நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 அக்டோபர், 2010

குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன்


குணவதிமைந்தன்

உழவுத்தொழிலை நம்பியிருக்கும் இந்தப் பகுதி மக்களுக்கு வீராணம் ஏரிதான் செவிலித் தாய். ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றுச்சிறப்புடைய வீராணம் ஏரியின் தண்ணீர் சென்னைக்குக் குடிநீரான சூழலில் இந்தப் பகுதி மக்கள் வாழ்க்கையில் அச்சம் கவ்வியது. இனி நம் வேளாண்மை கட்டாயம் பாதிக்கும் என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தனர்.

வீராணம் ஏரியால் வளம்கொழிக்கும் ஊர் காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கும் திருமூலத்தானம்.

இது காட்டுமன்னார்கோயிலுக்குத் தென்கிழக்கே உள்ள ஊர். நெல்லும்,கரும்பும், உளுந்தும் அறுவடை செய்து மாளாது. அறுப்பதும் அடிப்பதும் உழுவதும் அன்றாடம் நடக்கும். இப்படி இயற்கை வளம் இருந்தாலும் எந்தச் செயலுக்கும் காட்டுமன்னார்கோயில்தான் தலைமையிடம்.

காட்டுமன்னார்கோயிலை அடுத்துள்ள பல ஊர்களில் வேளாண்மைத்தொழில் சிறப்பாக நடந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாவட்டம் உள்ளிட்ட பிற மாவட்டத்து மக்கள் வேலைக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி வேலை செய்து ஆண்டு முழுவதுக்குமான வருமானத்துடன் வீடு திரும்புவார்கள்.

இப்பொழுது வீராணம் ஏரித்தண்ணீரை அரசு இயந்திரங்கள் உறிஞ்சி எடுத்தபொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் செய்வது அறியாது கவலையுடன் கண்ணீர்மல்க அமர்ந்தனர். அந்தப் பகுதியில் இருந்த அரசியல்காரர்களோ, சமூக இயக்கங்களோ செய்வதறியாமல் கைபிசைந்து நின்றனர்.

அந்த நேரத்தில் தன் அறிவு, ஆற்றல், நட்பு, ஊடகத்துறையின் ஒத்துழைப்புடன் ஒரு இளைஞர் கையில் ஒளிப்பதிவுக் கருவியுடன் வீராணத்துக்கரையில் வந்து நின்றார்.அந்தப் பகுதி மக்களின் சோக வாழ்க்கையை ஒளிப்பதிவுக்கருவியில் படமாக்கினார். கல்கி முதலான வரலாற்றுப் புதின ஆசிரியர்களுக்குப் புலப்படாத வீராணத்து ஏரிக்கரையின் உண்மையான சோக வரலாற்றை அந்த ஏரித்தண்ணீர் குடித்து வளர்ந்த அந்த இளைஞர் உலகத்துக்குப் புதுப்பார்வையில் வெளிப்படுத்தினார்.அண்ணன் அறிவுமதி அவர்கள் அந்த வீராணம் ஏரியின் ஒளிப்பதிவு ஆவணத்தை வெளியிட்டுத் தழுதழுத்த குரலில் அதனை இயக்கிய அந்த இளைஞரைத் தன் தம்பியாக அறிமுகம் செய்த அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்தபொழுது எனக்கு அறிமுகமான பெயர்தான் குணவதிமைந்தன்.

ஆம்.

குறும்படம், ஆவணப்படம் எனப் பல படங்கள் எடுத்து முழுநீளப் படத்தை இயக்கும் ஆற்றல்பெற்றுள்ள அவரைப் பற்றி அறியும் ஆர்வம் எனக்குப் பல நாளாக இருந்தது.
கல்லூரிப் பணியில் நான் கவனமுடன் இருந்தபொழுது குடும்பவிளக்கு குறும்படம் வெளியீட்டு விழா அழைப்பிதழுடன் வந்த குணவதிமைந்தன் அவர்களைக் கண்டேன். அவரின் பழகும் பண்பும், திறமையும்,ஆற்றலும் அவர் தம்பியர்கூட்டத்துள் ஒருவனாக என்னையும் கொண்டுபோய் சேர்த்தது. கடந்த ஐந்தாண்டுகளாக நல்ல தொடர்பில் இருக்கின்றோம்.அவரின் வாழ்க்கையையும் குறும்படங்களையும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.

குணவதிமைந்தன் என்று குறும்பட உலகில் அறிமுகமான இவர்தம் இயற்பெயர் இரவி. காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள திருமூலத்தானம் என்னும் ஊரில் 18.05.1965 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் இராமையன், குணவதி அம்மா. தொடக்கக்கல்வியைக் காட்டுமன்னார்கோயிலில் முடித்த இவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை, இளம்முனைவர் பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்டத்துக்குச் சுற்றுலாத்துறை சார்ந்த தலைப்பில் ஆய்வுசெய்து வருகின்றார்.

உழைக்கும் மக்களின் வாழ்க்கைச்சூழலைக் கண்முன் கண்டதால் இதழியல்துறையில் ஈடுபாடு கொண்டவர். இளமை முதல்அஞ்சாது நாட்டு நடப்புகளை எழுதியவர். படைப்பாகவும் செய்தியாகவும் இவர் ஆக்கங்கள் தொடக்கத்தில் வெளிப்பட்டன.

இதழியல்துறையில் 1988 இல் ஈடுபட்டு, வணிக ஒற்றுமை என்னும் இதழில் எழுதத் தொடங்கி, பின்னர் கீதாமஞ்சரி, கண்கள் தமிழ்மலர், உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதினார். 1989 முதல் தினகரன், மாலைமலர், தினமலர், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர்.

1992 முதல் புதுச்சேரியில் தினமணி செய்தியாளராகப் பணியாற்றினார்.பின்னர் பணி உயர்வுபெற்று இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் மேலாளராகப் பணிபுரிகின்றார். தாம் ஏற்றுக்கொண்ட பணியினைச் சிறப்பாகச் செய்துமுடிக்கும் இவர் ஆற்றல் மற்ற இதழாளர்களுக்கு எடுத்துக்காட்டானதாகும்.

படிக்கும் காலத்தில் திரைத்துறையில் ஈடுபாடுகொண்டு விளங்கினாலும் தம் பணிச்சூழலால் அந்தத் துறையில் தொடக்கத்தில் சுடர்விடமுடியவில்லை. எனினும் திரைத்துறை தயாரிப்பில் தன்னை எப்பொழுதும் புதுப்பித்துக்கொண்டே வந்தார்.

இந்த நேரத்தில்(1990) “போர்த் எஸ்டேட்” என்ற குறும்படத்தை இயக்கினார். இதில் இதழாளர்கள் படும் துன்பம் பதிவானது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் இதழாசிரியராகவும், இயக்குநர் அருண்மொழி இதழாளராகவும் நடித்தனர். சமூக நடப்புகளை எடுத்துக்காட்டும் இதழ்களில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை இதில் எதிரொலித்தது. நாற்பது நிமிடம் ஓடும் படம் போர்த் எஸ்டேட்.

அதனை அடுத்துச் சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்டு வீராணம் ஏரி பற்றிய பதிவைக் குறும்படமாக எடுத்து அந்தப் பகுதி மக்களின் சார்பில் இந்தச் சமூகத்தில் நீதிகேட்டுப் போராடினார். இதற்காக இவர் திரட்டிய வரலாற்றுச்சான்றுகள், துறைசார்ந்த வல்லுநர்களின் நேர்காணல்கள் இந்தப் படத்தின் உண்மையை நிலைநிறுத்தின. தென்னார்க்காடு மாவட்டத்து மக்களின் உயிராதாரமாக இருக்கும் வீராணம் ஏரித்தண்ணீர் சென்னை மக்களுக்குக் கொண்டு செல்வதால் தென்னார்க்காடு மாவட்டமே பாலைவனமாக மாறும் என்று இந்தப் படம் சித்திரித்து.இது இன்று கண்கூடான உண்மையாயிற்று. ஆண்டுக்கு மூன்றுமுறை அறுவடை செய்த மக்கள் இன்று ஒருமுறை அறுக்கவே துன்பப்படுகின்றனர் என்பதைக் கண்ணால் கண்டு வருந்துகிறோம்.இத்தகு சமூக நிகழ்வை ஆவணப்படுத்திய இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பாவேந்தரின் படைப்புகளில் முதன்மையான நூல் குடும்பவிளக்கு நூலாகும். குடும்ப விளக்கில் இடம்பெறும் ஒருநாள் நிகழ்வை உண்மை வாழ்க்கையில் நடக்குமா என்று பாவேந்தரை ஏற்காத சிலர் தாழ்வாகப் பேசுவர்.அவர்களின் பொய்யுரைகளை உடைத்து இயல்பான காட்சிகளாக்கிக் குடும்பவிளக்கு இன்றைய தமிழுலகத்திற்குத் தேவை என்று குணவதிமைந்தன் நிலைநாட்டினார்.


குடும்பவிளக்கு வெளியீடு


குடும்பவிளக்கு

அறிவியல் தொழில்நுட்ப உலகில் இன்று படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளது. தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்கு ஊடகங்களால் இன்று நெடுநாழிகை அமர்ந்து படிப்பது இயலாத செயலாக உள்ளது. இத்தகு நிலையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு நூலின் செய்திகளை எளிய நிலை மக்களும் புரிந்துகொண்டு சுவைக்கும்படியாகக் காட்சி வழியாக விளக்கியுள்ளார். தமிழ்ப்பற்றாளர்களும்,பாவேந்தர் பற்றாளர்களும் வாங்கிப் பார்க்கத் தகுந்த குறும்படம் குடும்பவிளக்காகும்.

குடும்பவிளக்குப் படத்தின் சிறப்பு உணர்ந்த திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தப் படம் இயக்கிய குணவதிமைந்தனை அழைத்துப் பாராட்டிச் சிறப்பு செய்தது.


புதுச்சேரியில் பாரதி

இந்திய விடுதலைப்போருக்குக் கனல் கக்கும் பாடல்களை வடித்துத் தந்த பாரதியாரின் புதுச்சேரி வாழ்க்கை அவரை ஒரு மிகச்சிறந்த இதழாளராக மாற்றியது. புகழ்பெற்ற படைப்புகள் யாவும் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த பத்தாண்டுகளின்பொழுதே படைக்கப்பப்பட்டன. பத்திரிகையாளரான குணவதிமைந்தன் பாரதியின் போராட்ட வாழ்க்கையை இந்தப் படத்தில் மிகச்சிறப்பாகத் தந்துள்ளார். இப்படங்கள் புதுச்சேரியில் அறிமுகமான அளவு உலகத் தமிழர்களின் பார்வைக்கு இன்னும் அறிமுகம் ஆகாமல் இருப்பது ஒரு குறையே ஆகும். ஒருமணிநேரம் ஓடும் இந்தப் பாரதி புகழ்பரப்பும் படத்தை அனைவரும் பார்க்கலாம்.பாரதியோடு அருகில் வாழ்ந்த மன நிறைவை இந்தப் படம் வழங்குகின்றது.

காப்பியப்புகழ் கம்பனின் வாழ்க்கை பற்றிய புதிர்கள் இன்னும் ஆய்வாளர்களால் விடுவிக்கப்படாத சூழலில் துணிந்து நின்று கம்பனின் காவிய வாழ்வைப் படமாக்கிக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரும்பணியாற்றியுள்ளார் குணவதிமைந்தன். இந்தப் படம் பிரான்சு. சுவிசர்லாந்து உள்ளிட்ட அயல்நாடுகளிலும் திரையிடப்பட்டது என்பது தனிச்சிறப்பு. ஒருமணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் நடிகர் இராம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.


கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்படம் வெளியீடு


கவிச்சக்கரவர்த்தி கம்பன்

இந்திய விடுதலைக்கு உழைத்த அரவிந்தரை ஆன்மீகவாதியாக அனைவரும் அறிவோம். அவரின் இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளை யாவரும் உணரும்படியாகப் புதுச்சேரி அரசின் தயாரிப்பாக ஒன்றரை மணி நேரம் ஓடும் படமாகக் குணவதிமைந்தன் தந்துள்ளார். புதுச்சேரி, சந்திரநகர், கல்கத்தா, டார்சிலிங்கில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. நடிகர் இராம் இந்தப் படத்தில் அரவிந்தராகவே வாழ்ந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய இருளர்களின் இருண்ட வாழ்க்கையைப் பதிவுசெய்து சமூகத்தில் அவர்களுக்கு உரிய உரிமையை மீட்க உதவும்படமாக இருளர்கள் குறித்த படத்தைக் குணவதிமைந்தன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இருளர்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் கிடைக்க பல நல்ல திட்டங்கள் அரசு உருவாக்க உதவியது.

இவை தவிரப் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் குணவதிமைந்தன் பல படங்களை உருவாக்கித் தந்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், அறியப்பட வேண்டியத் தமிழ் இலக்கியப்பகுதிகளை அனைவரும் அறியவும் தம் ஒளிப்பயணத்தைத் தொடங்கியுள்ள குணவதிமைந்தன் தமிழ் இலக்கியத்தின், குறிபாகச் சங்க காலத் தமிழர் வாழ்க்கையினை வெளிக்கொணரும் படங்களை உருவாக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.அவ்வாறு உருவாக்கும்பொழுது உலகத் தமிழர்கள் இத்தகு உலகு தழுவிய முயற்சிக்கு உதவ வேண்டும். குறைந்த அளவு இவருக்கு உரிய இடத்தையும் பாராட்டையும் நாம் தெரிவிக்க வேண்டும். நம் கரம் நீண்டால், குணவதி மைந்தன் அவர்கள் எடுக்கும் படங்களின் தரம் நீளும்.

1 கருத்து:

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நண்பர் இரவியின் சாதனைகளை மிக அழகாக தொகுத்துள்ளீர். பாராட்டுகள்!

பணிபுரிந்துக் கொண்டே தமது விருப்பமான துறையில் சாதனைகள் செய்து பாராட்டு பெறுவதென்பது, இரு குதிரைகளில் பயணம் செய்வது போன்றது! அதை நண்பர் ரவி மிக நேர்த்தியாக செய்து வருகிறார்!

அவர் மேலும் பல சாதனைகள் செய்ய எனது வாழ்த்துகள்!