நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 2 மார்ச், 2010

புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்


பங்கேற்பாளர்கள்

புதுச்சேரியின் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்று தாகூர் கலைக்கல்லூரி.இங்குப் பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பலரும் என் கெழுதகை நண்பர்கள்.பல திங்களாகத் தங்கள் கல்லூரிக்கு வந்து தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து பல வேலைகளில் இருந்ததால் காலம் கனியாமல் இருந்தது.இன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன்.பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட சற்றொப்ப 100 பேர் கணிப்பொறித்துறை அரங்கில் கூடித் தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.

தமிழும் இணையமும் என்ற இந்தச் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்தவர் பேராசிரியர் நா.வச்ரவேலு அவர்களாவார்.அவரின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுந்தர.கலிவரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரிப் பேராசிரியர் ப.கொழந்தைசாமி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் பாபுராவ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.புதுச்சேரி மொழியியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சுதர்சன் அவர்கள் இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

அகண்டவரிசை இணைய இணைப்பு அரங்கில் இல்லாததால் நான் என் மடிக்கணினியில் இயங்கும் "மொபைல் மோடம்" கொண்டு சென்றேன்.மடிக்கணினியில் இணைய இணைப்புக்கு முயன்றபொழுது இணைப்பு கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் நண்பர்கள் வானூர்தி நிலையம் அருகிலேயே இருப்பதால் இங்கு எந்தக் கோபுரமும் இல்லை என்றனர்.இணைய இணைப்பு இல்லை என்றால் பயன்படுத்த காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) வைத்திருந்தேன்.ஓரளவு அவற்றைக்கொண்டு தமிழ் இணையத்தின் பலவகைப் பயன்பாடுகளையும் விளக்கிவிடமுடியும்.சிறப்பாகத் தயாரித்து வைத்திருந்த பல செய்திகள் கொண்ட என் "பவர்பாயிண்டு" உதவியது. இடையூறு இல்லாமல் ஒரு மணி நேரம் தமிழ் இணையத்தை அவர்கள் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் விளக்கினேன்.பலருக்கும் இது ஒரு புதுத்துறையாக இருந்திருக்கும்.என் உரைக்குப் பேராசிரியர் மணி அவர்கள் உதவியாக இருந்து இணைப்புகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தமாகக் கவனித்துக்கொண்டார்.

தமிழ்த் தட்டச்சில் தொடங்கினேன்.தமிழ் 99 விசைப் பலகை பற்றி விளக்கினேன். இ.கலப்பை, என்.எச்.எம்.எழுதி,மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,நூலகம்,சுரதா தளம்,பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி,விக்கிப்பீடியா,விக்சனரி,இணைய இதழ்கள்,நூலகங்கள்,உரை-பேச்சு,வலைப்பூ, மின்னஞ்சல் என இணையத்தின் முதன்மையான பல செய்திகளை எடுத்துரைத்தேன். தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி பற்றிய அறிமுகம் செய்தேன்.


முனைவர் சுதர்சனன்,நான்,முனைவர் பாபுராவ்


பங்கேற்ற பேராசிரியர்கள்,மாணவர்கள்


பங்கேற்பாளர்கள்


இ.கலப்பையை விளக்கும் நான்

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி