நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 ஜூன், 2008

திருநெல்வேலிக்குச் சென்றபொழுது...தொடர் - 1

    தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கு 07.06.2008 இல் நெல்லையில் நடத்துவது குறித்து நா.கணேசன் அவர்கள் மின்மடலிலும் தொலைபேசியிலும் குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். தமிழ்மணமும் தன்பங்கிற்கு முகப்பில் அச்செய்தியைத் தாங்கி நினைவூட்டிய வண்ணம் இருந்தது. நான் மட்டும் தொடர்வண்டிச் செலவுச்சீட்டுக்குப் பதிவு செய்திருந்தேன். காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் இருந்தது. நடுவண் அமைச்சர் ஒருவரின் விரைவு ஒதுக்கீட்டில் செல்ல முயன்றும் அம்மடலைத் தொடர்வண்டித்துறை மதித்தபாடில்லை. 
 
  அப்புறம் என்ன? விழுப்புரத்தில் 06..06.2006 இரவு 11.45 மணிக்கு நெல்லை விரைவுத் தொடர்வண்டியில் நிலைய மேலாளர் இசைவின்படி ஏறி செய்தித்தாளை விரித்தேன். இரவு முழுவதும் புரண்டுபடுத்தும் தூக்கம் இல்லை. திருச்சியிலிருந்து படுக்கைக் கிடைத்தது. இருந்தாலும் தூக்கம் இல்லை. 07.06.2008 பொதுவுடைமைக்கட்சி கடையடைப்புக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. எனவே கருத்தரங்கு நடக்குமோ, நடக்காதோ என எனக்கு ஐயம் முன்பே ஏற்பட்டதைத் திரு. நா.கணேசன் அவர்கள் போக்கி, கருத்தரங்கம் நடக்கும் என்றார்கள். இதன் அடிப்படையில் கருத்தரங்கம் நடக்கும் என்ற அடிப்படையில் சென்றேன். முன்பே நெல்லையில் இருந்த எனக்குத் தெரிந்த பேராசிரியர்களுக்கு என் வருகையை மடல்வழித் தெரிவித்திருந்தேன். இயன்றால் சந்திக்க நினைத்தேன்(யாரையும் சந்திக்கமுடியவில்லை). 
 
 நண்பர் காசி அவர்கள் இரவே பேசித் தாம் சென்னையிலிருந்து புறப்படுவதாகவும், காலையில் 7.45 மணிக்கு நெல்லை அடைவதாகவும் தெரிவித்தார். 8.45 மணிக்கு என் தொடர்வண்டி நெல்லையை அடையும்.எனவே அவர் தங்கியுள்ள அறையில் குளித்துமுடிக்க நினைத்தேன். காலையில் நெல்லையை அடைந்ததும் என் வருகையை நண்பர் காசிக்குச் சொன்னேன். சீத்தாபதி விடுதியில் தாம் தங்கியுள்ளதைக் குறிப்பிட்டார். தொடர் வண்டி நிலையத்திலிருந்து நடந்து அருகில் உள்ள சீத்தாபதி விடுதியை காலை 9.15 மணிக்கு அடைந்தேன். நண்பர் காசியை அங்கு முதன் முதலாகப் பார்த்தேன். அதற்குமுன் தொலைபேசி, மின்னஞ்சலில் மட்டும் அறிமுகம் இருந்தது. அன்போடு பழகினார். பல ஆண்டு பழகியது போன்ற கொங்குநாட்டு அன்புப் பேச்சில் மகிழ்ந்தேன்.முகம் மழித்துக் குளிக்க முயன்றேன். என் வருகையை நண்பர் நா.கணேசன் அவர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். 
 
 நண்பர் நா.கணேசன் அவர்கள் ஒரு குழுவாக ஆதிச்சநல்லூர் செல்லும் திட்டத்தில் இருந்தார். அக்குழுவில் நானும் இணைந்துகொள்வது சிறப்பு எனக் கணேசனும் விரும்பினார். நானும் நினைத்தேன். பலநாள் பார்க்க நினைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாயிற்றே அது. முகம் மட்டும் கழுவிக்கொண்டு அணிந்திருந்த சட்டையுடன் என் புகைப்படக்கருவி, குறிப்புச்சுவடியுடன் புறப்பட்டேன். நான், பேராசிரியர் தொ.பரமசிவன், நா.கணேசன், முல்லை முருகன், நீதியரசர் மகராசன் அவர்களின் பெயரன் திரு.கோமதிநாயகம். நா.கணேசனின் மைத்துநர் முத்துமாறன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழு முதலில் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதிக்குச் சென்றோம். 
 
  ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் படங்களை முன்பு நாளிதழ்களில் பார்த்தபொழுது நல்ல காட்சிகள் மனத்தில் பதிந்தன. அந்தக்காட்சிகள் பார்வைக்குக் கிடைக்கும் என நினைத்தேன். எங்கள் பொன்னேரி போன்ற வறண்ட மேட்டைக்காட்டி இதுதான் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப்பகுதி என தொ.ப. விளக்கம் சொல்ல என்னால் நம்ப முடியவில்லை. காரணம் அரும்பெரும் வரலாற்று உண்மைகளைத் தாங்கிக்கொண்டுள்ள அந்த நிலப்பகுதியை வேலியிட்டுப் பாதுகாக்கவோ, அழகிய நினைவுச் சின்னங்களை காட்சிப்படுத்தவோ அரசு முன்வரவில்லை. வெண் சரளைக் கற்கள் கிடக்க அதில் பலவகை மண் ஓடுகள் கலைநயத்துடன் கிடந்தன. மேலே சிவப்பு நிறமும் கீழே கறுப்பு நிறமுமாகப் பல ஓடுகளைக் கண்டு வியந்தேன். அவற்றுள் சிலவற்றை நினைவுக்காகச் சேமித்துக்கொண்டேன். 
 
  முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான தடயங்கள் பல தெரிந்தன.பளிங்கு போன்ற கூழாங்கற்கள் சிறு சிறு வட்டாக இருந்தன. அவற்றின் கீழ் முதுமக்கள் தாழி இருக்கும் எனப் பேராசிரியர் தொ.ப. விளக்கம் சொன்னார். பழங்காலத்தில் மக்களை முதுமக்கள் தாழியில் வைத்தபிறகு அவர்களின் உடலை நாயோ, நரியோ இழுக்காமல் இருக்க உறுதியான இத்தகு கல்லை வைத்திருக்கவேண்டும் என நம்புகின்றனர். பொருநையாற்றின் கரையில் இருந்த இப்பகுதியை மிகுதியான வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட தண்ணீரின் போக்கு அரித்து ஆதிச்சநல்லூர் அகழாய்வை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டியதாகவும், அதன்பிறகு அகழாய்வுப்பணிகள் நடைபெற்றதாகவும் அறியமுடிந்தது. 
 
  அழகிய சிறு அகல் ஒன்றை எனக்குப் பேராசிரியர் தொ.ப. பரிசாக வழங்கினார். பல காட்சிகள் படமாக்கிக்கொண்டேன்(பிறகு இணைப்பேன்). அருகில் இருந்த மலைப்பகுதியில் இரும்பு உருக்கும் பகுதிகளைப் பேராசிரியர் தொ.பரமசிவன் கண்டுபிடித்ததை நினைவுகூர்ந்தார். இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாகக் காற்றின் போக்கிற்கு ஏற்ப இந்த இரும்பு உருக்கும் அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததையும் தாமிரபரணிக் கரையில் உள்ள மணலில் மிகுந்த இரும்புத் தாதுக்கள் இருந்ததால் இங்கு இரும்பு உருக்கப்பட்டது எனவும் இதனையொத்த பணி இலங்கையில் நடைபெற்றதையும் எங்கள் குழு விவாதித்தது. நா.கணேசன் அவர்கள் இது பற்றி ஆராயும்படி என்னிடம் தெரிவித்தார். 
 
 ஆதிச்சநல்லூர் மேட்டுப்பகுதியை (சாலைக்குத் தென்புறம்) பார்வையிட்ட பிறகு வடபகுதியையும் பார்வையிட்டோம். அங்கிருந்த பொருநையாற்றில் அழகிய நீரின் போக்கைக் கண்ட எனக்கு நீராட எண்ணம். துண்டு கொண்டு போயிருந்தால் ஒரு குளியல் போட்டிருக்கலாம். காலையில் குளிக்காததைச் சமன் செய்திருக்கலாம். குளிக்கமுடியாத ஏக்கத்துடன் இருந்த என்னைச் சுமந்தபடி திருநெல்வேலிக் காட்சியகம் (மியூசியம்) நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைந்தது. (மீண்டும் தொடர்வேன்)

2 கருத்துகள்:

Venkatesh சொன்னது…

உங்களுடன் பயணம் செய்தது போல் உணர்கிறேன்.

வெங்கடேஷ்
திரட்டி.காம்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவுக்கு நன்றியன்.
மு.இளங்கோவன்