நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 நவம்பர், 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்,திருநெல்வேலி

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி, ஞாயிறு) கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.

பதிவுக்கட்டணம்

பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00

கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.

இலக்கியவியல், இலக்கணவியல், சமயவியல், பண்பாட்டியல் / வரலாற்றியல் இக்கால இலக்கியம், பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009

பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு, நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும். நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.

தொடர்பு முகவரி:
முனைவர் மு.மணிவேல்
செயலர்,இ.ப.த.மன்றம்,தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 020
செல்பேசி: 98655 34622

வெள்ளி, 27 நவம்பர், 2009

பாவலர் மாநி(மார்கிரேட் நிக்கோலசு)


பாவலர் மாநி

புதுவையில் வாழும் பாவலர்களுள் பாவலர் மாநி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.மரபுப்பாடல் எழுதும் பெண்பாவலர்களுள் குறிப்பிடத்தக்கவர்.முனைவர் இரா.திருமுருகன்,பாட்டறிஞர் புலவர் இலக்கியன்,புலவர் நாகி உள்ளிட்டவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக எழுதி வருபவர். இதுவரை துளியாய், தூறலாய்,புயலாய்,பூவாய்,பூங்காற்றாய்,புனலாய்,சுருக்குப்பை(துளிப்பா),பாவம் அவள்(சிறுகதை)உதிரிப்பூக்கள்(சிறுகதை),மரபுச்சாரல்,மழைச்சாரல் உள்ளிட்ட நூல்களை வழங்கியுள்ளார்.குறளாயிரம்,வண்ணத்துப்பூச்சிகள்(சிறுவர் பாடல்கள்) விரைவில் வெளிவர உள்ளன.

பாவலர் மாநி அவர்கள் சேலத்தில் 26.12.1948 இல் பிறந்தவர்.இளம் அறிவியல் படிப்பைக் கோவை நிர்மலா கல்லூரியில் படித்தவர்.கல்வியியல் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்.கிறித்தவப் பெண்கள் அமைப்புகளில் பலநிலைகளில் பணிபுரிந்தவர்.திராவிட இயக்கக்கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.இவர் கணவர் திரு.நிக்கோலசு அவர்கள் புதுச்சேரியில் சிறைத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல் எழுதுபவர்கள் குறைந்து வரும் இந்த வேளையில் அம்மா மாநி அவர்களின் பாட்டுப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

பாவலர் மாநி அவர்களின் முகவரி:
பாவலர் மாநி
141,இலப்போர்த் தெரு,
புதுச்சேரி- 605 001
செல்பேசி: 9787095578

புதன், 25 நவம்பர், 2009

உலகக் கணினித்தமிழ்க் கருத்தரங்கம்,தமிழ்மொழித்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை வருகிற 2010 பிப்ரவரி 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் கணினித்தமிழ் பற்றிய ஒரு ஆய்வுக் கருத்தரங்கை (International Semionar on Tamil Computing) நடத்தவுள்ளது.

தமிழ்மொழித்துறை கடந்த 10 ஆண்டுகளாகக் கணினித் தமிழில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. துறையில் மொழியியல் ஆய்வுப் பிரிவு(Linguistic Studies Unit) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. செயற்பாட்டு மொழியியல் ( Applied Linguistics) மற்றும் கணினிமொழியியலில் ( Computational Linguistics) முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவற்றிற்கான படிப்பை நடத்திவருகிறது. 15 -க்கும் மேற்பட்ட கணினி மொழியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுவருகிறார்கள். தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கும் கணினித் தமிழ்ப் பாடத்தை நடத்திவருகிறது.

ஒரு சிறந்த கணினிமொழியியல் ஆய்வுக்கூடம் ( Computer Assisted Language Technology Lab) அமைக்கப்பட்டுள்ளது. கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில்நுட்பம் சம்பந்தமாக ஏராளமான நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் உள்ளது. மின்னகராதி ( E-Dictionary) , உருபன் பகுப்பி ( Morphological Parser), தொடர் பகுப்பி ( Syntactic Parser) , கணினிவழித் தமிழ் பயிற்றல் போன்ற பல கணினித் தமிழ் மென்பொருள்களை உருவாக்கியுள்ளது.

இதுவரை மூன்று தேசிய அளவிலான கணினித்தமிழ்க் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெற இருப்பது நான்காவது கருத்தரங்கு ஆகும். 2010 சூன் இறுதியில் தமிழக அரசின் துணையுடன் உத்தமம் நடத்த உள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குச் சிறப்புசேர்க்கும் வகையில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கணினித் தமிழ் ஆய்வில் மட்டுமல்லாமல், கணினிமொழியியல் மற்றும் மொழித்தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர்களும் கட்டுரை அனுப்பலாம். பதிவுக்கட்டணம் கிடையாது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள், பிற நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழக விதிப்படி பயணப்படி, நாட்படி வழங்கப்படும். பிற ஆய்வாளர்களுக்கும் நிதிவசதிக்கேற்ப பயணப்படி வழங்கப்படலாம். வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க வரும் ஆய்வாளர்களுக்கு விடுதி, உணவு போன்ற உள்ளூர் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.

பங்கேற்க விரும்பும் அயல்நாட்டு அன்பர்கள் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் தங்கள் பங்கேற்பு பற்றி விவரம் அளித்தால், பிற ஏற்பாடுகளுக்கு உதவியாக அமையும். ஆய்வுக்கட்டுரை சுருக்கம் அளிக்க கடைசி நாள் 2009, திசம்பர் 15. முழுக்கட்டுரையையும் அனுப்ப இறுதி நாள் சனவரி 15.

தொடர்புக்கு:
முனைவர் ந. தெய்வ சுந்தரம்
பேராசிரியர் & தலைவர், தமிழ்மொழித்துறை
இயக்குநர், மொழியியல் ஆய்வுப்பிரிவு
சென்னைப் பல்கலைக்கழகம்
மெரினா வளாகம்
சென்னை 600 005
tamilcomput.seminar2010@gmail.com
ndsundaram@hotmail.com

நன்றி: பேராசிரியரின் மின்மடல்

வெள்ளி, 20 நவம்பர், 2009

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா எழுதிய சோளக்கொல்லைப் பொம்மை என்ற குழந்தைகளுக்கான பாடல் நூலின் வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற உள்ளது.

நாள்: 22.11.2009 ஞாயிறு
நேரம்: காலை 9 மணியளவில்
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடம்

நூல் வெளியீடு எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள்

நிகழ்ச்சியில் உருவா 100 விலை கொண்ட நூல் உருவா 80 விலைக்குக் கிடைக்கும்.

தொடர்புக்கு:
வானகப் பதிப்பகம்
7,11 ஆம் குறுக்கு,அவ்வை நகர்,
புதுச்சேரி-605 008
பேசி: +91 413 2252843

புதன், 18 நவம்பர், 2009

நினைவில்லம் திறப்பு சில படங்கள்...

 என் தந்தையார் கோ.சி.முருகேசன் அவர்களின் பெயரில் நினைவில்லம் திறக்கும் எண்ணம் பல மாதங்களுக்கு முன்பாகத் தோன்றி இன்று முழுமைபெற்றது.

 ஆம். எங்களின் முன்னோர்களால் சற்றொப்ப எண்பதாண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரின் தென்மேற்கில் இரண்டு கல் தொலைவில், இடைக்கட்டு என்ற ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்று கட்டப்பட்டது.அதற்கு முன்பு இடைக்கட்டு என்ற எங்கள் ஊரில் காளியம்மன்கோயில் அருகில் ஒரு பழைய வீடு இருந்தது.எம் முன்னோர்களுக்கு நில புலங்கள் மிகுதி. பொன்னேரி என்று இன்று அழைக்கப்படும் சோழகங்கம் முன்பு காடாக இருந்து, திருத்தப்பட்டு,நிலமாக இருந்தது. அதனை நிலமாகத் திருத்திப் பலவாண்டுகளாக எம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.

 இந்தியத் தன்னுரிமைக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நிலத்தை ஏரியாக்கும் பொழுது பல நூறு ஏக்கர் இருந்த எங்கள் நிலம் அரசுக்குக் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது. எம் முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் நேர் நின்று பேசும் ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் துரைத்தனத்துக்கு முன்பாக உழவுத்தொழில் மேற்கொண்ட இவர்களால் வாதிட்டு நிலங்களைத் தங்களுக்கு உரிமையானதாக ஆக்க முடியவில்லை.மிகவும் குறைந்த விலைக்கு நிலத்தை விற்றனர்.அவ்வாறு விற்ற தொகையும் சிலருக்குப் பாகம் பிரிக்காததால் ஆங்கிலேய அதிகாரிகள் வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்தனர். பங்கு பிரிந்த பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்து தந்திருந்தனர். ஆனால் கடைசி வரை பாகம் பிரியாமல் இருந்தது. அந்தப் பணம் என்ன ஆனது? எந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் யாவும் தெரியவில்லை.

 கோட்டை கட்டி நெல் குவித்த எம் முன்னோர்கள் வாழ்ந்த வீடு "கோட்டையான் வீடு" என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த வீடு கட்டுவதற்குப் பல ஊர்களிலிருந்து மரம் வந்துள்ளது. 64 உத்திரம் அமைந்த வீடு. தேக்கு மரத்தால் அமைந்த சரங்கள் உள்ளன. ஓடு கவிழ்க்கும் சட்டம் தேக்குமரத்தில் இழைக்கப்படிருக்கும். பாலை மரத்தால் அமைந்த ஒத்த அளவுள்ள தூண்கள் எம் வீட்டில் இன்றும் காணப்படும். இந்த மரங்கள் 5 கல் அருகில் உள்ள பெரியவளையம் என்ற ஊரிலிருந்து வந்துள்ளன. அந்த மரம் இருந்த கொல்லைகள் இன்றும் பாலைமரத்துக் கொல்லை எனப்படுகிறது.

  மரம் விற்ற அந்த நில உரிமையாளரை அவர் வழி வந்தவர்கள் இன்றும் ஏசித் தீர்ப்பது உண்டு. "கோட்டையான் வீட்டுக்கு மரத்தை வெட்டி வித்துப்புட்டு எங்களுக்கு ஒரு வீடு கட்டவில்லையே" என்று ஏசுவார்களாம்.

 பாலை மரத்தில் சிறு கைத்தடிகள் செய்து வைத்திருந்தனராம். அந்தக் கைத்தடிகள் இன்றும் இருப்பில் இருப்பதாக அறிந்தேன். சில கைத்தடிகளைக் காவலர்கள் தங்கள் பாதுகாப்புக்கு எடுத்துச்சென்றதாகவும் அறிந்தேன். அந்த மரம் விளைந்த இடங்களை அடையளம் காட்டும் ஆட்கள் உண்டு என்று அறிந்தேன். அந்த அளவு அந்த வீடு கட்டப்பட்ட பல ஆவணங்களையும் தொகுக்கும் முயற்சியில் இருந்த நான் பலருக்கும் பங்குடைய அந்த வீட்டை விலைக்கு வாங்கிப் புதுப்பித்துப் பழைமை மாறாமல் காக்கும் பிடிவாதத்துடன் செயல்பட்டேன்.

 ஓராண்டாகத் தீவிரம் கொண்ட என் முயற்சி நிறைவுபெற்றது. ஆம். அந்த வீட்டைப் புதுப்பித்து இன்று என் தந்தையாரின் நினைவு நாளில் நினைவில்லமாகத் திறந்தோம். இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் ஐயாவால் இன்று வரமுடியா நிலை சொல்லிப் பின்னொரு நாள் வந்து அந்த இல்லில் ஒருநாள் தங்கி வருவதாக உறுதியுரைத்தார்கள். அந்த வீட்டின் மேல் துணைவேந்தர் பொற்கோ ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய ஈடுபாடு உண்டு.என் விருப்பம் அறிந்து என் முயற்சியை ஐயா அவர்கள் ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியுடையேன்.

 மிகப்பெரிய இடிபாடுகளுக்கு இடையில் இருந்த வீட்டைப் புதுப்பித்து மீட்டுள்ளோம்.இனியும் அழகுப்படுத்தும் சில பணிகள் உள்ளன.வண்ணம் பூசவேண்டும். சில கூரை அமைப்புகள் அமைக்க வேண்டும்.யாவும் முடிந்த பிறகு எம் ஊரில் நடைபெறும் நல்ல நிகழ்வுகள், இலக்கியச் சந்திப்புகள், அயல்நாட்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா வரும் அன்பர்கள் தங்கிச்செல்லும் வகையில் இதனை இன்னும் சில மாதங்களில் பல ஏந்துகளுடன் வடிவமைப்போம்.

இது நிற்க.

 இன்று(18.11.2009) காலை 10.30 மணியளவில் நினைவில்லம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள் ஊர்ப்பெரியவர்கள், நண்பர்கள் என நூற்றைம்பதுபேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு என் சிறிய தந்தையாரும் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். என் தமிழாசிரியர் திரு.கணேசமூர்த்தி ஐயா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். சனதா பல்பொருள் அங்காடி உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். குருவாலப்பர் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கி. முல்லைநாதன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார்கள்.

 என் பாட்டனார் திரு.காசிநாதன் அவர்களும் (அகவை 90) என் பெரிய தந்தையார் திரு.சி.சாமிதுரை (அகவை 89) அவர்களும் நினைவில்லக் கல்வெட்டைத் திறந்துவைத்தனர். திரு.சோ.குலோத்துங்கன் (வாழ்நாள் காப்பீட்டு அதிகாரி), திரு.சிறீகாந்து (தமிழாசிரியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கட்டடப்பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் இன்னடிசில் வழங்கப்பட்டது. தந்தையாரின் நினைவுகளை ஏந்தியபடி புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


புதுப்பிக்கப்பட்ட இல்ல முகப்பு


திரு.காசிநாதன் அவர்கள் கல்வெட்டு திறத்தல்


கல்வெட்டு திறக்கும் உறவினர்கள்


நினைவில்லத் திறப்புக்கு வந்திருந்த உறவினர்கள்,நண்பர்கள்


செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் என் சிறிய தந்தையருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமையுரையாற்றுதல்


ஊ.ம.தலைவர் திரு.முல்லைநாதன் அவர்களுக்குச் சிறப்பு செய்தல்


அழகுபடுத்தும் கைகளுக்குக் காத்திருக்கும் கலைநயம்மிக்க சுவர்


எங்களின் வீடு (பழைய படம்)

திங்கள், 16 நவம்பர், 2009

எங்கள் வீடு எழுந்து நின்றது!



எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீடு கட்டப்பட்டது.என் தந்தையாரின் பாட்டனார் திரு.கோவிந்தனார் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட வீடு. என் தந்தையார் காலம் வரை சிறப்பாக இருந்தது.மிகப்பெரிய மக்கள் கூட்டம் வாழ்ந்த அந்த வீடு எனக்கு நினைவு தெரிந்த நாளில் இடியத் தொடங்கியது.கோவிந்தனார் அவர்களுக்கு இரு மனைவியர்.முதல் தாரத்துப் பிள்ளைகள் என் பாட்டனார் திரு.சிங்காரவேல் அவர்களும் திரு,பூராசாமி அவர்களும் ஆவர்.இரண்டாம் தாரத்தில் தோன்றியவர்கள் திரு.கந்தசாமி திரு.தருமலிங்கம் அவர்களும் ஆவர்.ஒவ்வொருவருக்கும் இரண்டு தாரங்கள் என்று பின்னாளிலும் மனைவிமார்கள் மிகுதி.எனவே மக்கட் செல்வத்திற்குக் குறைவில்லை.எங்கள் பாட்டி ஒருவர் பன்னிரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்.இப்படி மிகப்பெரிய குடும்பம் பின்னாளில் அனைத்து நிலைகளிலும் நலிந்தது.

எங்கள் வீடு இடிந்து விழுந்தது.பங்கு பிரியாமல் இருந்ததால் யாராலும் அதனைப் புதுப்பிக்க முடியாமல் போனது.என் தந்தையார் இறந்த சூழலில் ஊரில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சூழல் அமைந்தது.அப்பொழுது வீடு புதுப்பித்தல் தொடர்பாகப் பேச்சு எழுந்தது. ஏறத்தாழ 35 ஆண்டுகளாக இந்தப் பேச்சு அலை அடிக்கடி எழும்பி இல்லாமல் போகும்.அப்படியே அந்தச் சுற்றுப் பேச்சும் நல்ல முடிவு எட்டாமல் முறிந்தது.

மீண்டும் ஒரு சூழலில் பேசி முடிப்பது என முடிவு செய்து ஒன்று கூடினோம்.ஆசாரியார் ஒருவர் வந்து விலை மதிப்பீடு செய்தார்.நியாயமான விலையாக அது இருந்தது.என்றாலும் அனைவரும் விலையை உயர்த்தியே பேசினோம்.எங்களுக்குள் ஒரு முடிவு செய்ய ஊர்ப்பெரியோர்கள் நினைத்தனர்.அதாவது இந்த வீடு பல பாகங்களாக இருப்பதால் யாராலும் சீர் செய்யமுடியவில்லை.எனவே பொதுவாக விலை பேசி ஒருவர் மட்டும் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தனர்.அதாவது ஒருவரிடம் வீடு,மனையைக் கொடுத்துப்பணம் பெற்றுகொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறி வேறு வீடுகள் கட்டிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி என்னை இந்த வீட்டை வாங்கிக்கொள்ள ஊரினர் வேண்டினர்.நானும் இசைந்தேன்.இங்குதான் கவனிக்க வேண்டும்.நான் பணியில் இருப்பதால் உறவினர் அனைவரும் கூடுதல் விலைக்கு என்னிடம் விற்க முனைந்தனர்.ஒரு வழியாக விலை பேசி என் பெயருக்கு வீடு,மனை யாவும் பதிவு செய்யப்பெற்றது.

வீடு வாங்கிய உடன் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.அதன்படி பொறியாளர் நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று காட்டினேன்.யாரும் அதனைப் புதுப்பிக்க ஒப்பவில்லை.இடித்துத்தள்ளிவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அறிவுரை கூறினர்.அந்த அளவு பழையவீடு. சுவர் இடிந்து பாம்புகள்,பிற நச்சுயிரிகளின் கூடாரமாக இருந்தது.முதலில் இடிந்த பகுதிகளை 23.07.2009 முதல் இடித்து வெளியேற்றினோம்.

தருமபுரி பொறியாளர் நண்பர் திரு.நரசிம்மன் ஒருமுறை வந்து பார்த்து சில அறிவுரைகளை வழங்கினார்.உள்ளூர் நண்பர்களின் அறிவுரைப்படி 27.07.2009 இல் கால்கோள் நடந்தது.16.08.2009 முதல் கம்பி வேலை நடந்தது.இடிப்பதும் கட்டுவதும் எனப் பணி விரைவாக இருந்தாலும் மிகப்பெரிய வீட்டை இடித்து பழைமை மாறாமல் மீண்டும் கட்டுவது என்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது.இதில் பலநாள் கட்டடம் கட்டும் கொத்தனார்,ஆசாரியார்,ஓடு மாத்துபவர்களின் ஒத்துழைப்பின்மை,மழை,என் பணிச்சூழல் எனக் காலம் நீண்டு ஒரளவு நிறைவு பெற்ற பொழுது என் தந்தையார் அவர்களின் நினைவு நாள் நெருங்கியது நினைவுக்கு வந்தது.

எனவே என் தந்தையாரின் நினைவு நாளில் அவரின் காலத்தில் கட்டி முடிக்கப்பெறாத வீட்டை எங்கள் உறவினர்கள்,நண்பர்களின் உதவியால் மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிக்கு வெற்றி கிடைக்க உள்ளது.ஆம்.நாளை மறுநாள் 18.11.2009 எங்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.முனைவர் பொற்கோ அவர்களின் திருக்கையால் திறக்கப்பட உள்ள எங்கள் இல்லத் திறப்பு நிகழ்ச்சியை இருந்த இடத்திலிருந்து வாழ்த்துங்கள்.இது பற்றி முன்பும் எழுதினேன். விரிவாகப் பின்பும் எழுதுவேன்.


இடிபாடுகளில் எங்கள் வீடு


பேணுதலின்றி ஆடுகள் அடைந்துகிடக்கும் திண்ணை


இடித்துக்கிடக்கும் காட்சி


புதிய சுவர்கள் உயர்தல்


புதிய பொலிவுக்கு முந்திய காட்சி

சனி, 14 நவம்பர், 2009

பண்பறிந்து ஆற்றுக...

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்.அதன் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் வாழ்வில் பின்பற்றத்தக்கன.திருக்குறள் மேலோட்டமாக நோக்கும்பொழுது ஒரு பொருளைத் தெற்றென வெளிப்படுத்துவது போலவே ஆழ்ந்து நோக்கும்பொழுது ஆழ்ந்தபொருள் தரும் சிறப்பிற்கு உரியது.நான் வாழ்வில் மிகுதியாக எண்ணி எண்ணி வியந்த குறட்பா இதுவாகத்தான் இருக்கும்.அது இது:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை(469)

திருவள்ளுவர் இக்குறளை யாது காரணமாக இயற்றியிருப்பினும் உரையாசிரியர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் பொருளதிகாரப் பகுப்பில் அரசியல் என்னும் இயல் வகைக்குள் அடக்கி உரை வரைந்துள்ளனர்.அரசனுக்கு அறிவுரை கூறும் முகமாக அமையும் அரசியல் பகுதியில் இக்குறள் இருந்து, அரசனுக்கு உரியதாகக் காட்டப்பட்டாலும் உலகியல் மாந்தர் அனைவருக்கும் பொதுப்படையாக இந்தக் குறட்பா பொருந்துவதாக உள்ளது.இந்தக் குறட்பா வழியாகத் திருவள்ளுவ ஆசான் மாந்தர்களுடன் இணைந்து வாழும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், உறவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எவ்வளவு எச்சரிக்கையாக நாம் இருந்தாலும் நமக்குப் பகை,தொல்லை,உறவு அறுதல் ஏற்படுவது மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறை தெரியாததால்தான் ஆகும்.எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்தக் குறட்பா கருத்தை வாழ்வில் ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பர்.

வாழ்க்கையில் அதிர்ச்சியையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தும் பல்வேறு சூழல்களில் ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும் குறட்பாவாக இது இருக்கின்றது.இந்தக் குறட்பாவுக்கு உரையாசிரியர்களும் தமிழறிஞர்களும் பல்வேறு விளக்கங்களை வரைந்துள்ளனர். தேவைப்படுவோர் அந்த அந்த உரையாசிரியர்கள் வரைந்த உரைப் பகுதிகளைக் கற்றுச் சுவைக்கலாம்.

பரிமேலழகர் தம் உரையில் " வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்.அவரவர் குணங்களையாராய்ந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்" என்பார்.

நான்றான வுபாயமாவது-கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலுமாம்.அவை யாவர் கண்ணும் இனியாவதற் சிறப்புடைமையின்,உம்மை சிறப்பும்மை. அவற்றை அவரவர் பண்பறிந்தாற் றாமையாவது: அவற்றிற்கு உரியரல்லாதார்கண்ணே செய்தல்.தவறு-அவ்வினை முடியாமை.

நல்ல செயல்களைச் செய்தாலும்(கொடுத்தல்,இன்சொல் சொல்லல்) அவற்றை அவரவர் பண்பு அறிந்து செய்ய வேண்டும்.அவ்வாறு பண்பறியாமல் செய்தால் அச்செயல் நன்மைக்குப் பதிலாகத் தீமையை தந்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் எனவும்,'பண்பெனப்படுவது தன் கிளை அறிந்து ஒழுகல்'(கலி.133) எனவும் பிற நூலார் குறிப்பர்.

உலக வாழ்வில் பன்முகத்தன்மை கொண்ட மாந்தர்களை நாம் காண்கின்றோம்.பிறர் வளர்ச்சிக்கு உதவுவதைத் தம் வாழ்நாளாகக் கொண்ட உயர் மாந்தர்,வாய்ப்புக்கு ஏற்ப உதவுவோர்,கால,இட நெருக்கடியால் உதவுவோர்,இன்சொல் கூறுவோர்.கடுஞ்சொல் கூறுவோர், அளவே பேசுவோர்,பேச மறுப்போர்,பயனில உதிர்க்கும் பண்பினர், காலந்தாழ்த்திச் செய்வோர், காலத்தே செய்வோர்,காலம் கடந்தும் செய்யாது இருப்போர்,காலம் கடந்தும் செயலால் வாழ்வோர் எனப் பன்முகச் செயல்மாந்தர்களை நாம் காண்கின்றோம்.இவர்களின் இயல்பறிந்து பழகும்பொழுதே அவர்களுக்கும் நமக்குமான உறவு வளர்பிறையாகும் அல்லது தேயும்.இத்தகு பன்முக வாழ்வியல் மாந்தர்களிடம் நாம் பழகும் சூழல் இயந்திரமயமான உலகில் அன்றாடம் இருந்துகொண்டுதான் உள்ளது.வேக உலகைப் புறுக்கணித்து நாம் தனித்து வாழ்ந்துவிட முடியாது.

நம் இயல்புக்கும் தகுதிக்கும் பொருத்தமான சில வினைகளை ஆற்றும்பொழுது மாந்தர்களின் உளக்குறிப்பு,மனநிலை,விருப்பு,வெறுப்புகள்,கொள்கைகள்,உற்றார் உறவினர் அறிந்து ஆற்ற வேண்டியுள்ளது.அவ்வாறு பன்முகத் தன்மைகளையும் ஆராய்ந்து ஒருவினையை ஆற்றினால்தான் நாம் மேற்கொண்ட செயல் நிறைவேறும்.இல்லையேல் செயல் பாழ்படும். எதிர்ப்பு மேலோங்கும்.வளர்ச்சி வீணாகும்.பகை உணர்வு தோன்றும்.உட்பகை வளரும்.எனவே வினையாற்றுவோர் யாராக இருப்பினும் நல்ல செயல்களில் நாம் ஈடுபட்டாலும் பயனாளியின் இயல்பும்,பண்பும் அறிந்தும் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

'நன்றாற் றலுள்ளும்' என்றதால் நன்மையே செய்வதாக இருந்தாலும்,நல்லதையே செய்வதாக இருந்தாலும் என்று பொருள்கொள்ள வேண்டும்.'தவறுண்டு' என்றமையால் தவறாக அது போய் முடியும் என்க.'அவரவர் பண்பு' என்றமையால் ஒவ்வொருவருக்கும் பண்பு வேறுபடும் என்று நுட்பமாகப் பதிவு செய்கிறார்.'வினைவகையால் வேறுபடும் மாந்தர் பலர்' என்றும், 'குலத்தின்கண் ஐயப்படும்' என்றும் வேறு இடங்களில் குறளாசான் குறிப்பிடுகின்றமையும் ஈண்டு கவனத்தில் கொள்ளத்தக்கன.

தவத்துறையில் இருக்கும் ஒரு முனிவரைக் காண நேர்ந்தால் வீழ்ந்து வணங்குவதையும், வாய்பொத்தி நிற்பதையும்,முன்னோக்கி நின்று உரையாடிய பின், பின்னோக்கி வருவதையும் விரும்புவர்.அவர் கூறும் அனைத்துக்கும் உடன்பாட்டில் விடை சொல்வதையே விரும்புவர்.ஆம்,அப்படியே ஆகட்டும் என்று உரைப்பதையே விரும்புவர்.

அரசியல் தலைவர்கள் தம் தொண்டர்கள் தம் கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புவர்.வினா எழுப்புவதை எந்த நாளும் விரும்பமாட்டார்கள்.இதனால் பல கட்சிகள் உடைந்த கதையுண்டு. ஆசிரியர்கள் தங்களிடம் பயில்வோர் சித்திரப்பாவையாக இருப்பதை விரும்புவர்.கணவன் மனைவி தம் சொல்லுக்குக் கீழ்ப்படிவதை விரும்புகிறான்.மனைவி தாம் விரும்பும் வண்ணம் கணவன் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறாள்.அதிகாரிகள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் எதிர்த்துப் பேசாதவர்களாகவும் சொல்வதைச் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவும் உள்ளனர்.இவை விரும்பும் குணங்கள் என்பதிலும் மரபுகளாக இருக்கின்றன.இந்த மரபுகளை மீறும்பொழுதே உறவில் விரிவு ஏற்படுகின்றன.எனவே சமூகத்தில் காலங்காலமாக இருக்கும் மரபுகளை மீறாமல் இருக்கும் பொழுது சிக்கல்கள் தோன்றாமல் இருப்பதால் மரபுகளை அறிவது தேவையாக உள்ளது.எனவே வினாயாற்றும் பொழுது மரபறிதலும் பண்பறிதலும் தேவையாக உள்ளது.பண்பு, மரபு அறியாமல் செய்யும் எந்த வினையும் முற்றுப்பெறுவதில்லை.எனவேதான் ஆளுமை வளர்ச்சியில்,முன்னேற நினைக்கும் மாந்தர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது பன்முகப் பண்புகளை ஏற்றிக் கூறுவர். அக்கூறுகள் முழுமை பெற்றால்தான் வெற்றி ஈட்டும் மாந்தனாக மலரமுடியும்.


ஆளுமை வளர்ச்சியில் பன்முகக்கூறுகள் உண்டென அத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுவது உண்டு.அவையாவன: தோற்றப்பொலிவு,கால மேலாண்மை,இட மேலாண்மை,இன்சொல் கூறல்,உடன்பட்டு மொழிதல், சிறப்பினைப் பேசல்,குறைகளைச் சுட்டாமை,மரபறிதல் என்பன அக்கூறுகளுள் சிலவாம்."பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து" என்பார் குமரகுருபரர்.

இன்றைய ஆளுமை வளர்ச்சித்துறைக்கு உகந்தனவான 'அவரவர் பண்பறியும்' குணத்தைப் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பதிவு செய்துள்ளமை வியப்பளிக்கின்றது. உலகியல் மாந்தர்களுடன் பல நாளும் பழகிய பின்னரே இது போன்ற பட்டறிவுகள் வள்ளுவருக்குத் தோன்றியிருக்கக்கூடும்.எனவே பிறரின் பண்பறிந்து பழகிய திருவள்ளுவர் வழியில் நாமும் பழகி உலகியல் சிக்கலில் சிக்காமல் இருப்போம்.வாழ்வை வளமாக்ககிக் கொள்வோம்.உள்ளத்தில் அமைதி நிலவ இந்தக் குறட்பா உதவும் என்றும் பண்பால் வேறுபட்ட மக்களே உலகில் மிகுதி என்றும் முடிவுக்கு வருவோம்.

அந்தமான் திருக்குறள் கருத்தரங்க மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை(நவம்பர் 2009)

வியாழன், 12 நவம்பர், 2009

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள்


முனைவர் ச.சம்பந்தமூர்த்தி

தோட்டக்கலை அறிஞர் ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 1936 அக்டோபர் 11 இல் பிறந்தவர். பெற்றோர் ந.சதாசிவம், சானகி அம்மாள். தொடக்கக் கல்வியைப் பொன்பரப்பியில் முடித்த இவர் பெண்ணாடத்தில் உயர்நிலைக்கல்வி பயின்றவர். திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் இடைநிலை வகுப்பு(இண்டர்மீடியட்) முடித்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலையில் முதுநிலை வரை பயின்றவர். தம் பணிக்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வைக் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செய்தவர். ”நில சம்பங்கியில் சடுதி மாற்றம்” என்பது இவர்தம் ஆய்வுத்தலைப்பாகும். 38 ஆண்டுகள் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்த பட்டறிவு உடையவர். தோட்டக்கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பல முறை வெளிநாடுகளுக்கு ஆய்வின் பொருட்டு சென்று வந்த பட்டறிவு உடையவர். அவ்வகையில் செர்மனி, இங்கிலாந்து, ஆத்திரேலியா, இசுரேல், இத்தாலி, ஆலந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரைந்தவர். வீட்டினுள் தோட்டம், உடல் நலம் உங்கள் கையில் என்ற தலைப்பில் இரு நூல்கள் வெளிவந்துள்ளன.

உடல் நலம் உங்கள் கையில் நூல் முகப்பு

இந்தியாவின் மிகப்பெரிய உரோசாத் தோட்டமான உதகை உரோசாத் தோட்டத்தை உருவாக்கியவர்.

ஆறு மாதத்தில் காய்க்கக்கூடிய செடிமுருங்கை (பெரியகுளம்1) என்ற இரகத்தை உருவாக்கியவர். இதன் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ஒரிசா உள்ளிட்ட மாநில உழவர்கள் இந்த இரகத்தைப் பயன்படுத்திப் பயன்பெற்றுள்ளனர்.

ஒட்டுப்புளி (பெரியகுளம் 1) என்னும் புளி இரகத்தை உருவாக்கியவர். இது நான்காண்டுகளுக்குள் காய்ப்புக்கு வந்துவிடும்.


மலரியல் துறை, மூலிகைப் பயிர்த் துறையில் நல்ல ஈடுபாடு உடையவர்.
மலர்களிலிருந்து வாசனைப் பொருள் தயாரிக்கும் தொழில் பெருகுவதற்குப் பெரிதும் உதவி செய்தவர்.

பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கு இவரின் பங்களிப்பு மிகுதி. மக்கள் தொலைக்காட்சியில் வேளாண் நிகழ்ச்சிகளை இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பாளராக இருந்து நடத்தியவர்.

விவசாய முன்னேற்றத்திற்காக அமைக்கப்பெற்ற அரசின் பல்வேறு மேல்நிலைக் குழுக்களில் இடம்பெற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியவர்.

பயிற்றுவித்தலிலும் ஆய்விலும் பணிக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய ச.சம்பந்தமூர்த்தி அவர்கள் தற்பொழுது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.

முனைவர் ச.சம்பந்தமூர்த்தி
40,நான்காவது குறுக்குச்சாலை,
இரண்டாம் முதன்மைத்தெரு,
மூகாம்பிகை நகர்,
புதுச்சேரி-605 004
செல்பேசி: 9443254543

சனி, 7 நவம்பர், 2009

அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு,திருக்குறள் கருத்தரங்கம் சில படங்கள்


அந்தமானில் திருவள்ளுவர் சிலையைத் திறந்த அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்ட தமிழன்பர்கள்



மாண்புமிகு நடுவண் இணையமைச்சர் நெப்போலியன் அவர்கள் எனக்குப் பாராட்டிச் சான்று வழங்கும் காட்சி."இவன் இணையத்தமிழறிஞன்" என்று அமைச்சருக்கு என்னை அறிமுகம் செய்யும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை. நடராசன், மற்றும் அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்கள்



அந்தமான் திருக்குறள் விழாவில் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன்,அண்ணாச்சி வி.சி.பி.சந்தோசம் அவர்களுக்கு நடுவில் மு.இளங்கோவன்



அந்தமான் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடுவண் இணைஅமைச்சர்
மாண்புமிகு நெப்போலியன் அவர்களிடம் தம் நூல்களை வழங்கி மகிழும் மு.இளங்கோவன்


அந்தமான் தமிழர் சங்கக் கட்டடம் அடிக்கல்


அந்தமான் தமிழர் சங்கக்கட்டடம்


செல்லுலர் சிறைச்சாலையின் ஒரு பகுதி


ஔவையார் அவர்கள் ரோசுத்தோட்டத்தில்(அந்தமான்)தமிழ், 
தமிழர் பற்றி எனக்கு வகுப்பெடுத்தல்



குமரி அனந்தன் அவர்களுடன் செல்லுலார் சிறைச்சாலையின் வளாகத்தில் நான்



செல்லுலார் சிறைச்சாலையில் குமரிஅனந்தன், ஔவை நடராசன் ஆகியோருடன் மு.இ.


ஆற்றல் மாந்தர் அந்தோணிமுத்து,ஔவை,அம்மாவுடன் நான்


அந்தமான் தீவு ஒன்றில் மு.இ.

அந்தமான் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் திறந்து வைத்தார்...

அந்தமான் தமிழர் சங்கமும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து அந்தமான் தலைநிகர் போர்ட்டு பிளேயரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவையும், திருக்குறள் கருத்தரங்கத்தையும் நவம்பர் 6,7,8 ஆகிய நாள்களில் நடத்துகின்றன. இன்று மாலை நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலையை நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் திறந்து வைத்தார். மேலும் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநாட்டு மலரினை அமைச்சர் நெப்போலியன் வெளியிட அந்தமான் பாராளுமன்ற உறுப்பினர் பிட்னு பதே இராய் பெற்றுக்கொண்டார். அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் போசராசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் இலக்கிய உரையாற்றிக் கொண்டுள்ளார். நிறைவில் அமைச்சர் உரையாற்றுவார்.

அந்தமான் திருக்குறள் விழா இரண்டாம்நாள் நிகழ்வு தொடங்கியது…

அந்தமான் திருக்குறள் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு காலை 10 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.முதல் நிகழ்வாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை.நடராசன் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.

திருவள்ளுவர் வலியுற்றுத்துவது சமூக ஒழுக்கமா? தனிமனித ஒழுக்கமா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

பேராசிரியர்கள் உலகநாயகி அவர்களின் தலைமையில் முனைவர் அரங்க.பாரி, முனைவர் பிலவேந்திரன், சுதா ஓர் அணியாகவும் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் தலைமையில் பேராசிரியர்கள் இராசா, திலகவதி ஆகியோர் ஓர் அணியாகவும் இருந்து அவையினர் உளங்கொள்ள திருக்குறள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

பகலுணவுக்குப் பிறகு மாலையில் நிகழ்ச்சி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிடைபெற உள்ளது. அவையில் மாண்புமிகு நடுவண் அமைச்சர் திரு.நெப்போலியன் அவர்கள் வந்து அமர்ந்துள்ளார்கள். அந்தமான் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். அந்தமான் தமிழர்கள், தமிழகத்து அறிஞர்கள் ஆய்வாளர்கள் அந்தமான் தமிழர் சங்க அரங்கில் உள்ளனர்.

அந்தமான் திருக்குறள் விழா இனிதே தொடங்கியது!

அந்தமான் தமிழர் சங்கமும் சென்னை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் மூன்றுநாள் திருக்குறள் மாநாடு, திருவள்ளுவர் சிலைத்திறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன. இன்று 06.11.2009 அந்தமானில் தொடக்கவிழா நடந்தது.

தமிழகத்திலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஔவை. நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வி.ஜி.செல்வராஜ், மருதவாணன், போசராசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ப்புத்தகங்கள் 8 ஆம் வகுப்பு பாடநூல்கள் வரை தமிழகத்திலிருந்து வருகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று தமிழக அரசு புத்தகங்களை அனுப்புகின்றது. தமிழர்கள் பலருக்கு வீட்டுமனை இன்றும் இல்லை.

தென்னஞ்சோலையாக, வயல்களாக, கரும்புத் தோட்டமாக மாற்றியுள்ளனர்
விமானம் நிலையத்திற்கு நிலம் எடுக்க தமிழர்களின் நிலம் எடுக்கப்பட உள்ளது. அந்தமானில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளனர். அவர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்கவேண்டும். தமிழில் படிக்க முன்பு வாய்ப்பு இல்லை. தமிழ்க்கல்வி வேண்டி தீக்குளிப்போம் என்று போராடினர். பிறகு வெற்றி கிடைத்தது. அந்தமானுக்குத் தமிழர் ஆளுநராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழர் பண்பாடு வளரத் தமிழர்கள் ஆளுநராக வர வேண்டும் என்று உரையாற்றினர்..

மனோகரன்-தமிழாசிரியர்

அ.நி.தீவுகளில் பல இன மக்கள் வாழ்கின்றனர்.
எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றார்.

சென்பகராசா-வாழ்த்துரை

ஔவை.நடராசன் பேச்சு
தமிழ் ஒலிக்கமுடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்லூரி. அதில் தமிழ் வளர்த்தவர் உலக நாயகி.

தாய் தன் மகனைப் பார்க்கும்பொழுதெல்லாம் இளைத்துள்ளாய் என்பாள்.
அதுபோல் பலரும் தமிழ் வளரவில்லை என்கின்றனர். ஆனால் கணிப்பொறி உலகில் தமிழ் நன்கு வளர்ந்துள்ளது என்றார்.

அந்தமான்தமிழ்ச்சங்கம் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வருகிறது.
தமிழக அரசு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை உருவாக்கித்தில் உதவியது. வெளிநாட்டுக்கு அனுப்பும் பாட நூல்களில் சிக்கல் என்ன என்றால் தமிழக அமைப்பு அதில் சொல்லப்பட்டிருகும். அந்தமான் குழந்தைகள் இது பற்றி அறியமாட்டார்கள். தமிழ்ப்பாட நூல்களைப் பயன்கொள்ள சிக்கல் உள்ளது.

முரண்பாடு இல்லாமல் நம் கருத்துகளை முன்வைத்து வெல்வது இன்று தேவை. சொற்களுக்குப் பொருள் காண்பதில் பலர் தவறு செய்கின்றனர். பெரியார் கருப்புச் சட்டைப் போராட்டம் என்றார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் தவறாகப்புரிந்து எழுதினார். மனைவி உணவு உண்ண அழைக்க, செல்லவில்லை என்றால் அதனையே பெரும்போராட்டம் என்பர்.

தமிழில் புறம், அகம், திருக்குறள், சங்க இலக்கியப் புகழ் உள்ளது எனப் பேசி பயன் இல்லை 40 உறுப்பினர்கள் இருந்தால் ஆனது. தமிழ் மக்கள் உயர்ந்தால் தமிழ் உயரும்.

காந்தி கூற்று= இந்தியாவில் உள்ளவர்கள் எழுந்து நின்று துப்பினால் இங்கிலாந்து மிதக்கும் என்பார்.

ஆங்கிலேயன் கற்பனையில் மிதக்கமாட்டான், ஒற்றுமையுடையவன் வாழ்வான். தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் மேன்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நலத்தால் ஓங்க வேண்டும். வளத்தால் ஓங்க வேண்டும்கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் வளர்ந்துள்ளது.

கடற்கரை என்றால் நண்டும் கிடக்கும். நாற்றம் இருக்கும். ஆனால் வி.ஜி.பி. மிகப் பெரிய தூய்மை இடத்தைப் பராமரிக்கின்றனர். இதுவி.ஜி,பியின் பெருமை இல்லை. தமிழன் பெருமை. தமிழ் என்றால் இனிமையான வாழ்க்கை என்று பொருள்.

குறிஞ்சிப்பாட்டு இப்பாடல் என்னுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று என்று கூறுவதிலிருந்து தமிழின் சிறப்பை உணரலாம். இனிமை என்றால் தமிழ் என்று பொருள். போர் என்றால் தமிழ். குடும்பம் என்றால் தமிழ். காதல் என்றால் தமிழ். இன்னிசையால் தமிழ் பரப்பியவன் தமிழன். இனம் வளர்ந்தால் மொழி வளரும் பிள்ளைகள் வளர தாய்ப்பால்தான் தேவை. ஆவின்பால் காய்ச்சிய பால்தான் நல்லது.

தாய்ப்பால் குடிக்க மறந்த தமிழனை முன்னேற்றத் தனித்தமிழ் இயக்கம் வளர்ந்தது.

இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது. உலகில் தமிழர்கள் இதனை நன்கு உணர வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் அரசன், சமய வாணர்கள் சொன்னால் யாரும் மறுக்கக்கூடாது அக்கால இயல்பு. வள்ளுவர் எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் என்றார் திருவள்ளுவர் கூறிய கருத்துகளைச் சாக்ரடிசும் சொல்லவில்லை. பிறப்பு ஒக்கும் என்றவர் திருவள்ளுவர். உழைப்பவனுக்குக் கல்வி வராது என்ற காலத்தில் சொன்ன கருத்து இது. வேதங்கள் அதிர்ந்தன.
கல்வியைக் கண்ணென்ப வாழும்உயிருக்கு என்றார் வள்ளுவர்

காலத்தால் பழைமையும் கருத்தால் புதுமையும் உடையது திருக்குறள் என்றார் ஔவை.நடராசன்.

தலைமையுரை
வி.ஜி.சந்தோஷம்
6 அடி உயர சிலை அந்தமான் தமிழர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது
இதுவரை உலகம் முழுவதும் 8 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வள்ளுவரின் புகழ் பரப்ப வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. அதனால் இப்பணி தொடர்கிறது என்றார்.

வெள்ளி, 6 நவம்பர், 2009

அந்தமான் வந்துசேர்ந்தோம்!

அந்தமான் தமிழர் சங்கமும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, கருத்தரங்கில் கலந்துகொள்ள அரசின் இசைவு பெற்று நான் 05.11.2009 மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரியில் புறப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வந்த மூடுந்தில் முன்னேற்பாட்டின்படி இணைந்துகொண்டேன். இரவு சென்னை வந்து அனைவரும் விடுதியில் தங்கியிருந்தோம்.

06.11.09 நள்ளிரவு 1.50 மணிக்குப் புறப்பட்டு 2.30 மணிக்கு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பாக ஐயா குமரி அனந்தன் அவர்கள் வானூர்தி நிலையத்தில் இருந்தார்.அவரிடம் அனைவரும் அறிமுகமானோம்.

பின்னர் பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். அதே நேரத்தில் வி.ஜி.பி. நிறுவனங்களின் அண்ணாச்சி திரு.சந்தோசம் அவர்கள் வந்து அன்பொழுக அனைவரையும் வரவேற்றார். அங்கு நினைவுக்காக அண்ணாச்சி அவர்களுடன் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.

எங்கள் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.நான் மடிக்கணினி எடுத்து வந்த்தால் அதனைக் கையில் கொண்டுபோக நினைத்தேன். மடிக்கணினி கையில் எடுத்துச் செல்ல இசைவு உண்டு என்பதால் பாதுகாப்பாகக் கையில் எடுத்துச் சென்றேன்.

வானூர்தி நிலையத்தின் உள்ளே முனைவர் ஔவை. நடராசனார் அவர்கள் தேனொழுகும் குரலில் உரையாடியபடி இருந்தார்கள். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். புதுச்சேரிதானே என்று அன்பொழுக வினவினார்கள்.

எங்கள் அருமை நண்பர் கண்ணன் நடராசன் அவர்கள்(மின்தமிழ் நட்பினர்)நேற்று ஐயா நடராசனாரிடம் பேசும்பொழுது என் பணிகளை நினைவுகூர்ந்ததாகத் துணைவேந்தர் அவர்கள் சொன்னார்கள். என் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் பற்றி பேச்சு எழுந்தது. துணைவேந்தர் அவர்கள் ஊக்கமூட்டிப் பாராட்டினார்கள். ஔவை துரைசாமியார் பற்றி நான் முன்பே என் வலைப்பூவில் எழுதிய செய்தியைச் சொன்னதும் மிக மகிழ்ந்தார்கள்.

எங்கள் பொருள்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, செலவுச்சீட்டுப் பெற்றுக்கொண்டு, உண்டிச்சீட்டு உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு “கிங்பிசர்” வானூர்தியில் வைகறை 4.30 மணிக்கு ஏறி அமர்ந்தோம். சரியாக 4.45 மணிக்கு வானூர்தி புறப்பட்டது. 1937 கி.மீட்டர் தூரம் உடைய அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயர் சென்று சேர இரண்டு மணி நேரம் ஆகும் என்ற அறிவிப்பு கண்டோம்.

பலர் வானூர்தியில் புதிய பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால் அச்சத்துடன் காணப்பட்டனர். வானூர்தி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அசைந்தாடி எழுந்து மேலே பறந்த அரைமணி நேரத்தில் சிற்றுண்டி வழங்கினார்கள். அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். புலர்காலைப் பொழுது என்பதால் முகிற் கூட்டங்களைக் கண்டபடியும், உரையாடியபடியும், ஒருவரை ஒருவர் படம் எடுத்தபடியும் வந்தனர். அகவை முதிர்ந்த சில பேராளர்கள் கண்ணயர்ந்தனர். காலை 6.45 மணிக்குப் போர்ட் பிளேயர் அடைந்தோம்.

10700 மீட்டர் உயரத்தில் எங்கள் வானூர்தி பறந்தது. திரு.வெங்கட் என்ற வானோடி எங்கள் வானூர்தியின் வலவராக விளங்கினார். இனிதே அவர் வானூர்தியை ஓட்டினார்.

எங்கள் கருத்தரங்கப் பயணத்த்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், அரங்க.பாரி, கல்பனா சேக்கிழார், கணேசன் (மொழியியல் துறைப் பேராசிரியர்) ஞானகுரு, தனி அலுவலர் சண்முகசுந்தரம், இராசா உள்ளிட்டவர்கள் வந்தனர். கடலூர்ப் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள் என் அருகில் அமர்ந்து உரையாடித் தம் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். பணிப்பெண்கள் அன்புடன் உணவளித்துப் போற்றினர்.

வானூர்தி தனியார் என்பதால் நன்கு பராமரிக்கப்படுகிறது. இனீய எதிர்பார்ப்புகளுடன் போர்ட்பிளேயர் வந்து, உண்டு ஓய்வுற்று, செல்லுலர் சிறைச்சாலையைப் பார்வையிடச் செல்கிறோம். சிறைச்சாலை என்றதும் என் அண்ணன் அறிவுமதி அவர்கள் அந்தப் படப் பாடல், உரையாடல் எழுதிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் பாடல்களுக்கு உரிய பொருள் சொன்னதும் அந்த நினைவுகளை மாணவர்களுக்குச் சொல்லி நான் வகுப்பெடுத்ததும் நினைவுக்கு வருகின்றன.

அலைபுரளும் கடலுக்கு நடுவிலிருந்து மீண்டும் எழுதுவேன்.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நூல் வெளியீடு மேலும் சில படங்கள்...


நூல் வெளியீடு புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டினன், முத்து, தி.ப.சாந்தசீலன்,முனைவர் அ.அறிவுநம்பி,மு.இளங்கோவன்


நூல்படி பெறும் முனைவர் பொன்னுத்தாய் அவர்கள்


நாட்டுப்புறப்பாடல்கள் இசைக்கும் கலைஞர்கள்


விழா அரங்கில் சிறப்பு விருந்தினர்களுடன் மு.இ

படங்கள்: சான்போசுகோ,நெய்வேலி