நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 ஜனவரி, 2008

மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு

மலைபடுகடாம்

பத்துப்பாட்டு நூலுள் நிறைவாக வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெங்குன்றூர் பெருங்கொளசிகனார் ஆவார்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனும் அரசனாவான். இவன் கொண்கான நாட்டில் ஏழில் மலையையும், பாரம் என்ற நகரையும் ஆண்ட நன்னனின் மகன் என்பதை மலைபடுகடாம் நூலின்வழியும், நச்சர் உரை வழியும் பிற சங்கநூல் சான்றுகள் வழியும் உறுதிப்படுத்த முடிகிறது.

கொண்கான நன்னன் பெண்கொலை புரிந்ததால் புலவர்கள் அவனையும் அவன் மரபினரையும் பாட விரும்பவில்லை என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகின்றது. அவ்வாறு எனில் நன்னன் வழியில் வந்த நன்னன் சேயைப் பெருங்கௌசிகனார் பாடியது ஏன்? எனும் வினா எழுகிறது. கொண்கானம் என்பது இன்றைய கேரளத்தின் வடபகுதியாகவும், துளு பேசும் பகுதியாகவும் உள்ளதை அறிஞர் பி.எல். சாமி குறிப்பிட்டு எழுதியுள்ளார்(செல்வி. 79-7, ப.4).

கொண்கானத்து நன்னனைக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் தோற்கடித்துக் கொன்றுவிட்டதைக் கல்லாடனார் அகநானூற்றில் (199-ஆம் பாடல்) பாடியுள்ளார். நன்னனைத் தோற்கடித்து அவன் காவல் மரமான வாகையை நார்முடிச்சேரல் வெட்டியதைப் பதிற்றுப்பத்திலும் புலவர் பாடியுள்ளார்(பதிற்று.40). எனவே கொண்கானத்து நன்னன் இறந்தபின் அவன்மகன் நன்னன் சேய் நன்னன் தந்தையின் தலைநகரான பாரம் (ஏழில்குன்று) எனும் நகரத்திலிருந்து (கேரளா-மாஹி) ஏறத்தாழ 500 கி.மீ.வடகிழக்கே 'செங்கண்மா' (செங்கம்) எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆட்சி செய்த நன்னனின் தெளிவான வரலாற்றை அறியத் தகுந்த சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் அவனைப்பற்றி 'மலைபடுகடாம்' நூலில் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் குறிப்பிடும் செய்திகளின் துணையைக் கொண்டும், களப்பணி, செவிவழிச் செய்திகளின் துணைகொண்டும் நன்னனின் வரலாற்றைத் தொகுத்துரைக்க இக்கட்டுரை முயற்சி செய்கிறது.

நன்னனின் காலம்

பல்குன்றக் கோட்டத்துச் செங்கம் பகுதியை ஆண்ட நன்னனின் காலம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. எனினும நன்னன் சேய் நன்னனின் தந்தையான கொண்கான நன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலால் கொல்லப்பட்டதால் நன்னனின் காலம் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலம் எனக் கொள்வதில் தவறில்லை. களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலம் கி.மு 250- கி.மு. 175 அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது. (வேலாயுதம், பக்.18) களங்காய்க் கண்ணியின் காலத்திலே செங்கண்மாவில் நன்னன்சேய் நன்னன் ஆட்சி செய்திருக்க வேண்டும். எனவே, களங்காய்க் கண்ணியின் காலத்தைச் சேர்ந்தவன் நன்னன் என்ற முடிவிற்கு வரலாம்.

அக்கால கட்டத்தில் தமிழகத்தின் அரசர்கள் - சிற்றரசர்கள் - குறுநில மன்னர்களின் வரலாற்றினை ஆராயும்பொழுது நன்னன் காலத்து அரசியல் சூழலை ஒருவாறு உணர முடியும். அவ்வாறு நன்னன் காலத்தில் அரசியல் சூழலை நன்கு அறிவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனினும் மலைபடுகடாம் நூலில் நன்னனின் உடல்வலிமை, போர் ஆற்றல, பகைவர்கள் இருந்துள்ளமை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

நன்னனின் நாடு இயற்கையான மலைவளம் கொண்டது. எனவே, நன்னனுக்குப் பகைவர்கள் பலர் இருந்திருக்க வேண்டும். நன்னனின் நாட்டைச் சுற்றியிருந்த வேற்று நிலத்தலைவர்கள் அல்லது அவர்களின் குடிவழியினரை ஆராய்ந்து பார்க்கும்பொழுது சில முதன்மையான ஊர்களையும், அப்பகுதியை ஆண்ட தலைவர்களையும் அடையாளம் காண வேண்டியுள்ளது. நன்னன் காலத்திலோ, அதற்கு முன் அல்லது பின்னைய ஓரிரு நூற்றாண்டுகளிலோ தகடூர் (தருமபுரி), காஞ்சிபுரம், கிடங்கில் (திண்டிவனம்), திருக்கோவிலூர், கொல்லிமலை முதலான ஊர்கள் முதன்மை பெற்ற வரலாற்றுப் பெருமைக்குரிய ஊர்களாக விளங்கியுள்ளன. தகடூர், திருக்கோவிலூர், கொல்லிமலை, முதலியன போரில் பலமுறை தாக்கப்பட்டு அரசர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே இந்த ஊர்களுக்கு நடுவில் இருக்கும் செங்கமும், அதனை ஆண்ட நன்னனும எப்பொழுதோ நடைபெற்ற போரால் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவன் நாடும் கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். நன்னனுக்குப் பகைவர்கள் இருந்துளளமையையும், அவன் வலிமையானவன் என்பதையும் மலைபடுகடாம் எனும் நூலின் பல நுண் குறிப்புகளால் உணர வாய்ப்பு ஏற்படுகின்றது.

நன்னனின் வீரத்திற்குச் சான்று

ஓவியங்களிலே வரையப்பட்டது போன்ற முலையினையும், மூங்கிலை ஒத்த தோளினையும், பூப்போன்ற கண்ணிமையும் உடைய கற்புடைய மகளிர்க்குக் கணவனாக நன்னன் விளங்கினான். கையால் செய்யப்பெற்ற மாலையினையுடைவன். அம் மாலைகளில் பொலிவுற்ற வண்டுகள் உள்ளன (56-58). பகைப்புலத்தைப் பாழுண்டாக்கும் வண்ணம் அரிய வலிமையினை உடையவன். பரிசிலர்க்குப் புதுப் புனலாய்ப் பயன்தருபவன். ஆக்கத்தினை நினைக்கும் நினைவும், வில்தொழில் பயின்ற கையினையும் (63) உடையவன். பேரணிகலன்களை அணிந்தவன் (63), நன்னன் சேய் நன்னன் எனும் பெயரினன் , பகைவர்கள் பலரையும் புறமுதுகிட்டு ஒடும்படிச் செய்தவன். அவர்கள் திறையாகத் தந்த பெறுதற்கரிய பேரணிகலன்களை அறிவுடையவர்களுக்கு முற்பட வழங்கியவன் (71-2) , தன்னை இகழ்பவர்களுக்கு அரசு கொடாமல் சுருக்கும் அறிவுடையவன் (73), பல அரசர்களைப் புறம்காணச் செய்து அவர்களின் அரசை முற்றாகப் பரிசிலர்க்கு வழங்குபவன், அறிவும் பண்பும் கொண்ட சான்றோரைச் சுற்றமாகக் கொண்டவன். ஞாயிற்றால் இருள்நீங்குவது போல நன்னனால் பகை என்னும் இருள் அவனுக்கு விலகியது(84-85). பகைவனின் நாடு தொவைலில் இருப்பினும் ஆண்டுச் சென்று போரிட்டு, அந்நாடு, ஊர் முதலியவற்றை நன்னனின் குடியினர் புலவருக்கு வழங்குதலைத் தொடர்ச்சியாகச் செய்துளளனர்(86-9).

நன்னனின் நாட்டிற்குச் செல்லும வழியில் மராமரத்தின் அடியில் நன்னனின் படைமறவர்கள் போரிட்டு இறந்ததன் நினைவாக அவர்களுக்குப் பெயரும், பீடும் எழுதி நடப்பட்டுள்ள நடுகல் இருக்கும் (394-98) எனும் குறிப்பு நன்னன் நாட்டில் அடிக்கடிப் படையெடுப்புகள் நிகழ்த்தப்பட்டமையைக் காட்டுகிறது. ஆனால் அவன்மீது படையெடுத்த அரசர், எந்தத் தேசத்தினர், எதன் பொருட்டுப் படையெடுத்தனர் என்ற விவரம் ஆராயப்பட வேண்டியுள்ளது.

நன்னனின் பாதுகாப்பு அரணில் அகழி இருக்கும். அவ்வகழியில் இரையைத் தேடும் வளைந்த காலினையுடைய முதலை இருக்கும். அவன் ஊரில் வானைத் தொடும்படியான உயர்ந்த மதில் இருக்கும். அவன் ஊர் புகழ்பரப்பும் சிறப்பினை உடையது(91-94) நன்னன் பகைவர்களைப் பொறுத்துக் கொள்ளாமல் பெரும்போர் செய்பவன். வெற்றியுண்டாகும்படி வலிய முயற்சியும் மானமும் கொண்டவன் (163-64). வலிமையுடைய நன்னன் பகைப்புலத்தை அழிக்கவும், அவன் நிலத்தைக் காக்கவும் பழைய மதில்களையும், தூசுப்படைகளையும் கொண்டிருந்தான். அவன் நாட்டில் பல இடங்களில் வழிபாடு நிகழ்த்த கோயில்கள் இருந்துள்ளன.

பெருமைக்குரிய போரினை விரும்பி நடத்துவதால் திருமகள் நிறைந்த மார்பினையுடையவன் (355,56) நன்னனின் நீங்காத படைத்தலைவனும், மேகம் போன்ற யானைகளும், அரண்களும் கொண்டு நன்னன் மலை விளங்கும் (376-78). நன்னனின் ஏவலைக் கேட்காத பகைவர் புறமுதுகிட்டு ஓடியதைக் கண்ட நன்னனின் படை மறவர்கள் ஆரவாரித்து, அதுவம் பொறாமல் இவ்விடம் உயிர்கொடுத்தல் நன்று என நினைத்து உயிர்விடும் இடமும் உண்டு. நன்னன் திண்ணிய தேரினை உடையவன்.(466-67)

நன்னனின் நாட்டை வளப்படுத்துவது அவனது மலையில் தோன்றியோடும் சேயாறு ஆகும். சேயாற்றுக்கு அண்மையில் அவனின் பழைய மூதூர் உள்ளது(476-7). நன்னன் இகழும் பகைவர்கள் அஞ்சும்படியான மதில்கள் (482) அவனுடைய அரண்மனைக்கு அருகில் இருந்துள்ளன. திருநாளில் கூடிய மக்கள் ஆரவாரம் செய்வது போலவும், கடல்போலவும், மேகம் முழங்குவது போலவும், முழங்கித் திரியும் மக்கள் நிறைந்த அங்காடித் தெருக்கள் நன்னனின் நகரத்தில் இருந்துள்ளன(483-84). குறுந்தெருக்களும் (482), ஆறு போல அகன்று கிடந்த தெருக்களும் (481) ஊரிலிருந்து வேற்றுப்புலத்திற்குப் பெயர்தலில்லாத மக்கள் வாழும் மூதூர் நன்னனுடையது.

நன்னனைப் பொருந்தாத பகைவருடைய கரிய தலைகள் துணிக்கப்படும். பருந்துகள் நிணம் நோக்கிப் பறக்கும். இத்தகு வீரம் செறிந்த வாளினைக் கொண்ட மறவர்கள் நன்னனின் படையில் உண்டு(488-9). இம்மறவரக்ள் கரிய காம்பினையுடைய வேலைச் சாத்தி வைத்துக் காவல்புரிவர். இக்கடுங்காவல்கொண்ட அரண்மனை வாயில்கள் நன்னன் ஊரில் உண்டு. நன்னன் முருகனைப் போலும் போர்செய்யும் ஆற்றலுடையவன் (493). நன்னனின் அரண்மனை வாயிலில் பல்வேறு திறைப்பொருள்களைக் குடிமக்கள் கொண்டு வந்து வைத்திருப்பர். முற்றத்தில் விறலியர் பாடல் இசைப்பர் (536), நன்னனின் முன்னோர் புலவருக்குக் கொடுத்தவற்றை வாங்காதபடி வஞ்சினங்களில் குறையாதவர்கள். அத்தகு நல்ல மரபின்வழியில் வந்தவன் (539-40) நன்னன். இவ்வுலகில் மட்டும் என்று இல்லாமல் உலகம் உள்ள அளவும் நிற்கும்படி கொடையாகிய கடனை முடித்தவன் (541-43).

நன்னன் வரலாற்றைக் காட்டும் தடயங்கள்

நன்னனின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. 2-ஆம் நுற்றாண்டிற்கும் இடைப்பட்டது ஆகும். பல்வேறு படையெடுப்புகளாலும, காலப் பழைமையாலும் நன்னனின் வரலாற்றை அறிய உதவும் புறச்சான்றுகள் சிதைக்கப்பட்டுள்ளன. மற்ற அரசர்களின் வரலாறுகளிலும் நன்னனைப் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. புலவர்கள் இவன் முன்னோன் காரணமாகக் குடிவழியைப் பாட மறுத்துளளனர். எனவே, இவன் குறித்த வரலாறு அறிய முடியவில்லை என்றாலும் நன்னனின் நவிரமலையும், காரியுண்டிக் கடவுளும், செங்கத்தைச் சார்ந்த பல ஊர்களின் பெயரும், மொழிகளும், வழக்காறுகளும், சேயாறும், செங்கம் என்ற ஊரும்,மலைபடுகாடம் நூலும் நன்னனின் வரலாற்றுச் சுவடுகளைத் தன்னுள் அடக்கி வைத்துளளன. அறிஞர் வேங்கடாசலம் அவர்களின் வழியாக (30.07.05) நன்னன் பற்றிய செய்திகளை அறிய முடிந்தது. பொறியாளர் வேங்கடாசலனார் 'நன்னன்நாடு' எனும் இதழை நடத்தினார். நன்னன் புகழைப் பரப்ப முயன்று ஆய்வுகளில் ஈடுபட்டுச் சில வரலாற்றுச் செய்திகளை நிலைநாட்ட முயன்றவர்.

மலைபடுகடாம் நூலில் யானையைப் பாகர்கள் பழக்கும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதனை உறுதிசெய்யும்படியாகக் 'கரிமலைப்பாடி' எனும் ஊர்செங்கம் அருகில் உள்ளது. நன்னனின் கோட்டை இருந்த இடம் இன்றும் 'கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது. 'முதலை மடு' உள்ளது. 'கூட்டாத்தூர்' எனும் ஊர் மூன்று ஆறுகள் கூடும் இடம் எனும் பொருளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். முதுமக்கள் தாழி ஒன்பது அடிக்குக் கீழ் இப்பகுதியில் உள்ளது. சேப்புளி- வாலியர்கூடம் ஊர்களில் பாறைமேல் கருங்கற்களால் அமைந்த வீடுகள் உள்ளன. மூலக்காடு (முல்லைக்காடு என்பதன் திரிபாக இருக்கலாம்), சேப்புளி, பட்டினக்காடு, கோயிலூர்- கூட்டாத்தூர், கல்லாத்தூர், குப்பநத்தம், கிளையூர் வழியாகச் செங்கத்தை அடையலாம் என அறிஞர் வேங்கடாசலம் குறிப்புகள் தருகின்றார். நன்னனின் கோட்டைக்குள் செல்ல ஒரே வழிதான் உண்டு என்னும் அமைப்பில் நில அமைப்பு இன்றும் உள்ளதை நேரில் சென்று அறிய முடிகின்றது.

நவிரமலையின் படங்கள்

4 கருத்துகள்:

MSATHIA சொன்னது…

நான் வளர்ந்த ஊரைப்பற்றி (செங்கம்) விரிவாக காணக்கிடைத்தமைக்கு நன்றி.நான் வளர்ந்த பருவங்களில் நன்னன் நாடு இதழ் மூலம் அந்த பகுதியைப்பற்றி படிக்க நேர்ந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
உங்கள பணி மேலும் தொடரட்டும் பழந்தமிழ் நாட்டின் உயர்வைப்பற்றி மேலும் அறிய அவா.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்

Unknown சொன்னது…

சங்க இலக்கியமென்பதால் 50% சதவித உண்மைகளை எதிர்பார்க்கலாம். தமிழறிந்த உம் போன்றோர் நிறைய எழுத வேண்டும். கலித்தொகை மிகவும் கவனம் கொள்ளச்செய்கிறது எனினும் பதங்களின் பொருளறிவது சற்று கடினமாக உள்ளது. புரானம் தவிர்த்த சங்க இலக்கியங்கள் குறித்து நீங்கள் எழுத வேண்டும். ஆரியத்தின் கலப்பால் புராணங்கள்/இதிகாசங்கள் மீதான நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. :)

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி.
மு.இளங்கோவன்