் அவர்களின் இறுதி ஊர்வலம் புதுச்சேரி, இலாசுப்பேட்டை முதன்மைச்சாலையில் உள்ள அவர் இல்லத்திலிருந்து 01.11.2011(செவ்வாய்க்கிழமை) காலை ஆறு மணிக்குப் புறப்பட உள்ளது. அவருக்கு முனைவர் ஆ. வெங்கடசுப்பு ராய நாயகர்(பிரஞ்சு பேராசிரியர் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்) என்னும் ஒரு மகன் உள்ளார். தொடர்புக்கு: + 91 9944064656

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

தனித்தமிழ் மறவர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன்

 தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் உருவான தனித்தமிழ் இயக்கம் மொழி, இன, நாட்டு உணர்வுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பலவகையில் இவ்வியக்கத்தின் முன்னோடிகளாக இருந்து பலரை இவ்வியக்கத்திற்கு வளர்த்துள்ளனர்.

 கல்வி, அரசியல், குமூகத்தில் பல மாற்றங்களும் ஏற்றங்களும் இந்த இயக்கத்தால் ஏற்பட்டன. தூய தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் இன்றும் பகடி செய்யும் இழிநிலை இருப்பது வருந்துவதற்குரியது. இந்த ஏச்சுகளையும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கல்வித் துறையில் செயல்பட்ட பெருமக்களுள் மூவரை இருபதாம் நூற்றாண்டுத் தனித்தமிழ் இயக்கம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

 சாத்தையா என்ற தமிழ்க்குடிமகன், பிச்சை என்ற இளவரசு, சோசப்பு ராசு என்னும் வளன்அரசு என்னும் பெருமக்களே அவர்களாவர். கல்லூரிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பொது மன்றுகளிலும் தூய தமிழில் உரையாற்றிப் பல்லாயிரம் மக்களைத் தூயதமிழில் பேசுவதற்கு ஆயத்தம் செய்தவர்கள் இப்பெருமக்களாவர். இவர்கள் உரையாலும், எழுத்தாலும் உருவாக்கிய தனித்தமிழ் உணர்வு கடல்கடந்த நாடுகளிலும் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகளில்-நகரங்களில் பரந்து வாழும் தமிழர்களின் தனித்தமிழ் ஆர்வத்தை நினைக்கும்பொழுது தனித்தமிழ் இயக்கம் இன்றும் அதன் பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டுள்ளது என்று நம்பிக்கை கொள்ளலாம்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் கல்லூரி மாணவராக இருந்தபொழுதே பாவாணர் நூலில்(ஒப்பியன்மொழிநூல்) ஈடுபாடு கொண்டு விளங்கினார். தம்முடன் பயின்ற பிச்சை என்ற மாணவரும் இளவரசானார்.நாகராசன் அரவரசன் ஆனார். தமிழ்க்குடிமகன் சார்ந்த அவரின் நண்பர்கூட்டம் மெல்ல மெல்லத் தனித்தமிழில் ஈடுபாடுகொண்டு அதற்குரிய பணிகளைத் தமிழகம் எங்கும் செய்தது.

 கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தபொழுது மேடைப்பேச்சுகளால் மக்களிடம் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்திய மு.தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றிய காரணத்தால் அவரின் கருத்துகள் உடனுக்குடன் உலக அளவில் பரவின. மக்கள் ஆர்வமுடன் அவர் முயற்சியை இனங்கண்டு பாராட்டினர். ஏடுகள் வாழ்த்தியும் தாழ்த்தியும் அவர் கொள்கைகளை மதிப்பிட்டன. யாவற்றுக்கும் அஞ்சாமல் தனி அரிமாவாகத் தனித்தமிழ்க் கொள்கையில் வழுவாமல் கடைசிவரையில் இருந்தார்.

 பின்னாளில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையைத் தமிழக அரசு உருவாக்கியபொழுது அந்த இடத்தில் இருந்தும் ஆக்கமான பணிகளைச் செய்யத் தவறவில்லை. தமிழ்வழிக் கல்வி, திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு, பேருந்துகளில் தமிழில் எண்பலகை வைத்தல், விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம்பெறச்செய்தல் என்று தம் கொள்கையை உரியவகையில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்த முயன்றார்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களை 1987 முதல் நூல் வழி அறிவேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் பயின்றபொழுது அவர் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட கல்லூரியில் உரையாற்றுவதை அறிந்து அதனைக் கேட்கச் சென்றேன். அவர் உரை என்னொத்த மாணவர்களின் உள்ளங்களை ஈர்த்தது. அதன் பிறகு பல மாநாடுகள், இயக்க நிகழ்வுகளில் கண்டு உரையாடியுள்ளேன். அவரின் சொல்லும் செயலும் என்னை மிகவும் ஈர்த்தன. அவர்மேல் அளவுகடந்த மதிப்பும் அன்பும் எனக்கு ஏற்பட்டன.

 அரசியல் பரபரப்பு இல்லாமல் இருந்தபொழுது அவரை நன்கு அறியவும் அவருடன் நன்கு பழகவுமான வாய்ப்பு எனக்கு அமைந்தது.

 அப்பொழுது நான் வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் தங்கியிருந்தபொழுது எங்கள் இல்லம் வந்து எங்கள் எளிய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார். அவர் நினைவாக என் மகனுக்குத் தமிழ்க்குடிமகன் என்று பெயர் வைக்கும் அளவுக்கு அவரின் தமிழ்ப்பற்று என்னை ஆட்கொண்டது. (என் மகன் பிறந்த உடன் ஐயாவுக்குச் செய்தி சொல்லி அவர் பெயரைக் குழைந்தைக்கு வைத்துள்ளதைச் சொன்னதும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த இரண்டு கிழமையில் வேலூர் வரும்பொழுது நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறினார். ஐயகோ! என் மகன் பிறந்த இரண்டு நாளில் ஐயா மறைந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது). பல மடல்களும் தொலைபேசி அழைப்பிலுமாக எங்கள் நட்பு கனிந்தது. அன்னாரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

 முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களின் இயற்பெயர் மு.சாத்தையா ஆகும். 26.06.1939 இல் இன்றைய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாத்தனூரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் முத்தையா, குப்பம்மாள் ஆவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைச் சாத்தனூர் அரசு தொடக்கப் பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கல்வியைச் செங்குடி உரோமன் கத்தோலிக்க (R.C) நடுநிலைப் பள்ளியிலும், ஒன்பது முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். இளம் அறிவியல் (கணக்கு) பட்டப்படிப்பைத் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரியில் முடித்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துத் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

 1963-1964 ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் உயர்நிலைப்பள்ளிக் கணக்கு ஆசிரியராகவும், தென்மொழி துணையாசிரியராகவும் பணியாற்றியவர். அடுத்த இரண்டு ஆண்டுகள் பறம்புக்குடி ஆ.வை. உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகவும் பின் மூன்றாண்டுகள் நேரடி அரசியல் வாழ்க்கையிலும் இருந்தவர்.

 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றியவர். 1979 முதல் 1988 வரை கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியவர்.1989 முதல் நேரடியாக அரசியலில் இயங்கியவர். 1989 முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பணியாற்றியும், 1996 முதல் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.

 1967 முதல் 1977 வரை தமிழில் வெளிவந்த மரபுக்கவிதை, புதுக்கவிதை நூல்கள் 614 ஐ ஆய்வுக்கு உட்படுத்திப் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து 1983 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முனைவர் பட்டம் பெற்றவர்.

எழுதிய நூல்கள்:

1. அந்தமானைப் பாருங்கள்
2. பாவேந்தர் கனவு
3. வாழ்ந்து காட்டுங்கள்
4. காலம் எனும் காட்டாறு
5. பாவேந்தரின் மனிதநேயம்
6. ஐரோப்பியப் பயணம்
7. மனம் கவர்ந்த மலேசியா
8. கலைஞரும் பாவேந்தரும்
9. தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
10. சீன நாடும் சின்ன நாடும்
11. மலேசிய முழக்கம்
12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)

இதழ்ப்பணி:

துணை ஆசிரியர்- தென்மொழி(1963-1966)
ஆசிரியர்- அறிவு(1970-1971)
ஆசிரியர்- கைகாட்டி (1971-1974)

சமுதாயப்பணிகள்:

பரிசுச்சீட்டு, திரைப்படக்கீழ்மை, வரதட்சணை முதலியவற்றால் விளையும் சமுதாயத் தீங்குகளைக் களையும் நோக்கில் மதுரை முத்துவுடன் இணைந்து சமுதாயச் சீர்திருத்தப் பேரவையின் பொதுச்செயலாளராக இருந்தவர். மதுரை நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.

அரசியல் பணி:

1989 இல் இளையான்குடித் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றவர். 1989 பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள் முதல் 1991 ஆம் ஆண்டுவரை தமிழகச் சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், பின்னர் 1996 முதல் தமிழ் வளர்ச்சிப் பண்ப்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து பணிபுரிந்தவர்.

குடும்பம்

முனைவர் மு. தமிழ்க்குடிமகனின் துணைவியார் பெயர் வெற்றிச்செல்வி ஆவார்.இவர்களின் திருமணத்தில் பெருஞ்சித்திரனாரின் மகபுகுவஞ்சி என்ற அரிய நூல் வெளியிடப்பெற்றது. மூத்த மகன் மெய்ம்மொழி தமிழில் இ.ஆ.ப. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். அடுத்த மகன் திருவரசன். கனரா வங்கியில் பணி. மகள் கோப்பெருந்தேவி தமிழிலக்கியத் துறையில் பயின்றவர். இளைய மகன் பாரி திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்.

தமிழ் வாழ்வு வாழ்ந்த முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் மாரடைப்பின் காரணமாக மதுரையில் 21.09.2004 இல் இயற்கை எய்தினார்.

அயல்நாட்டுச் செலவுகள்

 மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவும், ஆய்வுக்காகவும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இலண்டன், பாரிசு, அமெரிக்கா, துபாய் செர்மன், இத்தாலி, மொரீசியசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

 இனிய குரலில் பாடவும், வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்களில் பேசவுமான ஆற்றல் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை, கல்விப்பேரவை ஆகியவற்றில் சிறப்பான பங்காற்றியவர்.

 நாடகத்துறையில் முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதல்பரிசு, வாழவிடு, போராட்டம் உள்ளிட்ட சமூக நாடகங்களை இயற்றி, இயக்கி, நடித்தவர். மனமாற்றம், மணிமுடி போன்ற வரலாற்று நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்தவர்.
தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்தவர்.

 பாவாணரின் உலகத் தமிழ்க்கழகத்தின் முகவை மாவட்ட அமைப்பாளராக இருந்து 1969 இல் பறம்புக்குடியில் உலகத் தமிழ்க்கழக மாநாட்டை நடத்திப் பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐயாயிரம் உருவா செலவில் 63 பேச்சாளர்களை அழைத்து மிகப்பெரும் தமிழ் விழாவை நடத்தியவர். தமிழியக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்து சிறப்பித்தவர்.

 சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாவாணரும் தனித்தமிழும் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய அறக்கட்டளைப் பொழிவு நூலாக்கப்பெற்றது. பாவாணரின் வாழ்வியலையும் தமிழ்ப்பணிகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளிக்கும் முதல்நூலாக இது மிளிர்கின்றது. தொலைக்காட்சி, வானொலிகளில் உரையாற்றியவர். தனித்தமிழ் இயக்கத்தின் விண்மீனாகச் சுடர்விட்ட மு.தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் ஆர்வலர்களின் உள்ளங்களில் எல்லாம் உயிர்வாழ்கின்றார்.


முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


காலம் எனும் காட்டாற்றின் நூலாசிரியராக மு.தமிழ்க்குடிமகன்


மு.இளங்கோவன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்


முனைவர் மு.தமிழ்க்குடிமகன், எங்கள் மகள் கானல்வரியைத் 
தூக்கிக் கொஞ்சிமகிழ்தல்


புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,மு.இளங்கோவன்


மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்


மு.இளங்கோவனுக்கு முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எழுதிய மடல்