நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 19 அக்டோபர், 2010

நெருப்புப் பாவலன் பாவேந்தன்

பணம்பறிக்கும் எழுத்தாளர் கூட்டம் எல்லாம்
பச்சையான செய்திகளை எழுதித் தாளில்
பிணமாக்கி இளைஞர்களை உழல வைக்கும்
பேயாட்சி புரிகின்ற இந்த நாட்டில்
மணங்கமழும் செந்தமிழை மலர்த்தித் தூக்க
மறவனெனத் தோன்றியவெம் புலவரேறு,
பிணக்கமிலாக் கொள்கையினை வகுத்துக் கொண்டோன்
பீடுமிகு பாவேந்தப் பெரியோர் தாமே!

தந்தையவன் பெரியாரின் தன்னே ரில்லாத்
தன்மான இயக்கத்தில் இணைந்து நின்று
முந்தியசீர் எண்ணிடவே புலவோர் தம்மை
மொத்துலக்கைப் பாட்டாலே அடித்தெழுப்பிச்
சிந்தனையை ஊற்றெடுக்க வைத்த என்றன்
செங்கோவின் பிளிறொலியாம் வரிகள் எல்லாம்
இந்தவளர் தலைமுறையும் ஒலிப்பதெண்ண
எரியென்றே அன்னவனை ஒப்பம் செய்வோம்!

மங்கையவள் தருகின்ற இன்பம் எல்லாம்
மாத்தமிழின் சுவையினுக்கு ஈடாய் ஆமோ?
எங்கள்தமிழ் சீரெல்லாம் பிழைக்க வந்தோர்
ஏமாற்றி மறைத்தேதான் சென்றா ரென்று
பொங்குசின அரிமாவாய் முழங்கி இந்தப்
புவியோர்க்கு மறவுணர்வை ஊட்டி நின்று
சங்கெடுத்து முழக்கம்செய் பாவேந்தன்போல்
சாற்றுதற்கும் ஆளுண்டோ? உண்டா இங்கே!

மக்களினை ஏய்க்கின்ற மடயர் எல்லாம்
மாற்றுவழி பின்பற்றிப் பதவி தேடி
இக்காலம் தன்னிலேதான் அலைவதெண்ணிப்
பாவேந்தன் எரிமலையாய் வெடித்துச் சொன்னான்!
முக்காலம் புகழ்நிலைக்க வேண்டும் என்றால்
முத்தமிழை ஆள்வோரே காப்பீராக!
திக்கிகழ இம்மொழிக்குக் கேடு செய்தால்
தீப்பந்தம் கொளுத்திடுவோம் என்றான் வீரன்!

ஆள்வோரால் பாவேந்தன் அந்த நாளில்
அலைக்கழிக்கப் பட்டாலும் அவனை ஏத்தி
வேள்என்றே புகழ் விரும்பிக் கத்துகின்றோம்!
வீறுணர்வைப் பெற்றோமா? வீரம் உண்டா?
மீள்வதற்கே அவன்பாட்டை நினைத்தோமா?நாம்
மேன்மைஎழ விழாவெடுப்போம்! மேலே உள்ள
ஆள்வோர்கள் தமிழ்மொழிக்குக் கேடு செய்தால்
அனல்கக்கும் பாவேந்தன் மறவ ராவோம்!

14.03.1991

கருத்துகள் இல்லை: