நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 4 ஜூன், 2010

புதுவை தினகரன் செய்தியாசிரியர் திரு.தருமராசன் மறைவு


இதழாளர் தருமராசன்


புதுவையில் புகழ்பெற்ற இதழாளரும்,தினகரன் இதழின் புதுவைப் பதிப்பின் செய்தி ஆசிரியருமான திரு.தருமராசன் அவர்கள் நேற்று (03.06.2010)தம் நாற்பதாம் அகவையில் இயற்கை எய்திய செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று காலை நான் புதுச்சேரியில் கறிகாய் வாங்க சந்தைக்கு என் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தேன். சாலையின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியைக் கண்டு அதிர்ந்து இறங்கிவிட்டேன். பார்த்த முகமாக உள்ளதே என்று பதறிய பொழுது அண்ணன் தருமராசன் அவர்களின் முகமாகத் தெரிந்தது. புதுவைக்கு வந்த பிறகு அவரின் செய்தி திரட்டும் ஆர்வத்தை அண்ணன் இரா.கோமகன், அண்ணன் அறிவுமதி வழியாகவும் நண்பர் கோ.சுகுமாரன் அவர்கள் வழியாகவும் அறிந்து மகிழ்ந்தவன்.

திரு.தருமராசன் அவர்களை இலக்கியக் கூட்டங்களில், அரசு விழாக்களில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிடைத்தது.கடலூர் அருகில் பூண்டியாங்குப்பம் என்ற ஊரில் பிறந்தவர். எங்கள் உறவினர்கள் பலர் அந்த ஊரில் இருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அவருடன் நல்ல நட்பு எனக்கு ஏற்பட்டது.எனக்குக் குடியரசுத்தலைவரின் செம்மொழி இளம் அறிஞர் விருது கிடைத்த செய்தியைத் தொலைக்காட்சியில் கண்டு அதுகுறித்து விரிந்த செய்தியைத் தம் இதழில் மறுநாள் வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.அண்மையில் நான் சிங்கப்பூர் சென்ற நாளில் அவரிடம் தொலைபேசியில் செய்தி சொல்லி வாழ்த்து பெற்றேன்.

அதுபோல்

//சகோதரரே.... ஊர் திரும்பி விட்டீர்களா?//

என்று ஒற்றை வரியில் எனக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்திருந்தார் (25 May 2010 16:03). அந்த ஒற்றை வரியே எனக்குக் கிடைத்த பாசவரியாகும். அந்த ஒற்றை வரியில் அவர் அன்பு கண்டேன். வாழ்விருக்கும் வரை அண்ணன் தருமராசன் நினைவிருக்கும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் யாவரின் துயரிலும் நானும் பங்கேற்கின்றேன்.

நேற்று நான் புதுவையில் இருந்தும் செய்தி எனக்குத் தெரியாமல் போனது.அண்ணாரின் முகத்தைப் பார்த்துக் கண்ணீர்விடும் வாய்ப்பிழந்தேன்.

கடலூர் அடுத்த ஊர்பிறந்து
கல்வி முறையாய்க் கற்றபடி,
நடக்கும் கொடுமை எடுத்துரைக்க
நாளிதழ்த் துறையில் நீசேர்ந்தாய்!
நடக்கும் கொடுமை எடுத்துரைக்க
நாளிதழ்த் துறையில் சேர்ந்தவனே
கிடக்கும் அண்ண! தருமராச!
கேவி அழுதோம் கேட்டனையோ?

தினகரனைப் பார்வையிட இங்குச் சொடுக்குக

கருத்துகள் இல்லை: