நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழி மாநாடு மூன்றாம் நாள் நிகழ்வுகள்...


முனைவர் அலெக்சாண்டர் துபியான்சுகியும் நானும்

செம்மொழி மாநாடும், தமிழ் இணைய மாநாடும் கோவையில் தமிழக அரசின் சார்பில் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துவருகின்றன.உலகெங்கும் இருந்து பேராளர்கள் வந்து மாநாட்டு ஆய்வரங்குகளிலும் பொது அமர்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இன்று பின்லாந்து பேராசிரியர் ஆசுகோ பார்ப்போலா அவர்கள் சிந்துவெளி எழுத்துச்சிக்கல்: திராவிடத் தீர்வு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களும் துணை முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.அதன் பிறகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தலைமையில் பாவரங்கம் நடைபெற்றது.பின்னர் மாலை நிகழ்வில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் நடந்தது.

செம்மொழி மாநாட்டிலும் தமிழ் இணைய மாநாட்டிலும் பல்வேறு ஆய்வரங்குகளில் அறிஞர்கள் கட்டுரைகள் வழங்கினர்.நான் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் ஏற்பாட்டில் நடந்த பொறியியல்,தொழில்நுட்பம் சார்ந்த அமர்வில் படிக்கப்பெற்ற கட்டுரைகளைக் கேட்கச் சென்றேன். திரு.ஆரோக்கியசாமி அவர்கள் சிறிது காலத்தாழ்ச்சியுடன் வந்து தலைமை ஏற்றுக்கொண்டார். முனைவர் பார்த்தசாரதி அவர்களின் மீநுண்(நானோ) நில இயற்பியல்:அண்மையப் போக்குகளும் வருங்கால வாய்ப்புகளும் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையும், ஆர்.வெங்கடேசன் அவர்களின் "தெற்காசியக் கடல்களின் எல்லைகள்-தட்பவெப்ப நிலை மாற்றங்களில் சவால்கள்" என்ற தலைப்பில் அரியதோர் கட்டுரையும் சிறப்பாக இருந்தன. ஆர்.வெங்கடேசன் அவர்கள் கிராமப்புறம் சார்ந்த பள்ளியில் தமிழ் வழியில் பயின்று இன்று உலகம் போற்றும் கடலியில் அறிஞராக விளங்குவது அறிந்து அவையோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முனைவர் நா.கணேசன் அவர்கள் திராவிடவியல் ஆய்வில் ஒருங்குறி தரவுத்தளங்கள்- இணையத்தில் சிந்துவெளிச் சின்னங்களும் தமிழ்நூல்களும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்த அரங்கம் முடிந்ததும் நான் வேறு சில அரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகளைக் கவனித்தேன்.பின்னர்ப் பகலுணவுக்குப் பிறகு நானும் பாலா பிள்ளையும் இணைந்து தமிழ் இணையத்தின் அடுத்த வளர்ச்சி நிலை பற்றி கலந்துரையாடினோம்.மனப்புற்று என்ற பாலாவின் கண்டுபிடிப்பு பற்றி என்னிடம் விவரித்தார்.மூன்று மணி நேரத்துக்கு மேல் எங்கள் உரையாடல் நீண்டது.அங்கு வந்த முகுந்துவும் ஓசை செல்லாவும் அரங்கு ஒன்றுக்குப் பாலாவை அழைத்துச்சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி அவர் பணிகளை அவைக்கு நினைவூட்டினர். அனைவரும் எழுந்துநின்று கைத்தட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மாலை ஆறு மணிக்கு உத்தமத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவு எட்டரை மணிக்குப் பேருந்தேறி அறைக்கு ஒன்பது மணியளவில் வந்தேன்.

இன்று பேராசிரியர் அலெக்சாண்டர்துபியான்சுகி(மாசுகோ) அவர்களைக் கண்டு உரையாடினேன். அவர் நான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது எனக்கு நன்கு அறிமுகமானவர்.அவர் வாழ்க்கை வரலாற்றை என் அயலகத் தமிழறிஞர் நூலில் எழுதியிருந்தேன். என் நூலொன்றை அன்பளிப்பாக வழங்கினேன். அதுபோல் முனைவர் சண்முகதாசு,மனோன்மணி சண்முகதாசு,சிவா பிள்ளை,பிரான்சு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் முருகையன் அவர்களையும்,திரு.நாக இளங்கோவன் அவர்களையும், பேராசிரியர் மறைமலை அவர்களையும்,பேராசிரியர் இரா.இளவரசு,பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களையும் இலண்டன் பி.பி.சி.செகதீசன் அவர்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது.அதுபோல் உத்தமத்தின் பல முன்பின் அறியாத நண்பர்களையும் கண்டு அறிமுகம் ஆனோம்.


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்களுடன் நான்


உமர் தம்பி அரங்கில் திரு.அ.இளங்கோவன் TACE 16 சிறப்பை எடுத்துரைத்தல்


நான், நா.கணேசன், பார்த்தசாரதி, மயில்சாமி அண்ணாதுரை


அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முசுதபா, நான், பாலா பிள்ளை

கருத்துகள் இல்லை: