நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 12 ஜூன், 2008

திருநெல்வேலிக்குச் சென்றபொழுது...தொடர் 2

  நெல்லைக் காட்சியகம் சென்றபொழுது என் புகைப்படக் கருவியில் சுருள் தீர்ந்தது நினைவுக்கு வந்தது. முல்லை முருகன் ஐயாவுடன் சென்று விரைவாக ஒரு சுருள் வாங்கி வந்தேன். காட்சியகத்தில் சில படங்கள் எடுத்துக்கொண்டேன். முதுமக்கள் தாழி, பாண்டங்கள் சிலவற்றைப் படம் எடுத்துக்கொண்டேன். திரு.கணேசன் அவர்கள் அங்கிருந்த பல படங்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சிவனை இராமன் எனவும் ஐயனாரை வேறொரு தெய்வமாகவும் குறித்து வைத்திருந்ததை நா.கணேசன் எடுத்துரைத்துத் திருத்தச் சொன்னார். கணேசன் அவர்கள் நாசா விண்வெளியின் ஆய்வு வல்லுநரா, அல்லது வரலாற்றுப் பேராசிரியரா? இலக்கியவாணரா? என வியந்தேன்.

  அங்கு நெல்லையைச் சேர்ந்த நண்பர்கள் பலர் வந்து எங்களுடன் இணைந்துகொண்டு பல செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். அனைவரும் சீத்தாபதி விடுதிக்குத் திரும்பினோம். என் கையில் பானை ஓடுகள், அகல்விளக்குகள் இவற்றைக் கண்ட விடுதிக்காரர்கள் மருட்சியுடன் பார்த்தனர். அப்பொழுதுதான் நண்பர் காசியிடம் எங்கள் அறையின் திறவுகோல் இருப்பது நினைவுக்கு வந்தது. காசி வந்தால்தான் பொருள்களை உள்ளே வைக்கமுடியும். 1 மணி அளவில் அனைவரும் உணவுக்காகச் சானகிராம் உணவகம் சென்றனர். நண்பர் காசி அவர்கள் வந்ததும் பொருள்களை வைத்துவிட்டு சானகிராம் உணவகத்தில் நானும் காசியும் இணைந்துகொள்வது எங்கள் திட்டம்.

  1.45 மணிக்குக் காசி திரும்பினார். குளிக்க நினைத்தும் முடியவில்லை. உணவுக்கு அனைவரும் காத்திருப்பர் என நினைத்து நானும் காசியும் உணவகம் விரைந்தோம். அங்கு திரு. சேகர் பொன்னையா அவர்கள் எங்களுக்கு ஒரு சிறந்த விருந்து வழங்கினார். திரு.சேகர் பொன்னையா தம் அறிவு உழைப்பால் முன்னேறிய பெருந்தகையாளர். பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரத்தின் உறவினர் (சித்தப்பா என அழைக்கும் உறவுடையவர்). நாட்டுப்புறவியல் துறையில் புகழ்பெற்ற காவ்யா சண்முகசுந்தரனாரை முன்பே நான் நன்கு அறிவேன். எனவே திரு.சேகர் அவர்களை எங்கள் குடும்ப உறுப்பினராகவே என் தமிழ் உள்ளம் நினைத்தது. அவர் புறவழிச் சாலையில் எடுத்துள்ள மிகப்பெரிய விளையாட்டுத் தோட்டத்தில்தான் மாலைவிழா நடைபெற்றது. இது நிற்க.

  அன்பான விருந்தோம்பலுக்குக் காரணமான திரு.சேகர் பொன்னையா அவர்கள் மென்பொருள் நிறுவனம் நடத்துபவர். பல நாடுகளுக்குச் சென்றுவரும் இயல்பினர். நம் அன்பிற்குரிய நா.கணேசன் ஐயா அவர்களுக்கு அணுக்கமான நட்புடையவர். நா.கணேசன் அவர்களே அனைவரையும் ஒன்றிணைத்த பெருமைக்கு உரியவர். விருந்துக்குப் பிறகு சீத்தாபதி விடுதிக்கு வந்தோம். நான் நிலுவையில் வைத்திருந்த குளியலை முடித்தேன்.

  சிறிது ஓய்வுக்குப் பிறகு அனைவரும் நெல்லையிலிருந்து பத்து கல் தொலைவில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரை அடுத்த செப்பறை என்னும் ஊருக்குச் சென்றோம். இராசவல்லிபுரம் வல்லிக்கண்ணன், இரா.பி.சேதுபிள்ளை என்னும் அறிஞர்களைத் தந்த ஊர். அவ்வூரில் வாழ்ந்த திரு.கோமதிநாயகம் அவர்கள் செப்பறைக் கோயிலைப் பார்க்க ஆவன செய்தார். இராசவல்லிபுரத்திற்கும் செப்பறைக்கும் இண்டுகல் தொலைவிருக்கும்.

  மாலை நேரத்தில் 4 மணி அளவில் செப்பறைக் கோயிலை அடைந்தோம். அழகிய வேலைப் பாடமைந்த கோயில். ஒரே கல்லில் அமைந்த கோயிலின் மேற்கூரை, வடம், செப்பால்அமைந்த மேல் பகுதி, கற்சிலைகள் யாவும் கண்ணுக்கு இனிய விருந்து.அழகிய வயல்வெளி சூழ்ந்த பகுதியில் அக்கோயில் அவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.இறைவன் பெயர் அழகியகூத்தர். சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் 'வளர் தமிழில் இணையம்' கருத்தரங்கத்திற்குப் புறப்பட்டோம்.

  விசயா தோட்டத்தில் (கார்டன்) மாலை 6 மணி அளவில் விழா தொடங்கியநேரம். அனைவரும் ஆர்வமுடன் நுழைந்தோம். அரங்கு நிறைந்த கூட்டம். மாணவர்கள், நெல்லையைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் வந்திருந்தனர். திரு.சங்கரபாண்டி அவர்கள் அறிமுக உரையாற்றிக் கொண்டிருந்தார். காலையிலேயே சங்கரபாண்டி அறிமுகம் ஆகியிருந்தார். துடிப்புமிக்க இளைஞர். தமிழ்ப்பற்று உடையவர். அமெரிக்க மண்ணிற்குச் செல்லும் தமிழின உணர்வாளர்களுக்கு உதவும் உள்ளம் உடையவர். அவர் துணைவியாரும் அமெரிக்காவில் பணியில் உள்ளார்கள்.

  திரு.காசி, நா. கணேசன், முத்துமாறன், கோமதிநாயகம் அனைவரும் அங்குமிங்குமாகப் பிரிந்து அமர்ந்தோம்.  திரு.காசி, நா.கணேசன், சங்கரபாண்டி, தொ.பரமசிவன், சேகர் பொன்னையா, முல்லை முருகன் மேடையில் இருந்தனர். முன்பே திரு.பொன்னையா அவர்கள் அரங்கில் கணிப்பொறி வசதிகளை உருவாக்கி வைத்திருந்தார்.

  காசி அவர்களின் துணையுடன் நண்பர் முகுந்துவின் இ.கலப்பை உதவியது. நிகழ்ச்சியைப் படம் பிடித்தும் நிகழ்ச்சி நடைமுறைகளை உடனுக்குடன் செய்தியாகவும் தமிழ்மணம் உதவியுடன் வெளியுலகிற்கு வழங்கினேன். படம்பிடித்த நண்பர் முத்துமாறனின் ஒளிப்படக் கருவி பழுதுற்றது. நிகழ்ச்சியைப் படம் எடுக்க வந்த உள்ளூர் ஒளிப்படக்காரரின் படக்கருவிகளிலிருந்த படங்களை இரவல் பெற்று என் தளத்தில் வெளியிட்டேன்.

  மாவட்ட ஆட்சியர் வந்திருந்து நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார். பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் வாழ்த்திப் பேசினார். திரு.சேகர் பொன்னையா தம் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். நண்பர் காசி தம் தமிழ்மணப் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

  நா.கணேசன் அவர்கள் இணையத்தில் வளரும் தமிழ்பற்றி விளக்கிப் பேசினார்.
தமிழ் 99 விசைப்பலகை பற்றி விளக்கும்பொழுது எனக்குச் சில விளக்கம் தர வாய்ப்பு வழங்கினார் நா.கணேசன் அவர்கள்.நான் தமிழ் 99 விசைப்பலகையில் உள்ள சிறப்புகளைக் காட்சிப்படுத்தி தட்டச்சுச் செய்துகாட்டியதும் அவையினர் மகிழ்ச்சியடைந்தனர். என் இணையப்பக்கத்தில் உள்ள இல அரிய செய்திகளைக் காட்டி, வலைப்பதிவில் என் விருப்பத்தையும் ஆர்வத்தையும் சொன்னேன்.

  முல்லை முருகன் அவர்கள் இரண்டுமுறை நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக்கழகத்தில் நான் தங்கப்பதக்கம் பரிசுபெற்றதைத் தெரிவித்ததும் அனைவரும் மகிழ்ச்சியாகக் கைதட்டி வரவேற்றனர். விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். அனைவருக்கும் இரவு உணவு விழா அரங்கின் அருகில் இருந்த தோட்டத்தில் வழங்கப்பட்டது.

  தமிழ் உணர்வுடன் இணையம் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்குத் திரு.சேகர் பொன்னையா அவர்கள் இடம் வழங்கி, உணவு வழங்கி, விழாவிற்கான பெரும் உதவிகளைச் செய்துள்ளார். இவர்களைப் போலும் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிப் பயிலரங்குகளை நடத்தியும் தமிழ் இணையம் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் செயல்படத் தமிழ் விரைந்து வளர்ச்சிபெறும்.

  அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு நண்பர் காசி அவர்கள் கோவைக்குப் பயணமானார். நான் மட்டும் அறைக்குத் திரும்பினேன். கணேசன் அவர்கள் அங்குள்ள மூத்த நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றார்.

  மறுநாள் பொருநை இலக்கியவட்டத்தில் கண்டதை வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாது!

மீண்டும் தொடர்வேன்...

கருத்துகள் இல்லை: