நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 ஜூன், 2010

கனடாவில் வணிகத் திருவிழா...




கனடாவில் வாழும் ஈழத்து உடன்பிறப்பு செந்திலாதன்.
செந்தி என்று பெயர் சுருங்கி,
புகழ்ப்பெருக்கம் கொண்டவர்.

ஆற்றலும் அறிவும் பின்னிக்கிடப்பது இவரிடம்தான்.
இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரி.
தன்னம்பிக்கைத் தொடர் எழுதக் கூடியவர்கள்
தவறாமல்
செந்தியைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிடலாம்.

ஒற்றை மரமாக நின்று கனடாவில் தமிழர்கள் தங்கிச்செல்ல நிழல் தருபவர்.
ஆம்!
வணிகத்திருவிழா என்ற பெயரில்
ஈழத் தமிழர்களை ஒன்றிணைத்துச்
சமூகத்தொண்டு செய்பவர்.

இவர் தந்தையார் அ.பொ.செல்லையா.
திராவிட இயக்க உணர்வுகளை ஈழத்தில் விதைத்த பெருமகனார்.
திருவள்ளுவருக்குச் சிலை ஈழத்தில் எடுப்பித்ததுடன், திருக்குறளுக்கு உரை வரைந்த உரையாசிரியர்.
நல்லாசிரியராக வலம்வந்தவர்.
ஈழத்துக் கல்வி வராலாற்றில்
இவருக்கும் பங்கு உண்டு.

செந்தியின் அன்னையார் யோகரத்தினம் அம்மையார்.
என்னை ஈன்றெடுக்காமல் வளர்த்து வருபவர்.
அன்னையார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
உலகத் தமிழ்க்குடும்பங்கள் எம் குடும்பம்தானே!

செந்தியை எனக்கு அறிமுகம் செய்தவர்
ஈழத்துப்பூராடனார் என்னும் செந்தமிழ் முனிவர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழன் வழிகாட்டியைப் பொருட்செலவு செய்து ஈழத்தப்பூராடனார் அஞ்சலில் அனுப்பிவைப்பார்.
அதன்வழியாகக்
கனடாத் தமிழர்களின் கவின்மிகு வாழ்க்கை அறிந்தேன்.

ஈழத்துப்பூராடனாரை நான் 18 ஆண்டுகளாகப் பார்க்காமலே பழகி வருகிறேன்.
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்.
மார்க்சு-ஏங்கெல்சு.
வரலாறு அடுத்து வரைய இருக்கும் உவமை
மு.இளங்கோவன்-ஈழத்துப்பூராடனார்.
மகன் நான்.
ஈழத்து இலக்கியம் பயிற்றுவித்த ஆசிரியர் அவர்.

செந்தி நடத்தும் வணிகத் திருவிழா அழைப்பு வந்து,
நெஞ்சில் குற்றாலச்சாரலாய்ச் சில்லென்றது.
செம்மொழி மாநாட்டுக்குச் சிறப்பு சேர்க்க
நான்
செல்ல இருப்பதால்
அடுத்த ஆண்டுதான் செந்தி நேரில்
வாழ்த்துரைக்க வரமுடியும்.
இந்த ஆண்டு
இதோ,
எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
இணையவெளி வழியாக
தங்களை வந்தடையட்டும்.

உலகத் தமிழர்களே!
தமிழ்மகன் ஒருவன் நடத்தும்
வணிகத் திருவிழாவினை
வாயார வாழ்த்த வாருங்கள்!

1 கருத்து:

Unknown சொன்னது…

நிச்சியமாக, தமிழ்மகன் நடத்தும் வணிக திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்