நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழறிஞர் இரா.சாரங்கபாணியார் மறைவு


முனைவர் இரா.சாரங்கபாணியார்(18.09.1925-23.08.2010)

காரைக்குடிஅழகப்பா கல்லூரி,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த முனைவர் இரா.சாரங்கபாணி ஐயா அவர்கள் இன்று(23.08.2010) காலை பதினொரு மணிக்குச் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை(24.08.2010) சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அவர் இல்லத்திலிருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இறுதி ஊர்வலத்தில் முனைவர் பொற்கோ(மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்),மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.முனைவர் இரா.சாரங்கபாணி பற்றி முன்பும் எழுதியுள்ளேன். என் பதிவைக் காண்க.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரினர்.18.09.1925 இல் பிறந்தவர்.பெற்றோர் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார்.
தேவங்குடியில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் ,சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று புலவர் பட்டமும்(1947),பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர்.முதுகலை(1955),எம்.லிட்(1962), முனைவர்பட்டம்(1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்.

அறிஞர் சாரங்கபாணியார்க்கு ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்களுள் கா.சுப்பிரமணிய பிள்ளை,தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பணியாற்ற தொடங்கினார். விரிவுரையாளர் பணியேற்ற இவர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

இவர் எழுதிய பரிபாடல் திறன்(1975),மாணிக்கச்செம்மல்(1999) நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டமும்(1981),சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழியும்(1991),தமிழ்நாட்டரசின் விருதும்(1998),மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருதும் பெற்றவர்(2000).

அறிஞர் இரா.சாரங்கபாணியார் வழங்கிய நூற்கொடை

01.இயற்கை விருந்து(1962)
02.குறள் விருந்து(1968)
03.பரிபாடல் திறன்(1972)
04.A critical Study of Paripatal(1984)
05.A Critical Study of Ethical Literature in Tamil(1984)
06.சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
07.திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
08.திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
09.திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
10.திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
11.சங்கச் சான்றோர்கள்(1993)
12.வள்ளுவர் வகுத்த காமம்(1994)
13.புறநானூற்றுப் பிழிவு(1994)
14.மாணிக்கச் செம்மல்(1998)
15.திருக்குறள் இயல்புரை(1998)
16.சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
17.திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
18.சங்கத்தமிழ் வளம்(2003)
19.பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
20.சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
21.சங்க இலக்கியப்பிழிவு(2008)
22.திருக்குறள் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)
23.பரிபாடல் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)

அறிஞர் இரா.சாரங்கபாணியார் இல்ல முகவரி :


குறள் இல்லம்,
330,மாரியப்பா நகர்,
அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 002
தொலைபேசி : 04144 - 238038

6 கருத்துகள்:

Ilakkuvanar Thiruvalluvan சொன்னது…

பரிபாடல் திறன் நூலைப்படிக்க நேர்ந்த பொழுதுதான் அறிஞர் சாரங்கபாணியாரின் புலமையை உணர்ந்தேன். பின்னர் பரிபாடல் பாடல்கைள இசையுடன் பாடச் செய்யவும் பரிபாடல் முத்தமிழ் விழா என இயல் இசை நாடக நாட்டுப்புறப் பாடல் நாட்டுப்புற நாட்டிய வடிவில் சிறப்பாக நடத்தவும் பரிபாடலை எளிமையாக வெளிப்படுத்து இவரது நூலே உதவியது. தமிழ் நலம் நாடும் சிறந்த அறிஞருக்கு முனைவர மு.இளங்கோவன் அவர்களின் புகழஞ்சலி சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்து வாழ்வுரையைக் குறிப்பிடுகையில் அவர்தம் மக்கள் பற்றியும் குறிப்பிட வேண்டுகின்றேன். சங்க இலக்கியச் சானறோர் சாரங்கபாணியார் வழியில் சங்கத்தமிழ வளர்ப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

அன்னாரின் பூவுடல் மறைந்தாலும் புகழுடம்பு நின்று வாழும். அன்னாரின் தமிழ்த்தொண்டு போற்றுதலுக்குரியது.

கோவி.மதிவரன் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

வருந்துகிறேன்.

அன்னாரின் ஆக்கங்கள், இணையத்தில் வெளிவர வேண்டும். எனக்கு அனுப்பினால், வல்லமையில் வெளியிடுகிறேன்.

alagan சொன்னது…

முனைவர்.சாரங்கபாணியார் மறைவு தமிழ் உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.அய்யாவும்,வ.சுப.மாணிக்கனாரும்,காரைக்குடியில், தினமும்
காலையும்,மாலையும் தமிழைப்பற்றி கலந்துரையாடுவது வரலாற்று சிறப்பு மிக்கதாகும்..செய்தித் தாள்களுக்கு முன் செய்திகளைத் தரும் இந்த வலைத் தளத்திற்கு என் பாராட்டுக்கள்.அன்னாரின் மனைவி திருமதி.தனலக்குமி அம்மையார்,மகன் மருத்துவர் அந்துவன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.அவருடன் நாங்கள் பழகிய நாட்கள் என்றும் நினைவில் நிற்கும்..
ஆழ்ந்த புலமை....தன்னடக்கம்...மிகுந்த எளிமை ....இதற்கு மறுபெயர் சாரங்கபாணியார்......
அன்னாரது புகழ் ஓங்குக.....

Unknown சொன்னது…

அய்யாவின் புகழ் ஓங்குக!, முந்தையப் பதிவில் குறிப்பிட்டுள்ளதைப் போல அய்யாவின் தமிழ்வாழ்க்கை மிகச்சிறந்த முன்னுதாரனமாகும். தமிழர்கள் அனைவரும் பின்பற்றி நடக்கவேண்டும். அய்யாவின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாடன்