நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 அக்டோபர், 2008

புதுச்சேரியில் விடுதலை வீரர் சீனுவாசன்-தனலட்சுமி அறக்கட்டளை நான்காம் சொற்பொழிவு

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பெற்றுள்ள விடுதலை வீரர் சீனுவாசன்-தனலட்சுமி அறக்கட்டளையின் நான்காம் சொற்பொழிவு வரும் காரி (சனி)க்கிழமை(01.11.2008) காலை பத்து மணிமுதல் ஒரு மணி வரை புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்கவும்,சீனு திருமுகம் அவர்கள் தலைமையேற்கவும் உள்ளனர்.அறக்கட்டளை குறித்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றும் விருந்தினர் குறித்தும் திரு.சீனு.தமிழ்மணி அவர்கள் அறிமுகவுரையாற்ற உள்ளார்.திருவாளர்கள் சீனு.திருஞானம்,சீனு.சம்பந்தன் முன்னிலையில் இச்சொற்பொழிவு நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை,மன்னம்பந்தல் அ.வ.அ.கல்லூரிப் பேராசிரியர் முனைவர் த.செயராமன் அவர்கள் தமிழர் வரலாறு: திரிபுகளும் புறக்கணிப்புகளும் என்னும் பொருளில் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவாற்ற உள்ளார்.

புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2008

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை(05.09.1902-03.04.1981)

   'உரைவேந்தர்' எனத் தமிழறிஞர்களால் போற்றப்படும் ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஔவையார்குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். உள்ளூரில் தொடக்கக் கல்வியைக் கற்ற துரைசாமியார், திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் (பின்னர் வால்டர்சு கடர் உயர்நிலைப்பள்ளி என அழைக்கப் பெற்றது) பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடை நிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. ஊதியத்தின் பொருட்டுப் பணிக்குச் செல்ல நினைத்தார். உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணியில் நீடிக்காமல் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார். 
 
  உரைவேந்தரின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடையக் குடும்பம். தந்தையார் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர். எனவே உரை வேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. அ.ஆ. உயர்நிலைப் பள்ளியில் பயின்றகாலை தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் தமிழறிவு ஊட்டியவர். அவர்களிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியை வாங்கி உரைவேந்தர் ஆராயும் திறன்பெற்றிருந்தார். தமிழ் ஆர்வம் கொண்ட உரைவேந்தர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய மனம் விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் உரை வேந்தரின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். பள்ளிப் பணி புரிந்த வண்ணம் தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். 
 
  கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப்புலமையறிந்த உரைவேந்தர் அவர்கள் வழியாகத் தமிழறவு பெற நினைத்தார். 1925 முதல் 1928 வரை கரந்தையில் உரைவேந்தர் தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். பிற்காலத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிபுரிவதற்கும், பல்வேறு நூல்களுக்கு உரை வரைவதற்கும் அடிப்படையாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தொடர்பு எனில் மிகையன்று. 
 
 உரைவேந்தர் அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) பிறந்த உலோகாம்பாள் ஆவார். இல்லறம் நல்லறமாக அமைய இவர்களுக்குப் பதினொரு மக்கட் செல்வங்கள் வாய்த்தனர். இருவர் பிறந்த சில நாட்களில் மறைந்தனர். எஞ்சிய ஒன்பது மக்கட் செல்வங்களுள் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் நாடறிந்த அறிஞராக விளங்குபவர். மருத்துவர் மெய்கண்டான் அவர்கள் புகழ்பெற்ற மருத்துவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. 
 
  துரைசாமியார் அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத் திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து பல நூறு மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு,சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர். 
 
  கரந்தையைவிட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம்-காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி உரைவேந்தர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது. இவரிடம் தமிழ் கற்றவர்களுள் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் (செய்யாறு) குறிப்பிடத் தக்கவர். இவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்லவர். இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் உள்ளிட்ட ஆங்கில நூல்களைத் தமிழிற்குப் பெயர்த்து வழங்கியவர். மேலும் தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவராகவும் இவர் பணியாற்றியவர். 
 
  உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதியவர். 1939 இல் உரைவேந்தர் போளூரில் பணிபுரிந்தபொழுது மாவட்டக் கல்வியதிகாரி ச.சச்சிதானந்தம் பிள்ளையின் வழியாக உரைவேந்தரின் பெருமையைக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையாப் பிள்ளை அறிந்து அவருடன் தொடர்புகொண்டார். அதன் பிறகு சீவக சிந்தாமணிச் சுருக்கம் உள்ளிட்ட நூல்கள் கழகம் வழியாக வெளிவரத் தொடங்கின. 
 
  உரைவேந்தர் அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் மகிழ்ந்தார். அம் மொழி இலக்கியங்கள், வரலாறு அறிமுகம் ஆயின. நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் மணிமேகலை நூலுக்கு உரைவரைந்தபொழுது இறுதிப் பகுதிகளுக்கு உரைவரைந்து முடிக்கும் முன் இயற்கை எய்தினார். இறுதி நான்கு காதைகளுக்கு உரைவேந்தர் அவர்கள் உரை வரைந்தார். அவ்வாறு உரை எழுதத் திருப்பதியில் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்கள் வழியாகப் புத்தமதக் கருத்துகள் அடங்கிய பகுதிக்கு விரிவாக உரை வரைந்தார். 
 
  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் உரைவேந்தர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரைவரையும் பேறு பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். உரைவேந்தர் அவர்களின் தமிழறிவையும் சைவ சித்தாந்த ஈடுபாட்டையும் அறிந்த தியாகராசர் தம் துணைவியார் இராதா தியாகராசனார் அவர்களுக்கு இவரை ஆசிரியராக அமர்த்தித் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஈடுபாடு வரும்படி பயிற்றுவிக்கச் சொய்தார். 
 
  உரைவேந்தர் அவர்கள் மதுரையில் பணிபுரிந்தபொழுது இவரிடம் பயின்ற மாணவர்கள் புகழ்பெற்ற பேராசிரியர்களாகவும், கவிஞர்களாகவும் பின்னாளில் விளங்கினர். உரைவேந்தர் அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல்பெற்றவர். பேசுவதுடன் அமையாமல் உரையாகவும் நூலாகவும் தம் அறிவை நிலைப்படுத்தி வைத்துள்ளார். உரைவேந்தர் அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் வரைந்த உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரை வெளிப்பட்டதால் உ.வே.சா அவர்களுக்குக்கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார். புறநானூற்றுக்கு உரைவரையும்பொழுது உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத படி ஒன்று பள்ளியூர்த் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் அவர்களால் படி எடுக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்ணுற்றுத் தம் பதிப்பைச் செப்பம் செய்தார்.உ.வே.சாவின் பதிப்பில் உள்ள பின்னுள்ள 200 பாடல்களுக்குப் பல்வேறு திருத்தங்களை உரைவேந்தரின் இப்பதிப்பு வழங்கியுள்ளது. 
 
  உரைவேந்தர் நற்றிணை நூலுக்கு வழங்கிய உரையும் பல சிறப்புகளைக் கொண்டது. பின்னத்தூரார் முதன்முதல் நற்றிணைக்கு உரைவரைந்த பெருமைக்கு உரியவர். அதன் பிறகு வையாபுரிப்பிள்ளை வழங்கியது உள்ளிட்ட நான்கு படிகளைப் பின்னத்தூராரின் படிகளுடன் ஒப்புநோக்கி உரைவரைந்த பொழுது பின்னத்தூரார் நூலைவிட 1500 மேற்பட்ட பாட வேறுபாடுகள் உரைவேந்தரின் பதிப்பால் தெளிவுபெற்று நற்றிணை விளக்கம்பெற்றது. உரைவேந்தரின் தமிழ்ப்பணிகளை நினைத்துக் கலைத்தந்தை கருமுத்து. தியாகராசனாரும் பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கமும் இவர்தம் குடும்பத்தைப் பேணினர். பண்டித மணியார், வ.சுப.மாணிக்கம், பாவேந்தர் உள்ளிட்ட அறிஞர்கள் உரைவேந்தரை உயர்வாகப் போற்றியுள்ளனர். 
 
பாவேந்தர் உரைவேந்தரைப் பற்றி, 
 
 "பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் 
கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன் 
பாயாத ஊருண்டோ! உண்டா உரைவேந்தை 
வாயார வாழ்த்தாத வாய்" 
 
என்று பாராட்டி மகிழ்வார். 
 
  உரைவேந்தரின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் உரைவேந்தருக்கு மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழாவாண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). குதிரை பூட்டப்பெற்ற சாரட்டு வண்டியில் பேராசிரியரை அமர்த்தி மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து நான்கு சித்திரை வழியாக இன்னிசை முழங்க அழைத்துவரப் பெற்றார். கலையன்னை இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அங்குக் குழுமியிருந்த சான்றோர் உள்ளிட்ட மக்கள் உரைவேந்தர் வாழ்க! என முழக்கமிட்டு மகிழ்ந்தனர். 
 
 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூதறிஞர் செம்மல் உரைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் பணிபுரிந்தபொழுது "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் ஆளுநர் பிரபுதாசு பட்டுவாரி அவர்கள் வழியாக வழங்கிச் சிறப்பித்தார்கள் (1980). 1981 ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது உரைவேந்தருக்கு இந்தியப் பிரதமர் திருவாட்டி இந்திராகாந்தி அவர்கள் வழியாகத் தமிழக முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் பத்தாயிரம் உருவா பணமுடிப்பும் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்ப்பணி தவிர வேறொரு உலகியல் வாழ்வும் அறியாத நம் உரைவேந்தர் அவர்கள் தமது 79 ஆம் அகவையில் மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். 
 
 உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப் புகழை என்றும் பேசுவனவாகும். தமிழரின் அறிவு வரலாற்றை நிலைப்படுத்திய புலவர் பெருமானின் முழுமையான வரலாறு அமையப் பெறாதது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறையேயாகும். 
 
உரைவேந்தர் அவர்களின் தமிழ்க்கொடை:
 
 01.ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி(அச்சாகவில்லை) 
02.ஐங்குறுநூறு உரை 
03.ஒளவைத் தமிழ் 
04.சிலப்பதிகார ஆராய்ச்சி 
05.சிலப்பதிகாரச் சுருக்கம் 
06.சிவஞானபோதச் செம்பொருள் 
07.சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும் 08.சீவக சிந்தாமணி ஆராய்ச்சி 
09.சீவக சிந்தாமணிச் சுருக்கம் 
10.சூளாமணி 
11.சைவ இலக்கிய வரலாறு 
12.ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13.தமிழ்த்தாமரை 
14.தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும் 
15.திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை 
16.திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்) 
17.திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை 
18.தெய்வப்புலவர் திருவள்ளுவர் 
19.நந்தாவிளக்கு 
20.நற்றிணை உரை 
21.பதிற்றுப்பத்து உரை 
22.பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு 
23.பரணர் 
24.புதுநெறித் தமிழ் இலக்கணம்(2 பகுதிகள்) 
25.புறநானூறு மூலமும் உரையும்(2 பகுதிகள்) 
26.பெருந்தகைப் பெண்டிர் 
27.மணிமேகலை ஆராய்ச்சி 
28.மணிமேகலைச் சுருக்கம் 
29.மதுரைக்குமரனார் 
30.மத்த விலாசம்(மொழிபெயர்ப்பு) 
31.மருள்நீக்கியார் நாடகம்(அச்சாகவில்லை) 
32.யசோதர காவியம் மூலமும் உரையும் 
33.வரலாற்றுக் கட்டுரைகள்(வரலாற்றுக் காட்சிகள்) 
34.Introduction to the Study of Thiruvalluvar 
 
அச்சில் வெளிவந்த கட்டுரைகள்:
 
ஆர்க்காடு, ஊழ்வினை, சிவபுராணம், ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை, தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமைப் பேருரை.
 
 உதவிய நூல்: 
முனைவர் ச.சாம்பசிவனார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்,சாகித்திய அகாதெமி வெளியீடு)2007.

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

கார்த்திகேசு சிவத்தம்பி (10.05.1932)

முனைவர் கா.சிவத்தம்பி அவர்கள் 

     இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர். க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில்கவனம்பெற உழைத்த க.கைலாசபதி, கா.சிவத்தம்பி எனும் இருவரும் என்றும் தமிழர்களால் நன்றியுடன் போற்றத்தக்கவர்களே. 

 க.கைலாசபதி கிரேக்க வீரநிலைக் கவிதைகளுடன் சங்க இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து 1966 இல் Tamil Heroic Poetry (தமிழ் வீரநிலைக் கவிதை) என்னும் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கா.சிவத்தம்பி அவர்கள் 1970 இல் பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கிப் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவ்விரு ஆய்வேடுகளும் உலக அளவில் அனைவராலும் மதிக்கப்படும் ஆய்வுத்தரத்தன. ஈழத்து இரட்டை அறிஞர்களான இவ்விரு அறிஞர்களுள் கா.சிவத்தம்பியின் வாழ்வையும் இலக்கியப் பணிகளையும் இக்கட்டுரை நினைவுகூர்கிறது. 

 கா.சிவத்தம்பி இளமை வாழ்க்கை 

 கா.சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் 1932,மே பத்தாம் நாள் பிறந்தவர். பெற்றோர் கார்த்திகேசு, வள்ளியம்மை அவர்கள்.தந்தையார் பண்டிதராகவும் சைவப் புலவராகவும் விளங்கியவர். எனவே சிவத்தம்பி அவர்களுக்கு இளமையில் கல்வியார்வம் தழைக்க வாய்ப்பு மிகுதியாக இருந்தது. கரவெட்டி விக்கினேசுவரா கல்லூரியில் தொடக்கக் கல்வியையும்,கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1956), முதுகலைப்(1963) பட்டங்களைப் பெற்றவர்.1970இல் பர்மிங்காம் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வேடு பலதுறைச் செய்திகளை உள்ளடக்கி வெளிவந்த ஆய்வேடாகும். 

     தமிழ் நாடகத்தின் தோற்றம் பற்றி விரிவாக ஆராயும் இவர்தம் ஆய்வேட்டில் கிரேக்க நாடகங்களின் தோற்றம், வளர்ச்சி, தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. அதுபோல் தொல்காப் பியம்,சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்கள் கல்வெட்டுகள், நாணயங்கள் உள்ளிட்ட தரவுகளை உட்படுத்தி தம் ஆய்வை சிவத்தம்பி நிகழ்த்தியுள்ளார். எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு ஆய்வுகளை எளிமைப்படுத்தி முனைவர் பட்டம் பெறும் இக்காலச் சூழலில் இவ்வாய்வேட்டின் தரவு தொகுப்பு, வகைப்படுத்தல், ஆய்வு செய்தல் ஆங்கிலத்தில் எழுதுதல் எனப் பல கட்டங்களைத் தாண்டியே இவர் ஆய்வு நிகழ்ந்துள்ளது. தமிழக வரலாறு,சமூக அமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இவ்வாய்வேட்டில் விளக்கப்பட்டுள்ளன.

    கா.சிவத்தம்பியின் முனைவர் பட்ட ஆய்வுநூல் ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட ஆய்வேடு பத்தாண்டுகளுக்குப் பிறகு திருத்தங்களுடனும் கூடுதல் செய்திகளுடனும் 1980 அளவில் புது நூற்றாண்டுப் புத்தக நிறுவனத்தின் வழியாக வெளிவந்தது.அந்த நூல் தமிழக அரசின் சிறந்த பரிசினையும் பெற்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களால்(சிவத்தம்பி அவர்களின் மாணவர் இவர்) மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. சிவத்தம்பியின் ஆய்வேடு வெளிவந்த பிறகு தமிழின் மிகப்பெரிய துறைகளுள் ஒன்றாக இருக்கும் நாடகத்துறை பற்றிய விழிப்புணர்ச்சி ஈழத்தில் ஏற்பட்டது. பாடத்திட்டங்களில் நாடகம் முதன்மை இடம்பெற்றது. பல மாணவர்கள் நடிக்கவும் ஆராயவும் இத்துறையில் புகுந்தனர். தமிழ் நாடகம் இவ்வாய்வேட்டின் வருகைக்குப் பிறகு ஈழத்தில் மறுமலர்ச்சி பெற்றது எனலாம். தமிழகத்து அறிஞர்களும் நாடகத்துறையில் கவனம் செலுத்த இந்த நூல் ஒரு காரணமாக அமைந்தது. 

     சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பதினேழு ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து, செர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின் அழைப்பின்பேரில் சிறப்புரைகள் வழங்கித் தமிழாய்வுப் புலத்தில் ஆக்கப்பணிகள் புரியும் கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை வியப்பளிக்கிறது.தமிழ்ப்பேராசிரியராகவும்,பன்மொழி அறிஞராகவும்,கலை விமர்சகராகவும்,சிந்தனையாளராகவும்,அரசியில் அறிவு நிரம்பியவராகவும் விளங்குபவர். 

 கா.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை 

 கா.சிவத்தம்பி அவர்கள் மார்க்சியநோக்கில் திறனாய்வு செய்பவர் என்பது ஆய்வுலகம் நன்கு அறிந்த ஒன்றாகும்.ஆனால் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதும்,நாடக எழுத்தாளர் என்பதும் பலநாடகங்களை எழுதியவர்,இயக்கியவர்,நடித்தவர் என்பதும் தமிழுலகம் பரவலாக அறியாத ஒன்றாகும்.இலங்கையின் நாடக மரபுகளை மீட்டெடுத்த வித்தியானந்தன், சிவத்தம்பியின் பணிகளை ஈழத்து அறிஞருலகம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. தமிழ் நாடக வளர்ச்சியில் கா.சிவத்தம்பியின் பங்களிப்பு மிகப்பெரியது என மௌனகுரு குறிப்பிடுவார். கூத்து, நாடக, அரங்கியல் சார்ந்த செய்திகளைப் பாடத் திட்டத்தில் கொண்டு வந்தவர் கா.சிவத்தம்பி அவர்கள். பல கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இவர் இடம்பெற்ற பொழுதெல்லாம் இவர் தரமான பாடத்திட்டங்கள் அமைய உதவியுள்ளார். 

    பல்கலைக்கழகப்பணிக்காலத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தவர். வானொலி நாடகங் களிலும் நடித்துள்ளார். இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில் ' தொடர்நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்.இவரின் நடிப்பு இவருக்கு நல்ல புகழை ஈட்டித்தந்தது. கைலாசபதியும் இந்நாடகத்தில் நடித்ததாக அறியமுடிகிறது. நாட்டார் இயல் ஆய்வுகளில் கா.சிவத்தம்பி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். முல்லைத் தீவில் இவர் ஏற்பாடு செய்திருந்த நாட்டாரியல்விழா அனைவராலும் நினைவு கூரத்தக்கது. நாடகம், கூத்து இவற்றின் ஊடாகத்தமிழ் மக்களை,தமிழர்களின் பண்பாட்டை அறிய முனைந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத் துறைத்தலைவராகப் பணிபுரிந்தபொழுது பல்வேறு நாடக முயற்சிகள் வளர்முகம் கண்டன. யாழில் புதிய நாடகமரபு உருவானது. ஈழத்துப்பகுதியில் நடிக்கப்பெற்ற கூத்துகளின் வழியாக புதிய நாடகமரபுகளைக் கட்டமைக்கும் முயற்சியில் சிவத்தம்பி முன்னின்றார். வன்னிப்பகுதியில் வழக்கத்தில் இருந்த கூத்துகள் உள்ளிட்ட பிற கலைகளை வளர்க்க மாநாடு, கருத்தரங்குகளை நண்பர்களின் துணையுடன் செய்தவர். 

     மௌகுருவின் இராவணேசன் என்னும் புகழ்பெற்ற நாடகம் சிறந்தவடிவம் பெற்றதில் சிவத்தம்பிக்குப் பெரும் பங்கு உள்ளதை மௌனகுரு குறிப்பிடுவார்.கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் இடம்பெறும் இராவணனின் பாத்திரப்படைப்பை விளக்கி,இராவணன் பாத்திரத்தைக் கோபம்,வெட்கம்,ஏளனச்சிரிப்பு இவற்றைக் கொண்டு மிகச்சிறப்பாக வடிவமைக்க சிவத்தம்பி உதவியதை மெனகுரு நன்றியுடன் நினைவுகூர்வர். கா.சிவத்தம்பி மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் வல்லவர்.இவர்தம் வகுப்புகள் நான்கு மணி நேரம்வரை நீண்டுவிடுமாம். அவ்வளவு நேரமும் மாணவர்கள் ஆர்வமுடன் அமர்ந்து படித்துள்ளனர். தொல்காப்பியம். அகத்திணை மரபுகள்,நாடகம் பற்றி பாடம் நடத்துவதில் கா.சிவத்தம்பி அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாம். தமிழ்இலக்கியம், சமயநூல்கள், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலைகளில் நல்ல புலமைபெற்றிருந்த கா.சிவத்தம்பி அவர்கள் இத்துறை சார்ந்த திறனாய்வுக் கட்டுரை களையும் நூல்களையும் எழுதியுள்ளார். இத்துறை சார்ந்து பல இடங்களில் பேசியுள்ளார். இவர் கட்டுரைகளை நூல்களைக் கற்றவர்களும் இவரிடம் நேரடியாகக் கற்றவர்களும் இவர் வழியில் ஆய்வுகளை மேற்கொள்வது ஒன்றே இவரின் அறிவுத் திறனுக்குச் சான்றாக அமையும். 

    இவரின் மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர். தமிழகத்துப் பல்கலைக் கழகங்கள்,கல்வி நிறுவனங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள கா.சிவத்தம்பி அவர்கள் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள்,கல்வியளர்கள் இளைஞர்களுடன் நல்ல உறவுகொண்டவர்.அவர்களின் நூல்களைக் கற்று நூல்குறித்த சிறப்புகளை எடுத்துரைத்துப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டவர். தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாக்கள்,கலைவிழாக்களை நன்கு உற்று நோக்கி விமர்சிப்பவர். ஈழத்து அரசியல் எழுச்சியில் இவரின் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

     சிவத்தம்பியின் தமிழ்ப்பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.இலங்கை சப்பானிய நட்புறவுக்கழக விருது பெற்றவர்.2000 இல் இவர் பெயர் உலக அளவிலான புலமைப்படியலில் இடம்பெற்றுள்ளது. பல அமைப்புகள் இவருக்குப் பரிசில்கள் பாராட்டுகள் வழங்கியுள்ளன.கா.சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்து அகவை நிறைவையட்டி அவரின் அன்பிற்கு உரியவர்கள் பல விழாக்களை எடுத்துக் கொண்டாடியும் அவர்களின் அன்பு வெளிப்படும்படி நூல்கள் வெளியிட்டும் கருத்தரங்குகள் நிகழ்த்தியும் அவரின் தமிழ்ப் பணிகளை மதித்தனர். 

     பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுடன் பழகியவர்கள் பயின்றவர்களின் பங்களிப்புடன் கானா பிரபா அவர்கள் பேராசிரியரின் பலதுறைப் பங்களிப்புகளை ஒலிப்பதிவு செய்து வானொலி வழியும் இணையம் வழியும் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது மற்றவர்களுக்கு அமையாத பெருஞ்சிறப்பாகும்.இவ் வானொலி, இணைய ஒலிப்பதிவில் பேராசிரியரின் மாணவர்கள், அன்பிற்குரியவர்களான அம்மன்கிளி முருகதாசு, மௌனகுரு, பாலசுகுமார், வீ.அரசு ஆகியோரின் உரைகள் பேராசிரியரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. 

     கா.சிவத்தம்பி அவர்களின் பணிகள் செப்பமுடன் நடைபெறுவதற்குக் காரணம் அவரின் துணைவியார் ரூபவதி நடராசன் அவர்களாவார். பேராசிரியரின் பணிகளுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் உதவியது இவரே. எழுத்துப்பணிகள், ஆய்வுப் பணிகள், குடும்பப் பொறுப்புகளில் அம்மையார் பல வகையில் துணைநின்றவர். இவர்களுக்கு கிரித்திகா, தாரிணி,வர்த்தினி என்னும் மூன்று மக்கள் செல்வங்களாவர். 

    பேராசிரியரின் முதல் நூல் மார்க்கண்டன் என்பதாகும். தமிழ்ச்சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்(1966) என்ற இவரின் நூல் அனைவராலும் பேசப்படும் ஒன்றாகும்.தமிழ்மொழி, இலக்கியம்,கவின்கலைகள், சமூகம், மானுடவியல், அரசியல் சார்ந்த பல நூல்களை மார்க்சியப் பார்வையில் எழுதியுள்ள சிவத்தம்பி அவர்கள் தமிழ் ஆராய்ச்சி உலகில் புதிய வீச்சுகளை வழங்கியவர் எனில் மிகையன்று. இவர்தம் ஆய்வுப் போக்குகளைத் தாங்கி அடுத்த தலைமுறை ஆய்வாளர்கள் சிவத்தம்பியின் பணிகளைத் தமிழுலகில் நிலைநாட்டுவர். 


 1. இலங்கைதமிழர் -யார்,எவர்? 
2. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு 
3. தமிழில் இலக்கியவரலாறு 
4. இலக்கணமும் சமூக உறவுகளும் 
5. மதமும் கவிதையும் 
6. தமிழ் கற்பித்தலில் உன்னதம் 
7. தமிழ்ப்பண்பாட்டில் சினிமா 
8. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி 
9. ஈழத்தில் தமிழ் இலக்கியம் 
10. யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல் 
11. சுவாமி விபுலானநந்தரின் சிந்தனைநெறிகள் 
12. திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு 
13. தமிழ் கற்பித்தல் 
14. தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா(பாட விமர்சனவியல் நோக்கு) 
15. தமிழின் கவிதையியல் 
16. தொல்காப்பியமும் கவிதையும் 
17. உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.1851-கி.பி.2000) 
18. சசியாக்கதை 
19.யாழ்ப்பாணம் சமூகம்-பண்பாடு, கருத்துநிலை முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கன 

 நனி நன்றி: 

தமிழ் ஓசை நாளேடு, களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள்,  வரிசை 5 (26.10.2008)

புதன், 22 அக்டோபர், 2008

தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார்


புலவர் இரா.இளங்குமரனார்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம்,புறத்திரட்டு,திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட திரு. இளங்குமரனார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர்.

திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்த நாள்போக எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் வரும் இவர்தம் தமிழ் வாழ்வை எளியேன் பலவாண்டு களாக உற்றுநோக்கி உவந்து வருபவன்.

யான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் படித்து நிறைவுற்ற பிறகு ஓர் உறுதி மேற்கொண்டிருந்தேன்.முதுகலை பயின்ற பிறகு தமிழில் கற்கத் தகுவன நிறைய உள்ளன எனும் அறிவுத்தெளிவு பெற்றனன்.முதுகலை நிறைவுற்றதும் அறிஞர் யாரிடத்திலேனும் குருகுல முறையில் தமிழ் ஆராய நினைத்திருந்தேன். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி அவர்களிடத்தில் அத்தகு தமிழ் வாழ்வை அமைக்கவும் அது அமையவில்லை எனில் அறிஞர் இரா.இளங்குமரனாரிடத்துத் தங்கி அடிப்பணி செய்து தமிழ் கற்கவும் நினைத்திருந்தேன்.

ஆனால் அவையெல்லாம் தகுதிகளாக இவ்வுலகியல் மாந்தர் நினையார் என நினைத்துக் கல்விக்கூடங்களில் படிக்கும்படி நேர்ந்தது.என்றாலும் இரண்டு அறிஞர்களிடமும் நெருங்கிப் பழகுவதை மேம்படுத்திக்கொண்டே வந்தேன். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளியில் இரு முறை அறிஞர் இளங்குமரனாரைப் பார்த்திருந்தேன். எனினும் புதுவைப் பல்கலையில் படித்தபொழுது என் கெழுதகை நண்பர் அ.சந்திரசேகரனார் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்வு ஒன்றில் தான் இரா.இளங்குமரன் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது.பின்னர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த காலத்தில் திருச்சிராப் பள்ளியின் அருகில் தவச்சாலை உருவானதால் அங்கிருந்த மிகச்சிறந்த தமிழ் நூலகத்தை முழுமையாக்கப் பயன்படுத்தும் பேறு பெற்றேன்.ஐயா அவர்கள் தொட்டுப் பயன்படுத்திய
அத்தனை நூல்களையும் பார்த்தும்,படித்தும் பயன்கொண்டேன்.

செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், குறளியம் உள்ளிட்ட இதழ்களையும் பாவாணர் குறித்த நூல்கள் திருக்குறள் சார்ந்த பல நூல்கள், இலக்கணம், இலக்கியம் சார்ந்த பல நூல்களைப் பயன்படுத்தினேன். பாவேந்தரின் குயில் இதழ்கள் கற்று உவந்தேன்.என் ஆய்வு உருப்பெற உதவிய நூலகங்களில் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.(அந்த நாளில் அங்கு நூலகராகப் பணி புரிந்த திரு.செந்தமிழாதன் என்னும் தென்மொழி அன்பரைக் குறிப்பிடுதல் பொருத்தம்.அவர் அருகிருந்த இலமனூர் ஊரினர்.அவர் ஐயா மேல் மிகுந்த மதிப்புக் கொண்டவர்.குயில் இதழ் தொகுப்பு உள்ளிட்ட நூல்கள் சிலவற்றை அவர் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியதாக அறிந்தேன்.காரி,ஞாயிறு கிழமைகளில் என் வருகைக்காகக் காத்திருப்பார். தூயதமிழ் மாந்தியும் பெருஞ்சித்திரக் கடலுள் மூழ்கியபடியும்காவிரியாற்றில் இருவரும் கரையேறுவோம்.எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.அவருக்கு நம் ஐயா அவர்கள் இயன்ற வகைகளில் உதவி வந்தார்.அவர் இல்லத்திற்கு நான் ஒருமுறை சென்றுள்ளேன்.அன்பு ததும்பும் நெஞ்சினர்.)

ஐயா இரா.இளங்கமரனார் அவர்கள் பல நாள் என்னிடம் திறவியை வழங்கி நூலகத்தைப் பயன்படுத்தும்படி சொல்வார்கள். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது (1997-98) தமிழியல் ஆவணம் என்னும் திட்டப் பணிக்குத் தரவுகள் திரட்ட பாவாணர் நூலகத்தில் கிழமைக் கணக்கில் தங்கிப்படித்த பட்டறிவும் உண்டு.நூலகத்தைப் பயன்படுத்தியதோடு, ஐயா அவர்கள் ஊரில் இருந்தால் தமிழ் பற்றி உரையாடி மகிழ்வதும் உண்டு.தம் அயலூர்ச் செலவுகள் பற்றிக் குறிப்பிடுவதும் உண்டு.

ஐயா இரா.இளங்குமரனாரின் கையெழுத்தில் யான் மயங்கிக்கிடப்பேன். அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரல்பட இருக்கும்.அவர் எழுதி அடித்துத் திருத்தியதை யான் பார்த்ததில்லை. இரவில் கூட அறிவு உணர்வு எழுச்சியுற்றால் இருட்டில் தம் தலைமாட்டில் உள்ள கரிக்கோலால் தாளில் எழுதும் பழக்கம் உடையவர்.காலையில் வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தால் அவை மிகச் செப்பாமான எழுத்துகளாக இருக்கும்.உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வெளிப்பாடும் தெளிவாக இருக்கும்.

எழுதுவதும் படிப்பதும் இவர்தம் இயல்பு.மிகச்சிறந்த நினைவாற்றல் உடையவர்.திருக்குறள் புலமைக்கு ஒப்புமை காட்ட முடியாது.இலக்கணத்தில் நுண்தேர்ச்சி.மருத்துவ அறிவு பெற்றவர்.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார். தமிழ் மொழி, இன. நாட்டுப் பற்றில் முதன்மையானவர். தமிழீழ விடுதலையில் மிகுந்த நம்பிக்கை உடையவர்.உலக வரலாறுகள் கற்றவர்.

பாவாணர்,திரு.வி.க.வாழ்வியலை மிக உயர்வாக மதிப்பவர். மூத்த அறிவுடையோர் கேண்மையுடையவர். தமிழ்மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்றவர். மதியாதார், தலைவாசல் மிதியாதவர்.எளிய நிலையில் இருப்பவரிடத்தும் உள்ளன்புடன் பழகுவார். தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதித்தவரையும், தமிழ்மொழியை இழித்தவரையும் பொங்கியெழுந்து சீறிப்பாய்ந்து எதிர்க்கும் மான மற வேங்கை.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது யான் பதிப்பித்த விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் தன் வரலாறு என்னும் நூலுக்கு ஐயா அவர்கள் வரைந்த அணிந்துரை என்னை அறிஞர் உலகின் முன் மிகச்சிறப்பாக நிறுத்தியது. என்னை ஐயா அவர்கள் எந்த அளவில் தமிழுக்கு உழைப்பேன் என நம்பி எழுதினார்களோ அதற்கு ஒரு எள் மூக்களவும் குறைவில்லாமல் அவர்களின் நம்பிக்கை பொய்க்காதவனாக வளர்ந்து வருகிறேன்.அவர்தம் தமிழ் வாழ்க்கையைப் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.


இலக்கியச்செம்மல் இரா.இளங்குமரனார் அவர்களின் தமிழ் வாழ்க்கை

இரா.இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர்.தந்தையார் படிக்கராமர்,தாய் வாழவந்தம்மையார். தந்தையாரிடம் இருந்த தமிழறிவு கணக்கு அறிவு மகனாரிடத்து நின்று நிலவியது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம்மை ஆயத்தம் செய்து கொண்டு தம் பச்சிளம் பருவத்திலேயே 08.04.1946 இல் ஆசிரியர் பணிமேற்கொண்டார்.

பின்னர் தனியே தமிழ் கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றார்(1951). பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த இரா.இளங்குமரனார் தம் பதினான்காம் அகவை முதல் பாடலியற்றும் திறன்பெற்றிருந்தார். இப்பயிற்சி பின்னாளில் குண்டலகேசி என்னும் காவியம் உருவாக வழிவகுத்தது. இக்காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின.பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச்செய்வது நூலாக்கப் பணிகளேயாகும்.பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணிபுரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

அறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் நூல்கள் யாவும் இதுபொழுது தமிழ்மண் இளவழகனார் அவர்கள் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன.அயல்நாடுகள் பலசென்று தமிழ்ப்பொழிவு ஆற்றிய பெருமைக்கு உரியவர்.தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள்,விருதுகளை வழங்கியுள்ளது. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் கா.காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

இவர் தம் தவச்சாலைக்கு அயலகத் தமிழர்கள் உறவினர்கள் போல் வந்து தங்கிச்செல்லும் வண்ணம் விருந்து மாளிகையாகவும் அதனைப் பராமரித்து வருகிறார்.

(இவர்தம் தமிழ் வாழ்வை மீண்டும் நினைவு கூர்வேன்.முழுமைப்படுத்தி வெளியிடுவேன்.)

செவ்வாய், 21 அக்டோபர், 2008

தனித்தமிழ் அரிமா புலவர் கி.த.பச்சையப்பனார்


புலவர் கி.த.பச்சையப்பனார்

 மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் தமிழ்க் கனவைச் செயல்வழி மெய்ப்பித்தவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் ஆவார்.

 ஆம். தமிழ் ஓசை நாளேடு, மக்கள் தொலைக்காட்சி இவற்றின் வழியாகத் தமிழ் மொழிக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் இவர் ஆற்றும் பணிகளை இவர்தம் அரசியல் எதிரிகள்கூட நன்றியுடன் போற்றுவது உண்டு.

 இந்த ஊடகங்களில் தமிழ் மணப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குபவர்களுள் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்கள் தலையாயவர். மொழிநடை ஆசிரியர் என்னும் பொறுப்பளிக்கப்பட்டு மொழிச்செப்பம் அமையத் தமிழ் ஓசை நாளேட்டில் பணிபுரிபவர்.

 அண்மையில் சென்னையில் நெஞ்சுவலி நோய்க்கு ஆட்பட்ட புலவர் கி.த.பச்சையப்பனார் அவர்கள் முறையான பண்டுவத்திற்குப் பிறகு உறவினரின் திருமணத்தின் பொருட்டுப் புதுச்சேரி வந்திருந்தார்.

 அவர் வருகையை அறிந்து நானும் எழுத்தாளர்கள் திரு.மகரந்தன், திரு.சீனு.தமிழ்மணி ஆகியோரும் 32, மேட்டுத்தெரு, குயவர்பாளையம் என்னும் முகவரியில் உள்ள அவர்தம் உறவினரின் இல்லத்திற்குச் சென்று புலவர் அவர்களை நலம் வினவி மீண்டோம்(20.10.2008 இரவு 8-9).

 எங்களைக் கண்டதும் தம் போராட்ட வாழ்க்கையை மெல்ல அசைபோட்டார். நெஞ்சுவலி நோய் (மாரடைப்பு) தாக்குவதற்கு முன்நாள் அறிஞர் ஆனைமுத்து அவர்களின் சிந்தனையாளன் அலுவலகத்தில் இதழ்ப்பணிகளில் புலவர் பெருமகனார் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு வரை அப்பணி நீண்டது. அதன் காரணமாக அக்கொடிய நோயின் பிடியில் சிக்கினார். முறையான மருத்துவ ஆய்வுகளுக்குப் பிறகு அந்நோய்ப் பிடியிலிருந்து மீண்டார்.

 புலவர் கி.த.ப.அவர்களை முழுமையான ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். புயலைக் குடுவையில் அடக்கமுடியுமா?

ஆம்.

 நம் புலவர் அவர்கள் காலையில் புதுச்சேரியில் இருப்பார். பகலில் சென்னையில் போராட்டத்தில் இருப்பார். மறுநாள் கன்னியாகுமரியில் உண்ணாநோன்பில் தலைமை ஏற்பார். மறுநாள் தஞ்சையில் தமிழ்வழிக் கல்விக்குக் குரல் கொடுத்துப் பேசுவார். அந்த அளவு பம்பரமாகச் செய்பட்டவர்.

 இளமையில் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் கற்ற பெரும்புலமையாளர். தமிழாசிரியராகப் பல பள்ளிகளில் பணிபுரிந்தவர். புதுச்சேரி இந்தியாவுடன் இணையப் போராடி அடிபட்டவர். பிறப்பிலேயே வீரமும் தமிழ்ப்பற்றும், போராட்டக் குணமும் அமையப்பெற்ற நம் புலவர் அவர்கள் தமிழகத் தமிழாசிரியர் கழகம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் தலைமை தாங்கிப் பணிபுரிபவர்.

 ஈழத்து மக்களுக்குக் குரல்கொடுப்பவர். தமிழியக்கம் என்னும் இதழின் ஆசிரியராகப் பணிபுரிபவர். 23.10.1935 இல் புதுச்சேரியில் கி.தங்கவேல், தனம் அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த புலவர் அவர்கள் புதுச்சேரி கலவைக் கல்லூரியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலையில் ஓராண்டு பயின்றவர். தம் அரசியல் ஈடுபாட்டால் அப் படிப்பை இடையில் விட்டவர்.

 மயிலம் கல்லூரிப் படிப்பிற்குப் (1955-59) பிறகு அரக்கோணம் ,செங்கழுநீர்ப்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழ், பொதுவுடைமை, பகுத்தறிவு, திராவிட இயக்க உணர்வை மாணவர்களுக்கு ஊட்டி வளர்த்தவர். புலவர் பெருமான் முழு உடல்நலம் பெற்று மீண்டும் தமிழ்ப்பணிக்குத் திரும்ப அன்புடன் அழைக்கின்றோம்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

முனைவர் நா.கண்ணன்(கொரியா)


முனைவர் நா.கண்ணன்

இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும்.தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும்.இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத்தளம் உள்ளது.இத்தளத்தில் அரிய தமிழ்நூல்கள்,ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், படங்கள், ஒலிவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.உலகு தழுவிய அமைப்பாக இவ்வமைப்பு செயல்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இத்தளத்திற்குச் செய்திகளை மின்வடிவப்படுத்தி வழங்கினாலும் இதன் மூளையாக இருந்து செயல்படுபவர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் ஆவார்.

கொரியாவில் இருந்தபடி தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யும் நா.கண்ணன் அவர்களின் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பூவணம் என்னும் ஊராகும்.இவ்வூர் சைவசமய நாயன்மார்களால் பாடல்பெற்ற ஊராக விளங்குவது.இச்சிற்றூரில் வாழ்ந்த நாராயணன், கோகிலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்.தம் இளமைக் கல்வியைத் தமிழ்வழியில் பயின்றவர். மானாமதுரையில் ஒக்கூர் வெள்ளையன்செட்டியார் பள்ளியில் பயின்றவர்.பின்னர் திருப்பூவணத்தில் படித்துப் பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர்.கண்ணனுக்குத் தமிழ் மொழியில் இயல்பிலேயே ஈடுபாடு இருந்தது.

கல்லூரிக் கல்வியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர்.உயிர்அறிவியல் பாடத்தைப் பட்டப் படிப்பிற்கும் முது அறிவியல் பட்டத்திற்கும் படித்தவர். அமொரிக்கன் கல்லூரியின் சூழல் கண்ணனைத் தமிழ்க்கவிதைகளின் பக்கம் இழுத்தது.சாலமன் பாப்பையா நடத்தும் திருவாசகப் பாடத்திலும் பேராசிரியர் நெடுமாறன் அவர்களின் திராவிட இயக்கப் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவர்.கோவையை மையமிட்டு வளர்ந்த வானம்பாடிக் கவிதை இயக்கம் வழி கவிஞர் மீராவின் கவிதைகளில் கண்ணன் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது புத்திலக்கியப் படைப்பாளிகளின், திறனாய்வா ளர்களின் தொடர்பு அமைந்தது.சிறுகதைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.இதனால் பின்னாளில் கி.இரா,தி.சா.ரா,இந்திரா பார்த்தசாரதி,தீபம் பார்த்தசாரதி,ஆதவன் உள்ளிட்டவர் களின் தொடர்பு கிடத்துப் படைப்புகள் அறிமுகமாயின.

கண்ணன் சப்பான் நாட்டிற்கு உயர்கல்விக்குச் சென்றார். சப்பான் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையில் நான்காண்டுகள் ஆய்வுசெய்தார்.இவ்வாய்வின் பயனாகத் தொழில் துறைகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் சிக்கலுக்கு உரியது எனவும் இதனால் சூழலியல் சீர்கேடு உருவாகிறது எனவும் கண்டுபிடித்தார். இவ்வாய்வை உற்றுநோக்கிய செர்மனி நாட்டினர் அழைக்க,விருந்துப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். KIEL UNIVERSITY யில் பணி. நீண்டநாள் பேராசிரியராகப் பணிபுரிந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.

சிறப்பு அழைப்பின் பெயரில் கொரியாவுக்கு அழைக்கப்பெற்று இப்பொழுது கொரியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் கடலாய்வுப் பயிற்சி மையத்தை(ABEC) மேலாண்மைசெய்து வருகிறார்.
சூழலியல் சார்ந்த பயிற்சி பெற இவரிடம் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள், சூழலியல் வல்லுநர்கள் வருகின்றனர்.ஆண்டிற்கு இரண்டுமுறை 3 வாரப் பயிற்சி தருகிறார். இவ்வகையில் இவரிடம் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பெரு,மலேசியா, பர்மா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் வந்து பயிற்சி பெறுகின்றனர். இச்சூழலியல் பேரறிவால் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

உலகப் பயணங்களில் தமிழுக்கு ஆக்கமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.கல்வெட்டு , ஓலைச்சுவடிகள், தமிழின் அரியநூல்கள், பண்பாட்டுகூறுகளை அறிந்து தமிழகத்திற்கு வழங்கியவர். சப்பான் நாட்டில் ஆய்வு செய்தபொழுது சப்பானியமொழி பேசும் ஆற்றல் கிடைத்தது.இதனால் சப்பானின் கவிதை வடிவமான ஐகூ பற்றி நிறைய அறிந்தார்.இவர் கவிஞர் விச்வநாதன் அவர்களின் நூலுக்கென வரைந்த ஐகூ குறித்த முன்னுரையைக் கவிஞர் மீரா ஓம்சக்தி இதழில் வெளியிட்டார்.

இம் முன்னுரைக் கட்டுரை சப்பானிய ஐகூ வடிவை விளக்கும் அரிய கட்டுரையாகும் இதனை http://www.angelfire.com/ak/nkannan/haiku.html.என்னும் தளத்தில் காணலாம்.
கண்ணன் தமக்குக் கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தமிழ்ப்படைப்புகளை உருவாக்கினார்.அவை குங்குமம்,கணையாழி,இந்தியா டுடே,சுபமங்களா,புதியபார்வை உள்ளிட்ட தமிழக ஏடுகளில் வெளிவந்துள்ளன.வாசந்தி,மாலன்,பாவை சந்திரன்,கோமல் சாமிநாதன் உள்ளிட்டவர்களின் தொடர்பும் தமிழ்ப்படைப்புகள் வெளிவரக் காரணமாயின.

இங்கிலாந்து,செர்மனி,பிரான்சு நாடுகளிலிருந்து வெளிவந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்தன.விலைபோகும் நினைவுகள்,உதிர் இலைக்காலம்,நிழல்வெளி மாந்தர் உள்ளிட்ட சிறுகதை,நெடுங்கதைத் தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

விலைபோகும் நினைவுகள்


நிழல்வெளி மாந்தர்

புகலிட வாழ்வைத் தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ளும் வண்ணம் நிழல்வெளி மாந்தர்களை மையமிட்டனவாக இவரின் படைப்புகள் இருக்கும்.கண்ணனின் கவிதைகள் இணையத்தில் வெளிவந்தவண்ணம் உள்ளன.தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுடன் நன்கு அறிமுக மாகியுள்ள கண்ணன் சிங்கப்பூர்,மலேசியா எழுத்தாளர்களுடனும் நன்கு அறிமுகமானவர். அதேபோல் தமிழர்கள் பரவியுள்ள உலகநாடுகள் பலவற்றிலும் இணையத்துறையில், எழுத்துத்துறையில் நன்கு அறிமுகமான பெயர் கண்ணன் என்பதாகும்.

1995 அளவில் அமெரிக்காவில் வாழும் சார்ச்சு கார்ட்டு அவர்கள் முதன்முறையாக ஒருங்கு குறி பற்றி பேச அழைத்த - தமிழ் எழுத்துப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.பிறகு சிங்கப்பூர்,சென்னை, மலேசியாவில் நடைபெற்ற இணைய மாநாடுகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்தவர்.

அவ்வகையில் இவர் செர்மனியில் பணிபுரிந்தபொழுது அந்நாட்டில் ஓலைச்சுவடிகள் பாதாள அறைகளில் மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து அதுபோல் நம் தமிழ் ஓலைச்சுவடிகளையும் பாதுகாக்கும் திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்த நினைத்தார்.அச் செர்மனி பாதுகாப்பகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் நூற்றுக்கும் மேல் இருப்பதைக் கண்டு உணர்ந்து சிங்கப்பூரிலும்,மலேசியாவிலும் இதுகுறித்துப் பேசினார்.

2001இல் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்று வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தைத் தமிழுக்கு ஆக்கமாகப் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது பற்றிய களப்பணி ஆய்வுகளை எடுத்துரைத்தார்.மலேசியாவில் பேசிய கண்ணன் அவர்களின் பேச்சு அங்கிருந்தவர்களைக் கவர அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் பத்தாயிரம் அமெரிக்க டாலர் பணத்தை வழங்கித் தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு தமிழ்மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டது.இதில் தமிழ் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், கோயில்கள்,அரிய நூல்கள் பற்றிய தமிழர் மரபுச்செல்வங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை முனைவர் அப்துல்கலாம், சார்ச் கார்ட்டு (அமெரிக்கா) உள்ளிட்ட அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.இந்திய மின்னூலகம் [Digital Library of India] தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களைப் பகிர்தல் முறையில் வைத்துள்ளது.இந்தியாவை அடிமைப்படுத்திய நாட்டு அரசு நூலகங்களில் உள்ள தமிழ் நூல்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற ஆவலில் தமிழ் மரபு அறக்கட்டளையினர் பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து முதன் முறையாகச் சில நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பதிவு பெற்ற அரசு சாரா, நடுநிலை நிறுவனமாகும் [NGO]. தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ்
வலையில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பற்றி எழுத நினைத்த கண்ணன் தொடர்ந்து எழுதினார். பின்னர் ஆழ்வார்க்கடியான் என்னும் பெயரில் ஆழ்வார்களின் பாசுரப் பெருமை, ஆழ்வார்களின் பெருமை பற்றி எழுதத் தனி வலைப்பூவை உருவாக்கி எழுதி வருகிறார். இதனால் இவரைப் 'பாசுரமடல் கண்ணன்' என அழைப்பவர்களும் உண்டு.

ஆழ்வார் படைப்புகளிலும் வைணவ இலக்கியங்கிளிலும் நல்ல ஆர்வம் இவருக்கு உண்டு.தமிழ் இணைய வளர்ச்சியில் கண்ணனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.இவர் தமிழ் இலக்கியம் குறித்தும் இணையம் பற்றியும் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகள் பல தகவல்களைத் தாங்கி நிற்கின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளை முதுசொம் என்னும் வகையில் மரபுவழிப்பட்ட பண்பாட்டுச்
சின்னங்கள், ஓலைச்சுவடிகள்,அரியநூல்கள்,கோயில்கள் பற்றிய செய்திகள்,இசைத்தட்டுகள் உள்ளிட்ட இவற்றை மின்வடிவில் பாதுகாத்துவருகின்றது(காண்க:http://www.tamilheritage. org).

தமிழ்மரபு அறக்கட்டனைக்கு மின்தமிழ் என்னும் மின்குழு உள்ளது(காண்க: (http://groups. google.com/group/minTamil).இதில் உறுப்பினராவதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யமுடியும். மின்தமிழ் குழுவில் இதுவரை 547 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.இவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.

காலச்சுவடு நடத்திய தமிழினி 2000 என்னும் மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளை அறிந்துள்ளன.பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.இப்பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் மரபு மையம் குறித்த ஆய்வுத்துறையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய உள்ளன.

கண்ணன் தமிழகச் சிற்றூர்ப்புறம் ஒன்றில் பிறந்து சப்பான்,செர்மனி,கொரியா எனப் பல நாடுகளில் வாழ நேர்ந்தாலும் தம் தாய்மண்ணை,தாய்மொழியை நேசிப்பதில் முதன்மை பெற்று நிற்கிறார்.தமிழ்மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்ந்து வருகிறார்.இது பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வழி வெளிவர உள்ளது.

கொரிய தொலைக்காட்சி நிறுவனம்(kbc) ஒன்று கண்ணனுடன் இணைந்து இந்திய-கொரிய உறவு பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் முயற்சியில் உள்ளனர்.இவர் கொரிய-தமிழ் மொழிக்கு உரிய உறவுகள் பற்றி ஆராய்து மொழி அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படை யிலும் ஒன்றுபட்டு இருப்பதை வெளிப்படுத்திவருகிறார்.அவ்வகையில் நாம் பயன்படுத்தும் அம்மா,அப்பா சொற்கள் கொரியாவிலும் வழங்குகின்றன என்கிறார்.

நாம் அண்ணி என்பதை ஒண்ணி என்கின்றனர்.கூழ் என்பதை மூழ்(தண்ணீர்) என்கின்றனர்.
நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் கொரியர்களிடம் பல உள்ளன.கற்புப்பழக்கம், நாணப் படுதல்,ஆண்களிடம் பேசும்பொழுது வாய்பொத்திப் பேசுதல்,ஏப்பம் விடுவது பெருமை, உறிஞ்சிக்குடித்தல் சிறப்பு எனச் சிற்றூர்ப்புறப் பழக்கம் பல கொரியாவில் உள்ளது என்கிறார்.

தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் நடைபெறும் தமிழ்,இணையம் சார்ந்த மாநாடுகள்,கருத்தரங்குகளில் கலந்துகொள்வதில் ஆர்வம்காட்டுபவர். விடுமுறைகளில் தமிழகம் வந்துசெல்லும் கண்ணன் தமிழ் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும்,வைணவத் திருத்தலங்களை வழிபட்டுச் செல்வதும் வழக்கம்.

நா.கண்ணன் தமிழ் எழுத்துரு, மடலாடற்குழுமம், வலைப்பக்கங்கள், வலைப்பதிவுகள் என்று வளர்ந்துவரும் தமிழ்க்கணினித் துறையுடன் இணைந்தே வளர்ந்து வருகிறார். உத்தமம் எனும் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயற்குழுவில் இருக்கிறார். அவர்கள் வெளியிடும் மின்மஞ்சரி எனும் இதழை நிர்வகித்து வருகிறார். தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது சிந்தனைகளை, ஆக்கங்களைத் தாங்கிப் பல்வேறு வலைப்பதிவுகள் உள்ளன.

இவரது வலைத்தள முகவரி http://www.e-mozi.com என்பதாகும். இவரைப் பற்றிய அறிமுகத்தளமாக http:// people. freenet.de/bliss/bio_index.html உள்ளது. இத்தளங்கள் மூலமாக இவரது வலைப்பதிவு முகவரிகள், நேர்காணல்கள், வானொலிப் பேச்சுக்கள், புத்தகங்கள், ஊடக வெளியீடுகள் இவைகளை அறிந்து கொள்ளலாம்.

தாம் பணிபுரிவது வேற்றுத்துறையாக இருந்தாலும் தமிழர்களின் மரபுச்செல்வங்களைப்
பாதுகாப்பது,ஆய்வது,கட்டுரை,சிறுகதை,கவிதை எழுதுவது எனத் தமிழ் நினைவில் வாழும் கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி என்றும் நினைவுகூரப்படும்.

நனி நன்றி: தமிழ் ஓசை(நாளிதழ்),களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 4,
(19.10.2008),சென்னை,தமிழ்நாடு

செவ்வாய், 14 அக்டோபர், 2008

மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்கம் படக்காட்சிகள்...


வரவேற்புக் குழுவினர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கு நேற்று(13.10.2008) நடைபெற்றது.காலை பத்தரை மணியளவில் தொடங்கிய தொடக்கவிழாவில் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் தலைமையுரையாற்றினார்.வேலூர் அரிமா சங்கப் பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ஏ.பி.காமராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையம் வளர்ந்த வரலாறு பற்றி அறிமுகவுரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார்.அயல்நாடுகளுக்குப் பணிபுரியச் சென்ற தமிழர்கள் தாயக மக்களுடன் தொடர்பு கொள்வதற்கு இணையம் என்ற கருவி மிகுதியாகப் பயன்பட்டதையும் அதில் இருந்த எழுத்துச்சிக்கல் வரலாற்றையும் எடுத்துரைத்தார்.எழுத்துச் சிக்கல் தீர யுனிகோடு என்ற ஒருங்குகுறி எழுத்துக்கு உரிய தமிழ் மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் எழுத்துருச் சிக்கல் தீர்ந்தது என்றார்.

எழுத்துருச் சிக்கலைத் தீர்க்க மலேசியாவில் பணிபுரிந்த சேந்தமங்கலம் பொறியாளர் முகுந்தராசு உருவாக்கிய இ.கலப்பை என்ற மென்பொருளின் சிறப்பை விளக்கினார்.இந்த மென்பொருளை நம் கணிப்பொறியில் இலவசமாக இறக்கி உள்ளிட்டால் தமிழ் எழுத்துருச் சிக்கல் இல்லாமல் தட்டச்சிட முடியும் என்று விளக்கினார்.மேலும் மாணவர்கள் பேராசிரியர்கள் தமிழ்த் தட்டச்சுப் பழக தட்டச்சுப் பயிலகங்களுக்குச் செல்லவேண்டிய தேவையில்லை.தமிழ் 99 என்ற விசைப்பலகை அமைப்பைப் புரிந்துகொண்டால் மிக எளிதாக தமிழைத் தட்டச்சிட முடியும் என்று மு.இளங்கோவன் பேசினார். இந்தத் தட்டச்சு விசைப்பலகை தமிழ் இலக்கண அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள தன்மையை செயல்விளக்கம் மூலம் விளக்கினார்.

மேலும் தமிழில் வெளிவரும் தினமலர்,தினமணி,தினகரன்,தமிழ் முரசு உள்ளிட்ட மின்னிதழ்கள் பற்றியும் திண்ணை,கீற்று,பதிவு,புதினம் பற்றிய இதழ்களையும் அரங்கிற்கு அறிமுகம் செய்தார்.

தமிழ்மணம் என்ற இணையத்தளம் உலகம் முழுவதும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் பாங்கையும் செயல்விளக்கம் வழி எடுத்துரைத்தார். கொரியாவில் வாழும் கண்ணன் உருவாக்கிய தமிழ்மரபு அறக்கட்டளை,சுவிசர்லாந்தில் வாழும் கல்யாணசுந்தரம் உருவாக்கிய மதுரை தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் இணையப்பல்கலைக்கழக இணையத் தளம்.விக்கிபீடியா என்னும் கட்டற்றக் கலைக்களஞ்சிம் பற்றி விரிவாகப் பேசினார். செயல் விளக்கம் மூலம் அனைத்துத் தளங்களும் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டு செய்திகள் விளக்கப்பட்டதால் பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்.

மின்னஞ்சலைத் தமிழில் அனுப்புவது,தமிழில் உரையாடல்(ஜாட்) செய்வது முதலியனவும் மு.இளங்கோவனால் செய்துகாட்டப்பட்டன.அரங்கிலிருந்துபடி கொரியாவில் இருந்த கண்ணன் அவர்களுடனும் ஐதராபாத்திலிருந்த கோபி அவர்களுடன் உரையாடிதைக் கண்ட பார்வையா ளர்கள் தமிழால் இவ்வாறு அனைத்துச்செயல்களையும் செய்ய முடியுமா என வியந்தனர். தமிழ்மொழி மட்டும் எழுத,படிக்கத் தெரிந்தால் ஒருவர் கணிப்பொறியை,இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று எடுத்துரைத்தார்.

இவற்றைப் பயன்படுத்த ஆங்கிலம் கட்டாயம் தேவை என்ற நிலை இன்று இல்லை.அனைத்து வசதிகளும் தமிழில் உள்ளன என்று தன்னம்பிக்கை ஊட்டினார்.

பிற்பகல் அமர்வில் தமிழா டாட்காம் நிறுவனத்தைச் சேர்ந்த முகுந்தராசு மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம், வலைப்பூ உருவாக்கம் பற்றி விரிவாக விளக்கினார்.ஒருவருக்கு மின்னஞ்சல் கணக்குத் தொடங்கி வலைப்பூ ஒன்றும் உருவாக்கப்பட்டது.அதில் நாம் விரும்பும் படம்,ஓவியம்,ஒலி,ஒளிக்காட்சிகளை இணைக்க முடியும் என்று செயல்வழி விளக்கம் அமைந்தது.

தருமபுரி செல்வமுரளி தம் தமிழ்வணிகம் தளம் பற்றியும் இணையத்தின் பன்முகப் பயன் பற்றியும் விளக்கினார்.கணியத்தமிழ் நிறவனத்தின் வெ.யுவராசு வலைப்பூவில் ஒலி இணைப்புப் பற்றி விளக்கினார் கணியத்தமிழ் நிறுவன சபரி அவர்கள் வரியுருமா மென் பொருள் பற்றி செயல்விளக்கம் காட்டி, எழுத்துருச் சிக்கலுக்கு வரியுருமாவின் பணிகளை விளக்கினார்.முருகையன் தாம் வடிவமைத்த தமிழ்க்காவல்,தெளிதமிழ் இணையத்
தளங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மாணவர்களின் கலந்துரையாடல் அமைந்தது. நாமக்கல் ,சேலம்,தருமபுரி மாவட்டம் சார்ந்த பார்வையாளர்கள்,மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.மாலை 5 மணியளவில் பயிலரங்க விழா நிறைவுற்றது.


தாளாளர் திரு.பழனியாண்டி அவர்கள் குத்து விளக்கேற்றல்


பொறியாளர் அறவாழி அவர்கள் குத்துவிளக்கேற்றல்


தமிழ்மணம் வரவேற்புப் பதாகை


வழக்கறிஞர் ஏ.பி.காமராசு உரை


மு.இளங்கோவன் உரை


தமிழ்மணம் சிறப்பை மு.இ விளக்குதல்


பார்வையாளர்கள் ஒருபகுதியினர்


பார்வையாளர்கள் ஒரு பகுதியினர்


செல்வமுரளி சிறப்பிக்கப்படுதல்


முகுந்து சிறப்பிக்கப்படுதல்

திங்கள், 13 அக்டோபர், 2008

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கிறது...

மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப்பயிலரங்கம் காலையில் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெள்ளியங்கிரி வரவேற்றார்.கல்லூரித்தலைவர் திரு சு.பழனியாண்டி தலைமையுரை யாற்றினார்.வழக்கறிஞர் ஏ.பி.காமராசன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.முனைவர் மு.இளங்கோவன் தமிழில் தட்டச்சு,தமிழ் இதழ்கள்,தமிழ் இணைய முன்னோடிகள் பற்றி செயல்விளக்கம் தந்தார்.

பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கு நடைபெறுகிறது.முகுந்தராசு வலைப்பூ சிறப்புகள் பற்றி உரையாற்றிக்கொண்டுள்ளார்.வரியுருமா,ஒலி இணைப்புகள் பற்றி பிற்பகல் நிகழ்வு தொடரும்...

செல்வமுரளி,யுவராசு,சபரி உரையாற்ற உள்ளனர்.

மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்க உள்ளது...



தமிழ் இணையப் பயிலரங்கம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் இன்று
(13.10.2008) இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.மு.இளங்கோவனாகிய நானும் நண்பர்கள் சு.முகுந்தராசு,வே.முருகையன்,வெ.யுவராசு,செல்வமுரளி,தருமபுரி நரேந்திரன் உள்ளிட்டோர் விழா நடைபெறும் அரங்கில் ஒன்று கூடியுள்ளோம்.

நிகழ்ச்சியின் அடுத்த நிகழ்வுகளை உடனுக்குடன் இணையத்தில் தெரிவிப்போம்.

தமிழ் இணையப் பயிலரங்கிற்கு நாமக்கல் வந்து தங்கியுள்ளோம்...

தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொள்ள நேற்று(ஞாயிறு) பகல் ஒரு மணியளவில் புதுச்சேரிப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.முன்பே திட்டமிட்டபடி பொறியாளர்கள் வெ.யுவராசு அவர்கள் சென்னையிலிருந்தும்,வே.முருகையன் அவர்கள் புதுச்சேரியிலிருந்தும் வந்து புதுச்சேரிப் பேருந்து நிலையத்தில் இணைந்துகொண்டோம்.

சேலம் பேருந்தில் 1.15 மணிக்கு ஏறி,விழுப்புரம் வழியாக ஆத்தூரை 5.30 மணிக்கு அடைந்தோம்.5.45 மணிக்கு அங்குப் பேருந்தேறி இரவு 8.15 மணிக்கு நாமக்கல் வந்தடைந்தோம். முன்பே திட்டமிட்டபடி எங்களை வரவேற்கப் பேராசிரியர் சரவணன் அவர்கள் காத்திருந்தார்.நாமக்கல் அன்னபூர்னா தங்குமனையில் இரவு தங்கினோம்.

பேருந்தில் வந்துகொண்டிருந்தபொழுதே பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள்(சிங்கப்பூர்) பேசி அவர்களைப் பற்றிய கட்டுரை என் பக்கத்திலும்,தமிழ் ஓசை நாளிதழிலும் வெளியிட்டமைக் குத் தம் அன்பான நன்றி கூறி மகிழ்ந்தார்கள்.

தருமபுரி நரேந்திரன் அவர்கள் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் தம் விருப்பத்தைத் தெரிவித்து,தமிழ் ஓசையில் வந்த திண்ணப்பன் ஐயா பற்றிய கட்டுரைக்கு வாழ்த்துரைத்தார்.அதுபோல் நண்பர் தருமபுரி செல்வமுரளி அவர்கள் தமிழ் முரசு ஏட்டில் தமிழ்இணையப் பயிலரங்கு பற்றி விரிவாகச் செய்தி வந்துள்ளதைத் தொலைபேசியில் குறிப்பிட்டு,தாம் சேலம் வந்துவிட்டதாகவும் காலையில் வந்து நாமக்கல்லில் எங்களுடன் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் இணையப் பயிலரங்கிற்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் கல்லூரித் தாளாளர் திரு.சு.பழனியாண்டி ஐயா மிகச்சிறப்பாக நிறைவேற்றியள்ளமையை அறிந்தேன். இதற்கெனப் பேராசிரியர்கள் மிகச்சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர்.உள்ளூர் ஊடகங்களில் இச்செய்தி மிகச் சிறப்பாகப் பரவியுள்ளது..நாளிதழ்கள் பலவும் பயிலரங்கச் செய்தியை மக்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்த்துள்ளன.

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பல பொறியியல் கல்லூரிகள் புகழ்பெற்று விளங்குகின்றன. கலை,அறிவியல் கல்லூரிகளும் பல உள்ளன.அக்கல்வி நிறுவனங்களிலிருந்து பலர் பங்கேற்க வர உள்ளனர்.இணைய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.ஆயிரத்திற்கு மேற்பட்டவர் நேரடியாகப் பயன்பெற உள்ளனர்.

நண்பர் முகுந்தராசு அவர்களின் ஊர் அருகில் உள்ள சேந்தமங்கலம் என்பதால் அவர் இல்லத்திலிருந்து புறப்பட்டு காலையில் வந்து எங்களுடன் இணைந்துகொள்வார்.

தமிழ் இணையப் பயிலரங்கச் செய்தி அரங்கிலிருந்து உடனுக்குடன் இயன்றவரை தமிழ்மணம் வழியாக உலகிற்குத் தெரிவிக்கப்படும்.

இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பயிலரங்கு நடைபெறுவதால் உரையாடலில் இணைய இணைப்பில் உள்ளவர்கள் வந்து அரங்கினரை மகிழ்ச்சியூட்டலாம்.
காலை ஒன்பது மணியளவில் தங்குமனையிலிருந்து புறப்பட்டு மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியை அடைவோம்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

நாளை(13.10.2008) மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் பயன்பெறும் பொருட்டுத் தமிழ் இணையப் பயிலரங்கம் நாளை 13.10.2008 திங்கள் கிழமை காலை பத்துமணி முதல் மாலை நான்குமணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெள்ளியங்கிரி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். கல்லூரித் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். வேலூர் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ஏ.பி.காமராசன் அவர்கள் தொடக்கவுரையாற்றுகிறார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பயிலரங்கின் முதல் அமர்வில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக் கிறார். கணிப்பொறியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்தல், தட்டச்சுப் பலகை வகைகள், மின்னஞ்சல், உரையாடல் ,இணைய இதழ்கள், இணையத்தில் உள்ள நூலக வசதி, கலைக்களஞ்சியம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,தமிழ் மரபு அறக்கட் டளை,மதரைத் திட்டம்,தமிழ்மணம் திரட்டி,வேலை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

பெங்களூரில் உள்ள தமிழா.காம் நிறுவனத்தின் உரிமையாளர் சேந்தமங்கலம் சு.முகுந்தராசு அவர்கள் வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் படைப்புகளை உள்ளிடுதல்,பின்னூட்ட வசதி,படம் இணைத்தல் பற்றி விளக்குகிறார். புதுச்சேரிப் பொறியாளர் வே.முருகையன் அவர்கள் இணையத்தள வடிவமைப்பு பற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார்.சென்னைக் கணியத்தமிழ் நிறுவனத்தைச் சேர்ந்த வெ.யுவராசன் அவர்கள் வலைப்பூவில் ஒலி,ஓளிக்காட்சிகளை இணைப்பது பற்றி விளக்க உள்ளார்.

தருமபுரி செல்வ முரளி அவர்கள் தமிழில் உள்ள தேடுபொறி பற்றியும் இணையத்தின் பன்முகப்பயன் பற்றியும் விளக்குவார். .நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இப்பயிலரங்கால் மிகுந்த பயனடைய உள்ளனர். கணிப்பொறி, இணையம் (இண்டர்நெட்) பயன்படுத்த ஆங்கிலம் தேவையிலை. தமிழ் மட்டும் தெரிந்தவர்களும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்ற தன்னம்பிக்கையை ஊட்ட,விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற விரும்புபவர்கள்
+ 93629 61815 என்ற செல்பேசி எண்ணில் பதிவு செய்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்


முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள்

 உலக நாடுகளை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்தும்படி மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள நாடு சிங்கப்பூர் ஆகும். இந்த நாடு பரப்பளவில் மிகச் சிறியது. பல இன மக்களை உள்ளடக்கிய நாடு.தமிழ்,ஆங்கிலம், மலாய், சீன மொழிகள் இங்கு ஆட்சி மொழிகளாக உள்ளன. தமிழகத்துடன் மொழி, இன, பண்பாட்டு அடிப்படையில் மிக நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது.

 தமிழர்கள் நெடுங்காலமாகச் சிங்கப்பூரில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழவேள் கோ. சாரங்கபாணி உள்ளிட்ட தலைவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுப்பட்டுள்ளனர். அரசியல் துறையில் உரிய முக்கியத்துவத்தைத் தமிழர்கள் பெற்று இன்று வாழ்வாங்கு வாழ்ந்து வரும் நாடு சிங்கப்பூர் எனில் மிகையன்று.

 சிங்கபூரில் தமிழ் மக்கள் மிகுதியாக இருப்பதால் தமிழ்க்கல்வி அவர்களுக்குக் கிடைக்கத் தமிழாசிரியர்கள் தேவைப்பட்டனர்.அரசு உரியவகையில் தமிழாசிரியர்களைப் பணியில் அமர்த்தித் தமிழ்க்கல்விக்கு இன்று உதவி வருகிறது. தமிழகத்திலிருந்து தமிழாசிரியர்கள் சென்ற நிலைமாறி இன்று சிங்கப்பூர் தமிழர்களே தமிழாசிரியர்களாகப் பணிபுரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 தமிழ்க்கல்வி பயிற்றுவிக்கும் பணிக்குச் சென்றவர்களுள் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர். சிங்கப்பூர் கல்வி வரலாற்றை எழுதும்பொழுதும், தமிழ்க்கல்வி, தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதும்பொழுதும் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் பெயர் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவு சுப.திண்ணப்பன் அவர்கள் சிங்கப்பூர் தமிழ்க்கல்வி வளர்ச்சியுடன் தொடர்புடையவர். இவரிடம் தமிழர்களும், தமிழரல்லாத பிற மொழியினரும் கல்வி கற்றுள்ளனர்.

 சிங்கப்பூர் கல்வியமைச்சின் மொழி சார்ந்த பல அமைப்புகளில் இருந்து கடமையாற்றியவர். உலகெங்கம் பரவி வாழும் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் சிங்கப்பூரைப் பற்றி நினைக்கும் பொழுது சுப.திண்ணப்பன் அவர்களைப் பற்றி கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்.சுருக்கமாகச் சொன்னால் கால் நூற்றாண்டுக் காலமாக ஒன்றாம் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வுகள் வரை தமிழில் கல்வி அமைவதற்குரிய பாடத்திட்டங்கள்,கல்வி நிறுவன வளர்ச்சிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களுக்குப் பங்களிப்பு உண்டு.

 சுப.திண்ணப்பன் அவர்கள் தமிழகத்தில் உள்ள தேவகோட்டையில் 19.06.1935 பிறந்தவர். பெற்றோர் சுப்பிரமணியன் செட்டியார், ஆனந்தவல்லி. பெற்ற அன்னையாரின் முகம் கறுப்பா? சிவப்பா என அறியமுடியாத இளமைப்பருவத்தில் அன்னையார் இயற்கை எய்தினார். உறவினர்களின் அரவணைப்பில் திண்ணப்பக் குழந்தை வளர்ந்தது. திருவாரூர், கொரடாச் சேரி, திருக்காட்டுப்பள்ளி(சிவசாமி ஐயர் பள்ளி)யில் படித்தவர். பள்ளியிறுதி வகுப்பில் தமிழில் முதல்பரிசு பெற்றவர்.

 பின்னர் அழகப்பர் கல்லூரியில் இண்டர்மீடியட் என்னும் வகுப்பில் பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் அவர்களிடம் பயின்றவர்.இளங்கலைப் பட்டம் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். அறிஞர் மு.வரதராசனார் இவரின் ஆசிரியர்.எம்.லிட் பட்டத்தை அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் பெற்றவர்.முனைவர் பட்ட ஆய்வை முனைவர் ச.அகதியலிங்கத்திடம் மேற்கொண்டவர். இவருக்குப் பயிற்றுவித்த அறிஞர்கள் நால்வரும் துணைவேந்தர்களாக விளங்கிய பெருமைக்குரியவர்கள்.

 திருவாரூரில் பள்ளிப்படிப்பு படிக்கும்பொழுது கலைஞர் கருணாநிதி அவர்களின் தமிழ் உணர்வுசான்ற பேச்சைக்கேட்டுத் தமிழ் உணர்வுபெற்றவர். அறிஞர் மு.வ.அவர்களிடம் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் பச்சையப்பனில் சேர்ந்து படித்தார். பச்சையப்பன் கல்லூரியில் படிக்க சேர்ந்த ஒருவாரத்தில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. அறிஞர் மு.வ.அவர்களுடன் முதல் சந்திப்புத் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றதாகும்.

 தமிழ், ஆங்கிலம், மலாய், இந்தி, சமற்கிருதம் அறிந்தவர். இளங்கலை(சிறப்பு), முதுகலை, எம்.லிட், முனைவர் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். முனைவர் பட்டத்திற்காகச் சீவகசிந்தாமணியை ஆய்வு செய்தவர். மொழியியலில் சான்றிதழ் பெற்றவர்.

 அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் தமிழ் உரையாளராக1960 இல் பணியைத் தொடங்கிய திண்ணப்பன் அவர்கள் 1967 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றவர். பின்னர் மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மலேசியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்தியவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்றவர்(1973). முனைவர் இரா.தண்டாயுதம் அவர்களும் அப்பொழுது மலேசியாவில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 திண்ணப்பன் அவர்கள் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து பணியாற்றிவிட்டு, மலேசியப் பல்லகலைக்கழகப் பணிக்குச் சென்றவர். அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்களும் இவர்களுடன் மலேசியாவிற்குப் பணிபுரியச் சென்றவர்கள். 1982 முதல் சிங்கப்பூரில் பணியாற்றத் தொடங்கினார். விரிவுரையாளராகச் சிங்கப்பூரில் பணியைத் தொடங்கிப் பின்னர்ப் பேராசிரியர்,  துறைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், SIM பல்கலைக்கழகம் ஆகியவற்றில் திண்ணப்பனின் பணி அமைந்தது. இவ்வாறு ஒருநாட்டின் மிகப்பெரிய மூன்று பல்கலைக் கழங்கங்களில் ஒருசேரப் பணியாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்கே அமையும்.


முனைவர் சுப.திண்ணப்பனின் வேறொரு தோற்றம்

 சிங்கப்பூரில் பணிபுரிந்தபொழுது இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கீழையியல் மற்றும் தென்னாப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியர் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 அமெரிக்க அறிஞர் சார்ச்சு கார்ட்டு உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நம் பேராசிரியருக்கு அமைந்தது. அமெரிக்காவில் தமிழாய்வு நடைபெறும் பென்சில்வேனியா, சிக்காக்கோ உள்ளிட்ட இடங்களுக்கெல்லாம் சென்று உரையாற்றி மீண்டவர். பிரான்சு சென்று பாரிசில் அறிஞர் குரோ அவர்களின் கல்வி நிறுவனத்திலும் உரையாற்றியவர். ஆத்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்தவர்.

 சிங்கப்பூர் கல்விசார் உயர் குழுக்களில் பல ஆண்டுகள் பொறுப்பேற்றுத் திறம்படப் பணிபுரிந்த திண்ணப்பன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தல், தமிழரல்லாத மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தலில் எழும் சிக்கல்களை விளக்கி வரைந்த ஆய்வுக் கட்டுரைகள் புதிய பல தகவல்களைக் கொண்டுள்ளன.சமய இலக்கியங்களில் திண்ணப்பன் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.குறிப்பாகச் சைவ இலக்கியங்களில் நல்ல பயிற்சியுடை யவர். வைணவம் சார்ந்த பல கட்டுரைகளையும் வரைந்துள்ளார்.

 மலேசியாவில் இவர் கல்விப்பணியாற்றியபொழுது அருள்நெறித் திருக்கூட்டம் என்ற அமைப்பின் சார்பில் இவர் மூன்றாண்டுகள் பெரியபுராணம் வகுப்பெடுத்துச் சமயப்பணி யாற்றியவர். சைவசித்தாந்தம் உள்ளிட்ட நூல்களைப் பாடமாக நடத்தியவர். பினாங்கு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தியவர்.

 சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும்,தமிழ் மாணவர்கள் உருவாவதற்கும் திண்ணப்பன் காரணமாக விளங்கியவர். இவர்தம் உரைகள், கருத்துகள் ஆய்வுகள் சிங்கப்பூர் நாளிதழ், வானொலி,தொலைக்காட்சிகளின் வழி சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமாயின. சிங்கப்பூரில் வெளிவந்துள்ள நூல்கள் பலவற்றிற்குத் திண்ணப்பன் அவர்களின் அழகிய அணிந்துரை ஒன்று கட்டாயம் இருக்கும்.

 பல திருமுறை மாநாடுகள் நடைபெறவும், அது தொடர்பிலான கருத்தரங்குகள் நடைபெறவும் திண்ணபன் காரணமாக விளங்கியவர். இவர் மேற்பார்வையில் சிங்கப்பூரில் இதுவரை நால்வர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழில் ஆய்வேடு எழுதி முனைவர் பட்டம்பெறலாம் என்ற நிலையைச் சிங்கப்பூரில் ஏற்படுத்தியவர் திண்ணப்பன். இதற்காக நூற்றுக்கணக்கான மடல்களைச் சிங்கப்பூர் அரசுக்கு எழுதி இசைவு பெற்றவர். இவ்வகையில் இவர் மாணவர்களுள் முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், முனைவர் இராமையா, முனைவர் தியாகராசன், முனைவர் சீதாலெட்சுமி ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆய்வேடுகள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி, சிங்கப்பூர் கல்வி வரலாறு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் முன்னோடி இலக்கியமான சிங்கைநகர் அந்தாதி, குதிரைப்பந்தய லாவணி உள்ளிட்ட நூல்கள் பற்றிய திறனாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் திண்ணப்பன். நாட்டுக்கோட்டை செட்டியார்கள் நவீன சிங்கப்பூர் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணிகளை விரிவாக ஆய்ந்து எழுதிப் பதிவு செய்துள்ளார். ஏனெனில் சிங்கப்பூரில் 500 -க்கும் மேற்பட்ட நகரத்தார் குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் வணிகம், வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள். கல்வி, தொழில்நுட்பம், சமயம், கலை, பண்பாடு, தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு உதவிய பாங்கினை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார்.

 தமிழ் அர்ச்சனைகள் பற்றியும், திருக்குறள் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் சிறப்பிற்கு உரியன.

 அச்சு இதழ்களில் எழுதுவதுடன் மின்னிதழ்களிலும் எழுதிவருகிறார். திண்ணப்பன் தனித்தும் தம் உடன் பணியாற்றுபவர்களுடனும் இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார்.அந்நூல்கள் யாவும் சிங்கப்பூர் தமிழ்க்கல்வி, தமிழ்இலக்கியம் பற்றியனவாகும். அவ்வகையில் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் எழுதிய நூல்களுள் சிங்கப்பூரில் தமிழ்மொழியும், இலக்கியமும், கணினியும் தமிழ் கற்பித்தலும் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.


சிங்கப்பூர் தமிழ் இலக்கியவளர்ச்சி பற்றி அறிய உதவும் நூல்


கணினியை அறிமுகப்படுத்தும் பேராசிரியரின் அரிய நூல்

 சிங்கப்பூர் சித்திரக்கவிகள் பற்றிய திண்ணப்பனின் அறிமுகக் கட்டுரைச் சிங்கப்பூரில் பாடப்படும் தமிழ் யாப்பில் சவாலான சித்திரக்கவி பற்றி எடுத்துரைக்கிறது. தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களைப் பற்றி இவர் சென்னையில் திராவிடர்கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அரிய பெருமைக்கு உரிய உரையாற்றினார்.

 சிங்கப்பூரில் தொடக்க,உயர்நிலை,மேநிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள பல குறுவட்டுகள் உருவாக மொழியறிஞராக இருந்து பணிபுரிந்துள்ளார். தமிழகத்துப் பல்கலைக் கழகங்களுடன் நல்ல தொடர்பில் உள்ள முனைவர் திண்ணப்பன் இங்கிருந்து அனுப்பப்படும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை - ஏறத்தாழ இருநூறு ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் செயல்பட்டுள்ளார்.

 சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பொறுப்பில் உள்ளவர்.இப்பொழுது சிம் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியாக உள்ளார். மதியுரை ஞராக இருந்து பட்டப்படிப்புக்கு உரிய பாடத்திட்டங்கள் வகுத்தவர்.அறிஞர் தமிழண்ணல் இப்பணிகளுக்கு உறுதுணையாகி இருந்தவர். சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் இலக்கிய நிகழ்வுகள்,நூல்வெளியீட்டு விழாக்கள் திண்ணப்பன் தலைமையால் பொலிவுபெறும்.

 கடல்கடந்து சென்று கன்னித்தமிழ் வளர்க்கும் பேராசிரியர் திண்ணப்பன் அவர்கள் சிங்கப்பூர் குடியுரிமைபெற்று அங்கு வாழ்ந்து வருகின்றார். இவரைத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் போற்றுவர்.

நனி நன்றி : 

தமிழ் ஓசை,களஞ்சியம்,(அயலகத் தமிழறிஞர்கள் தொடர்)12.10.2008,சென்னை.
முனைவர் பொற்கோ,மேனாள் துணைவேந்தர்,சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் ஆ.இரா.சிவகுமாரன், தமிழ்ப்பேராசிரியர், சிங்கப்பூர்.
முனைவர் ஒப்பிலா.மதிவாணன், சென்னைப் பல்கலைக்கழகம்.

புதன், 8 அக்டோபர், 2008

'திராவிடநாட்டின் வானம்பாடி' கவியரசு முடியரசனார்


கவியரசு முடியரசனார் (07.10.1920 - 03.12.1998) 

  "வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
   தீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த
   முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
   முடியரசன் செய்யுள் முறை"

  என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.

 அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர். தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர். வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.

  திராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும், எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.

  முடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர். பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு, சீதாலெட்சுமி ஆகும். இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு. தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார். பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். வேங்கடராம ஐயரிடம் பயின்றார். அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.

  திண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார். தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார். அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார், விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

  கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார். கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார். நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.

  திருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.

 பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவரின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.

  முடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.

 1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.

  முடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது. மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  பின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.

  முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார். கண்ணாடி மாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.

  பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார். அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.

 தமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள், காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர். தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியவர். இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. 1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.

  அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார். கலைஞர் விருது(1988), பாவேந்தர்விருது(1987), கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது. முதுமை காரணமாகத் தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு "பாடிப் பறந்த பறவை" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.

  பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் என்னும் தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை முடியரசனார் எழுதி வைத்துள்ளார். வெளிவரவேண்டிய அரிய படைப்பு. காரைக்குடியில் முடியரசனாருக்கு ஒரு மணிமண்டபம் கட்டி அவர்தம் தமிழ் உணர்வைப் போற்றுவது அரசின் கடமையாகும்.

முடியரசனுக்கு வாய்த்த மக்கட்செல்வங்கள்

01.குமுதம்
02.பாரி
03.அன்னம்
04.குமணன்
05.செல்வம்
06.அல்லி

இவர்கள் அனைவருக்கும் சாதிமறுப்புத் திருமணம் நடந்தமை குறிப்பிடத் தகுந்ததாகும்.


கவியரசு முடியரசனார் தமிழுக்கு வழங்கிய நூல்கொடை;

01.கவியரங்கில் முடியரசன்,1960
02.பூங்கொடி, 1964
03.அன்புள்ள பாண்டியனுக்கு,1968
04.வீரகாவியம்,1970
05.முடியரசன் கவிதைகள்
06.ஊன்றுகோல்,1983
07.பாடுங்குயில்,1986
08.நெஞ்சுபொறுக்கவில்லையே,1985
09.மனிதனைத் தேடுகிறேன்,1986
10.தமிழ்முழக்கம்,1999,
11.நெஞ்சிற் பூத்தவை,1999
12.ஞாயிறும் திங்களும்,1999
13.வள்ளுவர் கோட்டம்,1999
14.புதியதொருவிதி செய்வோம்,1999
15.தாய்மொழி காப்போம்,2001
16.மனிதரைக் கண்டுகொண்டேன்,2005
17.எக்கோவின் காதல்
18.எப்படி வளரும் தமிழ்,2001
19.சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்(தொ.ஆ),1990

கவிஞர் முடியரசனார் மகன் திரு.பாரி அவர்களின் முகவரி:

திரு.மு.பாரி அவர்கள்,
முடியரசன் குடில்
17,பூங்கொடி வீதி,
569, சூடாமணிபுரம்,
காரைக்குடி-630 003

பேசி :99657 06699

நனி நன்றி : தமிழ் ஓசை,சென்னை,தமிழ்நாடு. 08.10.2008

செவ்வாய், 7 அக்டோபர், 2008

மோகனூர் சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தமிழ் இணையப்பயிலரங்கம் அழைப்பிதழ்


முகவரிப்பகுதி

மோகனூர் சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தமிழ் இணையப்பயிலரங்கம் அழைப்பிதழ் எனக்கு இன்று வந்து சேர்ந்தது.அக்கல்லூரியின் உரிமையாளர் திரு.சு.பழனியாண்டி ஐயா அவர்களின் மகிழ்வுந்து ஓரிரு நாளுக்கு முன்பாக நேர்ச்சிக்கு உள்ளான மிகப்பெரும் துன்பச்சூழலிலும் தமிழ் இணையப்பயிலரங்கம் சிறப்பாக நடைபெற அவர்கள் காட்டிவரும் ஆர்வத்திற்குத் தமிழ் வலைப்பதிவாளர்கள்,தமிழ் இணைய வளர்ச்சியில் ஆர்வம் உடையவர்களாகிய நாம் அனைவரும் அவருக்கு மிகப்பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

அழைப்பிதழ் கண்டு உங்கள் அன்பான வாழ்த்துகளையும் அறிவுரைகளையும் வழங்க வேண்டுகிறேன்.


அழைப்பிதழ்

நிகழ்ச்சிநிரல்


பங்கேற்பாளர்கள் பதிய,தொடர்புகொள்ளவேண்டிய செல்பேசி எண் : + 93629 61815