நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா

அந்தனி ஜீவா 
     புதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும். நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா, நினைவுநாள் விழா, பாராட்டு விழா, புத்தகக் கண்காட்சி, பக்தி விழாக்கள், சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப் பொழிவு, வரவேற்பு விழா, வழியனுப்பு விழா, பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கலந்துகொள்வேன். 

     இலங்கையிலிருந்து அந்தனி ஜீவா வருகின்றார். அவர் ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து உரையாற்றுவார் என்று பாவலர் சீனு. தமிழ்மணி சில மாதங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்றேன். வேறொரு வேலை இருந்ததால் உரையை மட்டும் கேட்டுவிட்டு, கலந்துரையாடலின் பொழுது வந்துவிட்டேன். எழுத்தாளர் சூரியதீபன் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் விழா நடந்தது. மறுநாள் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யும்படி சீனு. தமிழ்மணியைக் கேட்டுக்கொண்டேன். அவரும் அந்தனியிடம் இசைவு பெற்றிருந்தார். அந்தனியும் சூரியதீபனும் பிரஞ்சு நிறுவன நூலகம் உள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டுப் பாரதிப் பூங்கா வந்தனர். நானும் சீனு.தமிழ்மணியும் ஓர் ஒலிப்பதிவுக் கருவியுடன் பூங்காவில் நுழைந்து அறிமுகம் செய்துகொண்டோம். சில படங்களை நினைவுக்காக எடுத்துக்கொண்டேன். இவை இரண்டு திங்களுக்கு முன் நடந்தவை (இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த சமயம்). அந்தனியிடம் மலையகத் தமிழர்கள் பற்றியும் பொதுவான கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம். 

    தமிழகத்தைவிடவும் அங்குத் திட்டமிட்டுக் கூத்துக்கலையை எப்படியெல்லாம் வளர்த்துள்ளார்கள் என்பதறிந்து மகிழ்ந்தேன். மலையக மக்களின் அரசியல் முயற்சி, அரசியல் வாதிகளால் மலையக மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். தாம் ஆசிரியராக இருந்து நடத்தும் கொழுந்து என்னும் இதழ் பற்றியும் எடுத்துரைத்தார். பல நாடகங்களை உருவாக்கியும் இயக்கியும், நடித்தும், பல நூல்களை எழுதியும், தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் அந்தனி ஜீவா அவர்கள் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன். 

     அந்தனி ஜீவா அவர்கள் மலையக இலக்கியத்துக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் இலக்கிய உலகிற்கு நினைவூட்டியவர். இவர் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற அக்கினிப்பூக்கள்,ஈழத்தில் தமிழ்நாடகம், அன்னை இந்திரா, காந்தி நடேசையர், மலையகமும் இலக்கியமும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் வளர்த்த தமிழ், மலையகம் வளர்த்த கவிதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள், அம்மா, மலையக மாணிக்கங்கள், முகமும் முகவரியும், திருந்திய அசோகன், நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்,மலையகத் தொழிற்சங்க வரலாறு உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதியவர். 1970 அளவில் நாடகத் துறையில் கால்பதித்த ஜீவா இதுவரை 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார். 

    1980 களில் மலையக வீதி நாடகங்களை அளித்த பெருமை இவரையே சாரும். அந்தனி ஜீவா அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கொழும்பில் பிறந்தவர்.படிக்கும் காலத்தில் மாணவ நண்பர்களுடன் இணைந்து கரும்பு என்னும் சிறுவர் இதழை நடத்தியவர்.மாணவப்பருவத்தில் மாணவன்,தமிழருவி, திருமகன், கலைமலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதியவர். வீரகேசரி உள்ளிட்ட புகழ்பெற்ற ஏடுகளிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. இதழாசிரியராக நமக்கு அறிமுகமானாலும் சிறுகதையாசிரியராக, நாடக ஆசிரியராக,நாடக இயக்குநராக, நூல் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார். தமிழ்நாட்டில் வீதி நாடகப் பயிற்சி பெற்ற ஜீவா வெளிச்சம்,சாத்தான் வேதம் ஓதுகின்றது போன்ற முதன்மையான வீதி நாடகங்களைத் தந்துள்ளார்.1970 இல் இவர் உருவாக்கிய முள்ளில் ரோஜா நாடகம் தமிழ் அரங்கியல் உலகுக்கு இவரை அடையாளம் காட்டியது.30 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்ட அக்கினிப்பூக்கள் நாடகம் இதுவரை 16 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சிக்கலை முன்வைக்கும் இந்த நாடகம் நடந்தபொழுது தொழிலாளர்கள் எழுந்து நின்று குரல்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு உணர்வுமயமானது. இந்த நாடகம் நூல் வடிவிலும் வந்து பரிசில் பெற்றது. 

     சாரல் நாடனும் அந்தனியும் இணைந்து பதிப்பித்த தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூல் தொழிற்சங்கவாதியான நடேசய்யரின் வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் இலக்கியக் கலந்துரையாடல்கள், மாநாடுகள், ஆய்வரங்குகளில் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்கின்றார். தமிழகத்து முற்போக்கு இயக்கத் தோழர்களுடன் நல்ல உறவுகொண்டுள்ள அந்தனி அவர்கள் இலங்கை-தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றார்.இலங்கை எழுத்தாளரும், பதிப்பாளருமான திரு.புன்னியாமீன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதறிந்து மகிழ்கிறேன். பழகுதற்கு இனியவரும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்த அந்தனி அவர்களின் நட்பை உயர்வானதாகப் போற்றுகின்றேன். நாடகம், தொழிற்சங்கம், கலை,இலக்கியம் என்று வாழ்வைச் செலவிடும் மலையகத்தின் மூத்த இதழாளரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இவர் உதவியால் என் நூல்கள், இணையப்பணிகள் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரியத் தொடங்கியது. ஆம். தினக்குரலில் என் நூல் பற்றிய விரிவான மதிப்புரை வரைந்ததும், கொழுந்து இதழில் என்னைப் பற்றி அறிமுகம் செய்ததும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

பேரா. ம.இலெ. தங்கப்பா, சூரியதீபன், அந்தனி(இலக்கியம் நிகழ்ச்சி)
நான், சூரியதீபன், அந்தனி
சீனு.தமிழ்மணி, சூரியதீபன், அந்தனி

கருத்துகள் இல்லை: