நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 அக்டோபர், 2007

திருமுதுகுன்றத்திலிருந்து கருப்புச்சொற்கள்...

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) இலக்கியப் படைப்பாளிகள் பலரை வழங்கியமண். இவ்வூரிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் பிறந்த பல படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகிற்குப் பல படைப்புகளை வழங்கியுள்ளனர். இப்பகுதியில் பிறந்த திரைப்பா ஆசிரியர் அறிவுமதியின் எழுத்துகளும் வளர்ச்சியும் இப்பகுதி இளைஞர்களைக் கவிஞர்களாகவும், கதையாசிரியர்களாகவும், சிற்றிதழாசிரியர்களாகவும் மாற்றின எனக் குறிப்பிட்டால் மிகைக்கூற்றாக இருக்காது.

கண்மணி குணசேகரன், இரத்தின.கரிகாலன், இரத்தின.புகழேந்தி, பட்டிசெங்குட்டுவன், தெய்வசிகாமணி (நடவு ஆசிரியர்), தாமரைச்செல்வி (புதின ஆசிரியர்) முதலானவர்கள் இப்பகுதியின் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்லடம் மாணிக்கம், த.பழமலை. வே.சபாநாயகம், தங்கர்பச்சான் போன்றவர்களும் இளைஞர்களை எழுதச்செய்யும் இயல்புடையவர்கள். இவர்கள் இப்பகுதியினர்.

இம்மண்ணிலிருந்து ஆவாரம்பூ என்னும் பெயரில் சிவா என்னும் இளைஞர் தரமான சிற்றிதழ் தொடங்கி நடத்தினார். மூன்று இதழ்கள் வெளிவந்த பிறகு தமிழ்ப்பற்றின் காரணமாகச் சிவா என்னும் தம் பெயரை இளந்திரையன் என மாற்றியும், ஆவாரம்பூவைக் 'கருப்புச்சொற்கள்' என்னும் பெயரிலும் வெளியிட்டுள்ளார். தரமான படைப்புகளுடன் கருப்புச்சொற்கள் இதழை வெளிக்கொண்டுவந்துள்ள இளந்திரையனைப் போற்றி வரவேற்போம்.

அவர்தம் முகவரி:

இளந்திரையன்
470/ 1 பாரிவீதி,
பாலாசிநகர்,பெரியார் நகர்(தெற்கு),
திருமுதுகுன்றம் -606001,தமிழ்நாடு

ஞாயிறு, 28 அக்டோபர், 2007

தமிழ்நாட்டில் தமிழ்படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது!

தமிழ்மொழி தொன்மையானது,செம்மொழித்தகுதியுடையது என மேடைமுழக்கம் செய்தவர்களே தமிழ்படித்தவர்களுக்கு எதிரான செயல்களில் இன்று இறங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ் இலக்கியங்களை இளங்கலை, முதுகலை,இளம்முனைவர்,முனைவர் பட்ட வகுப்புகளில் நேரடி வகுப்புகளில் பயிற்றுவிக் கின்றன.இதில் பல்லாயிரம் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல இலட்சம் மாணவர்கள் தமிழ் இலக்கியங்களை நேரடியாகப் படித்துவிட்டு,கல்வியியல்
( B.Ed) பட்டங்களைப் பெற்றும் பல ஆண்டுகளாக வேலையின்றி வேலைவாய்ப்பகத்தில் பதிவுசெய்துவிட்டுப் பணிவாய்ப்பின்றி உள்ளனர்.இவர்கள் எந்தச் சங்கத்தின் பெயரிலும் ஒன்றுகூடாமல் உள்ளதால் பணிவாய்ப்பிற்குரிய அறிகுறியே இல்லாமல் உள்ளனர்.இவ்வாறு தமிழ் இலக்கியம் பயின்றவர்களில் மகளிரின் எண்ணிக்கை மிகுதி. தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மிகுதியாகும்.இவ்வாறு தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றவர்களின் நிலை உள்ளது.

இன்று ஆசிரியர் பயிற்சியைக் காசுக்கு விற்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் மிகுதியாகத் திறந்து கடைவிரித்துக் கிடக்கின்றன.இங்குப் படித்து(!) வேலைக்கு வருபவர்கள் செய்யும் முதல் வேலை தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரத் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டங்களைக் காசுக்குப் பெற்று விடுகின்றனர்.

தொடக்கப்பள்ளிகளில் வேலைக்குச்சேரும் இவர்கள் தங்களின் அஞ்சல்வழிப் பட்டங்களைக் காட்டி நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக வந்துவிடுகின்றனர். இதற்கு இவர்களின் கூட்டணிகளும்,பணப்புழக்கமும்,வாக்குகளும்,அரசியல்காரர்களை வளைத்துப்போடும் மாநாட்டு உத்திகளும் பெரிதும் கைகொடுக்கின்றன.

ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் (D.T.Edu.) கல்லூரி,பல்கலைக்கழகத்திலும் கால்வைத்து விடுகின்றனர். ஆசிரியர் பயிற்சியோடு பணிக்கு வந்தவர்கள் பட்டம்பெற்றால் பணப்பயன் வழங்கலாமே தவிர தகுதி மீறிய பணியைக்கொடுப்பது கல்வியுலகில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் எனக் கல்வியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களை முறையாகப்படித்தவர்களே தமிழாசிரியராக வருதல் வேண்டும்.தமிழ் தவிர பிற கணக்கு,ஆங்கிலம்,வரலாறு,அறிவியல் பட்டம் பெற்றாலும் ஆசிரியர்பயிற்சி மட்டும் பெற்றுத் தொடக்கப்பள்ளியில் பணியில் இருப்பவர் கல்வியியல் பட்டம் பெற்றால்தான் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.தான் பட்டம் பெற்றுவிட்டேன் என்னை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக்கு எனத் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் பிறதுறை ஆசிரியர்கள் கேட்பதில்லை.விதியும் இல்லை.

ஆனால் ஆசிரியர்பயிற்சி மட்டும் முடித்து தொடக்கப்பள்ளியில் பணியிலிருப்பவர்கள், அஞ்சல்வழியில் தமிழ் பி.லிட்,பி.ஏ பட்டம் மட்டும் பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளித் தமிழ்ஆசிரியராகலாம் என அண்மையில் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.இவ்வகையில் 6700 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு செய்வதன்வழி எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம் நேரடியாகப்படிப்போர் எண்ணிக்கை இல்லாமல் போகும். தமிழகத்தில் நேரடியாக நடைபெறும் பல்வேறு கல்லூரிகளின் தமிழ்வகுப்புகள் மாணவர்களின் வருகை இன்மையால் மூடவேண்டியதேவை ஏற்படலாம். தமிழ்வகுப்புகளை இதுநாள் வரை படித்துவிட்டு பணிக்குச் செல்லாதவர்கள் பாரதூரமான துன்பங்களைச் சந்திப்பர்.இவற்றை எதிர்த்துத் தமிழ் படித்த மாணவர்கள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

அஞ்சல்வழிக்கல்வியால் தமிழுக்கு நேர்ந்துள்ள முதல்அடியாக இதனைக்கருதலாம். தமிழ்நாட்டுக் கல்வியில் அறிவுப்பூர்வ பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளதை இது காட்டுகிறது.

வியாழன், 25 அக்டோபர், 2007

ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்

 திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக இன்றும் விளங்குகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலும், இன்னும் பல்வேறு புகழ்பெற்ற ஊர்களும்,மலைகளும் இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இவ்வூரில் வாழும் சி.மனோகரன் என்னும் அன்பர் அமைதியாக ஒரு பெரும்பணியை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். இவ்வூரிலும் பக்கத்து ஊர்களிலும் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள், அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழி வுகள், சுழலும்சொற்போர், நாடகங்கள்,தெருக்கூத்துகள்,பட்டிமண்டபங்கள், இசை நிகழ்ச்சிகளை ஒலிநாடாக்களில் பதிவுசெய்து பாதுகாத்து வருகின்றார். வறுமைநிலையில் வாழ நேர்ந்தாலும் தம் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து பல்லாயிரக் கணக்கான மணிநேரம் பதிவு செய்யப்பெற்ற ஒலிநாடாக்களைப் பாதுகாப்பதிலும், தொடர்ந்து பதிவு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.


 இலக்கியங்களை,தத்துவங்களை, கதைகளைப் பாட்டாகவும், உரையாகவும் மக்களிடம் கொண்டுசேர்த்த எத்தனையோ அறிஞர்களின் முகத்தைப் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் முடியாதபடி பதிவுசெய்யும் நாட்டம் இல்லாதவர்களாக நம் முன்னோர்கள் இருந்துள்ளனர். அரிய பொருள் பொதிந்த பேச்சுகள் காற்றோடு காற்றாகவும், உருவம் மண்ணோடு மண்ணாகவும் கலந்துபோயின. பதிவுக்கருவிகள் வந்த பிறகும் நாம் விழிப்படைந்தோமா என்றால் இன்னும் தேவை என்ற அளவில்தான் நிலைமை உள்ளது.அடுத்த தலைமுறைக்கு உ.வே.சா, மறைமலையடிகளார், பாவாணர், பெரியார், அண்ணா ,காமராசர், திரு.வி.க, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் முதலானவர்களின் பேச்சு, பாடல்கள் சில மணி நேரம் கேட்கும்படி இருக்குமே தவிர முழுமையாக நாம் அவற்றைப் பதிவு செய்தோமில்லை. பாதுகாத்தோமில்லை.

இக்குறையைப் போக்கும் வகையில் திருவண்ணாமலை சி.மனோகரன் அவர்களின் முயற்சி உள்ளது. இவருக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஒலி இலக்கியச் செம்மல் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர் தமிழ்ஒளிஇயக்க அன்பர்கள். எதற்குப் பாராட்டு? ஏன் பாராட்டு? பாராட்டுப் பெற்றவருக்கு இப்பாராட்டு பொருந்துமா என்பது பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.


அறிஞர்களின் பேச்சுகளை ஊர் ஊராகச் சென்று கேட்டதோடு அமையாமல் பதிவுசெய்து பாதுகாத்தும், வேண்டியவருக்குக் குறைந்த செலவில் படியெடுத்தும் வழங்கும் பணியை மேற்கொள்பவர் திருவண்ணாமலை சி.மனோகரன். (மனோகர் ரேடியோ அவுசு36 டி,திருவூடல்தெரு, திருவண்ணாமலை (தொலைபேசி + 9944514052 ) என்னும் முகவரியில் வாழும் இவருடன் உரையாடியதன் வழியாகப் பல தகவல்களை அறியமுடிந்தது.


சி.மனோகரன் அவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலையை அடுத்த சோழவரம் என்பதாகும். பெற்றோர் சின்னக் குழந்தைவேலு, ஆண்டாள். பள்ளியிறுதி வகுப்புவரை படித்தவர். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர். சுவர்களில் விளம்பரப் பலகைகள் எழுதும் பணியில் தொடக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பின்பு திருச்சி சியாமளா ரேடியோ இன்சுடியுட்டில் வானொலி பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு 1974 இல் தாமே சிறிய அளவில் ஒரு பழுது பார்க்கும் கடையைத் தொடங்கி நடத்தினார். 1984 இல் பதிவுக்கருவி வாங்கும் அமைப்பு அமைந்தது. அதன்பிறகு திருவண்ணாமலையிலும் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கினார். இவர் பதிவு செய்த ஒலிநாடாக்கள் என்ற வகையில் அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் சொற்பொழிவாக அமைந்த பின்வரும் ஒலிநாடாக்கள் மிகச்சிறந்த தொகுப்புகளாகக் கொள்ளலாம்(இப்பட்டியல் முழுமையானதல்ல).


1.தொல்காப்பியம் 39 மணிநேரம்


2.சங்கஇலக்கியம்

திருமுருகாற்றுப்படை 6 மணிநேரம்

நற்றிணை 2 மணிநேரம்

திருக்குறள் 7 மணிநேரம்


3.சிலப்பதிகாரம் 40 மணிநேரம்

4.திருவாசகம் 120 மணிநேரம்

5.திருக்கோவையார் 19 மணிநேரம்

6.பெரியபுராணம் 150 மணிநேரம்

7.மகாபாரதம்,

8.கந்தபுராணம், 15 மணிநேரம்

9.திருவிளையாடல்புராணம் 75 மணிநேரம்

10.திருப்புகழ் 13 மணிநேரம்

12திருமந்திரம் 40 மணிநேரம்

13.பதினோராம் திருமுறை 45 மணிநேரம்

14.திருவிசைப்பா 9 மணிநேரம்

மேற்குறித்த தொகுப்புகள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தத் தக்கன.


 பல்லாயிரம் ஒலிநாடாக்களில் பலபொருள்களில் அறிஞர்கள் பேசிய பேச்சுகளைப் பதிவுசெய்ய இவர் எடுத்த முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. அவை சிதைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கும் இவரின் அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தமிழகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் எளியகுடும்பத்தில் பிறந்து வளர்ந்து பழுதுநீக்கும கடை வருமானத்தில் குடும்பத்தைக் கவனித்து, ஊர் ஊராகச் சென்றுவரப் பேருந்துக் கட்டணம், தங்குமிடம், உணவுச்செலவுக்குப் பெரிதும் திண்டாடியுள்ளார்.பதிவு செய்ய ஒலிநாடாக்கள் இல்லாமல் பல நாள் ஏங்கியுள்ளார்.


சி.மனோகரன் சிறந்த சிவ பக்தர்.12 ஆண்டுகள் தொடர்ச்சியாக 2 மணி நேரத்தில் மலைவலம் வந்தவர். இவர் ஓதுவார்கள் பலரும் பாடிய தேவார, திருவாசகங்களைப் பல்வேறு குரலில் பதிவுசெய்துள்ளார்.தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களான திருக்குறளார் வீ.முனிசாமி, சோ.சத்தியசீலன், அ.அறிவொளி, சாலமன் பாப்பையா, இராசகோபாலன், இரா.செல்வகணபதி, மலையப்பன், தா.கு.சுப்பிரமணியன், சண்முகவடிவேல், அகரமுதல்வன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், சரசுவதி இராமநாதன், ம.வே.பசுபதி முதலானவர்களின் பேச்சுகள் பலநூறு மணிநேரம் பதிவுசெய்யப்பட்டு இவரிடம் உள்ளன.


திருவள்ளுவர், சிலப்பதிகாரம், கம்பன், வள்ளலார், கண்ணதாசன், பெரியபுராணம், பத்திரிகைத்துறை சார்ந்த தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர் தொடர்பான எழுபது நிகழ்ச்சிகளுக்கு மேலான பதிவுகள் இவரிடம் உள்ளன.


ஒலிப்பதிவு ஆர்வலர் சி.மனோகரனைச் சந்தித்து உரையாடியபொழுது திருவண்ணாமலை சார்ந்த இலக்கிய ஆர்வம்,நாட்டுப்புறவியல்ஆய்வு சார்ந்த பல செய்திகளைப் பெற முடிந்தது.அவரிடம் உரையாடியதிலிருந்து...

ஏன் பேச்சுகளைப் பதிவுசெய்யவேண்டும் என்று நினைத்தீர்கள்?


ஒரு பொருளைப் பற்றிப் பேச வருபவர்கள் நம்மைவிட அதிகம் கற்றவர்களாக இருப்பர். நாம் அதிகம் படிக்காதபொழுது மற்றவர்களின் பேச்சைக்கேட்பதே பல நூல்களைப் படிப்பதற்குச் சமமாகும். 'கற்றிலனாயினும் கேட்க' என்கிறார் திருவள்ளுவர். நான் கேட்டதோடு அமையாமல் மற்றவர்களும் கேட்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பதிவுசெய்து பேச்சுகளை ஒலிநாடாக்களில் பாதுகாத்துவருகிறேன்.


உங்கள் இளமைக்காலம் பற்றி?


வறுமை நிறைந்த குடும்பம்.படிக்க வசதி இல்லை.பணிக்குச் செல்லவும், நன்கொடைதரவும் வசதி இல்லை. வானொலி பழுதுபார்க்கும் கடைவைக்க முதலீடு இல்லை. சேட்டு ஒருவரின் உதவியால் சிறிய கடை வைத்துக் குடும்பத்தைக்காப்பாற்றிவருகிறேன்.


அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பேச்சு அமைந்த ஒலிநாடாக்களை ஆர்வமுடன் பாதுகாக்க காரணம் என்ன?


எனக்குச் சைவ சமய ஈடுபாடு அதிகம்.'அண்ணாமலை அண்ணாமலை' எனப்படிக்கும் காலத்திலிருந்து சொல்வேன். சமயம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் படித்தால் நூல்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி என் கல்விநிலை குறைவாக இருந்தது. இந்த நிலையில் செய்தித்தாள்களில் இரத்தினகிரியில் திருவிளையாடல் புராணம் பற்றி அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் உரையாற்றும் செய்தி கண்டேன். அதன்பிறகு அங்குச்சென்றேன். முதன்முதல் கு.சுந்தரமூர்த்தி அவர்களை அங்குக் கண்டு பழகினேன். அவர்பேச்சில் ஈடுபாடு கொண்டேன். கு.சுந்தரமூர்த்தி அவர்கள் எதனைப் பேசினாலும் சங்க இலக்கியங்கள் 38 நூல்களையும் மேற்கோளாகக் காட்டுவார். சமயநூல்கள் புராண நூல்கள் பற்றியெல்லாம் கூறுவார். எனவே அவர் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பதிவுசெய்வதைக் கடமையாகக் கொண்டேன்.


பேச்சுப்பதிவில் பல்வேறு இடையூறுகளைச்சந்தித்திருப்பீர்களே? அவை பற்றி..


பொருளாதார நெருக்கடியால் பலமுறை துவண்டுள்ளேன்.பேருந்துக்குப் பணம் இல்லாமலும் ஒலிநாடா வாங்க வசதியில்லாமலும் பலமுறை தவித்துள்ளேன்.பாடகர்கள் சிலர் தம் தொழில் பாதித்துவிடும் எனப் பதிவு செய்யக்கூடாது என்பர். அத்தகு இயல்புடையவர்கள் பாடல்களை நான் கேட்பதுகூடக் கிடையாது.ஆனால் பேச்சாளர்கள் யாரும் என்னைத் தடுத்தது கிடையாது.

பாரதக் கதைகளைப் பல ஒலி நாடாக்களில் பதிவுசெய்து வைத்துள்ளீர்கள்? பாரதக்கதை சொல்பவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்றவர்கள் யார்?


நான் பாரதக் கதைகளைப் பலர் பாடக் கேட்டுள்ளேன். பலரின் பாடலைப்பதிவு செய்துள்ளேன்.பாரதக் கதைகளை அனைவரும் சுவைக்கும்படி எளிமையாகவும் இசையோடும் பாடுவதில் மேல்நந்தியம்பாடி ச.நடராசன் சிறந்தவர். எனவே அவருடைய பாரதக்கதை முழுவதையும் பதிவுசெய்யவேண்டும் என நினைத்தேன். திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கேட்டவரம்பாடி முதலான ஊர்களில் அவர்சொன்ன செய்துள்ளேன். 110 ஒலிநாடாக்களில் பாரதக்கதை என்னிடம் பதிவு செய்யப்பட்டது உள்ளது. அவர்மகன் ந.செல்வராசு பின்பாட்டு நன்கு பாடுவார்.


பம்பை, தபேலா, ஆர்மோனியம் முதலான இசைக்கருவிகள் வைத்து இடும்பிக்குறி என்ற கதை சொன்னார்கள். பாரதக் கதையை ஒரு இடும்பி குறியாகச் சொல்வதுபோல் பாடுவது இக்கதை. மேல்நந்தியம்பாடி நடராசனுக்கு 60 வயது இருக்கும். இவர் தேவாரம், திருவாசகம் முதலானவற்றைக் கண்ணீர் வரும்படி பாடும் இயல்பினர்.


திருவண்ணாமலை மாவட்டம் என்றால் தெருக்கூத்து அதிகம். இதில் யார் யார் புகழ்பெற்றவர்கள்?இதன் ஒலிநாடாக்கள் உள்ளனவா?


தெருக்கூத்தில் தேவனூர் பழனி புகழ்பெற்றவர். மக்களுக்கு அறிவுரை பாரதக்கதை வழிசொல்வார். வேடம் அணிந்தும், கட்டைகள் கட்டிக்கொண்டும் ஆடுவார். கள்ளிக் காத்தான் கதை, கற்பகவல்லி கதை, கற்பகாம்பாள் நாடகம், காத்தவராயன் கழுகு ஏறுதல் முதலானவை மணியால் சிறப்புடன் நடிக்கப்பட்டன. (47 வயதிருக்கும் பொழுது இறந்துவிட்டார்)

பெண்ணாத்தூர் பக்கம் நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற ஊரில் அரவான் களப்பலி, கர்ணமோட்சம் என்ற நாடகம்நடித்தவர்கள் பதிவு செய்யச் சொன்னபொழுது 10 மணிநேரம் பதிவு செய்து அந்த நடிகர்களுக்கு அளித்தேன்.

கல்வெட்டு நடேசன் குழுவும் நன்கு ஆடும். இதனையும் பதிவு செய்துள்ளேன். ஏறத்தாழ 50 மணிநேரம் தெருக்கூத்துப் பற்றி என்னிடம் ஒலிநாடாக்கள் என்னிடம் உள்ளன.


உங்களிடம் வணிகரீதியாக ஒலிநாடாக்களை யாரேனும் பதிவு செய்து வாங்குகின்றார்களா?


பதிவுக்கு ஒரு மணிநேரத்திற்கு எட்டு உரூபாய் எனத் தொடக்கத்தில் வாங்கினேன்.இப்பொழுது சிறிது ஏற்றியுள்ளேன்.


இப்பொழுது குறுவட்டுகள் வந்துவிட்டன. இவை குறைவான விலையில் நீண்டநேரம் கேட்கும்படியான பாடல்களைத் தாங்கி வருகின்றன.இக்காலச்சூழலில் அதிக விலைக்கு ஒலிநாடாக்களை விற்கமுடியுமா? பாதுகாக்க முடியுமா?


எனக்குச் சாதாரண கேசட் வாங்கவே பணம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் என்னிடம் உள்ள சாதாரண ஒலிநாடக்களைக் குறுவட்டாக மாற்றி வணிக முறையில் விற்க இயலாது. யாராவது என் பல ஆண்டுகால உழைப்பைமதித்து உதவி செய்தால் அறிஞர்களின் பேச்சைக் குறைந்த விலையில் வழங்குவதில் மறுப்பேதும் இல்லை.


பலவிதமான பதிவுக்கருவிகள் வைத்துள்ளீர்கள்.எவ்வாறு வாங்கினீர்கள்?


பலரிடம் கடன்பெற்றுதான் இவ்வெளிநாட்டுக் கருவிகளை வாங்கினேன்.என் முயற்சியை மதிக்கும் அன்பர்கள் சிலர் வட்டியில்லாக் கடன் கொடுத்தனர்.சிலர் என்னிடம் உள்ள பதிவுகளைப் படியெடுத்துக் கேட்டனர். அவ்வகையில் சிதம்பரம் பாபா சுவாமிகள் பல ஆயிரம் உரூபாவிற்கு ஒலிநாடாக்களை வாங்கி ஆதரித்தார்.


அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழிவுகள் மட்டும் பதிவுசெய்த நீங்கள் சாதாரண மக்களின் பேச்சுகள், பாடல்களைப் பதிவு செய்துள்ளீர்களா?


இருளர் இன மக்கள் கன்னிமார்சாமி நிகழ்ச்சியைக் கட்டைக்கட்டி ஆடுவர். கிராமிய, பழைமையான பாடல்களைப் பாடுவர். இங்குக் கடைத்தெருவில் அவர்கள் வந்தபொழுது கடையில் அமரச் செய்து பதிவுசெய்தேன். மன்மத தகனம் பதிவு செய்துள்ளேன் (தாழ்த்தப்பட்ட மக்கள் பாடுவது).


உங்கள் ஒலிப்பதிவு முயற்சி யார் யாருக்கு உதவியாக இருக்கும்?


என் ஒலிநாடாத்தொகுப்பு அனைவருக்கும் பயன்பட்டாலும் கண்பார்வையற்ற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். குறிப்பாகத் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்குப் பயன்படும். எந்நேரமும் பயணத்தில் இருப்பவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்பதன்வழித் தமிழிலக்கியங்களை அறியமுடியும். ஓரளவே படிப்பறிவு உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். இலக்கண நூல்கள், சமயநூல்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டால் பாடத்தை எளிமையாக நடத்தமுடியும். குறுவட்டாகும் பொழுது மாணவர்களுக்கும், குறிப்பாக அஞ்சல்வழியில் தமிழ் படிப்பவர்களுக்கும், அயல்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மிகச்சிறந்த பயன் கிடைக்கும். தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தோல்வியடைந்தனர். என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டுப் படித்தபிறகு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அயல்நாட்டுத் தமிழர்கள் யாரேனும் உங்கள் பதிவுகளைப் பாதுகாக்க,விலைக்கு வாங்க நினைத்தால் தருவீர்களா?


என் பல ஆண்டு கால முயற்சியை, உழைப்பை மதித்து உதவி செய்தால் பிற்காலத்தில் வழங்க முடிவுசெய்துள்ளேன்.

இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தாலும் தன் சேமிப்பில் உள்ள ஒலி நாடாக்களை வரிசைப்படுத்துவதிலும், அவற்றிற்கு ஒழுங்கான வரிசை எண் இட்டு அடுக்கி வைப்பதிலும் தேடி வரும் வாடிக்கையாளருக்குப் பதிவு செய்வதிலும் பம்பரமாக இயங்குகிறார் இந்த ஒலி இலக்கியச்செம்மல்...


நன்றி : திண்ணை இணையதளம் (11.10.2007)

செவ்வாய், 23 அக்டோபர், 2007

மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம் நூற்றாண்டுவிழா-கருத்தரங்கம்

புதுச்சேரியில் மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம் அவர்களின் நூற்றாண்டுவிழாக்கருத்தரங்கம்
இன்று(23.10.2007) புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.புதுவையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்தவர் புதுவைச்சிவம்.

தமிழ்,திராவிடஇயக்கம்,பொதுவுடைமை இயக்கம்,பாவேந்தர் வரலாற்றுடன் தொடர்புடைய வராகப் புதுவைச்சிவம் விளங்கியவர்.

1908 அக்டோபர் 23 ஆம் நாள் புதுவை,முத்தியால்பேட்டையில் பிறந்தவர்.பெற்றோர் சண்முகவேலாயுதம்,விசாலாட்சி.பாவேந்தரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தவர். புதுவைமுரசு என்னும் இதழின் ஆசிரியராக விளங்கியவர்.ஞாயிறு நூற்பதிப்புக்கழகம் தொடங்கிப் பல நூல்களைப்பதிப்பித்தவர்.

அண்ணாவின் ஆரியமாயைத் தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டபொழுது புதுவையில் அச்சிட்டு வெளியிட்டவர்.மகாகவி பாரதியார் என்னும் நூலையும் வெளியிட்டவர்.திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலரின் நூலைவெளியிட்டவர்.சில காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

1968 இல் புதுவையின் துணைமேயராகவும்,1969 இல் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.மாநிலங்களவையில் அப்பொழுது தமிழில் பேசியவர்.

புதுவைச்சிவம் தம் கருத்துகளைப் பாடலாகவும்,நாடகமாகவும்,உரைநடையாகவும் வெளியிட்டவர்.தந்தை பெரியார்,அறிஞர்அண்ணா,பாவேந்தர்,கலைஞர் முதலானவர்களுடன்
பழகிய புதுவைச்சிவம் அவர்கள் 31.08.1989 இல் இயற்கை எய்தினார்.

புதுவைச்சிவத்தின் நூற்றாண்டினைப் புதுவை அரசு சிறப்பாக இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளது.

நூற்றாண்டின் நினைவாகப் பாட்டாளி மக்கள்கட்சியின் சார்பில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இரா.திருமுருகனார்,பேராசிரியர் இராச. குழந்தை வேலனார் ஆகியோர் கட்டுரை படித்தனர்.

மக்களவை உறுப்பினர் முனைவர் மு.இராமதாசு.சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. அனந்தராமன்,குரு.பன்னீர்செல்வம்,பெ.அருள்முருகன் முதலானவர்களும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

புதுவைச்சிவத்தின் பணிகளை நினைவுகூறும் முகமாகப் பல்வேறு நினைவுச்சின்னங்களை ஏற்படுத்தவேண்டும் என அனைவரும் விருப்பம் தெரிவித்துப்பேசினர்.

சனி, 20 அக்டோபர், 2007

தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)



 தமிழ் மொழிக்கு எண்ணற்ற அறிஞர்கள் பல்வேறு வகையில் தொண்டு செய்துள்ளனர். அவ்வறிஞர்கள் வரிசையில் தொல்காப்பியச் செல்வர் எனவும், சித்தாந்த நன்மணி எனவும், முத்தமிழ் வித்தகர் எனவும் அறிஞர் உலகால் போற்றப்படும் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேராசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்குபவர். அண்மையில் இவருக்கு எம்.ஏ.சி அறக்கொடையின் டாக்டர் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஓர் இலக்கம் உரூபா தொகையும், ஒரு வெள்ளிப்பேழையும், ஒரு பட்டயமும் சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 12 இல் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்வுயரிய விருதைத் தகுதி அறிந்து வழங்கிய அரசர் குடும்பத்திற்கும் பரிந்துரை செய்த அறிஞர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றியும் பாராட்டும் தெரிவித்து நிற்கின்றது.

 ஏனெனில் இன்று விருதுக்கும் பாராட்டுக்கும் அலையாய் அலைந்து நடையாய் நடந்து பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றும் போலிப்புகழ் விரும்பிகளுக்கு நடுவே தமிழ்நூல்களையே தம் செல்வமாகக் கருதி, தமிழ்வடிவாகவே வாழ்ந்துவரும் தமிழ்ச்சான்றோருக்கு விருது கிடைத்துள்ளமை எம்மனோர்க்கு மிகு மகிழ்ச்சி தருகின்றது. இவ்விருதுக்கும் இதனினும் உயரிய விருதுகளுக்கும் தகுதிப்பாடுடைய பேராசிரியர் அவர்கள் கற்றவர்களும் மற்றவர்களும் உளங்கொள்ளும் வகையில் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சமய நூல்களைப் பாடமாகவும், சொற்பொழிவாகவும் வழங்கும் பேராற்றல் பெற்றவர்கள். தன்னலங்கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த இவர்களுக்கு இப்பரிசில் கிடைத்தமை அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இவரிடம் கற்றவர்கள் இன்று உலகம் முழுவதும் தமிழ்ப்பணி செய்கின்றனர்.

 இவர்தம் இலக்கிய, சமய உரைகள் கேட்டோர் இனியொரு முறை இவர்தம் உரையையும் பாட்டையும் கேட்க மாட்டோமா என ஏங்கும்படியாக இவர் பேச்சு அமையும்.கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது தொடர்ச்சியாக ஏறத்தாழ நான்குமணி நேரம் கூட இவர் வகுப்பு நீண்டிருக்கும். மாணவர்கள் யாவரும் இலக்கணப்பாடம் என்பதையே மறந்து 'சித்திரப் பாவையெனத்' தமிழின்பம் பருகுவர். எல்லோருக்கும் கசப்பாக இருக்கும் இலக்கணப்பாடம் இவர் நடத்தத் தொடங்கினால் அமிழ்தாக இனிக்கும்.




 இவர் நடத்தும் பாடத்தோடு நின்று கொள்ளாமல் இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள், உரையாசிரியர்கள்,உலகியல் என ஒரு வட்டமடித்து வரும்பொழுது தமிழின் அனைத்து நூல்களையும் படித்த மனநிறைவைப் பாடம் கேட்போர் பெறுவர். எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் நடத்தத் தொடங்கினால் தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரும் வந்துசெல்வர். திருக்குறள் பரிமேலழகர், பிற உரையாசிரியர்கள் வந்துபோவர். குமரகுருபரர், சமயக் குரவர்கள் குறிப்பாகத் திருவாசகம் இடம்பெறும். இளங்கோவடிகள் பாட்டு வடிவில் கானல்வரி பாடுவார். கம்பனைக் கரைகண்டவர் இவர். இத்தகு தகுதிப்பாடுகள் நிறைந்திருந்த காரணத்தால் பிறர் நெருங்கத் தயங்கிய தொல்காப்பியத்தின் அனைத்து உரையையும் விருப்பத்தோடு பதிப்பித்தார். சாத்திர நூல்களுக்கு அனைவரும் விரும்பும் வகையில் உரை செய்தார்.

 பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், இரத்தினகிரி, ஆர்க்காடு, சென்னை, புதுச்சேரி, கடலூர் முதலான ஊர்களில் மாதம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்ச்சொற்பொழிவுகள் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ் வாழ்வை இக்கட்டுரையில் தொகுத்துரைக்கக் காணலாம்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் இளமை வாழ்க்கை

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் சிவநெறியில் நின்றொழுகும் குடும்பத்தில் 14.04.1930 இல் தோன்றியவர். இவர்தம் பெற்றோர் குப்புசாமி, நாகரத்தினம் அம்மாள். ஊர் தொட்டியம் அருகில் உள்ள தோளூர்ப்பட்டி. எட்டாம் வகுப்பு வரை பிறந்த ஊரில் பயின்றவர். தந்தையார் ஊர்நலப் பணியில்(கர்ணம்) இருந்ததால் பிற ஊர்களில் வாழ நேர்ந்தது.பின் நுழைவுத்தேர்வு எழுதித் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர்(1945-1950). அங்குப் பயின்று தேர்ச்சி முடிவு வந்த உடன் அக்கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

 பேராசிரியராகவும், முதல்வராகவும் அக்கல்லூரியிலேயே தம் பணிக்காலம் வரை (26.06.1950-31.05.1988) தொடர்ந்து பணிசெய்தார் (மீள் விடுப்பில் ஓராண்டு அண்ணாமலைப் பல்கலையில் பணி). மாற்றச் சான்று வாங்காமலே பணிசெய்த பெருமைக்குரியவர் . பேராசிரியர்கள் கா.ம.வேங்கடராமையா, தி.வே.கோபாலையர், நகராமலை இராமலிங்கம் பிள்ளை, ச. தண்டபாணி தேசிகர் முதலானவர்களிடம் தமிழ்பயின்ற பெருமைக்கு உரியவர். இவர்களுள் இராமலிங்கம் பிள்ளையும்,கோபாலையரும் கு.சுந்தரமூர்த்தியின் ஆழ்ந்த படிப்புக்குக் காரணகர்த்தர்களாக விளங்கினர்.

 படிக்கும் காலத்தில் படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் காசித் திருமடத்தின் தலைவர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். அங்குப் பணி செய்த காலத்தும் திருமடத்தின் கல்விப் பணிகளில் தாளாளர் முதலான பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச்செய்தார். பணி நிறைவு பெற்றதும் இவர்தம் தமிழறிவும் சமய அறிவும் இவ்வுலகிற்குத் தேவை என்பதை உணர்ந்த தருமையாதீன அடிகளார் அவர்கள் இவர்களை அனைத்துலகச் சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தினார்.

 மலேசியா, இலங்கை, இலண்டன் முதலான அயலகத்திற்குச் சென்று சொற்பொழிவாற்றியவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ கத்தின் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றுவதன் வாயிலாகத் தமிழ் இலக்கி யங்களையும் சமய நூல்களையும் மக்கள் மனத்தில் பதிய வைப்பதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். (இவர் பல்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சுகள் பல்லாயிர மணிக்கணக்கில் திருவண்ணாமலை திரு.மனோகரன் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பற்றிப் பின்பு எழுதுவேன்)

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் படித்துப் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார் அவற்றுள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான், முதுகலை. முனைவர் (Ph. D) பட்டங்களும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம்(1954), சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவப் புலவர் பட்டங்களும்(1968) குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் பணி

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் படித்ததும் அங்குப் பேராசிரியராகப் பணி புரிந்ததும் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பல்வேறு பெருமைகள் உருவாகக் காரணங்களாயின. திருமடத்தின் சார்பான நிறுவனமானதால் முதலில் தமிழ் இலக்கண, இலக்கியங்களில், சமயநூல்களில் நல்ல பயிற்சியும்,புலமையும் ஏற்பட்டது. தமிழகத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் அங்குப்பணி செய்ததால் பலரிடம்பயிற்சி பெறமுடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலானவற்றில் ஆளவை உறுப்பினராகவும்,கல்விக்குழு உறுப்பினராகவும் பலமுறை பணிபுரிந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வி, குமரகுருபரர் முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணிபுரிபவர்.



 இவர் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் முதலான காப்பியங்களையும் மாணவர்களின் உள்ளம் கொள்ளும்படி பாடமாக நடத்துபவர். சைவசித்தாந்த சாத்திர நூல்களை எளிமையாக யாவருக்கும் விளங்கும்படி நடத்தியதால் சாத்திர நூல்களைத் தமிழகத்தில் படிப்பதில் ஒரு மறுமலரச்சி தோன்றியது எனலாம். முனைவர் ம.வெ.செயராமன், பொற்கோ, ம.வே.பசுபதி முதலானவர்கள் இவர்தம் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பதிப்புப்பணிகள்

 பதிப்புப்பணிகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் உ.வே.சா.அவர்கள்.அவர்கள் காலத்தில் நூல்களை வெளிப்படுத்துவது போற்றுதலுக்கு உரிய பணியாக இருந்தது.அவர்கள் காலத்திற்குப் பிறகு பழந்தமிழ் நூல்களின் விளங்காத பகுதிக்கும் உரைகளுக்கும் விளக்கம் தரும் பதிப்புகளும்,உரைவிளக்கம் தரும் பதிப்புகளும் தேவையாக இருந்தது. அவ்வகையில் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப் பியத்தின் அனைத்து உரைகளையும் ஆராய்ச்சி முன்னுரையுடனும் விளக்கவுரையுடனும் பதிப்பிக்கும் முயற்சியில் கு.சுந்தர மூர்த்தி அவர்கள் ஈடுபட்டார்.சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகமும், அண்ணாமலைப்பல்கலைக் கழகமும் இப்பணியில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்குப் பெருந்துணை செய்தன.சொந்தப் பதிப்பாகவும் பல நூல்களை வெளியிட்டார்.

தொல்காப்பியப் பதிப்புகள்

 சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் வழியாகத் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் 1962 இல் பதிப்பித்தார்.தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன்1963 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரையை விளக்கவுரையுடன் 1964 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை விளக்கவுரையுடன் சொந்தப்பதிப்பாக 1965 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் செய்யுளியலை நச்சினார்க்கினியர் உரையுடனும் விளக்கவுரையுடனும் 1965 இல் கழகம் வழிப்பதிப்பித்தார். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1979 இல் பதிப்பித்தார். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழி 1981 இல் வெளியிட்டார். தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சர், பேராசிரியர் உரைகளை விளக்கவுரையுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழி 1985 இல் வெளியிட்டார்.

 மேலும் தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூலைத் தம் சொந்தப்பதிப்பாக 1967 இல் வெளியிட்டார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைக் கழகம் வழி 1972 இல் வெளியிட்டார். மேற்கண்ட இலக்கண நூல்களைக் கற்கப் புகும் ஆர்வலர்கள் யாரும் எந்த வகை இடையூறும் இல்லாமல் இவ்விலக்கண நூல்களைப் பயிலும்படி இவர் வரைந்துள்ள ஒப்புயர்வற்ற விளக்கவுரைகளும், ஆராய்ச்சி முன்னுரையும் இவரின் ஆழ்ந்த கல்விப் பரப்பையும், நுண்ணிய ஆராய்ச்சித் திறனையும் காட்டும். மூல நூலாசிரியரின் கருத்துகளை எடுத்துரைத்தும், உரையாசிரியர்களின் அறிவுச்செழுமையை விளக்கியும் நூலின் மீதும், உரையாசிரியர்கள் மீதும் மதிப்பு உண்டாகும் படி இவர் எழுதிச் செல்வார். இவர்தம் உரைகள் வழியாகப் பண்டைக் காலப் பதிப்புகள் பற்றிய பல குறிப்புகளும் வரலாறும் நமக்குப் புலனாகின்றன.

 தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணர் உரைபற்றிய முன்னுரையில் பேராசிரியர் பின்வரும் அரிய செய்திகளப்பதிவு செய்துள்ளார்.

' எழுத்ததிகார இளம்பூரணர் உரையை முதன்முதல் பதிப்பித்து உதவியவர்கள் பூவிருந்தவல்லி, திரு.சு. கன்னியப்ப முதலியார் அவர்கள் ஆவர். அப்பதிப்புத் திரிசிரபுரம் மகா வித்துவான் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய திரு. சுப்பராயச் செட்டியார் அவர்களால் பரிசோதிக்கப்பெற்று கி.பி.1868 இல் வெளியிடப்பட்டதாகும். அப்பதிப்பு ஏட்டில் கண்டவாறே பதிப்பிக்கப் பெற்றுள்ளது. உரை பொழிப்புரையாயுள்ளது. விளக்கவுரை எடுத்துக்காட்டுகள் ஆகிய அனைத்தும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பாக்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. இப்பதிப்பை வேறு பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பதவுரையாக்கியும், விளக்கம் எடுத்துக்காட்டுக்களைத் தனித்தனியே பிரித்தும் தமது கருத்தையும் ஆங்காங்கு வெளிப்படுத்தியும் இரண்டாவதாகப் பதிப்பித்துதவியவர் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆவர்......' எனத் தம் கலத்திற்கு முன்பு நிகழ்ந்த பதிப்பு முயற்சியை வரலாற்றுப் பதிவாக வழங்குவதில் வல்லவராக விளங்கியவர்.

 தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப் பதிப்பிக்கும் பொழுது அரிய பல வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார் .'... சேனாவரையர் உரை முதன்முதல் திரு.சீனிவாச சடகோபமுதலியார் அவர்களின் வேண்டுகோளின்படி, கோமளபுரம் திரு. இராசகோபால் பிள்ளை அவர்களால் திருத்தம் செய்யப்பட்டுத் திரு. பு.கந்தசாமி முதலியார் அவர்களால் 1868 இல் பதிப்பிக்கப்பட்டது.பின்பு யாழ்ப்பாணத்து நல்லூர் திரு.ஆறுமுக நாவலர் அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு திரு.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களால் 1886 இல் பதிப்பிக்கப்பட்டது. பின்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் 1923 இல் பதிப்பிக்கப்படது. அதனையடுத்துப் புன்னாலைக்கட்டுவன் திரு.சி.கணேசையர் அவர்கள் குறிப்புரையுடன் திரு.நா.பொன்னையா அவர்களால் 1938 இல் பதிப்பிக்கப்படது. ...'

 இவ்வாறு ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்கும்பொழுது பல்வேறு பதிப்பு வரலாற்றைப் பதிவு செய்வதுடன் பல நூல்களை ஒப்பிட்டுத் திருத்தமாகத் தம் பதிப்பைப் பதிப்பித்துள்ளார். பொருள் விளக்கத்துடன் புதிய எடுத்துக்காட்டுகளையும் தந்துள்ளார்.நூற்பாவிலும் உரைக ளிலும் கண்டுள்ள பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பாகத் தருபவர்.ஒவ்வொரு நூற்பாவின் அடியிலும் விளக்கவுரை எழுதிப் படிப்பவருக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் பயன் படும்வண்ணம் செய்துள்ளார்.ஒவ்வொரு இயலின் முகப்பிலும் பொருளமைப்பு என்னும் பெயரில் கு.சுந்தர மூர்த்தி அவர்கள் எழுதியுள்ள பகுதிகள் தொல்காப்பியம் கற்கப் புகுவார்க்குப் பேருதவியக இருக்கும்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தமிழ்இலக்கியப்பணிகள்

 தமிழின் தலைசிறந்த நூலான திருக்குறளில் கு.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மிகச்சிறந்த ஈடுபாடு உண்டு.அனைத்துத் திருக்குறளையும் பரிமேலழகர் உரையுடன் சொல்லும் ஆற்றல்பெற்றவர். மற்ற உரையாசிரியர்களையும் நன்கு கற்றவர். எனவே திருக்குறளைப் பல்வேறு வகைகளில் பதிப்பித்துள்ளார். அவற்றுள் ம.வெ.செயராமன் அவர்களின் பொருளுதவியால் வெளியிட்ட திருக்குறள் உரைத்திறன் நூல் குறிப்பிடத்தக்கது.1981 இல் வெளிவந்த இந்நூலில் பரிமேலழகரின் உரையை அடியொற்றியும் அவர்தம் விளக்கத்திற்கு விளக்கமாகவும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. பரிமேலழகர் மாறுபடும் இடங்களும் இவ்வுரையில் சிறப்புடன் விளக்கப்பட்டுள்ளன. பிற உரையாசிரியர்களின் உரை வன்மை, மென்மைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி முன்னுரை என்று 44 பக்கங்களில் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் தந்துள்ள விளக்கம் அவரின் நுண்ணிய புலமையையும்,ஆராய்ச்சி வன்மையையும் காட்டும். இந்நூலின் அமைப்பு குறளும், பரிமேலழகர் உரையும், இவர்தம் விளக்கவுரையுமாக அமைந்துள்ளது.

 திருமுருகாற்றுப்படை உரைத்திறன்(ஐவர் உரையுடன்) என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள உரை திருமுருகாற்றுப்படையைச் சுவைத்துக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும். இரத்தினகிரி அருள்திரு பாலமுருகன் திருக்கோயில் சார்பில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல் நீதிநெறிவிளக்கம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், சீர்காழிக் கோவை,அபிராமி அந்தாதி, கந்தர் கலிவெண்பா, சங்கரமூர்த்திக் கோவை, கந்தர் அனுபூதி, தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை, திருமுல்லைவாயில் புராணம், திருவிளையாடற்புராணம் முதலான நூல்களுக்கு உரையும் குறிப்புரையும் எழுதியுள்ளார்.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் திருமுறைப் பதிப்புப்பணிகள்

 கு.சுந்தரமூர்த்தி அவர்கள் திருமுறைகளில் நல்ல பயிற்சியுடையவர். பலகாலம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்த ஆற்றலுடையவர். திருமுறைகளைப் பல்வேறு நிறுவனங்கள் பல வடிவில் பதிப்பித்தபொழுது திருமுறைகளின் சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆற்றல் சான்ற ஆராய்ச்சி முன்னுரைகளையும் விளக்கங்களையும், குறிப்புரைகளையும் எழுதியவர். சிவகாசி சிவனடியார் அறநெறிக்கழகம் வழியாகச் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகியோரின் திருமுறைகளை வரலாற்று முறையில் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுவரை வெளிவந்த பதிப்புகளில் பேராசிரியரின் இப்பதிப்பு அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

கு.சுந்தரமூர்த்தி அவர்களின் தத்துவ நூல்களுக்கான உரைப்பங்களிப்பு

 தமிழில் சைவ சமயத் தத்துவத்தை விளக்குவன சாத்திர நூல்களாகும்.பதினான்கு சாத்திரநூல்கள் உள்ளன.இப் பதினான்கு சாத்திரநூல்களுக்கும் உரை எழுதிய பெருமை கு.சுந்தரமூர்த்தி அவர்களையே சாரும். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்த இவ்வுரை நூல்கள் சமய உலகால் பெரிதும் விரும்பப்படுவன. எளிய முறையில் நடப்பியல் உண்மைகளை எடுத்துக்காட்டித் தமிழ்மரபு மாறாமல் உரைவரையும் பாங்கு இவருக்குக் கை வந்த கலையாக உள்ளது.

 பணிவு நிறைந்த மாணவராகவும், பண்பு செறிந்த பேராசிரியராகவும், ஆளுமை நிறைந்த கல்லூரி முதல்வராகவும், மயக்கம் போக்கித் தெளிவு நல்கும் உரையாசிரியராகவும், பிழையற்ற நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியராகவும், இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள், சாத்திரநூல்கள் இவற்றில் பழுத்த புலமைநலம் சான்ற அறிஞராகவும்,கேட்போர் வியக்கும் வகையில் சொற்பொழிவு செய்யும் நாவலராகவும் விளங்கும் கு.சுந்தரமூர்த்தி என்னும் உண்மைத் தமிழறிஞரை வாழும் காலத்திலேயே தமிழக அரசும், உலகெங்கும் உள்ள தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் போற்றவேண்டும். அண்ணாமலை அரசர் பெயரிலான விருது பெறுவது அதன் தொடக்கமாக அமையட்டும்...

நன்றி : திண்ணை இணையதளம் 04.10.2007

செவ்வாய், 9 அக்டோபர், 2007

தமிழ் இசைக்கான பல்கலைக்கழகம் வேண்டும்.மருத்துவர் ச.இராமதாசின் விருப்பம் சரியானதே!

உளியின் ஓசை நூல்வெளியீட்டு விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இசைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள். அவ்வாறு உருவாக்கப்படும் பல்கலைக்கழகம் தமிழ் இசைப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏனெனில் தமிழிசை என்ற பெயரில் தெலுங்கிசை இங்குக் கோலோச்சுவதை மனதில் வைத்தே பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம் கண்ட மருத்துவர் அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார். 

தமிழிசையை மீட்க அண்ணாமலை அரசர், கல்கி முதலானவர்களின் பணிகளைக் கலைஞர் நன்கு அறிவார். எனவே தமிழறிவும், இசையறிவும், தமிழ் உணர்வும், பல்கலைக்கழகம் உருவாக்கும் ஆளுமையும் கொண்ட ஒருவரின் தலைமையில் அமையும் குழு மிகச்சிறப்பாகத் திட்டமிட்டுக் கலைஞர் அவர்களின் வாழ்நாள் சாதனையாக இப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்து உருவாக்க வேண்டும்.

திங்கள், 8 அக்டோபர், 2007

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்(28.05.1914- 09. 06.1981)

 தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர். நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும், காரைக்கால் அம்மையார் காலத்திலும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும், சேக்கிழார் காலத்திலும், தமிழிசை மூவர்கள் காலத்திலும் இசைத்தொண்டினை அவரவர்க்கு உகந்த வகையில் செய்தனர். ஆபிரகாம் பண்டுவர், விபுலாநந்தர், வீ.ப.கா.சுந்தரம் காலத்தில் தமிழிசைத்தொண்டு என்பது பிறமொழி இசையிலிருந்து தமிழிசையை மீட்பது, பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த தமிழிசை, இசைக்கருவிகளை அடையாளம் காட்டுவது என்று அடிப்படைக் கட்டமைப்பைச் சான்றுகளுடன் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தகு அறிஞர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இசைத்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களுள் ஒருவரான பண்ணாராய்ச்சி வித்தகர் என அனைவராலும் அழைக்கப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் வரலாற்றினை இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

ப.சுந்தரேசனார் இளமை வாழ்க்கை

 ப.சுந்தரேசனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். (ப.சுந்தரேசனார் அவர்களின் தாயார் பிறந்த ஊர் சீர்காழி ஆகும். இவ்வூரில்தான் ப.சுந்தரேசனார் பிறந்தார்). நான்காம் வகுப்புவரை கல்விபயின்ற இவர் வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வி பெற இயலாமல் போனது. பெற்றோர் இளம் அகவையில் நகைக் கடை யொன்றில் பணியில் சேர்த்தனர். இவரிடம் இருந்த இசையார்வம் இசைத்தட்டுகளைக் கேட்டு இசையறிவு பெறும் வாய்ப்பை உண்டாக்கியது. பள்ளிப்படிப்பு இவருக்கு வாய்க்காமல் போனாலும் பல நூல்களைத் தாமே கற்று அறிவு பெற்றார், இசையீடுபாட்டால் ஆபிரகாம் பண்டுவரின் கருணாமிர்தசாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் கற்று இசையறிவைச் செழுமை செய்துகொண்டார்.

 திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

 ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார். ப.சுந்தரேசனார் அவர்களுடன் சுவாமிமலை சானகிராமன், ஐயாசாமி முதலானவர்கள் உடன் பயின்றுள்ளனர். வி.பி.இராசேசுவரி என்பவரும் உடன்பயின்றவர்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இல்லறவாழ்க்கை

 ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார் அன்புடன் வாழ்ந்த இவர்களுக்கு 1947 ஒரு குழந்தை பிறந்து, இறந்தது. அதன்பிறகு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. வறுமையிலும், துன்பத்திலும் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தமிழிசைக் குடும்பத்தினர் உலகக் குழந்தைகளைத் தம்குழந்தைகளாக எண்ணி வாழ்ந்தனர்.

 ப.சுந்தரேசனார் வாழ்ந்த பேட்டை நாணயக்காரத்தெருவில் வாழ்ந்தவர்கள் பலரும் சைவசமயச் சார்பும், இசையறிவும் பெற்றவர்களாக இருந்தனர். எனவே இவருக்கு இயல்பாகவே இசைச்சூழல் வாய்த்தது. இவர்தம் வீட்டருகே தேவாரப் பாடசாலையும், சைவச்சார்புடைய மடத்துத் துறவியர்களின் தொடர்பும் அமைந்ததால் சைவத்திருமுறைகள், சாத்திர நூல்களில் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது .தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் மொழிகளையும் அறிந்தார்.

 ப.சுந்தரேசனார் அவர்கள் சிலப்பதிகாரம்,திருமுறைகள்,சிற்றிலக்கியங்கள் இவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடியான இசைப்பயிற்சி பெற்றவர். இந்நூல்களின் பாடல்களை இவர்வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர். ஓவ்வொரு ஊராகச் சென்று பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்துகிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழையின் ஆற்றல் விளங்கும். இவர்தம் பண்ணாராய்ச்சித் திறம் அறிந்தோர் இவருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர். 

 ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்கள் பலரும் பல ஊர்களில் இவரை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டினர். அவ்வகையில் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக் கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப் பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத்தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதை அனைவராலும் விரும்பும்படி நடத்தப்பட்டத்து.

 1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும்.1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது இவர் அங்கிருந்து சிலரால் வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சிதம்பரம் சென்றாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகழகத்தின் பக்கம் செல்வதில்லை. பணியிலிருந்து வெளியேறிய ப.சுந்தரேசனார் பல ஊர்களுக்கும் சென்று பள்ளி, கல்லூரி, கோயில்கள், இலக்கிய அமைப்புகளில் இசைச்சொற்பொழிவு செய்து வறுமையோடு வாழ்ந்து வரலானார்.

 பொதுமக்களிடம் இசையைக்கொண்டு செல்லும் பொழுது மக்கள் விரும்பும்வண்ணம் நகைச்சுவையுடன் உரையாற்றும் திறனில் வல்லவரானார். மிகவும் அரிய செய்திகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக வெளிப்படுத்தியதால் இவர்புகழ் குமரிமுதல் வடவேங்கடம் வரை பரவியது. அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டு வேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம. கோ. இராமச்சந்திரனார் முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

 ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த் தப்பட்டுள்ளார்.

ப.சுந்தரேசனார் பெற்ற பட்டங்கள்.

 ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர் (திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.தாம் தொகுத்து வைத்திருந்த 103 பண்களின் பெர்களையும் தந்து இவற்றை விரிவாக ஆராய்ந்து பண்ணாராய்ச்சி செய்யவேண்டும் என வேண்டினார். அன்று முதல் ப.சுந்தரேசனார் விபுலானந்தர் வழியில் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டார்.

 சிலப்பதிகாரத்தின் இசையழகு விளங்கும் இடங்களைப் பாடிக்காட்டும் பொழுது தமிழக மக்கள் தங்களின் அரிய பெருஞ்செல்வம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தனர். சமய நூல்களைப் பண்ணோடு பாடியதாலும் பழம் பண்களின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்ததாலும் ப.சுந்தரேசனார்க்குப் பல்வேறு சிறப்புகளைத் தமிழக மக்கள் செய்தனர்.அவருக்குப் பல்வேறு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தனர். அவற்றுள் பண்ணாராய்ச்சி வித்தகர் (மதுரை ஆதீனம்). திருமுறைக் கலாநிதி(தருமையாதீனம்), ஏழிசைத் தலைமகன் (குன்றக்குடி ஆதீனம்),இசையமுது உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கன. பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி) என்னும் அமைப்பு இவரை உயர்வாகப்போற்றி மதித்தது.

ப.சுந்தரேசனார் எழுத்துப்பணிகள்

 சுந்தரேசனார் அவர்கள் தம் எண்ணங்களை அவ்வப்பொழுது கட்டுரையாகவும், நூல்களாகவும், சொற்பொழிவுகளாகவும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவை யாவும் முறையாகத் தொகுக்கப்படாமலும், பதிவுசெய்யப்படாமலும் போனமை தமிழர்களின் பேரிழப்பாகக் கருதவேண்டும். பதிவுசெய்து வைத்துள்ள அன்பர்கள் அவற்றை வெளியுலகிற்குக் காட்டாமல் மறைத்து வைத்துள்ளமை அவை காணாத செல்வப்பட்டியலில் இணைந்துவிடுமோ என்னும் அச்சத்தை உண்டாக்குகிறது. ப.சுந்தரேசனார் அவர்கள் பாடியுள்ள பாடல்களை வைத்திருப்பவர்கள் புவிக்குள் கிடைக்கும் பொருள்கள் அரசுக்கு உரிமையுடையது என ஒப்படைப்பதுபோல் தமிழுலகிற்கு வழங்கவேண்டும். இவ்வகையில் இலால்குடி (திருத்தவத்துறை) ப.சு.நாடுகாண்குழு அன்பர்கள் திருமுருகாற்றுப்படை,சிவபுராணம் உள்ளிட்ட ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளமைக்கு இத்தமிழ்கூர் நல்லுலகம் என்றும் நன்றியுடன் போற்றும்.

 ப.சுந்தரேசனார் பாடியுள்ளனவாகப் பல ஒலிநாடாக்கள் பற்றிய விவரம் தெரியவருகின்றன. வெளிநாட்டுஅறிஞர் ஒருவர் பரிபாடல் என்னும் இலக்கியத்தைப் ப.சுந்தரேசனார் வழியாகப் பாடச்செய்து பதிவுசெய்துள்ளதை அறியமுடிகிறது. அதுபோல் வானொலி நிலையங்களில் அவர் பாடிய ஒலிப்பதிவுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கோவைப்பகுதியில் ப.சுந்தரேசனார் அவர்களை அழைத்துப் பாடச்செய்த அன்பர்களிடமும் இருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல அன்பர்களிடமும் இருக்கும் ஒலிநாடாக்களத் திரட்டி வெளியிடுவது தமிழுக்கு மிகப்பெரிய ஆக்கமாக அமையும். ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு. வயித்தியலிங்கம், திரு. கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள். பல ஆண்டுகள் இவர்கள் ப.சுந்தரேசனார் அவர்களிடம் பாடம் கேட்டுள்ளதால் இவர்களிடம் ஆசிரியரின் சார்பு இசையைக்கேட்டு மகிழமுடியும்.

  ப.சுந்தரேசனார் அவர்கள் நித்திலம் என்னும் ஏட்டிலும்,கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் தமிழர்நாடு என்னும் ஏட்டிலும் எழுதியுள்ளார். இவர் பஞ்சமரபு (1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செயலாகும். இவருக்குப் போதிய ஒத்துழைப்போ, ஊதியமோ அமையாததால் எண்ணியவாறு பல பணிகளைச் செய்யமுடியாமல் போனது. 1. இசைத்தமிழ்ப் பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர் (முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு 2. முதல் ஐந்திசைப்பண்கள் (1956) பாரி நிலையம், 3. முதல் ஐந்திசை நிரல், 4. முதல் ஆறிசை நிரல், 5. முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர்.

 மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப் பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின. மதுரையில் இவர் பணியின் நிமித்தம் விடுதியில் தங்கியிருந்தபொழுது மஞ்சள்காமாலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அன்பர்களின் உதவியால் திருச்சிராப்பள்ளியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரல்பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவம் பயனளிக்காது என மருத்துவர் கைவிரித்தனர். எனவே குடந்தையில் உள்ள ப.சுந்தரேசனார் இல்லத்தில் (கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்) அன்பர்கள் இவருக்கு விருப்பமான திருவையாற்றுப் பதிகத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாட, அன்னாரின் உயிர் 09.06.1981 இல் பிரிந்தது. தமிழகம் எங்கும் இசைத்தமிழைப் பரப்பிய தமிழிசைத்தென்றல் குடந்தையில் அடங்கித் தமிழுலகம் மதிக்கும்வண்ணம் புகழ்வாழ்வு வாழ்ந்துவருகிறது.

 இவர்தம் தமிழிசைப்பணியைப்போற்றும் வண்ணம் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ப.சுந்தரேசனார் மறைவுக்குப் பிறகு அவர்தம் மனைவிக்கு நிதியுதவி செய்தமை நன்றியுடன் குறிப்பிடத்தகுந்ததது.

ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை குறித்த சில முடிவுகள்:

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.

3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன் படுத்தப்பட்டது.

4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.

5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன

8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி,செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம்,வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்திழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14. பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும்,திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

நன்றி :திண்ணை இணைய இதழ் (27.09.2007)

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

புதுச்சேரி தமிழ்வலைப்பதிவர் பட்டறை, திசம்பர் 9

புதுச்சேரியில் தமிழ்வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை வரும் திசம்பர் 9 ஆம் நாள் நடைபெற உள்ளது.புதுச்சேரி நகரத்தில் சற்குரு உணவகத்தில் அமைந்துள்ள கருத்தரங்க அறையில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை நிகழ்ச்சி நடைபெறும்.

காலையிலும் பிற்பகலிலும் இணையம்,வலைப்பதிவு,மின்னஞ்சல் அனுப்புவது,ஒருங்குறி எழுத்து,அதனைநிறுவுவது,புதிய இணையப்பக்கம் உருவாக்குவது முதலானபொருள்களில் பயிற்சியாளர்களின் அறிமுக உரையும்,செயல் விளக்கங்களும் இடம்பெறும்.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் மாலைஅமர்வு பொதுஅமர்வாகத் தொடங்கிப் புதுவையின் தமிழ்அறிஞர்கள்,கணிப்பொறி ஆர்வலர்களின் உரையோடு நடைபெறும்.புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்களும்,பிற அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்புமலர் வெளியிடப்படுகின்றது.பயன்பாட்டுக் குறுவட்டு ஒன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கல்லூரி,பல்கலைக்கழக மாணவர்கள் இப்பட்டறையில் கலந்துகொள்ள உள்ளனர்.

கணிப்பொறி,இணையம்,வலைப்பதிவுத் துறையில் உள்ளவர்களுடன் இணைந்து இப்பணியை வெற்றியாக நிறைவேற்றப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அன்புடன் அழைக்கிறது.

கட்டுரை வழங்குவோர்,பயிற்சியளிக்க முன்வருவோர்,பொருளுதவி, விளம்பரம் வழங்க விரும்புவோர்,பங்குபெற விரும்புவோர் திரு.இராச.சுகுமாரன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கைப்பேசி : +9443105825
மின்னஞ்சல் :rajasugumaran@gmail.com

மு.இளங்கோவன்,புதுச்சேரி
muelangovan@gmail.com

சனி, 6 அக்டோபர், 2007

இசைக்குத் தனிப் பல்கலைக்கழகம்-கலைஞர் அறிவிப்பு

தமிழ்மொழி இயல் இசை நாடகம் என மூன்றாகப் பகுத்துக் காட்டப்படுவது உண்டு. இம்மூன்றையும் கற்றவர்களே தமிழை முழுமையாகக் கற்றவர்கள்.'தமிழ் முழுதறிந்த தன்மையன்' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவது இதனையேயாகும். அந்த அளவு தமிழ்மொழி வளம்பெற்ற மொழி. தமிழுக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் இருப்பதை நாம் அறிவோம். தமிழின் ஒரு கூறாக விளங்கும் இசைத்தமிழை வளர்க்க, ஆராய்ச்சி செய்ய கட்டாயம் ஒரு பல்கலைக்கழகம் இருப்பது நன்றே.

இதனை உணர்ந்து கலைஞர் அவர்கள் இன்று(06.10.07) உளியின் ஓசை திரைப்படத் தொடக்கவிழாவில் இசைக்குப் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இசை தொடர்பான பல ஆய்வுகள் நடைபெற வாய்ப்பு உண்டு.என்றாலும் தமிழிசைக்கு இப்பல்கலைக்கழகம் முதன்மையிடம் அளிக்கும் என நம்புவோம்.

மிடற்று இசை, கருவிஇசை,பண்ணிசை, நாட்டுப்புறவிசை திரையிசை என விரிந்து கிடக்கும் இசைவளர்ச்சிக்கு,ஆராய்ச்சிக்கு, இப்பல்கலைக்கழகம் திறக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைவிடத் தகுதியான ஒருவர் உலகில் இல்லை.

கலைஞர் ஆட்சியில் பூம்புகார், வள்ளுவர்கோட்டம், திருவள்ளுவர்சிலை முதலான தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்கள் நடைபெற்றது போல் இசைப் பல்கலைக்கழகம் உருவாகட்டும். அது தமிழிசைக்கு ஆக்கமாக அமையட்டும்.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

செவ்வாய், 2 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சிறப்புக்கூட்டத்தின் முடிவின்படி வரும் திசம்பர் 9 ஆம்
நாள் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
தொடர்பு முகவரி :
இரா.சுகுமாரன்
பேசி: 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com