நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 ஜூன், 2009

பாரதியும் பாவேந்தரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-கவிஞர் சிற்பி பேச்சு!


கவிஞர் சிற்பி உரையாற்றுதல்

பாரதியும் பாவேந்தர் பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.இரண்டு கவிஞர்களிடமும் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதியார் எதைப்பாடினாலும் தொன்மம் கலந்து பாடுவது இயல்பு.பாரதிதாசன் தொன்மம் கலவாமல் பாடுபவர்.இரண்டு கவிஞர்களின் படைப்புகளும் மனிதர்களை மாமனிதர்களாக மாற்றுவன என்று கவிஞர் சிற்பி அவர்கள் புதுச்சேரியில் நடந்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.

புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று(29.06.2009)கொண்டாடப்பட்டது.புதுவை அரசு பாவேந்தர் பிறந்த நாள் விழாவையும் புதுவை அறிஞர்களுக்குக் கலைமாமணி,தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவையும் நேற்று நடத்தியது.புதுவை கலை,பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பாரதியார் கவிதைகளிலும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளிலும் நன்கு தோய்ந்த சிற்பி இரண்டு கவிஞர்களின் கவிதைகளின் சிறப்பையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.

புதுச்சேரி என்றால் இருவர் நினைவுக்கு வருவர்.ஒருவர் ஆனந்தரங்கர்(நாட்குறிப்பு எழுதியவர்).மற்றவர் பாவேந்தர் பாரதிதாசன்.பாரதிதாசன் பாரதியாரால் புதுமை படைக்கும் ஆற்றலைப் பெற்றார்.தங்கக்கட்டி எனப் பாரதியாரைக் குறிப்பிடலாம்.பாரதிதாசனை அழகிய அணிகலன் என்று குறிப்பிடலாம்.இருவரும் உணர்ச்சி மிகுந்த பாடல்களைத் தந்தவர்கள்.

இருவருக்கும் இடையில் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதி எதையும் தொன்மத்துடன் பாடுபவர்.பாவேந்தர் தொன்மத்திலிருந்து விடுபட்டவர்."ஆதி சிவன் பெற்றுவிட்டான்" என்பார் பாரதியார்."திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் பிறந்தவர்கள்" என்று தொன்மம் கடந்து பாவேந்தர் பாடுவார்.இருவரும் மனிதர்களின் மாண்பு பேசியவர்கள்.மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டுவர இருவரும் பாடினர் என்று இரண்டு கவிஞர்களின் பாடல்வரிகளையும் மேற்கோள்காட்டி மிகச்சிறந்த திறனாய்வுரையைச் சிற்பி வழங்கினார்.

திங்கள், 29 ஜூன், 2009

முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம்( 18.02.1926-29.06.2009) படங்கள்


முனைவர் மு.தமிழ்க்குடிமகனைப் பாராட்டி மகிழும் வ.ஐ.சுப்பிரமணியன்


முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் தமிழ்க்குடிமகன்,முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் கி.நாச்சிமுத்து,முனைவர் வ.ஐ.சு


முனைவர் கி.நாச்சிமுத்து,முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


முனைவர் வ.ஐ.சு


அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் பல்கலைக்கழகங்களை உருவாக்கிய பல்கலைக்கலைக்கழகம்.தமிழ்த்துறையிலும்,மொழியியல் துறையிலும் புகழ்பெற்ற ஆய்வுகளை நிகழ்த்தியவர்.தகுதியானவர்களை இனங்கண்டு உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர்.உழைக்கக் கூடியவர்கள் இவரிடம் பெயர் வாங்கலாம்.கண்டிப்புக்குப் பெயர்பெற்ற இந்தத் தமிழரிமா உலகத்து அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.இவர் தம் படங்கள் சிலவற்றைத் தமிழ் உலகம் கண்டு பயன்பெற வெளியிடுகிறேன்.படம் தேடியபொழுது வழக்கம்போல் இல்லையெனப் பலர் கைவிரித்தனர்.முனைவர் கி.நாச்சிமுத்து அவர்களும் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறவனத்தின் மேலாளர் அண்ணன் திரு .வீரபாகு சுப்பிரமணியன் அவர்களும் இந்தப் படங்களை அனுப்பி உதவினர்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.வ.ஐ.சு.பற்றிய என் நினைவுகளைப் பிறகு எழுதுவேன்...

தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார்!


அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வலப்பக்கமாக அறிஞர் வ.ஐ.சு.


வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள்(பழையத் தோற்றம்)

உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை (29.06.2009) எட்டுமணிக்குத் திருவனந்தபுரத்தில் அவர் உயிர் பிரிந்தது.இன்று மாலை 4 மணிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்துலகத் திராவிடமொழியியல் பள்ளி வளாகத்தில் அவர் உடல் எரியூட்டப்பட உள்ளது. தமிழகத்து அறிஞர்களும் பிற மாநிலத்து அறிஞர்களும் திருவனந்தபுரத்தில் கூடி இறுதி வணக்கம் செலுத்த உள்ளனர். செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் முனைவர் க.இராமசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.

18.02.1926 இல் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்ற வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் முனைவர் பட்டம்  பெற்றவர். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். வையாபுரியார் கலாத்துக்குப் பிறகு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.

புதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப் பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர்.ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்த பக்க பலமாக இருந்தவர்.

புறநானூற்றுச் சொல்லடைவுகள் என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள் 2 தொகுதிகளாக வந்துள்ளன.முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர்.ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.

தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் முனைவர் பட்டம் செய்த ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவர் மாணவர்கள் உலகம் முழுவதும் உயர்பொறுப்புகளில் உள்ளனர் கண்டிப்பானவர். நேரத்தைப் பின்பற்றுவதில் இணைசொல்லமுடியாதவர். திட்டமிட்டுச் செயல்படுவதில் வல்லவர். உழைக்கக் கூடியவர்களை ஊக்கப்படுத்தக் கூடியவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்துள்ள நூல்கள் யாவும் இவரின் அறிவாற்றலுக்கும் திட்டமிடலுக்கும் சான்றாகும்.

மிகச்சிறந்த மொழியியல் அறிஞரை இழந்து தமிழுலகம் வாடுகிறது. உலகத் தமிழர்கள் ஆழ்ந்த துயரில் உள்ளனர்.

வெள்ளி, 26 ஜூன், 2009

என் மாணவராற்றுப்படை உருவான வரலாறு...




 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்ற நேரம் அது(1990). ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன். என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார். ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன்.

 திருப்பனந்தாள் ஏழு கடை மாடியில் தங்கியிருந்து, குமார் என்னும் அண்ணனின் உணவுக் கடையில் உணவு உண்ணுவது வழக்கம். அங்குத் தங்கிப் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் அயலூரிலிருந்து வந்து தங்கிப் பயின்றனர். அனைவரும் கணக்கு வைத்து உண்ணுவதும், மாத இறுதியில் வீட்டிலிருந்து கொணரும் தொகையைக் கொடுப்பதும் வழக்கம்.

 பல மாணவர்கள் தொகையைக் கொடுக்க முடியாத வறுமைச் சூழலில்தான் படித்தோம். தொகை கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். இல்லையேல் வருந்த மாட்டார்கள். தொடர்ந்து உணவு கொடுத்து உதவுவது அவர் வழக்கம். அதற்காக அவர் கடையில் ஒன்றும் மிகப்பெரிய வணிகம் நடப்பது இல்லை. பொதுவான வணிகம்தான். பலருக்குக் கடன் கொடுத்தும் அந்தக் கடை என்னவோ அமுதசுரபியாக இன்றும் பலருக்கு உணவை வழங்கிக்கொண்டுதான் உள்ளது.

 அந்தக் கடையில் அண்ணன் குமார் முன்பு வணிகம் கவனித்தார். இன்று அவர் உடன்பிறப்புகள் வணிகத்தைக் கவனித்து வருகின்றனர். புளிச்சோறு, தயிர்ச்சோறு, பூரி, இட்டிலி, வடை உள்ளிட்ட உணவுகளைக் கொண்டு அந்தக் கடையில் வணிகம் நடக்கும்.மூன்றுவேளையும் மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடையில் உண்டு மகிழ்வோம். இரவு உணவு பெரும்பாலும் முட்டையடை இணைந்து இருக்கும். எங்களுக்கு உணவுகொடுத்து ஆதரித்த அந்தக் குமார் என்னும் ஆண் தாயை உயிர் உள்ளவரை மறவோம்.

 அந்தக் கடைக்குச் சென்று முன்பு உண்டு வந்த நண்பரைக் கண்டு இன்று என்ன உணவு? என்பது ஒவ்வொரு நாளும் வாடிக்கையாக இருந்தது. என்னையும் மாணவர்கள் அவ்வாறு கேட்பார்கள். அந்தக் கடையில் இருக்கும் உணவுப் பண்டங்களின் பெயரை நான் தனித்தனியே சொல்வதில் சலிப்படைவேன். ஒரு நாள் அழகிய கட்டளைக் கலித்துறையில் ஒரு பாட்டாக்கி அங்கிருந்த நண்பர்களுக்குச் சொன்னேன்.

இட்டிலி உப்புமா ஈர்வகைச் சோறுடன் பூரிரொட்டி
முட்டை யடையும் குளம்பி முறுவலம் தோசையுடன்
கெட்டித் துவையலைக் கேட்க உடனே மகிழ்ந்தபடி
கட்டித் தருவான் குமாரெனும் வள்ளல் கடையினிலே

என்பது அந்தப் பாடல்.

 விடுப்பு மடல்கூடப் பாட்டில் வடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பாட்டு எழுதுவதில் பலமுறை பரிசில் பெற்றுள்ளேன் என்பதையும் இங்கு நினைத்துப்பார்க்கிறேன்.

 மரபுப்பாடலும் நாட்டுப்புறப் பாடலுமாக இணைந்த என் வாழ்வில் திரைபடத்துறைக்குப் பாடல் எழுத வேண்டும் என்பதுதான் என் பயிற்சியின் நோக்கம். ஆனால் ஆய்வுத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டதால் பாட்டெழுத இன்று வாய்ப்பில்லாமல் போனது.

 அவ்வாறு மரபில் விளையாண்ட காலத்தில் ஒரு நாள் வகுப்பறையில் எங்கள் அன்புக்குரிய பேராசிரியர் முனைவர் வே. சீதாலெட்சுமி அவர்கள் பக்தி இலக்கியம் சார்ந்த பாடத்தை எடுத்துக்கொண்டிருந்தார். கல்லூரிப் பணியாளர் ஒருவர் சுற்றறிக்கை ஒன்றை எடுத்து வந்தார். அந்த ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவுக்கு மாணவர்களிடம் இருந்து படைப்புகளை வேண்டியிருந்தது. என்ன படைப்புகள் தரலாம் என வகுப்பில் சிறு சலசலப்பு.

 என்னைப் பேராசிரியர் அம்மா அவர்கள் எழுப்பி ஒரு ஒரு சிற்றிலக்கியம் வரையலாமே என்றார். நானும் எழுதுகிறேன் என்று சொல்லி வகுப்பு முடிந்து, அறைக்குச் சென்றேன். இரவு முழுவதும் ஆற்றுப்படை எழுதுவதில் மனம் ஈடுபட்டுக்கிடந்தது. இப்படித் தொடங்கலாமா? அப்படித் தொடங்கலாமா? என வினவிக் கிடந்த மனம் நடு இரவில் கண்ணயர ஓய்வு கொண்டது. விடியற் காலையில் எழுந்து எழுதத் தொடங்கினேன். ஒரே மூச்சில் எழுதி முடித்தேன். 168 அடி நிலைமண்டில ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்.

 வகுப்பறைக்குச் சென்றதும் என் படைப்பை மாணவர்களுக்குக் காட்டினேன். அனைவரும் வியந்தனர். மகிழ்ந்தனர். பேராசிரியர் அம்மா அவர்களின் வகுப்புக்காக அனைவரும் காத்துக்கிடந்தோம். அவர் வருகைக்குப் பிறகு என் ஆற்றுப்படை உருவான விதத்தைக் கூறினேன். மகிழ்ந்தார். திருத்தங்களைக் குறிப்பிட்டார். என் ஆசிரியர் குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்களின் பார்வைக்கும் உட்பட்டது. பிழைகள் செப்பம் செய்யப்பெற்றுக் கல்லூரி மலருக்கு உரிய பொறுப்பாளப் பேராசிரியரிடம் படைப்பை வழங்கினேன். அதன் சிறப்பை உணராத பேராசிரியர் 168 வரிகளை உடைய கல்லூரி வரலாறு சொல்லும் அந்தப் படைப்பை வெளியிட முடியாது என வரிக்கணக்குப் பார்த்து ஒதுக்கினார்.

 என் முதல் படைப்புக் குழந்தையை வீசியெறிய மனம் இல்லை. அப்பொழுது நெய்வேலியில் இருந்த தமிழ் உணர்வு மிக்க பொறியாளர்கள் பலர் எனக்கு நல்ல அறிமுகமானார்கள். அவர்களை ஒவ்வொரு காரி, ஞாயிறு சென்று காண்பது என் வழக்கமாகும். பொறியாளர்கள் மு.அறவாழி, செ.மேதலைவன், ஆ.கருப்பையா உள்ளிட்டவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உறவாகவும் நட்பாகவும் பெற்றிருந்தேன். ஈழத்துத் தமிழ் அன்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானதும் உண்டு.

 ஒருநாள் மாணவராற்றுப்படையின் படியைக் கண்ணுற்ற மேதலைவனார் திருத்தி மகிழ்ந்தார். அது கல்லூரி மலருக்கு எழுதப்பெற்றது என்றும் அச்சேறாமல் போனது என்றும் குறிப்பிட்டேன். அதனை நாம் அச்சிட்டு விடலாமே என்றார். திரு.கருப்பையா அவர்களிடம் பேசி வெளியிடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தார். ஒர் இரவு நான் கருப்பையா அவர்களின் இல்லம் சென்றேன். அவர் மகன் வழியாக மாணவராற்றுப்படை கையெழுத்துப்படி குறிஞ்சிப்பாடியில் இருந்த அழகிரி அச்சகம் சென்றது.

 சில நாள் கழித்து நானும் குறிஞ்சிப்பாடி சென்று அழகிரி அச்சக உரிமையாளர் திரு. மாசிலாமணி அவர்களைக் கண்டேன். முகப்பட்டைக்குப் படக்கட்டை செய்து வாங்கி வரும்படி சொன்னார். குடந்தையில் உள்ள ஓவியக்கல்லூரியில் மாற்கு என்னும் இளைஞர் ஓவியக்கலை பயின்றார். இவர் என் நண்பர் திரு ஆ.வே.இராமசாமி ஐயாவின் மகன் திருவள்ளுவன் வழி எனக்கு நன்கு அறிமுகம் ஆனார்.

 மாற்கு அவர்களின் அண்ணார் செயங்கொண்டத்தில் கடை வைத்திருந்தார். அவர் வழியாகவும் மாற்கு உறவு எனக்கு வலிவாக இருந்தது. என் விருப்பத்தைச் சொல்லி மாற்கு அவர்களிடம் படம் வரையச் சொன்னேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற ஒரு மாணவன் துன்பத்துடன் வெளியேறுவதாகவும், உள்ளே ஒரு மாணவன் ஆர்வமுடன் படிக்க வருவதாகவும் படம் அமைக்க வேண்டினேன்.

 அப்பொழுது எங்கள் கல்லூரி கே.எஸ்.எஸ். கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்க் கல்லூரியில் அவ்வாறு ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததில் எனக்கு ஒரு நெருடல் தெரிந்தது. ஏனெனில் அக்கல்லூரி தமிழ் வளர்க்கும் நோக்கில் தவத்திரு சாமிநாத சுவாமிகள் அவர்களாலும் அவர்களின் காலத்திற்குப் பிறகு அருள்நந்தித் தம்பிரான் என்னும் அருளாளராலும் புரந்தருளப்பெற்றது. இத்தகு கல்லூரியின் பெயரைத் தமிழில் மாற்றி வழங்க நினைத்த என் தமிழுள்ளம் கா.சா.சு.கலைக்கல்லூரி என்று அட்டையில் மாற்றி வழங்க விரும்பியது. அதன் அடிப்படையில் அட்டை மிகச்சிறப்பாக வடிவமைக்கப் பெற்றது.

 மாணவராற்றுப்படை மெதுவாக அச்சேறத் தொடங்கியது. அதுபோல் கல்லூரி மலரும் வெளிவர ஆயத்தமானது. கல்லூரி மலர் வெளிவருவதற்குள் மாணவராற்றுப்படை வெளிவர வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அச்சு வேகத்தைக் கூட்டினோம்.

 நானே குறிஞ்சிப்பாடி சென்று தங்கி, இரண்டு நாளில் அச்சு வேலையை முடித்தோம். இரவு பகல் பாராமல் அச்சு வேலை நடந்தது. அழகிரி அச்சகம் மிகச்சிறிய அளவிலான அச்சகம். எங்கள் நூல் மிகவும் குறந்த பக்கம் என்றாலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் மெதுவாக அச்சேறியது.

 1990 மார்ச்சு 30 இல் நூல் வெளியிடும் நாள் குறிக்கப்பட்டது. இதற்கு இடையே கல்லூரி வகுப்புகள் நிறைவு நிலைக்கு வந்தன. தேர்வு நெருங்கியது. நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் பல ஊருக்கும் அனுப்பினோம். அப்பொழுது மடத்தின் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்கள் என் நூல் வெளிவருவதற்குப் பல வகையில் உதவினார். அன்னாரை வாழ்நாள் முழுவதும் நினைவேன். அவர்தம் அணிந்துரை அந்த நூலுக்கு அழகு சேர்த்தது. பாவலர் இறைக்கோ என்பவரின் அணிந்துரையும் சிறப்பு.

 நூல் வெளியீட்டு விழாவுக்குரிய அழைப்பை என் பெற்றோருக்கு வழங்குவதற்குச் சுண்ணாம்புக்குழியில் இருந்த கொல்லைக்குக் கொண்டுபோய் காட்டினேன். எங்கள் கொல்லையில் கடலை ஆய்ந்துகொண்டிருந்த எங்கள் குடும்பம் முழு உழவர் குடும்பம் என்பதை அன்றும் காட்டியது. அந்த நிலத்திலிருந்து என் நூல்வெளியீட்டு விழாவால் பெற்றோரைப் பிரித்தெடுக்கமுடியவில்லை.

 எங்கள் ஊரிலிருந்து அண்ணன் மேகநாதன் அவர்களும் முத்துக்குமரனும் மட்டும் மிதிவண்டியில் வந்து சேர்ந்தனர். என் தந்தையாரும் வந்திருந்தார்.
கதிர் ஐயா சிறப்பாகப் பேசினார். என் ஆசிரியர்களும் வந்து வாழ்த்திப் பேசினர். திருமடத்தின் தலைவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஐந்நூற்று ஒரு உருவா பரிசளித்துப் பாராட்டினார்கள். அன்றைய நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. ஒலிப்பதிவிலும் பாதுகாத்தோம். 19 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து பாதுகாக்கும் வழக்கம் எனக்கு உண்டானதை இந்த ஆவணங்கள் இன்றும் காட்டும். அனைவரும் வாழ்த்திப் பேசினர்.

 நிறைவில் நான் பேசும் நன்றியுரைப்பகுதி அழுகுரலில் பதிவாகியுள்ளது. ஆம். மகிழ்ச்சிக்கடலில் நீந்தியதாக இருக்கலாம். அந்த நூல் வெளியிட அன்றைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராகப் பணிபுரிந்த இரத்தின. சாமிநாதன் அவர்கள் பேருதவி புரிந்தார். கூடுதல் படிகளை வாங்கி ஊக்குவித்தார். தமிழறிஞர்கள் வட்டத்துக்கு என் நூல் அறிமுகம் ஆனது. திருப்பனந்தாள் கல்லூரிக்கு மாணவனாக நுழைந்தேன். கல்லூரி என்னை நூலாசிரியனாக வழியனுப்பியது...

வியாழன், 25 ஜூன், 2009

நாகர்கோயில் அஞ்சல்பெட்டியும் மணிக்கூண்டும்...


அஞ்சல்பெட்டி

கேரளத்தொடர்புடன் இருக்கும் ஊர் நாகர்கோயில்.1947 ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருவாங்கூர் மன்னரின் செல்வாக்கு இந்த ஊரில் அதிகம்.ஆங்கில ஆட்சியும் இருந்தது.திருவாங்கூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களுக்குச் செல்ல தனி அஞ்சல் பெட்டியும் ஆங்கில அரசுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தனி அஞ்சல்பெட்டியும் இருந்ததாம்.

அஞ்சல்பெட்டி

திருவாங்கூர் அஞ்சல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெட்டி இன்று இந்திய அஞ்சல்துறையின் பயன்பாட்டில் உள்ளது.இரும்பால் வார்க்கப்பட்டுள்ளது அஞ்சல்பெட்டி.நாகர்கோயில் போகாதவர்களுக்குப் பார்வைக்கு இந்தப் பெட்டியும் அருகில் உள்ள முதன்மை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மணிக்கூண்டும் படமாகத் தருகிறேன்.கண்டு மகிழுங்கள்.

மணிக்கூண்டு

செவ்வாய், 23 ஜூன், 2009

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன்...

செந்தீ நடராசன், ஜெயமோகன், மு.இ, வேதசகாயகுமார் 

 நாகர்கோயிலில் நடைபெறும் தமிழ் இணையப் பயிலரங்கிற்குச்(20.06.09) செல்ல நினைத்ததும் அங்குள்ள எழுத்தாளர்கள் புகழ்பெற்ற இடங்கள் இவற்றைக் காண வாய்ப்பிருந்தால் காணலாம் என நினைத்திருந்தேன். ஒரிசா பாலு கன்னியாகுமரி காலைக்கதிரவக் காட்சி, அருகில் உள்ள அருவிகள் இவற்றைக் காணத்திட்டமிட்டார். ஆனால் இடையில் மழை வந்து எங்கள் திட்டத்தைக் குழப்பியது. அதுபோல் பயிலரங்க நாளின் மாலை நேரத்தில் காகங்கள் நிகழ்ச்சியில் என் அன்புக்குரிய பேராசிரியர் பெர்னார்டு பேட் உரையாற்றுவது அறிந்து அவரைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபொழுது சிறிது தூறலாக இருந்தது எனவும் மின்சாரம் நின்றதால் மெழுகு வெளிச்சத்தில் பேராசிரியர் பேசுவதாகவும் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் உரைத்தார். எனவே அங்கும் செல்லவில்லை. 

 முதல்நாள் மாலையில் அறையில் எங்கள் இணையப்பக்க வடிவமைப்பில் நண்பர் விசயலட்சுமணன் அவர்களுடன் இருந்தேன். 21.06.09 காலையில் தூறல் என்றதால் எங்கும் புறப்படவில்லை. காலை உணவு முடித்து நண்பர் பிரிட்டோ அவர்களைக் காண்பது என்று முடிவு செய்தேன். அவர் என் வருகைக்குக் காத்திருந்தார்.அதன் பிறகு பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைக் காண நினைத்தேன். பெருமாள் ஐயா ஒரு திருமணத்தில் இருப்பதாகவும் வருவதற்குக் காலம் தாழும் எனவும் குறிப்பிட்டார். எனவே செந்தீ நடராசன் ஐயா அவர்களுடன் முதலில் பிரிட்டோ அவர்களைக் கண்டேன். அவர்தான் நண்பர்களுடன் இணைந்து இணையப் பயிலரங்கம் நடக்க ஏற்பாடு செய்தவர். தலைக்கும் கீழ் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படவில்லை. கையின் ஒரு பகுதி மட்டும் செயல்படும். அந்த அளவு உடல் ஒத்துழைக்காத நிலையிலும் அமுதம் என்ற இதழை நடத்தி வருகிறார். குடும்பத்தினர், நண்பர்கள் தரும் ஒத்துழைப்பால் இதழாசிரியர் என்று மதிக்கப்பெறுபவர். இவருக்கு இயன்ற வகையில் துணைநிற்பேன் என்று உறுதி உரைத்து அவரிடமிருந்து விடைபெற்று நேரே ஜெயமோகன் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.

  நாகர்கோயில் பார்வதிபுரம் ஐந்தாம் குறுக்குத்தெருவில் உள்ள ஜெயமோகன் வீட்டை அடைவதற்குள் எங்களுக்கு முகவரிக் குழப்பம் ஏற்பட்டதும் ஜெயமோகன் அவர்களுடன் பேசினோம். அவரும் வீட்டைவிட்டுப் புறப்பட்டு எங்களை எதிர்கொண்டு அழைக்க வந்தார். நாங்களும் அவர் வீட்டை நெருங்கி ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். செந்தீ அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். 69 அகவையிலும் ஓடியாடி வேலை செய்பவர். சிறந்த நூல்களை எழுதியவ்ர். தொடர்ந்து தமிழினி இதழில் எழுதி வருபவர். இதற்கு முன் ஜெயமோகன் அவர்களை அறிந்திருந்தும் வீட்டுக்குச் சென்றதில்லை. 

 நான் முழுவதுமாக ஜெயமோகனுக்குப் புதியவன். மின்னஞ்சலில் ஓரிரு முறை தொடர்பு கொண்டவன். அவரின் சங்கச் சித்திரங்கள் ஆனந்தவிகடனில் வந்தபொழுது தொடர்ந்து படித்துள்ளேன். தவிர, பிற அவரின் நூல்களைப் படிக்கவில்லை. திண்ணை உள்ளிட்ட இணைய இத்களில் அவர் படைப்புகள், கட்டுரைகளைப் படித்துள்ளேன். அவரின் எழுத்தாற்றல், நடை பற்றி நாண்பர்கள் பலர் வாயாரப் புகழக் கேட்டுள்ளேன். எழுத்துத் துறையில் சாதித்தவர்களைக் கண்டால் அவர்கள் மேல் எனக்கு ஒரு மதிப்பு ஏற்படுவது உண்டு.மாற்றுக் கருத்துடையவர்கள் என்றாலும் அவர்களின் உழைப்பை எண்ணி எண்ணி மதிப்பவன்.
ஜெயமோகனுடன் மு. இளங்கோவன்

  ஜெயமோகனுடன் பொதுவான உரையாடலுக்குப் பிறகு  இணையம் பற்றிய அறிமுகம் நம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லாமல் இருப்பது பற்றி உரையாடினோம். அவருக்கு இணையத்தில் ஏற்பட்ட ஈடுபாடு பற்றி கேட்டேன். உரைத்தார். அவரின் படைப்புகள் இணையத்தில் வெளிவந்த பிறகு உலக அளவில் அவரின் படைப்புகள் சென்றதை ஒத்துக்கொண்டார். இணையத்தில் எழுதிய சில படைப்புகள் அவருக்குப் பலவேறு எதிர்ப்புகளைக் கொண்டுவந்ததையும் கூறினார். அவரின் ஆஸ்திரேலியப் பயணம், செல்ல உள்ள அமெரிக்கப்பயணம் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு திரும்பியது.  சமயம் சார்ந்து எங்கள் பேச்சு நகர்ந்தது. அப்பொழுது திருக்குறள், சிலப்பதிகாரம், இரகுவம்சம் உள்ளிட்ட நூல்களை பற்றியும் சமண சமயம் சார்ந்த உண்மைகள் பற்றியும் பேசினோம். 

 இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு ஜெயமோகன் பயணம் செய்த அனுபவங்கள், அவர் கற்ற நூல்கள் பற்றியும் உரையாடினோம். அவரின் பரந்துபட்ட கல்வி, நினைவாற்றல், திட்டமிட்ட செயல்பாடுகள், கால ஓட்டத்திற்குத் தகத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் இவற்றை அறிந்து மகிழ்ந்தேன். எங்கள் உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் வேதசகாயகுமார் அவர்கள் இணைந்துகொண்டார். தமிழக கல்வியாளர்கள் பலரைப் பற்றி அவர் கருத்தை முன்வத்தார். எங்கள் எண்ணங்களை முன்மொழிந்தோம். பயனுடைய இலக்கியச் சந்திப்பாக எங்கள் பேச்சு இருந்தது. சந்திப்பைப் பதிவாக்க சில படங்களை எடுத்துக்கொண்டு விடைபெற்றோம். 

 பார்வதிபுரம் வாய்க்கால் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. முகம் பார்த்த தென்னை மரங்களின் அழகைக் கண்டு வியந்தபடி நாகர்கோயிலில் இருந்த எங்கள் அறைக்குச் செந்தீ நடராசன் அவர்களின் உந்துவண்டியில் வந்துசேர்ந்தேன்.

புதுச்சேரியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா

புகழ்பெற்ற குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் இயக்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் அமைந்துள்ள புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்கக் கூடத்தில் 28.06.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் ந.கோவிந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அரசு வழக்கறிஞர் தி,முருகேசன் அவர்கள் தொடக்க உரையாற்றுகிறார்.

குறும்படத்தை வெளியிட்டு நடுவண் பாராளுமன்ற விவகாரம் மற்றும் கலைத்துறை அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்கள் உரையாற்றுகிறார்.

புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்களும் பிற அமைச்சர்களும்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

விழா நிறைவில் குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.

தொடர்புக்கு
94432 60242
94435 00013

திங்கள், 22 ஜூன், 2009

மலேசியக் கவிஞர் சி.வேலுசாமியின் திருக்குறள் உரைத்திறன்

    திருக்குறள் தமிழர்களின் அறிவு அடையாளமாகத் திகழும் நூலாகும். இந்நூலைப் பயிலுந்தோறும் புதுப்புதுப் பொருள் விளங்குவதை அவரவர்தம் உழைப்புக்கும் பயிற்சிக்கும் தக உணரலாம். அதனால்தான் உரையாசிரியர்கள் பலர் தோன்றித் தத்தம் பட்டறிவு, கொள்கை, புரிந்துணர்வுகளுக்கு ஏற்பப் பல்வேறு விளக்கங்கள் வரையலாயினர். பரிமேலழகரின் உரை அவர்தம் வடமொழிச்சார்பு காட்டினாலும், திருக்குறளை அவர் எந்த அளவு ஆழமாகக் கற்றுள்ளார் என்பதை அறிஞருலகம் எண்ணி எண்ணி வியப்படைகிறது. அவர் போலும் உரைவரைந்த பின்னாளைய உரையாசிரியர்கள் தங்களின் மதம் தழுவியும், சமயம் தழுவியும், கொள்கை தழுவியும் உரை வரைந்துள்ளமையை நடுநிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு. 

    பாவாணர் தமிழ்மரபுரை தந்ததும் அவர்தம் தமிழ் ஈடுபாடு கொண்டேயாகும். அறிஞர் மு.வ அவர்கள் தெளிவுரை கண்ட பிறகு தமிழகத்தில் உரையாசிரியர்களின் எண்ணிக்கை மிகுந்தது.இன்று உரை வரைவதற்குப் பலரும் போட்டியிட்டு எழுதி வருகின்றனர். பல உரைகள் இன்று படியெடுப்புகளாகவே உள்ளன.சில உரையாசிரியர்கள் நன்கு கற்றுத் திருக்குறளுக்கு உள்ளேயே சில வினாக்களுக்குத் திருவள்ளுவர் விடை வைத்துள்ளதைக் கண்டு காட்டி நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். பொற்கோ உள்ளிட்ட அறிஞர்கள் வள்ளுவர் காலத்தில் நின்று சிந்தித்துப் பொருள் உரைப்பர். சில இடங்களில் திருக்குறளுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் பொருள் விளங்கவில்லை எனவும் மேலும் சிந்திக்கவேண்டும் எனவும் குறிப்பிடுவது அவர்களின் சான்றாண்மை காட்டும் செயல்களாகும். 

    தமிழகத்து உரையாசிரியர்களின் பல உரைகளை யான் கற்று மகிழ்ந்தாலும் கடல்கடந்து வாழும் அயலகத்து அறிஞர்கள் வரைந்த திருக்குறள் உரையை இதுநாள்வரை கற்றேனல்லன். அதற்குரிய வாய்ப்பைத் திருவாளர் வேங்கடரமணி ஐயா அவர்கள் மலேசிய நாட்டிலிருந்து உருவாக்கினார்கள். மலேசியாவில் வாழ்ந்த கவிஞர் சி.வேலுசாமி அவர்களின் திருக்குறள் அறத்துப்பாலுக்கு வரைந்த உரையைக் காணும் வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன். சி.வேலுசாமியார் மலேசியாவில் நாவன்மை மிக்க பாவலராகவும், தமிழ் இதழ்கள் பலவற்றை வெளியிட்ட இதழாளராகவும் விளங்கியவர். பல நூல்களின் ஆசிரியர். தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளைச் செய்தவர். சமய ஈடுபாடு கொண்ட இவர்தம் திருக்குறள் அரிய, இனிய, எளிய உரை பெயருக்குத்தக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எளிமையாகவும் இனிமையாகவும் உரை இருப்பதுடன் இவரின் அறிவு நுட்பங்கள் பலவற்றைத் தாங்கியும் உள்ளது. இவர்தம் அஃகி அகன்ற அறிவெண்ணி வியக்கிறேன். 

    அகன்று பொருள் விளங்க எழுதுவது எளிது. சுருக்கமாக அதே பொழுது மயக்கமின்றி எழுதுவது ஒரு சிலருக்கே இயலும். திருக்குறளில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இத்தகு உரை வரையமுடியும் என்னும் அளவிற்கு இவர்தம் உரை பெருமை உடைத்து.கருத்து மயக்கமோ,புலப்படுத்தலில் குறையோ இல்லாமல் இருப்பது எம்மனோர்க்கு வியப்பைத் தருகிறது.ஓரிரு இடங்களில் அதிகாரத் தலைப்பை மாற்றியுள்ளமையும் விளக்கம் தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கன. பிறனில் விரும்பாமை(15), வஞ்சியாமை(18) பயன் இல சொல்லாமை(20), வாழ்க்கைத் துணைநலம் (வாழ்க்கைத் துணைவி) என்பன இவற்றிற்குச் சான்றாகும். உரையாசிரியர் வேலுசாமியார் அவர்கள் சிரமம்(174), உபசரிப்பு(83), (263), சபை(67), அனுபவித்தல்(177), பயப்படுதல்(202) என்பன போன்ற பிறமொழிச் சொற்களை எளிமை கருதி பெய்துள்ளமையைக் குறித்தாதல் வேண்டும். இவை கற்பாருக்கு இன்னடிசில் பால்பொங்கலில் தென்படும் ஓரிரு கற்கள் போல் தெரிகின்றன. 

     கவிஞர் சி.வேலுசாமியார் அவர்கள் பழுத்த சிவனியக் கொள்கை சார்ந்தவர் என்பது அவர்தம் முதல் அதிகார விளக்கத்தைக் கற்பாருக்குத் தெற்றென விளங்கும். திருவள்ளுவப் பேராசானுக்கு இறைக்கொள்கை உண்டு என்பதும், ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்துள்ளதும் அவர் குறள்வழி நாம் அறிகிறோம். ஆனால் அவர் இன்ன இறைவன் எனவோ, இவ்வடிவினன் எனவோ யாண்டும் குறித்தாரில்லை. பொதுப்படையாகவே இறை, இறைவன், வாலறிவன் என்றே குறித்துள்ளார். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பகுத்தறிவுச் சமயப் புரட்சியாளராகவே நமக்குத் தென்படுகின்றார். அப்படியிருக்க அவரைச் சைவர் எனவோ, கிறித்தவர் எனவோ, சமணர் எனவோ குறிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிஞருலகம் குறிப்பிடுவதுண்டு. நம் உரையாசிரியர் சி.வேலுசாமியார் அவர்களின் முதற் பத்துக் குறட்பாக்களின் உரைகளில் முழுமுதற் கடவுளான சிவனே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்ற முறைமையில் உரை வரைந்துள்ளார். அஃது அவர்தம் சைவ சமய ஈடுபாடு காட்டுகிறது. 

     சி.வேலுசாமியின் உரை முழுவதையும் கற்ற பிறகு ஓர் உண்மை புரிகிறது. திருக்குறளை எத்தகு குறைந்த கல்வியறிவு உடையாரும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், திருக்குறள் வழி நிற்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டு உரை வரையப்பட்டுள்ளமை புலனாகிறது. அதற்காக அவர் சொற்களை எளிமைப்படுத்தி, தொடரை எளிமைப்படுத்தி வழங்கியுள்ளமை போற்றற்குரியது. திரிசொற்களைப் பயன்படுத்தாமல் நாளும் நாம் வழங்கும் எளிய சொற்களைப் பெய்து உரைவரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 38 அதிகாரத்திலும் இடம்பெற்றுள்ள அரிய சொல்லாட்சிகளுக்குப் பொருள் தந்து பின்னிணைப்பாக வழங்கியுள்ளமை அவர்தம் உள்ளம் காட்டும். இது பிற உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்டு நிற்பதற்குச் சான்றாகும். 

     இவ்வாறு அருஞ்சொற்களைப் பட்டியலிட்டுள்ள ஐயாவின் பட்டியலை உற்று நோக்கும்பொழுது ஆதி, பகவன், அவித்தான், அந்தணன் எனும் சொற்களுக்குத் தந்துள்ள விளக்கங்களைக் கவனிக்கும்பொழுது சிவன் என்று குறிப்பு இல்லை. உரையில் இச்சொற்களுக்குச் சிவன் எனப் பொருள் குறிக்கப்பட்டுள்ளது. இவை மாறுகொளல் கூறும் பாங்கினதாக அறிஞருலகம் குறிப்பிடுவதற்கு வழிவகுக்கும். "பொறிவாயில் ஐந்தவித்தான்"எனத் தொடங்கும் குறட்பாவுக்கு," ஐந்து பொறிகள் வாயிலாக ஏற்படும் ஐந்து ஆசைகளையும் அறுத்தவனாகிய சிவனுடைய மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் கேடின்றி வாழ்வர்" எனும் இடம் இவர்தம் சிவனியப் பற்று அறிய ஒருபதம் சோறு என்க. முதல் அதிகாரத்துள் தம் சமயச்சார்பைக் காட்டினாலும், பிற அதிகார உரைகள் யாவும் அவர் நோக்கில் எளிமை, இனிமை எனும் தன்மைகள் கொண்டே விளங்குகின்றன. 

     துறந்தார் பெருமை(22) எனும் குறளுக்கு உரை வரையும்பொழுது " பற்றுகளை விட்டவர்களின் பெருமையை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்வது உலகில் இறந்து போனவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றதாகும்" எனக் கிடந்த முறையால் பொருள் கண்டிருப்பது அவர்தம் தெளிந்த உள்ளம் காட்டுவதாகும். அதுபோல் "சிறப்பீனும்" (31) எனும் குறள் பாவுக்கு, " சிறப்பையும் செல்வத்தையும் பெற்றுத் தருகின்ற அறத்தை விடவும் மேலான செல்வம் மக்களுக்கு என்ன இருக்கின்றது?" என்று வரைந்துள்ளமை இவர்தம் உரை வரையும் திறனுக்கு மற்றுமொரு சான்றாக நிற்கின்றது. 

     திருக்குறள் எழுதப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே இன்று பொருள் கொள்வதில் அறிஞர்கள் சில இடங்களில் மாறுபட்டு நிற்பது உண்டு. அதில் ஒன்று "இயல்புடைய மூவர்(41)" எனும் பகுதியாகும்.வேலுசாமியார் இந்த இடத்துக்கு உரை வரையும்பொழுது " இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடன் வாழ்கின்ற பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் நன்னெறியில் நிலையாக உதவும் துணையாவான் என்று உரை வரைந்துள்ளார். இது வடமொழி மரபு தழுவிது என்க. வடமொழி வாணர்கள் குறிப்பிடும் இந்த மூவரும் திருவள்ளுவர் குறிப்பிடும் துறவியர்களுக்கு மாறானவர்கள் என்பதால் இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள உரையைப் பொருத்தமானதாக ஏற்க முடியவில்லை. வாழ்க்கைத் துணைநலத்தில் இடம்பெறும் "கற்பு" என்ற சொல்லுக்குக் கல்போன்ற மன உறுதி என்கிறார். கடமைகளில் தவறாதவளே மனைவி என்கிறார்(66), புகழ்புரிந்த இல் என்பதற்குப் புகழைப் பாதுகாக்கும் மனைவி என்கிறார்(59). மனைவியின் இல்லற நற்பண்புச் சிறப்பை மங்கலம் என்று(60) குறிப்பிடுகிறார். தம்பொருள் என்ப தம் மக்கள்(63) எனும் குறளுக்கு இவர் வரைந்துள்ள உரை "தம்முடைய மக்களே தமக்குச் செல்வம் என்பார்கள். அந்த மக்களும் அவரவர் செய் முன்வினைப் பயன்களுக்கு ஏற்றவாறு வந்து அமைவார்கள்" என்று இயல்பாக அமைத்து, குறிப்பிடுகின்றமை கற்பவருக்குக் கழிபேரின்பம் நல்குவதாகும். 

     "என்பும் உரியர் பிறர்க்கு" எனும் பகுதிக்கு இவர் உரை வரையும்பொழுது உடம்பாலும் என இயல்பாகப் பொருள் காண்பது சிறப்பு. பிற உரையாசிரியர்கள் எலும்பும் பிறருக்கு என வரைவதையே வழக்காகக் கொள்வர். இவர் மட்டும் உடம்பு என்று குறிப்பிடுவதில் ஒரு நுட்பம் உள்ளதும் அதுவும் காலத்திற்கு ஏற்ற ஓர் அறிவியல், மருத்துவவியில் உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.உலக உயிர்கள் மாட்டு அன்புடையவர்கள் இந்நாளில் தம் உடல் இறப்பிற்குப் பிறகு பிறருக்கு உதவும்பொருட்டு மருத்துவமனைக்கு வழங்கி அன்புடைமையை வெளிப்படுத்தும் உலகியல் நிலைக்குத் தக இந்த உரை வரையப்பட்டுள்ளத்தை எண்ணி எண்ணி மகிழவேண்டியுள்ளது. "புறத்துறுப்பு"(79)எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உடம்பின் அகத்து இருக்க வேண்டிய அன்பு என்பது இல்லாதர்க்கு வெளியில் இருக்கின்ற உறுப்புக்கள் என்ன உதவி செய்தல் கூடும்? என்று குறளாசானின் உள்ளக் கிடக்கை உணர்ந்து எழுதியுள்ளமை போற்றற்குரியது.

     "செல்விருந்தோம்பி" என்னும் குறட்பாவுக்கு உரிய பொருளைச் சமண சமயம் சார்ந்த பெரியவர்கள் மிகச்சிறப்பாக உரைப்பர். அப்பொருள் இதுதான். சமண முனிவர்கள் ஓரிடத்தில் தங்கி விருந்துண்போர் இல்லை. போகிற போக்கில் கிடைப்பதை உண்பது அவர்தம் சமய ஒழுக்கமாகும். இத்தகையவர்களுக்கு வழங்கி அடுத்து வரும் தவத்துறவியர்களுக்குக் காத்திருத்தல் எனப் பொருள்கூறுவர். இதில் முரண்பட்டவராய் வேலுசாமியார் அவர்கள் "வந்து செல்லும் விருந்தினர்களைப் போற்றி உபசரித்து அடுத்து வரவுள்ள விருந்தினர்களுக்காகக் காத்திருப்பவன் வானவர்க்கும் நல்ல விருந்து படைப்பவனாவான் என்று உரை வரைந்துள்ளமை மூல நூலாசிரியரின் எண்ணத்துக்கு முரணாக அமைகிறது. 

     'அகன் அமர்ந்து ஈதல்'(92) என்னும் இடத்து, உள்ள மலர்ச்சியோடு இல்லாத ஏழைகளுக்கு ஈவதினும்' என்ற பொருள் கொண்டுள்ளமை கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுப்பதாகும். ஏழைகள் எனில் உள்ள மலர்ச்சி இல்லாதவர்கள் எனும் பொருளைக் கொடுப்பதால் இது போன்ற தேவையற்ற அடைகளை உரையாசிரியர் தவிர்த்திருக்கலாம். ’நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை நன்றே ஒழிய விடல்’ (113) என்றவிடத்து ஒழியவிடல் என்பதை அழிய விடல் எனக் கொண்டுள்ளமையை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அதுபோல் சிற்றின்பம் வெட்கி(173),பொருள் வெட்கி(176) என்று இரு இடங்களில் வெஃகி என்பது வெட்கி என அச்சாகியுள்ளமை அடுத்த பதிப்பில் சீர்செய்ய வேண்டுவனவாகும். 

     'கேடும் பெருக்கமும்' எனத் தொடங்கும் குறளுக்கு எளிமையாகவும் புதுமையாகவும் வேலுசாமியார் உரை வரைந்துள்ளார். "கேடும் செல்வமும் வாழ்க்கையில் இல்லாதவை அல்ல. அதனால் நெஞ்சத்தில் நடுவு நிலைமை தவறாமல் இருப்பதுவே சான்றோர்க்கு அழகாகும். வேலுசாமியாரின் எளிய உரைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அதுபோல் 'நிலையில் திரியாது அடங்கியான்' எனும் குறட்பாவடிக்குத் தன்னுடைய நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கமாய் இருப்பவனுடைய உயர்வு மலையினும் மிகப் பெரியதாகும் எனக் கற்றோரும் மற்றோரும் எளிமையாகப் பொருள் உணரும்படி வரைந்துள்ளமையை எண்ணி மகிழலாம். ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்துக்கு வரைந்துள்ள உரைப்பகுதி முழுவதும் கற்பாருக்கு இன்பம் நல்குவனவாகும். 'அறன்கடை' (142) எனும் குறட்பாவுக்கு வரைந்துள்ள உரை சிறிது மயக்கம் தருவதாக உள்ளது. அக்குறளுக்கு அடுத்து அமையும் ’விளிந்தாரின் வேறல்லர்’ எனத் தொடங்கும் குறட்பாவுக்கு, "ஐயப்படாமல் நம்பியிருப்பவருடைய இல்லாளிடத்தில் விருப்பம்கொண்டு தீயன செய்து ஒழுக நினைப்பார் செத்தவரின் வேறானவர் அல்லர்" என்று மிக எளிமையாகவும் தெளிவாகவும் வரைந்துள்ள போக்கு எண்ணும்பொழுது வேலுசாமியாரின் தமிழ்ப்புலமை வெளிப்பட்டு நிற்கின்றது. 

    அதுபோல் 'பகை பாவம்','பிறன்மனை நோக்காத' எனத் தொடங்கும் குறட்பாக்களுக்கு அழகிய விளக்கம் தந்துள்ளார். அழுக்காறாமை அதிகாரத்தில் இடம்பெறும் அழுக்காறு இல்லாதவர் இயல்பை விளக்கும் பொழுது முதற்குறளில் 'ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத தன்மையை ஒழுக்கநெறியாகக் கொள்ளவேண்டும்' என்று ஒரு தொடரில் மிகச்சிறப்பாக மூலக் குறட்பாவை விளக்கிக்காட்டுகிறார். "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது" எனும் குறட்பா படித்தவர்க்கே பொருள்கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும். மயக்கமில்லாமல் உரைவரையும் வேலுசாமியின் ஆற்றல் இங்குப் பளிச்செனப் புலப்பட்டு நிற்கிறது. "அழுக்காறு கொண்டவர்களுக்கு அந்த அழுக்காறே போதும். பகைவர் கேடு செய்யத் தவறினாலும் அந்தப் பொறாமையே அவர்களுக்குக் கேட்டைத் தரும்" என்று எழுதியுள்ளமை சிறப்பானதாகும். 

     'நத்தம்போல் கேடும்'(235) என்னும் குறட்பாவுக்குப் புதிய முறையில் உரை வரைந்துள்ளார். 'சங்குபோல் அழிவும் புகழ் உண்டாக்கக்கூடிய இறப்பும் ஆகிய இவை அறிவாற்றல் நிறைந்தவர்களுக்கேயல்லாமல் மற்றவர்களுக்கு இல்லை'. இவ்வாறு அறிவியல் அடிப்படையில் உரை வரைந்து பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபட்டு உரை கண்டுள்ளார். அதுபோல் 'வசையிலா வண்பயன் குன்றும்' என்னும் குறட்பாவுக்குப் புகழ் அடையாத ஒருவரின் உடலைச் சுமந்த நிலமானது பழிப்பு இல்லாத வளமான பயனைத் தருவதில் குறைந்துவிடும்' என்று வரைந்துள்ளது புறநானூற்றுப் பாடலின் பிழிவாக உள்ளது. 

     ’பற்றற்றேம்’ (275) எனத் தொடங்கும் குறட்பாவிற்குப் 'பற்றுக்களைத் துறந்துவிட்டோம் என்று சொல்கின்றவரின் மறைவான ஒழுக்கக் கேடுகள் எதற்காகச் செய்தோம், எதற்காகச் செய்தோம் என்று சொல்லி வருந்தும்படியான துன்பங்கள் பலவற்றை ஏற்படுத்தும்' என்று வரைந்துள்ளமை மிக எளிதாகவும் இனிதாகவும் உள்ளது. நெஞ்சில் துறவார்(276) எனும் குறளுக்கு வரைந்துள்ள உரைக்கு இன்னும் விளக்கம் தேவையாக உள்ளது. 

     ஊழ் என்னும் அதிகாரத்திற்கு வரைந்துள்ள உரை சற்று விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்து கற்போர்க்கு இன்பம் பயக்கிறது. திருக்குறளில் மூழ்கி முத்தெடுத்து உரைகண்டுள்ளார் சி.வேலுசாமியார். ஆய்வு நோக்கில் சில நிறை, குறைகளை யான் நடுநின்று குறித்தேன். இவை யாவும் அறிஞர் சி.வேலுசாமியாரின் பேராற்றல் உணர்த்துவதற்கேயாம். அறத்துப்பால் முழுமைக்கும் உரை வழங்கிய அற நெஞ்சினரான சி.வேலுசாமியார் அவர்களின் தமிழ்ப்பணி திருக்குறள் உலவும் காலம் வரை நினைவுகூரப்படும்.

வேலுசாமியார் வாழ்க்கைக் குறிப்பு அறிய இங்குச் சொடுக்குக.

 குறிப்பு: 20,21-06.2009 இரத்தினகிரியில் (வேலூர் மாவட்டம்) நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாம் மாநாட்டில் வெளியிடப்பெற்ற ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ள கட்டுரை.

சனி, 20 ஜூன், 2009

நாகர்கோயில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு...




20.06.2009 வைகறையில் சில்லென்ற காற்று தொடர்வண்டியில் அரிதுயில்கொண்ட என்னை மெதுவாக எழுப்பியது.ஆரல்வாய்மொழி என்ற இடத்தில் தொடர்வண்டி மாற்றுப்பாதைக்காகத் தேங்கி நின்றது.காற்றாலைகள் எங்கும் கண்ணில் தென்பட்டன.ஒரிசா பாலு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று வினவினார்.அடுத்து செல்வதரன் அவர்களும் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று கேட்டார்.செல்வதரன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார்.அரைமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு தொடர்வண்டி உரிய இடத்தில் சோம்பல்முறித்து நின்றது.



செல்வதரன் உந்துவண்டியில் ஏறி விடுதிக்குச் சென்றேன்.ஒரிசா பாலு என் வருகைக்காகக் காத்திருந்தார்.அருகில் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களும் காத்திருந்தார்.தம்பி செல்வமுரளியும் சேலத்திலிருந்து வந்தார்.பெங்களூரிலிருந்து நண்பர் விசயலட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.குளித்து முடித்து அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.இடையில் எழுத்தாளர் செயமோகன் அவர்களிடம் பேசி வாய்ப்புக்கு ஏற்ப சந்திப்பதாகச் சொன்னேன்.





பங்கேற்பாளர்கள்
அனைவரும் இணையப்பயிலரங்கம் நடக்கும் இடத்தைச் சரியாக 9.30 மணிக்கு அடைந்தோம். பதிவுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம்.மானிங் ஸ்டார் கல்லூரியில் உள்ள கணிப்பொறி அரங்கு நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிப்பொறிகள் இணைய இணைப்புடன் இருந்தன. காற்று வளிப்பாட்டு அறை. அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தனர்.

பலதுறை சார்ந்த 60 பேர் பயிற்சி பெற வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்வமுடன் கலந்துகொண்டார். கரூரிலிருந்து இரண்டு அன்பர்கள் வந்திருந்தனர்.அதில் ஒருவர் தட்சு தமிழ் இதழின் செய்தியாளர். நாகர்கோயில் சார்ந்த இதழியல்துறை நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். வங்கியில் பணிபுரியும் நண்பர்கள் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் என ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்திருந்தனர்.

அருட்தந்தை விக்டர் அவர்கள்(தாளாளர்)குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். செந்தீ நடராசன் அவர்களும் நானும் குத்துவிளக்கேற்றினோம். விக்டர் அவர்களும் செந்தீ அவர்களும் மிகச்சுருக்கமாகவே உரையாற்றினர். அரங்கினைச் செல்வதரன் அவர்கள் சரியாக 10.10 மணியளவில் என்னிடம் கொடுத்தார். தமிழ் இணையம் ,கணிப்பொறி பற்றியும் தமிழ்த்தட்டச்சு பற்றியும் அடிப்படையான செய்திகளை எடுத்தரைத்தேன். தமிழ்மணம், மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை பற்றியும் மின்னிதழ்கள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் செல்வமுரளியும்,விசயலட்சுமணன் அவர்களும் பின்புலத்தில் இருந்து தொழில் நுட்பச்சிக்கல் இல்லாமலும் தொய்வில்லாமலும் பார்த்துக்கொண்டனர். நானும் மாணவர்களை ஆளுவதில் பயிற்சி பெற்றவன் என்பதால் மகிழ்ச்சியாகவே நான்குமணிநேரம் வகுப்பெடுத்தேன்.இரண்டு மணிக்கு மேல் மின்சாரம் நிற்கும் என்றார்கள்.அதனால் இரண்டு மணிவரை வகுப்பெடுத்தோம்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மூன்று மணிக்குச் சரியக ஒன்றுகூடினோம்.அதன் பிறகு சிறிது நேரத்தில் அறிமுகம் செய்துகொண்டோம்.

ஒரிசா பாலு அவர்கள் விக்கிபீடியா, விக்கி மேப்பியா என்ற பகுதியை விளக்கி உலகத்தை எங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.கடலியல் ஆய்விலும் வரலாற்று ஆய்விலும் வல்லவர் பாலு என்பதால் அனைவரையும் தூங்கவிடாமல் தம் பணியை மிகச்சிறப்பாகச் செய்தார்.

மு.,செல்வமுரளி,விசயலட்சுமணன்

தம்பி செல்வமுரளியும் விசயலட்சுமணன் அவர்களும் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் கணக்குத் தொடக்கம் பற்றியும் கமுக்கக்குறியீடுகள் பற்றியும் காட்சி விளக்கம் நல்கினர்.பயிற்சி பெற வந்த ஒருவருக்கு புதிய கணக்கு தொடங்கி வழங்கினர். அதனை அடுத்து வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சி வழங்கினர். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு NHM எழுதி சில படிகள் வழங்கினேன்.முன்னமே காலையில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சு எடுத்து அனைவருக்கும் வழங்கினோம்.
ஒரிசா பாலு, செந்தீ நடராசன், செல்வமுரளி மற்றுமுள்ள தமிழார்வலருடன்

நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எட்டு வலைப்பதிவர்கள் வந்து கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இணையத்திலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம்கொண்ட பலரைக்கொண்டு இந்தப் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் தொடர்ந்து இத்தகு பயிலரங்குகள் நடத்த கிறித்தவ தந்தைமார்கள் பலர் விரும்பியுள்ளனர். வாய்ப்புக்கு ஏற்ப அடுத்த பயிலரங்குகளுக்கு வருவதாக அனைவரிடமும் விடைபெற்றேன்.

காலச்சுவடு அலுவலகம் சென்று பேராசிரியர் பெர்னாடு பேர்டு அவர்களின் பேச்சைக் கேட்க நினைத்திருந்தேன்.நாகர்கோயிலில் மழை என்பதால் வெளியே செல்லமுடியவில்லை.இரவு அறைக்கு அறிஞர் குமரிமைந்தன் அவர்கள் வந்து உரையாடினார்கள்.குமரிக்கண்ட ஆய்வுகள், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாறு பற்றி உரையாடினோம்.நடு இரவு வரை எங்கள் உரையாடலும் இணைய வடிவமைப்புப் பணிகளும் தொடர்ந்தன…

தமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கியது...

தமிழ் இணையப்பயிலரங்கம் இன்று 20.06.2009 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோயில் மானிங்ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,அமிர்தா ஊடக ஆய்வு மையமும்,அமுதம் தமிழ் மாத இதழும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தன.

ஏறத்தாழ அறுதுபேர் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சி பெற்றனர்.காலையில் 10 மணிக்குக் குத்துவிளக்கேற்றி மானிங் ஸ்டார் கல்லூரி தாளாளர் விக்டர் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.எழுத்தாளர் செந்தீ நடராசன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.செல்வதரன் அவர்கள் பயிலரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மிகச் சுருக்கமாகத் தொடக்கவிழா நடந்தது.

காலையில் பத்து மணியளவில் என் உரை தொடங்கியது.தமிழ்த்தட்டச்சு வகைகள்,தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு,பயன்பாடு பற்றி எடுத்துரைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளை எடுத்துரைத்துக் காட்சிவழி விளக்கினேன்.என் உரை சிறப்பாக அமைய நண்பர் செல்வமுரளி,விசய லட்சுமணன் ஒரிசா பாலு ஆகியோர் தொழில்நுட்ப அளவிலான பணிகளைக் கவனித்தனர்.

உரையாடல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் செயமோகன் அவர்கள் எங்களுடன் இணையம் வழி பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரைத்தார்.அதுபோல் முனைவர் நா.கண்ணன் அவர்கள்(கொரியா)எங்களுடன் உரையாடலில் பங்கேற்றார். தமிழ்க்காவல் முருகையன்,திரட்டி வெங்கடேசன் ஆகியோரும் உடனடியாக இணைப்புக்கு வந்து வாழ்த்துரைத்தனர்.அரங்கில் இருந்தவர்களுக்குத் தமிழ் வழியில் இந்த அளவு வசதி உள்ளதே என்ற வியப்பும் மலைப்பும் இருந்தது.

மின்னிதழ்கள் என்ற தலைப்பில் அடுத்த நிலையில் என் பேச்சுத் தொடர்ந்தது.தினமலர் நாளிதழ் ஒருங்குகுறியில் வருவது பற்றியும்,அதன் பல்வகை சிறப்புகள் குறித்தும் உரையாற்றினேன்.தினமணி நாளிதழ் அண்மையில் ஒருங்குகுறிக்கு மாறியுள்ளது பற்றியும் பிற ஏடுகள் ஒருங்குகுறிக்கு மாறவேண்டியதன் தேவை பற்றியும் எடுத்துரைத்தேன்.
தமிழ்மணம் தளம் அதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றியும் காட்சி வழி விளக்கினேன்.அதுபோல் மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகம்,வரலாறு உள்ளிட்ட தளங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,அருட் தந்ததையர்கள் பலர் வந்துள்ளனர்.

உணவு இடைவேளைக்கு இரண்டு மணிக்குப் பிரிந்தோம்.மீண்டும் மூன்று மணிக்கு அமர்வு தொடங்கியுள்ளது...

வெள்ளி, 19 ஜூன், 2009

கன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்களுக்கு...


மாண்புமிகு கலைஞர் அவர்களால் குமரி முனையில் எடுக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயில்,சுங்கான் கடை, மானிங் ஸ்டார் பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) 20.06.2009 சனி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கம் நடக்கிறது.திரு.பிரிட்டோ,திரு.செல்வதரன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து இந்தப் பயிலரங்கை ஒரிசா பாலசுப்பிரமணி(B+) அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.

வழக்கம் போல் பல்வேறு தடைகளைக் கடந்து நல்ல உள்ளங்களின் மேலான ஒத்துழைப்பால் இந்தப் பயிலரங்கம் வெற்றியுடன் நடைபெற உள்ளது.உங்கள் அனைவரின் வாழ்த்துதலையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.

கன்னியாகுமரி,நாகர்கோயில்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலைப்பதிவு நண்பர்களும், எழுத்தாளர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு புதியவர்களுக்கு உதவலாம்.பயிற்சியில் மின்னஞ்சல்,உரையாடல் பற்றி விளக்கும் பொழுது இணைப்பில் உள்ளவர்கள் வந்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துரைக்கலாம்.

தரமான பயிற்சி வழங்கப்படுவதால் சில விதிமுறைகள் வகுத்து நிகழ்ச்சியை அமைத்துள்ளோம்.நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த நிகழ்வில் அவற்றைச் சரிசெய்துகொள்வோம்.

புதுவையிலிருந்து நானும் சேலத்திலிருந்து திரு.செல்வமுரளி,விசய இலட்சுமணனும் கலந்துகொள்கிறோம் ஒரிசா பாலசுப்பிரமணியும் வந்துள்ளார்.அனைவரும் இணைந்து பயிற்சியளிக்க உள்ளோம்.தமிழ்த்தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம்,வலைப்பூ உருவாக்கம்,இணைய இதழ்கள்,வலைத்தளப் பாதுகாப்பு,தமிழ் விக்கிபீடியா,நூலகம் திட்டம்,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை உள்ளிட்ட இணையம் சார்ந்த செய்திகள் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட உள்ளன.

உணவு,சிற்றுண்டி வழங்கப்படும்.முன்னமே பதிவுசெய்து கொண்டுள்ள நண்பர்கள் உரிய நேரத்தில் வந்து பங்குகொள்ள,பயன்பெற அழைக்கிறேன்.

கிழக்குப் பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு.பத்ரி அவர்கள் தம் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ள NHM எழுதியை இருப்பில் உள்ளவற்றைச் சிலருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.

பொள்ளாச்சி கவிஞர் சிற்பி ஐயா அவர்களும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயாவும்(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,புது தில்லி),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்),திரு.கல்யாணசுந்தரம்(மதுரைத் திட்டம்,சுவிசர்லாந்து),பேராசிரியர் சி.இ.மறைமலை,முனைவர் பொற்கோ,தகடூர் கோபி,முகுந்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சங்கமம்லைவ்,தட்சுதமிழ் உள்ளிட்ட இணைய இதழ் ஆசிரியர்கள் தங்கள் தளங்களில் இச்செய்தியை வெளியிட்டனர்.செய்தி இதழ்கள்,ஊடகங்கள் இந் நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நாளை கன்னியாகுமரி-நாகர்கோயிலிலிருந்து எழுதுவேன்.நிகழ்ச்சி பற்றிய படங்களை,பேச்சு விவரங்களை வழங்குவேன்.

தொடர்புக்கு :
9994352587
9790307202
9865894576

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் புன்னியாமீன் 

     இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். 

     2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் 'அயோத்தி நூலக சேவை'யின் பரிந்துரையின்படி 'இலண்டன் புக்ஸ்' எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்.நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5 ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனை வட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. 

 கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா? 

 பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'புஜ்ய கல்வி அலகை' எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் உள்ளனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

 கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்? 

 பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம். ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும். கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். 

 கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா? 

 பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன. கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக்இ கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5 - ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். 

 கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்? 

 பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம். கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா? பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர். 

 கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்? 

 பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர். 

 கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா? 

 பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது. ஒரு மாணவனுக்கு 570 ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'திரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன. இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார். கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

 கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா? 

 பதில்: மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர். 

 கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா? 

 பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம். அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் "வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது" என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். 

 கேள்வி: தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்? 

 பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது. தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். 

 உரையாடியவர்: பொன்மொழிவேந்தன் 

சனி, 13 ஜூன், 2009

தமிழ் இணையப் பயிலரங்கம்-நாகர்கோயில்



தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி,
சுங்கான்கடை,நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை
நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை

பயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,புகழ்பெற்ற இணையத்தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன்,சேலம் செல்வமுரளி,ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.பகலுணவு உண்டு.

பதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.
முதலில் வருபவருக்கு முதல்வாய்ப்பு

தொடர்புக்கு
9994352587
9790307202
9789575900

புதன், 10 ஜூன், 2009

ஈழத்துப்பூராடனாரின் அண்மைக் காலத்து நூல்கள்...


தமிழழகி காப்பியம்

கனடாவில் வாழும் தமிழீழத்தைச் சார்ந்த மட்டக்களப்புக்கு அருகில் உள்ள செட்டிப்பாளையம் என்ற ஊரில் பிறந்த அறிஞர் க.தா.செல்வராசகோபல் அவர்கள் கடந்த பதினாறு ஆண்டுகளாக எனக்கு இலக்கியத் தொடர்புடைய உறவினர். அவர்தம் நூல்களைக் கற்று அடிக்கடி பல புதுச்செய்திகளை அறிபவன்.இதுவரை நேரில் இருவரும் சந்தித்ததில்லை எனினும் மார்க்சு ஏங்கெல்சு நட்பு போன்றது எங்கள் நட்பு.அவருக்கும் எனக்கும் அகவை வேறுபாடு மிகுதி. எனினும் உணர்வாலும் இலக்கிய ஆர்வத்தாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

கனடாவில் வாழ்ந்தபடியே தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்துவருகிறார். பல்வேறு நூல்களைத் தமிழ் வளர்ச்சி நோக்கி வெளியிட்டு வருகிறார். அகவை முதிர்ச்சி, அதன்வழிப்பட்ட பல்வேறு நோய்கள், அதற்குரிய மருத்துவம்,மருந்து மாத்திரைகளுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்தாலும் இலக்கியம் படைப்பதையும் அதனை அச்சிட்டு வெளியிடுவதையும் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். அவரின் நூல்கள் தமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியும், சீவகசிந்தாமணி ஆய்வுச்சிந்தனைகள் என்ற நூலும், பெருங்கதை ஆய்வு நோக்கு என்ற நூலும் எனக்கு அண்மையில் கிடைத்தன.இந்த நூல்களின் படிகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பார்வைக்கு உள்ளன என்பது கூடுதல் செய்திகள்(இவரின் பிற நூல்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ளன)

தமிழழகி காப்பியம்

தமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியாக வெளிவந்துள்ளது.346 பக்கம் அளவு கொண்டது. தமிழ்முனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை அழகிய மரபுப்பாடலில் விளக்கும் நூல். தமிழ் வரலாறு அறிய விழைவார்க்கு இந்த நூல் அரிய செய்திகளைத் தரும். சீவன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என உரைக்கும் பகுதிகள் நூலின் முகப்பில் உள்ளன. ஈழத்துப்பூராடனாரின் தமிழ் இலக்கியப்பணிகள் முகப்பில் வழங்கப்பட்டுள்ளன.

பன்னிரண்டாயிரம் பாடல்கள்,2070 பக்கங்கள்,ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும் அது 81 படலங்களாகவும்,567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான காப்பியத்தின் ஐந்தாம் பகுதி இந்த நூலாகும்.

தமிழ்மாமுனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் இத்தாலி நாட்டுப்படலம், இளமைப்படலம், துறவுபூண்ட படலம், தமிழகஞ்சேர் படலம், தமிழழகி காட்சிப்படலம், தமிழழகி வேட்கைப்படலம், தமிழழகி விழைவுப்படலம், தொன்னூல் படலம், தேம்பாவணி சூடிய படலம் என்னும் ஒன்பது படலங்களைக்கொண்டு அமைந்துள்ளது.

இந்த நூலுக்கு உட்பொருள் விளக்கக் காரிகையும்,தற்சிறப்புப்பாயிரமும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. ஈழத்துப்பூராடனார் கட்டுரை வரைவதில் வல்லமை பெற்றமை போலப் பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றவர் என்பதற்குத் தற்சிறப்புப் பாயிரம் ஒன்றே சான்றாகும்.
.....
வடக்கில் இருந்தும் மேற்கில் உதித்தும்
தடங்கொள் பலவாஞ் சமயம் சூழ்ந்து
தமிழரின் வணக்கத் தகையதிற் புகுந்து
உமிழ்ந்த நஞ்சின் உரத்தாற் சைவம்
ஒன்றே குலம் ஒருவனே தெய்வமென்
ஒருமை தத்துவம் உடைந்தே போனது...

இத்தகைக் களங்கக் காலம் இத்தலி
வித்தகன் தைரிய வீரமாமுனி
கிறித்தவப் பணிசெயக் கிழக்குறை நாட்டில்
இறுத்திடு போது இணையிலாத் தமிழதன்
இயல்பைக் கண்டு..."

தமிழ் கற்ற பாங்கைத் தற்சிறப்புப் பாயிரம் சாற்றுகிறது.

வீரமாமுனிவர் செய்த நூல்கள் இலக்கியப்பணிகள் அவர் காலத்திய தமிழக நிலை யாவும் இந்த நூலில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.1750 செய்யுட்களில் அமைந்த இந்த நூல் தமிழ்த்தாயினுக்கு மற்றுமோர் அணிகலன் எனில் மிகையன்று.


பெருங்கதை ஆய்வு

பெருங்கதை ஆய்வு நோக்கு

கொங்குவேள் மாக்கதை என்னும் பெயரில் வரையப்பட்ட பெருங்கதை கற்பனைக் களஞ்சியமாக விளங்கும் நூல்.இதனை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவர்.சமண சமயம் சார்ந்தவர்.

உதயணன் என்னும் மன்னனின் வாழ்க்கையைச் சுவைப்பட உரைக்கும் நூல். அக்காலத்தில் இருந்த பல்வேறு கிளைக்கதைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. இசை பற்றிய பல அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. உதயணன் இறுதியில் துறவியானதை உரைக்கும் இந்த நூலை மிகச்சிறப்பாக ஆய்ந்து, நூலுரைக்கும் கதையைக் கட்டுரைப் பாங்கில் தந்துள்ளார்.

நூல் பற்றிய பொதுவான தகவல்களைத் தந்து, பெருங்கதை நூலின் பகுதிகளை விளக்கி, உட்பகுதிகளை விளக்கி, முதல் ஆசிரியர் வரலாறு கூறிப், பெருங்கதையின் வடமொழி ஆக்கங்களைக் கூறித், திராவிடமொழிகளில் உதயணன் கதை எவ்வாறு வழங்குகிறது என்ற விவரம் தெரிவித்து அடியார்க்குநல்லார் கொங்குவேளிர் பற்றி குறிப்பிடுவனவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். பெருங்கதை என்ற இலக்கியப் பூங்காவில் நுழைய இந்த நூல் நமக்குப் பெருந்துணை புரிகிறது.

சீவகசிந்தாமணி ஆய்வுச்சிந்தனைகள்


சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்

திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி சமணசமய காப்பியமாகும்.சீவக மன்னனின் வரலாறு சொல்லும் நூல்.பண்டைக்கால இசை,இசைக்கருவிகள் பற்றிய பற்றி அறிய செய்திகளைக் கொண்ட நூல் இது.விருத்தப்பாவை மிகச்சிறப்பாக தேவர் ஆண்டுள்ளார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி கற்பவரின் அறிவுக்கு ஏற்பப் பல தகவல்களைத் தந்துகொண்டே இருக்கும்.

திருத்தக்கதேவர் வரலாறு,உரைகண்ட நச்சினார்க்கினியர் வரலாறு, பதிப்பாசிரியர் வரலாறு, காப்பிய நூலாய்வுச்சிந்தனைகள்,கதை ஆய்வுச்சிந்தனைகள், கதைமாந்தர்கள் பற்றிய விவரம், காப்பியத்தின் உட்பொருள் என்ற அடிப்படையில் தலைப்புகள் வகுக்கப்பட்டு செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. உ.வே.சா.அவர்களின் பதிப்பு நூலாசிரியருக்கு மிகுதியும் உதவியுள்ளதை நன்றியுடன் குறிதுள்ளார். சீந்தாமணிக் காப்பியத்தை எளியநிலை வாசகர்களும் ஆய்வுமுறையில் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல உள்ளத்துடன் இந்த நூலைப் படைத்துள்ள ஈழத்துப்பூராடனாரைப் பாராட்டி மகிழவேண்டும்

நூல்கள் கிடைக்குமிடம்

SEEVAN PUBLISHERS
# 3,1292 SHERWOOD MILLS BLVD
MISSISAGUA L5V 1 S 6,
ONT - CANADA

திங்கள், 8 ஜூன், 2009

முனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி


முனைவர் இரா.திருமுருகனார்

03.06.2009 இல் இயற்கை எய்திய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, 13.06.2009 சனிக்கிழமை காலை 9.30 மணிக்குப் புதுச்சேரிப் பேருந்து நிலையம் அருகில் உள்ள உருளையன் பேட்டை,செங்குந்தர் வீதியில் உள்ள J.V.R மகாலில்(மாஸ் உணவகம் எதிரில்) நடைபெற உள்ளது.தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர்.

வெள்ளி, 5 ஜூன், 2009

கோவை கற்பகம் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள்



 கோவையில் 1989 இல் நிறுவப்பட்ட கற்பகம் அறக்கட்டளை 1995 இல் கற்பகம் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கியது.அக்கல்வி நிறுவனம் படிப்படியே வளர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

 கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக விளங்குபவர் மாண்பமை இராச. வசந்தகுமார் அவர்கள் ஆவார்.மாந்த நேயம் மிக்க மாண்பாளரான இவர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். உலகின் போக்கை அறிந்து கல்வியின் அனைத்து மேம்பட்ட கல்வியையும் அருள் உள்ளத்தொடு வழங்கி வருகிறார். தமிழ்ப்பற்றும் தமிழ் ஆர்வமும்கொண்ட இவர் தமிழ் மொழி,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்பொருட்டு அனைவரும் பண்டைத்தமிழ் இலக்கியங்களை அறியும் வண்ணம் அறிஞர் தமிழண்ணல் அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பரப்பும் பணியில் மனமுவந்து ஈடுபட்டுள்ளார்.அதன் அடிப்படையில் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள் நடத்தும் பணிக்கு மனமுவந்து விருப்பம் தெரிவித்துப் பொருந்தும் வகையில் துணைநிற்க முன்வந்துள்ளார்.

 தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் 12.10.2004 இல் இந்திய நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு அறிஞர்கள் குழு தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றைச் செவ்விலக்கியமாக அறிவித்தது.

 இவற்றுள் பின்னைய இரண்டும் நீங்கலாக ஏனைய இருபத்திரண்டு நூல்களையும் இருபத்திரண்டு தாள்களாகக் கருதப்பட்டுப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் நான்கு சிறு நூல்கள் பாட நூலாக அமையும்.இவை பயிற்சி நூல்களாக எளிய நடையில் இருக்கும். ஒவ்வொரு நூல்கள் பற்றிய அறிமுகமும்,உள்ளார்ந்த சிறந்த கருத்துகளும் இந்த நூலில் இருக்கும். மிகப்பெரிய ஆய்வு நிகழ்த்துவதற்குரிய அடிப்படைகளை இந்த நூலில் காணலாம்.அதே நேரத்தில் கற்பவருக்கு எந்த மயக்கமோ, தயக்கமோ இல்லாமல் அறிஞர் தமிழண்ணல் அவர்கள் இந்தப் பயிற்சி நூலை வடிவமைத்துள்ளார்.

 கற்பகம் பல்கலைக்கழகம் இதனை ஓர் உலக அளவிலான முறையில் பரப்புவது என்ற உயரிய நோக்குடன் இத்திட்டத்தைத் தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலக்கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பிற நாடுகளிலும் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டுத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் பற்றிய சிறப்பை நிலைநாட்டுவதை நோக்கமாகக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 கற்பகம் பல்கலைக்கழகத்தில் நேர்முகப்பயிற்சிக் களங்கள் தொடர்ந்து நடைபெறும். பிற நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த தொடர்புகொள்ளலாம்.

இப்பயிற்சி அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியான பயிற்சியாகவும் அமையும்.

 22 நூல்கள் பற்றிய இப்பயிற்சி சுழற்சி முறையில் அமைந்தது.தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாரும் இதில் இணைந்து பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்பிலுள்ள காலம்,இடம், வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்பப் பயின்று சான்றிதழ் பெறலாம்.

 இந்தப் பயிற்சி நான்கு பகுப்பாகப் பகுக்கப்பட்டுள்ளது.இவற்றுள் எவையேனும் 5 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் 10 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பட்டயமும்,15 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மேற் பட்டயமும்,22 தாள்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சிறப்புநிலைப் பட்டயமும் கற்பகம் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.

 இப் பயிற்சிக் களங்களை நடத்த விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பயில விரும்பும் மாணவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகள்

முனைவர் ப.தமிழரசி
தமிழ்த்துறைத் தலைவர்,
கற்பகம் பல்கலைக்கழகம்,
ஈச்சநாரி அஞ்சல்,
கோயம்புத்தூர்-21
பேசி: 99421 70002

தமிழ்ப்பயிற்சிக்கள இயக்குநர்,
ஏரகம் 4 / 585,சதாசிவநகர் முதன்மைச்சாலை,
மதுரை-625 020
செல்பேசி : 94430 64749
தரைவழி: 0452- 2533792

பயிற்சி விவரங்கள்

கோயமுத்தூர் கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகப் பயிற்சி நடக்க உள்ளது. 2009 சூன் மாதம் 30 ஆம் நாளுக்குள் உருவா 100 அனுப்பிப் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும். பதிவு செய்ததும் அவர் விரும்பும் தாளுக்குரிய நான்கு சிறுநூல்கள் அனுப்பப்பெறும். அவற்றை அவர் நன்கு படித்து மனப்பாடம் செய்வதுபோலும் முறையில் கற்று வரவேண்டும். 2009 ஆகத்து மாதம் முதல் சனி, ஞாயிறு கிழமைகளில் வாய்ப்புக்கேற்பப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

முதற்கண் தொல்காப்பியம், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு- பாலை, அகநானூறு பிற திணைகள் இவை ஐந்தும் தொடர்ந்து நடத்தப்பெறும். இவை சான்றிதழ் பயிற்சி வகுப்பிற்குரியன.இவை ஐந்தினுக்கும் உரூவா ஐந்நூறு சேர்த்து மொத்தமாக அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.

அஞ்சல்வழி:

அஞ்சல் வழியில் பயில விரும்புவோர் ஒரு நூலுக்கு உரூவா 200 முன்னதாக அனுப்பிப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அவர்களுக்கு நான்கு அறிமுக நூல்கள் தவிர்த்து,வேறு சில விளக்கக் குறிப்புகள்,ஐயம் தீர்த்தல், வினாத்தாள்கள் எனத் தொடர்ந்து தொடர்புகொண்டு சான்றளிக்கப்படும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து தாளுக்குமாக ஆயிரம் உரூவா தொகை அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.

கணினி வழி:
உலகெங்கும் உள்ளவர்களுக்காக இதில் கூடுதல் விளக்கக்குறிப்புகளும், ஆங்கில ஆக்கப்பகுதிகள், ஐயம் தீர்த்தல்,வினா-விடைகள், என எத்தகைய எளிய நிலையினருக்கும் பயன்தருமாறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். அயல்நாட்டினர் ஒரு நூலுக்கு அமெரிக்க டாலர் 100 அனுப்பிப் பதிவு செய்துகொள்ளவேண்டும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து நூல்களுக்கும் சேர்த்து ஐந்நூறு டாலர் அனுப்பியும் பிற நாட்டார் அதற்கு ஈடான தொகை அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.

தொகை அனைத்தும் KARPAGAM UNIVERSITY என்னும் பெயருக்குக் கோயம்புத்தூரில் (COIMBATORE) மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் அனுப்பிவைக்கப்பெறுதல் வேண்டும்.

தொடர்பு முகவரிகள்

KARPAGAM UNIVERSITY
POLLACHI MAIN ROAD,
EACHANARI POST,
COIMBATORE-641 021
E.Mail : info@karpagamuniversity.ac.in
www.karpagamunivrsity.ac.in

U.S.A
MANI PERIAKARUPPAN
7903 WISTERIA CT
DUBLIN,OH 43016
Ph. 614 923-3868
cell. 614- 353 - 8268
E.Mail : mperia@yahoo.com