நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 1 ஜனவரி, 2010

பொருநை இலக்கியவட்டம் நினைவுகள்...

  முனைவர் நா.கணேசன் அவர்கள் சென்றமுறை தமிழகம் வந்துபொழுது திருநெல்வேலியில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாள் (07,08.06.2008) அவருடன் தங்கியிருந்தாலும் பல பட்டறிவுகள் எனக்கு ஏற்பட்டன. பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்றோம்.பல அன்பர்களைக் கண்டோம். பல நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்றோம். அவை பற்றியெல்லாம் முன்பே எழுதியுள்ளேன். அங்கே எழுதாத நினைவு ஒன்று அடிக்கடி எழும்பி, அமிழும். அது பொருநை இலக்கியவட்டம் திரு.தளவாய் இராமசாமி அவர்களைச் சந்தித்த ஒரு சந்திப்பே ஆகும். என் பணி நெருக்கடியால் எழுதாமல் இருந்தேன். எனினும் அவர்களின் நினைவு எனக்கு இல்லாமல் இல்லை.

  முன்பே திட்டமிட்டபடி நாங்கள் திருநெல்வேலி, மேலரத வீதியில் இருக்கும் சித்தர்தெருவில் உள்ள எண் 27 வீட்டில் அனைவரும் ஒன்று கூடினோம் (08.06.2008). இலக்கியம் பற்றிய ஆர்வமுடைய பல பெரியவர்கள் ஒன்றுகூடி எங்களை வரவேற்றனர். அரசர் குடும்பத்தைச் சேர்ந்த தோற்றம்கொண்டவராக ஐயா தளவாய் அவர்கள் எங்களை அன்பொழுக வரவேற்றார். நா.கணசனார் அவர்கள் தமிழ் இணையம் பற்றி மிகச் சிறாப்பான ஓர் உரை வழங்கினார். பகலுணவு முடித்தோம். குமுதம் இதழுக்கு நேர்காணல் செய்ய செய்தியாளர் அவர்கள் வந்திருந்தார். உரையாடினோம். அந்த நாளில்தான் பொருநை இலக்கியவட்டம் பற்றியும் தளவாய் அவர்களின் இலக்கிய மரபுரிமை பற்றியும் அறிந்தோம்.

  நெல்லையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பல அமைப்புகள் உள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று பொருநை இலக்கியவட்டம் என்ற அமைப்பு. இது 1984 ,நவம்பர் மாதம் 4 ஆம் நாள் தொடங்கப்பெற்ற அமைப்பாகும். ஞாயிற்றுக் கிழமைதோறும் இலக்கியம் பற்றியும், இசை பற்றியும், சமயம் பற்றியும் இங்குப் பொழிவுகள் நடக்கின்றன. மழை, இடி, சாவு, வாழ்வு எதன்பொருட்டும் இலக்கியச்சந்திப்பு தடைப்படவில்லை. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இலக்கிய வட்டம் கூடியுள்ளது. நிகழ்வு நடக்கும் வீட்டில் ஏதேனும் துன்பியல் நிகழ்வுகள் நடந்தாலும் நண்பர்களின் வீட்டில் இலக்கியக்கூடல் நடந்துள்ளது. மேலும் ஒரே இடத்தில் இல்லாமல் சுற்றுச்செலவாக அண்மையில் உள்ள திருக்குற்றாலம், செப்பறை போன்ற புகழ்பெற்ற ஊர்களிலும் இலக்கியக் கூடலை நிகழ்த்தியுள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிகழ்ந்துள்ள பனிமலைச் சாதனை எனலாம்.

  பொருநை இலக்கியவட்டத்தில் நிகழ்வுகளில் தமிழகத்தின் மிகப்பெரும் அறிஞர்பெருமக்கள் உரையாற்றியுள்ளனர்.திருமுருக கிருபானந்தவாரியார், எம்.எசு.உதயமூர்த்தி, கோமல் சுவாமிநாதன், இளந்தேவன், பாலா போன்ற பலரும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

  இன்றும் தொடர்ப்பொழிவுகள் சமயநூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் சார்ந்த பொருண்மைகளில் நடந்தவண்ணம் உள்ளன. தளவாய் இராமசாமி ஐயா அவர்கள் புரவலராக இருந்து இதனை நடத்தி வருகிறார் திருவாளர்கள் அருணாசல காந்தி, செய்த்தலை மணியன், ஓவியர் பொன். வள்ளிநாயகம், பேரா. கட்டளைக் கைலாசம் உள்ளிட்டவர்கள் இலக்கியவட்ட வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

  இலக்கியவட்ட நிகழ்வுகளை நிறைவுசெய்துகொண்டு நாங்கள் திருவாளர் குட்டி ஐயா அவர்களின் அரண்மனைபோன்ற இல்லத்துக்குச் சென்றோம். அவரும் ஓர்அரசர் போன்ற தோற்றமும் மிடுக்கான குரல்வளமும் கொண்டு விளங்கினார். அவர்களின் குடும்பம் சார்ந்தவர்கள் அயல்நாடுகளில் இருப்பதாக உரையாடலில் அறிந்தேன்.அந்த வீடு மிகப்பெரிய அரண்மனை போன்ற தோற்றம் கொண்டது. எங்கள் வீட்டு நினைவு எனக்கு வந்தது. வீட்டின் வனப்பு எண்ணி மகிழ்ந்தேன். அவரின் கலையுணர்வும் எனக்குப் புலப்பட்டது. திரு.குட்டி ஐயா அவர்களின் இயற்பெயர் அடியேன் மறந்தேன். அவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் நெருங்கிய நண்பர் என்று அறிந்தேன். அவரிடம் உரையாடி மீண்டோம்.

  வரும் வழியில் திரு.தி.க.சி அவர்களையும் அவர் இல்லம் கண்டு மகிழ்ந்தோம். அன்பொழுக எங்களை வரவேற்றார். அவருடன் புகழ்பெற்ற எழுத்தாளர் (கழனியூரன் என நினைவு) அருகில் இருந்தார். யாவரும் இலக்கிய இன்பம் பரிமாறி மாலையில் முனைவர் தொ.பரமசிவன் ஐயா அவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்குப் புறப்பட்டோம்...

2 கருத்துகள்:

குப்பன்.யாஹூ சொன்னது…

Kutty's name is Shanmuga Sundaram.

குப்பன்.யாஹூ சொன்னது…

sorry shanmuga chidambara, contested MP election nellai constituency from MDMK and lost.